Sunday, June 22, 2025

உதிரப்பிறந்த பிஞ்சுகள்

உதிரப்பிறந்த பிஞ்சுகள்




எது நடக்கக்கூடாது என்று உலகம் எதிர்பார்த்ததோ, அது நடந்து விட்டது.

ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் அமெரிக்கர்களால் தகர்ப்பு. கொக்கரிக்கும் டிரம்ப்.

இதனால் ஈரான் மட்டும் பாதிக்கப்படப்போவதில்லை. மத்திய தரைக்கடல் நாடுகள் அனைத்தும் நேரடி பாதிப்பில். அவர்களால் எண்ணெய் மட்டும் எடுக்க முடியும். குடி நீருக்கு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர்தான் ஆதாரம். கடல் நீர் அணுக்கதிர்களால் மாசுபடும் நிலை இப்போது. 

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் குடி நீருக்கு சமமாகிவிடும்.

போர் ஒழிக!

போர் வேண்டாம். பேரழிவைத்தரும் போர் வேண்டாம்.

இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தம். மண்ணில் பிறந்த அனைவருக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு.

இறைவன் சந்நிதியில் சிறப்பு அனுமதி யாருக்கும்  இல்லை. யாருக்கும் யாரையும் கொல்லும்  உரிமை இல்லை, குறிப்பாக பொது மக்களை.

'காமெனியை கொன்றிடுவோம். அவன் இருப்பிடம் தெரியும்.' - கொக்கரிக்கிறான் டிரம்ப். இவன் போருக்கு சம்மந்தமில்லாத அமெரிக்கன். சீனாவோ உளவுக்கப்பல்களை போரின் எல்லைக்குள் நிறுத்தி வைக்கிறது, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கையாக. ஈரான் - இஸ்ரேல் போரினால் உலகமே இரண்டுபட்டு  நிற்கிறது. 

ஏவுகணைகள் ஏற்படுத்தும் அழிவுத்திறனை  எதிர் அணிகள் பெருமையாக பேசி, வேடிக்கை பார்க்கிறார்கள். போரினால் பாதிக்கப்படக்கூடிய பொது மக்களில், குழந்தைகள், வயோதிகர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் என்ற பாகுபாடில்லை. 

பசித்து அழும் குழந்தைக்கு பால் தர முடியவில்லை என்றால், தன் பசியை பொறுத்துக்கொள்ளும் அன்னையால் இந்த வேதனையை தாங்கிக்கொள்ள முடியுமா? எண்ணற்ற பிஞ்சுக்குழந்தைகளின் பசிக்குரல் யாருக்கும் கவலையை தராதா?

இது மிகவும் கொடுமையானது. அனைத்து தர்மங்களையும் மீறியது. இவர்களுக்கு அறமே எமனாக அமையும்.

திருமந்திரம் - 198

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை 
வல்லடிக்  காரர் வலிக்கயிற்றால் கட்டிச் 
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை 
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே

கொல்லு. குத்து என்று சொல்பவர்கள் மனிதர்களல்ல மிருகங்கள். இவர்களை எம தூதர்கள் தங்களது பாசக்கயிற்றால் கட்டி ஓட்டி சென்று நெருப்பின் வாயிலில் நிற்கவைத்து, நரகத்தை காட்டுவார்கள். 

*** *** ***


Friday, June 20, 2025

பொட்டு வைத்த முகம்

பொட்டு வைத்த முகம் 

  



'எடுத்துக்கோ..' - கைகட்டி நின்றிருந்த சிறுவனிடம் தலைமை ஆசிரியர் சொன்னார்.

இரண்டு வெள்ளை சாக்பீஸை எடுத்த குமாரின் கண்களில் பக்கத்தில் இருந்த கலர் சாக்பீஸ் கண்ணில் பட்டது.  கண்கள் விரிய ஆச்சர்யமாக அதை பார்த்தான்.

'சார், சாக்பீஸ்' - என்று சொல்லியபடியே, சாக்பீஸ் வாங்கி வர சொன்ன  வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தான்.

'டேய்.. ஹெட்மாஸ்டர் கிட்ட கலர் கலரா சாக்பீஸ் இருக்குடா..' - என்று தான் பார்த்ததை பக்கத்தில் அமர்ந்திருந்த  செல்வாவிடம் சொன்னான்.

'லக்குடா உனக்கு. நாளைக்கு நான் போய் எடுத்துட்டு  வருவேன். நானும் பார்ப்பேன்.' - செல்வா பொறாமையோடு சொன்னான்.

'சாக்பீஸ் செஞ்சு பாக்கலாமா? எங்கம்மா வீட்டுக்கு வெள்ளை அடிக்க சுண்ணாம்பு கல் வேக வச்சிருக்காங்க.' - என்றான் குமார்.

'எங்க வீட்லயும் சுண்ணாம்பு இருக்கு. இன்னிக்கு செய்யலாம்.' - சந்தோசமாக சொன்னான் செல்வா.

இவர்களுக்கு வெள்ளையாக இருப்பதெல்லாம் சுண்ணாம்புதான்.

*** *** ***

'பெல்லடிச்சிட்டாங்க, வாடா போலாம்' - என்ற செல்வாவின் முகத்தை பார்த்தான் குமார்.

'ஐயோ.. நான் விபூதி வெக்கலடா.' - திருநீறணிந்த செல்வாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கத்தினான் குமார்.

'போச்சு. சார், உன்ன வச்சு வெளுக்கப்போறார்.' - மூன்றாம் வகுப்பு ஆசிரியர் திருநீறணியாமல் யாரும் வகுப்புக்கு வரக்கூடாது என்று கட்டளை போட்டிருக்கிறார்.

