அதா எனக்கு தெரியுமே
பஞ்சு பஞ்சாக
வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக
வரணும் இடியாப்பம்
கோதுமை அல்வா நன்றாக திரண்டு, நெய் மணத்தோடு நல்ல நிறத்தோடு வந்திருப்பதை பார்த்து திருப்தி அடைந்த வெங்கடேச ஐயர், இதுவரை கிண்டி வைத்திருந்த அல்வாவை எடுத்து பெரிய தட்டில் ஊற்றினார்.
'டேய் சோமு, செத்தே பாத்துக்கோ. இதோ வந்துர்றேன்' - பன்னிரண்டு வயது பையனிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அல்வா கடையின் முன் பக்கம் சென்றார் ஐயர்.
வெங்கடேச ஐயர் தலை மறைந்ததும் அவசரமாக, சூடாக இருந்த அல்வாவை ஒரு கரண்டியில் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டான், சோமு.
அடுத்த வினாடியே, அவன் அலறிய அலறலில் மொத்த கடை ஊழியர்களும் அங்கு வந்துவிட, அவன் துடி துடித்து இறந்ததை பார்ப்பதை தவிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.
நிச்சயம் சோமு அதை சுவைக்கவில்லை. அது இனிப்பான அல்வா என்று தெரிந்த ஒரே காரணத்தினால் எடுத்து விழுங்கிவிட்டான்.
இதைத்தான் நாம் அனைவரும் தினம்தோறும் செய்து கொண்டிருக்கிறோம். எதையும் சுவைத்து, ரசித்து அனுபவிப்பதில்லை. சாப்பிட்டோம் என்ற திருப்தியில் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதற்கான சன்மானத்தை பல வகைகளில் பெற்று, வாழ்க்கையை துன்ப மயமாக்கிக்கொள்கிறோம்.
நம் உடல், அன்னமயகோஷம் என்று சொல்லப்படுகிற வண்ணம், உண்ணும் உணவினால் உண்டானது. உணவினாலேயே உடலில் உயிர் தங்கி உள்ளது.
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'
புறநானூறு-18
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
உயிர் காக்கும் உணவை தினம் தினம் நமக்கு வழங்குபவர்களை நன்றியுடன் வாழ்த்த வேண்டாமா?
நாம் உண்ணும் உணவு, நம் உடலில் எப்படி செயல்படுகிறது என்று திருமூலர் சொல்வதை பார்ப்போம்.
திருமந்திரம்-1933
அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
திருந்தும் உடல் மனமாம் கூறுசேர்ந்திடு
இருந்தன முன்னாள் இரதம் அதாகுமே.
உடலுடன் சேரும் சக்தி, உணவால் திருப்தியுறும் மனம் மற்றும் கழிவு என நாம் உண்ணும் உணவு மூன்று கூறாக உள்ளது. உடலும், மனமும் சேர்ந்தியங்குவதின் காரணம் நாம் முன்னர் உண்ட உணவின் சக்தியாலேதான்.
கொஞ்சம் சமையல் கலையும் கற்றுக்கொள்வோமே!
No comments:
Post a Comment