ஹிஜாப், தொப்பி, சிலுவை அணிந்த சிறுவர், சிறுமிகளுக்கும் இந்த விதி பொருந்தும். விதி எல்லாருக்கும் பொதுவானது. அந்த ஆசிரியர்  வகுப்பில் மட்டும் எல்லோரும் திருநீறணிந்திருப்பார்கள்.

என்ன செய்வதென்று திகைத்து நின்ற குமார், வேகமாக சென்று பள்ளி சுவற்றில் அடித்திருந்த சுண்ணாம்பை விரல்களில் தேய்த்து நெற்றியில் வைத்துக்கொண்டான்.

'அப்பாடா.. இன்னிக்கு தப்பிச்சேன்டா..'

*** *** ***

'பொட்டு வைத்திருந்தால் அது இந்தியப்பெண். நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தால் அது வடஇந்தியப்பெண். கொஞ்சம் சந்தனம் வைத்திருந்தால் நம்ம கேரளம். பொட்டுடன் திருநீறு வைத்திருந்தால் அது நம்ம தமிழ்ப்பெண்.' - வெஸ்ட்மீடில் இரயிலில் ஏறிய திருநீறணிந்த பெண்ணைப்பார்த்ததும், குமாரின் சிந்தனை  இப்படியாக ஓடியது.

'நம் இனமடா..' - என்ற எண்ணம் சட்டென்று ஒட்டிக்கொண்டது.

பளிச்சென்ற ஒரு தெய்வீக அம்சம் இந்தியப்பெண்களின்  முகத்தில் ஒளிர்வதாக தெரிவது, தனக்கு மட்டும்தானா என்ற சந்தேகம் எப்போதும் குமாருக்கு உண்டு.

இந்தியப் பெண்கள் சேலை கட்டுவதும், பூ வைத்து பொட்டு வைப்பதும் தீராத ஆவலைத்தூண்டுகிறது ஆஸ்திரேலியாவில் வாழும் பெண்களுக்கு. அரசியல் பெண் தலைவர்கள் இந்திய விழாக்களில் சேலை மற்றும் பொட்டுடன் கலந்து கொள்வார்கள்.வெட்கம் அவர்கள் அறியாத ஒன்று. ஆனால், இந்த சமயங்களில் அவர்கள் முகத்தில் இழையோடும் வெட்கம் அபரிமிதமான அழகு.

மூன்றாம் வகுப்பில் தன்னை அறியாமல், ஆசிரியரின் கட்டுப்பாட்டில், நிகழ்ந்த ஒரு சின்ன படிப்பினை, இன்று உலகளாவிய நிலையில் நிலைத்திருப்பதை எண்ணி உள்ளூர சந்தோஷமாக இருந்தது குமாருக்கு.

*** *** ***

'சிவன் தன் மூன்றாவது கண்ணைத் திறந்து காமனை எரித்தான்' - என்று புராணக்கதைகள் சொல்லிக்  கேள்விப்பட்டிருக்கிறோம்.

மூன்றாவது கண் இருக்குமிடம் நெற்றி. இதையே ஆக்ஞா என்றும் சுழு முனை என்றும் சொல்வார்கள். இங்குதான் பிட்யூட்டரியில் சுரக்கும் இனப்பெருக்கத்திற்க்கான ஹார்மோன்கள் வெளிப்படுவதற்கான இடம். அதாவது, காம உணர்வுகளைத்தூண்டும் எண்ணங்கள் இங்குதான் உருவாகிறது. 

நம்முடைய உணவு பழக்கம், சுற்றுப்புற சூழல்களால் காம உணர்வுகள் இல்லாத நேரமே இல்லை என்னும் வண்ணம் நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. காமத்தை  ஏதோ ஒரு வழியில் முறைப்படுத்த வேண்டும். 

மன்மதனை எரித்த சிவன் எதை பூசிக்கொண்டு  எரித்தானோ,  அதையே நாமும் செய்ய வேண்டுமானால் சுடுகாட்டுச் சாம்பலைத் தான் பூசிக்கொள்ள வேண்டும். ஆனால், அது சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமில்லை என்பதால் சித்தர்கள் நமக்கு திருநீற்றை வழங்கி சென்றிருக்கிறார்கள்.

திருநீறை அணிவதால் காம உணர்வுகள் முறைப்படுத்தப்படும். இன்னும் ஒரு நிலை மேலே சென்று, நமக்கு காம உணர்வால் வெளிப்படும் ஆசையை பாழ்படுத்தும்  முறையை காண்பிக்கிறார் திருமூலர்.

திருமந்திரம் - 1937

பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.  

உள்ளம் உருக அனலை மூட்டுகின்ற  இடமே புருவ மத்தியான சுழு முனை.

அங்கே திருநீறை அணியுங்கள். காமன் உங்கள் வசப்படுவான், காலமும் உங்களை தாலாட்டும்.

*** *** ***

இந்துக்கள் ஓட்டுக்காக கோயிலினுள்  திருநீறணிந்து, இஸ்லாமியர்கள்  ஓட்டுக்காக  திருநீரைத் துறக்கும் சுண்ணாம்புகளை இனங்கண்டு ஒதுக்கித்தள்ளுங்கள். 

தர்காக்களில் வழங்கும் திருநீறும் புனிதமானதே. துஷ்ட ஆவிகளை தூர நிறுத்தும் ஆற்றலைக் கொண்டது.

*** *** ***








Tuesday, January 21, 2025

கதிரொளியில் உயிரலைகள்

கதிரொளியில் உயிரலைகள் 






அணுவினுள் ஆற்றலாய் நின்றியங்கும்
அணுவினும் நுண்ணிய பருப்பொருளே  
உயிரினை உடலுடன் ஒன்றிணைக்கும் 
உயரழுத்த  மின்காந்த அலைகள்


அணு, அறிவியல் கண்டறிந்த மிகச்சிறிய பருப்பொருள். அணுவை பகுத்தறிய முடியும் என்ற அறிவியலாளர்களின் ஆய்வுகள், அணுவைப்பற்றிய ஆராய்ச்சியை மேலும் தொடர ஆர்வத்தை தூண்டியது. அணுவினுக்குள் நியூக்ளியஸ் என்னும் கருப்பொருளும், அதனை சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான் என்னும் சார்பொருளும் இருப்பதை கண்டறிந்தார்கள். இதையே நாம், சூரியனை நியூக்ளியசாக கொண்டு சுற்றும் கிரகங்களை எலெக்ட்ரான்கள் என்று  கற்பனை செய்து கொள்ளலாம். 

இத்தோடு அறிவியல் ஆய்வு நிற்கவில்லை. எலெக்ட்ரானின் சுழற்சியை ஆராய முற்பட்டார்கள். சுழற்சிக்கு தேவையான ஆற்றலை குவாண்டம் என்று பெயரிட்டு மேலும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். குவாண்டம் என்றால் ஆற்றலின் ஒரு அளவுகோல். எலெக்ட்ரானின் சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்ததில் இரண்டு உண்மைகள் தெரிய வந்தது.

வரைமுறைப்  படுத்தமுடியாத வேகத்தில் நியூக்ளியசை சுற்றும்  எலக்ட்ரான்கள், ஒரு நிலையில் பருப்பொருளாகவும், மற்றொரு நிலையில் அலைகளாகவும் செயல்படுவதை உறுதி செய்திருக்கிறார்கள். 

அதாவது, எலெக்ட்ரான்கள் மின்காந்த அலைகளாக  நியூக்ளியசை சுற்றிக்கொண்டிருக்கிறது. இங்கே குவாண்டம் என்னும் இறை ஆற்றல் நியூக்ளியசையும், எலெக்ட்ரானையும் இணைக்கும்  ஆற்றலாய் விளங்குகிறது.

இனி, நம் உடலுக்கு வருவோம். உடலுடன் உயிர் இணைந்தே செயல்படுகிறது, நியூக்ளியசும் எலெக்ட்ரானும் போல. இங்கே குவாண்டமாக செயல்படும் ஆற்றல் இறை ஆற்றல். மின்காந்த அலைகளாக உடல் முழுவதும் உயிருடன் இணைந்து செயல்படுகிறது.

அதாவது, உடலை உயிருடன் கட்டி இருக்கும் மின்காந்த அலைகளே இறைவன்.

ஒவ்வொருவர் உடலிலும் இவ்வாறாக இறைநிலை செயல்படுவதை  திருமூலர் மிகத்தெளிவாக நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லி சென்றிருக்கிறார்.

திருமந்திரம் - 2002

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 

நீர் நிறைந்த குடங்களை சூரிய ஒளியில் வைத்தால், அனைத்து குடங்களிலும் சூரியனின் பிம்பம் தெரியும். குடத்தில் மூடி வைத்துக்கொள்ளலாம் என்றால் சூரியனை  குடத்தில் அடக்க முடியாது.

விஷத்தை உண்ட இறைவனும் அனைத்து உயிர்களின் உடலில் தோன்றி இருப்பதும், நீர் நிறைந்த குடத்தில் தோன்றிடும் சூரியன் போலத்தான்.

மின்னலைகளாக, ஒப்பற்ற ஆனந்த ஒளிக்கற்றை ஆற்றலாக,  நம் உடலில் இருப்பது இறைவன்.


*** *** *** *** *** 

இறைநிலை தியானம் 

மனதை புருவ மத்தியில் நிறுத்தி, திரிவேணி சங்கமமாக உடல், உயிர் மற்றும் இறை ஒன்று கூடுவதை கவனிப்போம். 

அகத்தை திறக்கும் திறவுகோல் உள்ளம். உள்ளமே நம்முடலையும், உடலுடன் உயிர் இணைந்து  இருப்பதையும் உணர்கிறது. 

உடல் நிலத்தின் பண்புகளால் ஆனது. நிலத்தில் கிடைக்கும் உணவினைக்கொண்டே தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

உயிர் உருவான நாளிலிருந்து உடலுடன் இணைந்து செயல்படுகிறது. உயிரை காற்றிலுள்ள பிராண வாயு பாதுகாக்கிறது. உயிர், உடலின் ஒவ்வொரு சிற்றறையிலும் உடல் இயக்கத்துடன் இயைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

உடலும், உயிரும் இணைந்து செயல்பட்டாலும், இணைப்பு ஆற்றலைப்பற்றி அறியாமல் இருக்கிறது மனம். குவாண்டம் அறிவியல் மூலம், இரண்டையும் இணைப்பது இறை நிலையிலுள்ள மின்காந்த அலைகள் என்று அறிந்து கொண்டோம்.

மனதை புருவ மத்தியில் நிறுத்தி, திரிவேணி சங்கமமாக உடல், உயிர் மற்றும் இறை ஒன்று கூடுவதை கவனிப்போம். 

முதலில் உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உண்மைகளை ஒவ்வொன்றாக கவனத்தில் கொள்வோம்.

பஞ்சபூதங்கள் - 5:

உடலைப் பெற்றுத்தந்தது நிலம். உடலில் நீரோட்டமாக உள்ளது சக்தி பரிமாற்றம். வெப்பமே அனைத்து உடல் காரியங்களுக்கும் அடிப்படை காரணியாக இருக்கிறது. காற்று உயிரை நிலை நிறுத்தும் பணியை செய்கிறது. ஆகாயம் உடலின் சிற்றறைகளில் உள்ள உயிரை இணைக்கும் அலை வரிசையாக உள்ளது. இவ்வாறாக பஞ்சபூதங்களின் செயல் தொடர்ந்து நம் உடலில்  செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஞானேந்திரியங்கள் - 5: 

உடல் இயக்கத்திற்கு தேவையான அவசியங்களை கண், காது, மூக்கு, வாய் மற்றும் மெய் உண்டாக்கித்தருகிறது.

கர்மேந்திரியங்கள் - 5:

ஐம்புலன்கள் உண்டாக்கும் அவசியங்களை நடத்தி தருவது, கால், கை, வாய், கருவாய் மற்றும் எருவாய் எனப்படும் கர்மேந்திரியங்கள்.

தன்மாத்திரைகள் - 5:

ஐம்புலன்களால் உண்டாகும் பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் மற்றும் நுகர்தல் போன்ற உலக அனுபவங்களை உணரச்செய்கிறது.

மேலே குறிப்பிட்டவை எல்லாம் உடலுடன், உயிர் அனுபவிக்கும்  உண்மைகள். 

அந்தக்கரணங்கள் - 4:

உலக வாழ்வின் அனுபவத்தை உடலுக்கும், உயிருக்கும்  கொடுப்பது அந்தக்கரணங்கள் எனப்படும் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி.

இந்த 24 உண்மைகளும் ஆன்ம தத்துவங்கள் என்றும் அறியலாம். இதில் முக்கியமாக மனம். மனமே அனைத்துக் காரியங்களுக்கும் முன்னிலை வகிக்கிறது.

மனதை புருவ நெற்றியில் நிலைப்படுத்தி, மின்காந்த அலைகளான இறை ஆற்றலை பெறுவதாக தியானம் செய்வோம்.

முதலில், புருவ நெற்றியில் உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் உருவத்தை தியானிக்க ஆரம்பியுங்கள். அந்த பரு உருவம் மறைந்து மின்னலைகளாக மாறும் வரை தொடர்ந்து தியானம் செய்து வாருங்கள்.

*** *** *** *** ***

கொஞ்ச நாட்களில் இந்த தியானத்தின் பலன்களை நீங்களே மற்றவர்களுக்கு சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.

இறைநிலை தியானம் உங்களுக்கு சீராக அமைய வாழ்த்துகள்.

*** *** *** *** **


  





Friday, November 22, 2024

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம் 

 



எனக்கு தீப ஆராதனை. 

இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்கள், நீர் என மாற்றி மாற்றி  ஊற்றி அபிஷேகம் நடந்தது.

பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆலயப்பணியாளர்கள் அவர்களை ஒழுங்குபடுத்தி  வேகமாக அவர்களை வெளியேற்றி, வரிசையில் வந்த அனைவரும்  என்னை தரிசிக்க வசதி செய்து கொண்டிருந்தார்கள்.

'முருகா.. முருகா.. வெற்றி வேல்.. வீர வேல்..' - வெளியே கூட்டம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது.

தரிசனம் முடித்தவர்கள் திண்ணையில் என் மீது அமர்ந்து கொண்டு ஊர்க்கதை  பேசிக்கொண்டிருந்தார்கள். பஞ்சாமிர்தத்தை விட அதுதான் சுவையாக இருக்கும் போல.

சின்னஞ்சிறு குழந்தைகளும் என்மீது படிக்கட்டுகளில் தவழ்ந்து  ஏறிக்கொண்டிருந்தார்கள். வெயில் பட்டு படிக்கட்டுகள் சூடாவதால் அதன்மீது தென்னை நார்ப்பாய்கள் போட்டிருந்தார்கள்.

எனக்கே மலைப்பாக இருக்கிறது. எண்ணற்ற காலம் நீரிலும், நிலத்திலும் பெரிய பாறையாக இருந்த நான் இன்று கருவறைத் தெய்வமாகவும், அமர்வதற்கு  திண்ணையாகவும் மற்றும் படிக்கட்டுகளாகவும் மாறி இருக்கிறேன்.

'ஹரஹர ஹரஹர.. வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா..'

பார்த்தவர்களுக்கெல்லாம் பாறையாய் தெரிந்த நான் ஒரே ஒரு ஜோடி கண்களுக்கு மட்டும் தெய்வமாய் தெரிந்திருக்கிறேன். அந்தப்பார்வையில் மட்டும் நான் மூலவராகவும், திண்ணைக்கற்களாகவும், படிக்கட்டுகளாகவும் தெரிந்திருக்கிறேன்.

சிற்பியின் கலைக்கண்கள்.

இன்று, என்னை வணங்குபவர்களின் கண்கள், பக்திக்கண்கள். அவர்களுக்கு நான் தெரியவில்லை; மாறாக அவர்கள் பக்தி சிரத்தையுடன் வணங்கும் அந்த தண்டாயுதபாணியே தெரிகிறார்.

தந்தைக்கு மகளாக இருக்கும்  ஒரு பெண், கணவருக்கு  மனைவி, குழந்தைகளுக்கு அம்மா. இன்னும் எத்தனையோ உறவுகள் அந்த பெண்ணை சுற்றி. 

பெண்ணை பெண்ணாக மட்டும் பார்க்க முடியுமா என்ன?

திருமந்திரம் - 2290

மரத்தை மறைத்தது மாமத யானை 
மரத்தில் மறைந்தது மாமத யானை 
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் 
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

மரத்தால் செதுக்கப்பட்ட யானையை பார்க்கும்போது அங்கே மரம் தெரியவில்லை. அது மரம்தான் என்றுணரும்போது அங்கே யானை  மறைந்து மரமாகி விடுகிறது. பஞ்ச பூதங்களில் முதலான வானம், எங்கும் பரந்துள்ள பரம்பொருளை உள்ளடக்கி மறைத்து நிற்கிறது. பரம்பொருள்தான் அனைத்தும் என்னும்போது, வானம் மறைந்து விடுகிறது.


*** *** *** *** *** ***








 

 

Tuesday, November 19, 2024

பயம்! அபாயம்!! எச்சரிக்கை!!!

பயம்! அபாயம்!! எச்சரிக்கை!!! 





மரணம்.

தினம் தினம் நம் கவனத்திற்கு  வரும் மரண அறிவிப்புகள். ஒவ்வொருமுறையும் கொஞ்சம் அனுதாபமாக யோசித்துவிட்டு வேகமாக அடுத்த காரியத்திற்கு நகர்ந்து  விடுகிறோம். 

செத்தாதான் தெரியும் சுடுகாடு என்பார்கள். செத்த பின்னர் சுடுகாடாவது, நந்தவனமாவது. எல்லாம் ஒன்றுதானே.

சாகாமலேயே  நமக்கு  சுடுகாட்டை காட்டுவது பயம். எது நம்மை பயமுறுத்துகிறது என்று தெரியாமலே பயம். மூளையில் உள்ள அத்தனை நியூரான்களும் விழிப்பு நிலையில் இருக்கும். தூக்கம் வராது. உடல், நாக்கு வறண்டு போகும்.

எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள்.

கடந்த வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு இரண்டு நாட்கள், ஒரே சிந்தனை. மனித உடல் மண்ணால் வனையப்பட்டது என்று ஒரு ப்ளாக் எழுதி, அதனை சீர்செய்து காணொளியாக்கி முகநூலில் வெளியிட ஞாயிறு மாலை எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது.

முகநூலில் காலையிலேயே பார்த்தேன். ஒரு பிரண்ட் வேண்டுதல். வெகு அழகான பெண். வழக்கமாக ரொம்ப அழகாயிருந்தால், மறுத்து  விட்டு சென்றுவிடுவேன். சக நண்பர் ஒருவர் கூட்டு நண்பராக காட்டியதால் அழைப்பின் முகப்பை சென்று மேலும் விவரங்களைப் பார்த்தேன்.

ப்ரொபைல் மூடப்பட்டிருந்தது. வாழும் இடம் கலிபோர்னியா. ஒரு வேளை, நண்பரின் நண்பி வேலை விஷயமாக பேச முக நூலில் அழைக்கிறாளோ என்று பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட்டேன். பிரண்ட் வேண்டுதலை மறுக்கவில்லை. மறந்தும் விட்டேன்.

மண்மாண் புனைபாவை என்ற காணொளியை சமூக வலை தளங்களில் பதிவேற்றிவிட்டு, ஒருவகையான இறை  மனவெழுச்சியோடு இருக்கும்போது, பிரண்ட் வேண்டுதலை மீண்டும் முகநூல் காட்டியது.

சரி, நண்பரின் நண்பர் என்ற முறையில், எதாவது உதவ முடிந்தால் செய்யலாம், இல்லை என்றால் அதையும் முறையாக சொல்லி விடுவோம் என்று எண்ணிக்கொண்டே வேண்டுதலை ஏற்றுக்கொண்டேன்.

அடுத்த ஐந்து  நிமிடங்களில் நடந்த நிகழ்வுகளை  முடிந்த அளவு கோர்வையாக சொல்ல முயற்சிக்கிறேன்.

Hii என்று அவள்  ஆரம்பித்தது தான் தெரியும்.

பின்னந்தலையில் யாரோ ஓங்கி அடித்தது போல் இருந்தது, எனக்கு அவள்  அனுப்பிய  காணொளியைப் பார்த்து.

உள்பெட்டியில் சாட்  என்று ஆரம்பித்து, வீடியோ அழைப்பிற்கு சென்று,  சாட் செய்து கொண்டிருக்கும்போதே ஒரு 20 வினாடி காணொளி எனக்கு அனுப்பினாள்.

இனி அது அவளல்ல. அவள் என்று அவர்கள் காட்டியது ஒரு தூண்டிலில் போட்ட  இரை மட்டுமே. பெரிய இணைய மாய வலையால் பின்னப்பட்ட  AI செய்யும் மாயாஜாலம்.

அவள் என்பது பெரிய இணையவழி வடமாநில  திருட்டுக்  கும்பல். இவர்களின் இலக்கு எளிதில் மாட்டக்கூடிய என்னைப்போன்ற வயதானவர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தனித்து வாழக்கூடிய பணம் படைத்தவர்கள். 

காணொளியில் அச்சு அசல்  எல்லாமே நான்தான். என்னாலே அதை மறுக்க முடியாது. அவ்வளவு தொழில் நேர்த்தி. AI செய்து முடித்திருந்தது.

ஐந்து நிமிடத்திற்கு முன்னர் எங்கிருந்தேன்; இப்பொழுது எங்கு வந்து தூண்டிலில் சிக்கிய மீனாய்  மாட்டியிருக்கிறேன்.

காணொளியை காட்டிய கையோடு, அதை என் மகனுக்கு அனுப்புவதாக செய்தி வேறு. 

என்னுடைய ஆறாம் அறிவைத்தாண்டி உள்ளம் வேலை செய்ய ஆரம்பித்தது.

முதலில், அவர்களின் தொடர்பை முடக்கினேன். தொடர்ந்து வந்த தொலைபேசி  அழைப்புகளை மறுதலித்தேன்.

முகநூலை முடக்கினேன். அனைத்து வகையான இணைய இணைப்புகளையும் முடக்கினேன். கைப்பேசியில் இருந்த சிம்மை அகற்றினேன்.

அப்பாடா.. இனி தூங்கலாம் என்று படுத்தபோதுதான் தெரிந்தது. இன்று தூங்க முடியாதென்று.

ஏதேதோ நினைவுகள். எல்லாம் பயம் கலந்தது. உலகமே என்னைப்பார்த்து எள்ளி நகையாடியது. குடும்பத்தில், உறவினர்கள், கூட வேலை செய்பவர்கள், நண்பர்கள், கண்ணுக்கு தெரிந்த தெரியாத கூட்டம் என எல்லோரும் கூட்டம் போட்டு என்னைப்பற்றி தூற்றுவதாக ஒவ்வொரு வினாடியும் உறக்கம் வராத இரவு அது.

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராத இரவு. உடலின் வெப்பம் ஏறிக்கொண்டே போனதுதான் மிச்சம். 

அடுத்து என்ன செய்யப்போகிறேன்?

அடுத்த நாள் நண்பனிடம் பகிர்ந்துகொண்டேன். அவரும் நான் செய்தது சரியானது, இனி அதைப்பற்றி சிந்திக்கவே வேண்டாம், எந்த அழைப்பையும் ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஒருவேளை, நண்பர்களுக்கு இந்தக் காணொளி உலா வருமானால் அவர்களுக்கு ஒரு கவன நினைவுறுத்தல் மட்டும் அனுப்பி வை என்றார்.

அதன் விளைவுதான் இந்தப்பதிவு.

*** *** *** *** *** ***

அருவமான முகமற்ற இணைய வழி சதிகாரனே!

நீ எனக்கு செய்தது  சதிசெயல். வடஇந்திய திருட்டுக்கும்பல் மூலம் இந்த குற்றத்தை செய்திருக்கிறாய். உன் முயற்சியில் பாதிக்கிணறு தாண்டிவிட்டாய். மீதிக்கிணறு இறைவன் நினைத்தாலும் மாற்ற முடியாத விதியின் கையில். 

தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த தீவினைகளுக்கு தண்டனை தந்ததன் மூலம் என் கர்ம வினைகளை நேர் செய்ததற்கு நன்றி!   

உன்னுடைய செயல்கள் சொல்கிறது, நீ எனக்கு மிக நெருங்கிய உறவு என்று. நான் குருவாக வணங்கும் திருமூலர், உனக்கு காலம் வழங்கும்  விதியின் தீர்ப்பை நிச்சயம் எனக்கு காட்டியே தீருவார்.

நீ உபயோகித்த Kanika Bhardwaj என்பது fake FB ID. Whatsapp எண் :+91 92010 46150    






Monday, November 18, 2024

மண்மாண் புனைபாவை

மண்மாண் புனைபாவை




'அ' - என்று சொல்லிக்கொண்டே ஒன்றாம் வகுப்பு சுப்புலக்ஷ்மி டீச்சர் கரும்பலகையில் எழுதினார். 

'எல்லாரும் சிலேட்ல எழுதுங்க. பென்சில இப்படி புடிங்க' - தனது கையில் மூன்று விரல்களை குவித்து காட்டினார்.

குழந்தைகளுக்கான சிறிய மரப்பலகையில் அமர்ந்திருந்த ரகு, சிலேட்டை பக்கவாட்டில் சாய்த்து, எழுத முயற்சித்தான். கோடுகள் அங்கும் இங்கும் போனதே தவிர, கரும்பலகையில் இருந்த எழுத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

கொஞ்சநேரம் பொறுத்துப்பார்த்த டீச்சர், ஒவ்வொருவருக்கும் சிலேட்டில் 'அ' எழுதி, அதன் மீது எழுத சொன்னார்.

ரகுவிற்கு இப்பொழுது கொஞ்சம் எளிதாக இருந்தது. 

'டீச்சர்.. ' - தாகம் என்று, வகுப்பு மூலையில் வைக்கப்பட்டிருந்த பானையை பார்த்துக்கொண்டே, கையால் சைகை  காட்டினான்.

மணல் குவித்து, அதன் மீது  வைக்கட்டிருக்கும் பானையை, தினமும் காலையில் சுத்தம் செய்து  அதில் ஆற்று நீரை நிரப்பி வைப்பது ஆயம்மாவின் வேலை.

டீச்சர் கொடுத்த, குளிர்ந்த  நீரைக்  குடித்து விட்டு மீண்டும் எழுத்தை நகல் எடுக்க ஆரம்பித்தான்.

'வீட்டில் குடிக்கும் தண்ணீர் இவ்வளவு ஜில்லுன்னு இல்லையே..' - மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, கைகள் எழுதிக்கொண்டிருந்தது.

'ஒரு வேளை, பானைக்கு வெளியே  அவங்க பூசும் திருநீறினால்  இருக்கும்.'

அம்மா சாதம் சமைத்ததும், சட்டிக்கு அடுப்பு சாம்பலையே திருநீறாக பூசி, பரிமாற ஆரம்பிப்பது நினைவுக்கு வந்தது.

'இருக்கலாம். இருக்கலாம்.' 

'பானைத்தண்ணீர் ஏன் குளிர்ச்சியாக இருக்கிறது, அதே தண்ணிதான் வீட்டில். ஆனால்,  பித்தளை   அண்டாவில் இருக்கிறது.  பானைத்தண்ணீர் மாதிரி ஜில்லுன்னு  இல்லை.' - திருநீறைத்தாண்டி மனம் தேடிக்கொண்டிருந்தது.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது, சயின்ஸ் வாத்தியாரிடம் இருந்து தற்செயலாக  பதில் வந்தது.

'பசங்களா, பானைத்தண்ணி ஏன் ஜில்லுன்னு இருக்கு தெரியுமா?'

'ஏன்னா.. மண்ணால் செய்த பானையில் கண்ணுக்குத் தெரியாத சின்ன, சின்ன துவாரங்கள் இருக்கு. தண்ணீர் துவாரங்களின் வழியாக பானைக்கு  வெளிப்புறம் வரும்போது ஆவியாக மாறுது. அப்பொழுது, பானைக்குள் இருக்கும் நீரின் சூட்டையும் உறிஞ்சி எடுக்குது. அதனாலே, பானைக்குள் இருக்கும் நீர் ஜில்லுன்னு இருக்கு.'

ரகுவுக்கு தன்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

ஆனால், இந்த சந்தோசம் அடுத்த கொஞ்ச வருஷத்துக்குத்தான்.

ஒருமுறை, ரகுவும் தன்னுடைய நண்பன் தனபாலுவும் சைக்கிளில் யார் சீக்கிரம் கல்லூரி செல்வது என்பதில் போட்டி. காலை எட்டு மணி எதிர் வெயிலில், வேகமாக ஒட்டி வந்த சைக்கிளை  மர நிழலில் நிறுத்திய ரகு, ஒழுகும்  வியர்வையை துடைக்க மார்பில் கை வைத்த போது, மார்பு ஜில்லென்றிருந்தது.

இது எப்படி சாத்தியம்?

இடையில் பல வருடங்கள். வாழ்க்கை வெள்ளம் அடித்து, துவைத்து, காயப்போட்ட போதும், இந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

சேட் ஜிபிடி அண்ணன் சொல்கிறார், 'மார்புக்கு வெளியே வரும் வியர்வை, ஆவியாகும்போது உடலில் உள்ள வெப்பத்தை எடுத்துக்கொள்வதால் தோல், குறிப்பாக மார்புத்தோல் குளிர்ச்சியாகி விடுகிறது.'

அட, இந்த அறிவியல் விளக்கம், நம் ஆறாம் வகுப்பு  ஆசிரியர் சொன்னதுக்கு சரியாக ஒத்துப்போகிறதே.

இனிதான் கிளைமாக்ஸ்.

முதலில் மண் பானை, இரண்டாவது உடல். இரண்டும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியும்?

சித்தர்கள் அனைவரும் சொல்லும்  கருத்து, உடல் என்பது மண்ணால் வனையப்பட்டது. மண்ணெல்லாம் மனிதர்கள்.

கடுவெளி சித்தர் பாடல் 

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

பத்துமாதம் தாய் வயிற்றில் இருந்து பிறக்கும் நம் உடல்  ஒரு மண் பானையை ஒத்ததது. 

எதனால், மண்ணுக்கு உடலை ஒப்பிட்டார்கள் என்றும் நாம் அறிந்துகொள்ள, மனித வாழ்க்கையின் உண்மை நிலையையும் தெளிவாக்கி இருக்கிறார்கள். நம் மானிட  வாழ்க்கை 96 உண்மை நிலைகள் என்னும் சூத்திரத்திற்குள் அடங்கி நிற்கிறது.

இவற்றில் முதலில் சொல்லப்படுவது பஞ்ச பூதங்கள் என்னும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். 

நிலம் என்னும் மண்ணின் தன்மையாக மனிதன் பெறுவது உடலுக்கு ஐந்து காரணிகள். அவை முறையே, மயிர், தோல், சதை, நரம்பு மற்றும் எலும்பு.

சௌம்ய சாகரம் - 37

ஆறான பூதம் ஐந்தின் விரிவைக் கேளு
அப்பனே பிரிதிவியின் கூர்தான்மைந்தா
நேரான மயிருடனே எலும்பு சிரமம்
நிலையான நரம்பு சதை ஐந்துமாச்சு
பேரான பிரிதிவியின் கூறைச்சொன்னேன்
பொறுமையுடன் தான் ஐந்துப் பிலமாய் நின்று
கூரான அப்புடைய கூறு பாரு
குணமான புலத்தியனே குவித்துப் பாரே.

இது அகத்தியரின் பாடல்.

எனவே, நம் உடல் தன்னிச்சையாக மண்ணின் குணங்களைப்பிரதி பலிக்கிறது. மண், பானையானாலும், அல்லது உடலானாலும், அதனுடைய குணங்கள் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது.

மண்ணால் ஆன பொருள் மீது  நீர் பட்டால்,   கரைந்து விடுவதுதானே இயற்கை. நீரை சேமிக்கும் பானை கரைவதில்லை. மழையில் நனைந்தாலோ, நீரில் குளித்தாலோ  உடலும்  கரைவதில்லை.

குயவன் மண்ணில் வனையும் பானையை சூளையில் போட்டு சுட்டு எடுத்து விடுவதால், நீரில் கரைவதில்லை. உடல் நீரில் கரையாவிட்டாலும் ஒரு நாள் மண்ணோடு மண்ணாய்,  மண்ணில் கரைந்து விடுகிறது. 

இதைத்தான் திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்.

திருமந்திரம் - 143

மண்ணொன்று  கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது 
விண்ணின்று நீர்விழின்  மீண்டும் மண்ணானாற்போல்  
எண்ணின்று மாந்தர் இருக்கின்ற வாறே. 
 

மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், நீர் பட்டால்,  கரைந்துவிடும். சுட்ட பொருட்கள் திடமாக இருக்கும். இதை நினைத்துப்பார்க்காமல் மக்கள் இருக்கிறார்கள். மண்ணோடு மண்ணாய் மறைந்து போகிறார்கள்.

ஆனால், உடலை சுடுவதெப்படி?

மூலாதாரத்தில் உள்ள குண்டலினியில்  மூண்டெழும் செழுஞ்சுடர் கொண்டு, புருவ மத்தியில் உள்ள சந்திர மண்டலத்தில் லயித்திருங்கள். இந்த தியான நிலை, சமாதி நிலையாக மாறும்போது, துரியமும், பரதுரியமும் வசப்படும்.

இந்த நிலை எய்தப்பெற்றவர்களின் உடல் அகத்தீயினால் சுட்ட உடலாகி விடுகிறது. அவர்களாக சமாதி அடைய நினைத்தால் ஒழிய உடல் அழிவதில்லை. 

ரகுவிற்கு தெளிவாக புரிந்தது, தன்னுடல்  மண்மாண் புனைபாவை என்று. 


*** *** *** *** *** ***






Tuesday, November 12, 2024

எதிர்துருவங்கள்

எதிர்துருவங்கள்  





காமம் என்பது பிறக்கும்போதே, உடலுக்குள்  பொதிந்திருக்கும் நெருப்பு. மனிதப் பிறவி எடுத்த அனைவருக்கும் இது பொருந்தும்.

சமுதாய ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டதல்ல, காமம். இதுதான் அடிப்படை, இதுதான்  நிதர்சனமான உண்மை. எத்தனை வாத, விவாதம் செய்தாலும் இறுதியில் வாதம் செய்தவனும், எதிர்வாதம் செய்தவனும் சங்கமித்து ஒன்றிணைவது  காமத்தில்தான்.

பஞ்சபூதங்களில் முதன்மையானது வானம். விண்ணிலிருந்து இறங்கி வரும் இறைவன், வானத்தில் தவழ்ந்திருக்கும் உயிருக்கு அதன் கர்ம வினைக்கேற்ப உடலைத் தருகிறான். 

வானத்தின் தன்மைகளாக உடல் பெறுவது, ஐந்து குணங்கள்:

காமம் - ஒன்றை அடையத் துடிக்கும் ஆசை 

குரோதம் - பிடிக்காதவற்றை பழிவாங்குதல்  

லோபம் - தன்னுடையது என்று இருகப்பற்றுதல்     

மதம் - தன் கொள்கையில்  தீவிரம்   

மாச்சரியம்  - மற்றவர்களின் மேல்  பொறாமை 

அகத்தியர் வானத்தின் தன்மைகளாக சொல்வதைக்கேளுங்கள்.

சௌமிய சாகரம் - 41

கூறாக ஆகாசக் கூறு தன்னை 
குறியுடனே சொல்லுகிறேன் குணமாய்க் கேளு
நேராகக் குரோதமொடு லோபம் மோகம் 
நிசமான வாச்சரிய மதமு மைந்து 
ஊரான ஆதாரந் தன்னைப் பார்த்து 
உத்தமனே தானாவாய்  நின்றா யானால்
தேராக வாசியது  தேறும் தேறும் 
சிவபூதம் ஐந்து தொழிலிருத்தல் ஐந்து.


இவ்வைந்து தன்மையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பொதிந்திருக்கிறது.

உயிரணுவில் உறையும்  காமமென்னும் பெருநெருப்பு, காந்த சக்தி  கொண்டது. எதிர் காந்தத்தை எந்நேரமும், எந்த வயதிலும் கவரத்  தவிக்கும் காரணம் இதுதான்.

இந்த கவர்ச்சியே  எதிர்ப்பாலினத்தை என்ன விலை கொடுத்தாவது  சேரத்துடிப்பது.

இது இயற்கை, மனித உடலுக்கு  விதித்த விதி.

பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் விதி மீறல்களுக்கு அதிகம் இரை ஆவது பெண்களே. மஹாபாரதமோ, இராமாயணமோ நடந்து முடிந்த சரித்திரப்  புகழ் வாய்ந்த போர்களோ, இறுதியில் பெண்களே பலியாடுகளாக, காமத்தின் வடிகாலாக  இருந்திருக்கிறார்கள்.

எனினும், பெண்ணின் உணர்வுகள்,  அவள் உடலின் தேவைகள்  காலம் காலமாக புறம் தள்ளப்பட்டிருப்பது வரலாறு காட்டும் உண்மை.

ராமன், ராவணனைவிடக்  கீழானவனாகிறான், கருவுற்ற  சீதையை காட்டிற்கு அனுப்பியபோது.

புத்தனும் தன் அறிவில் மழுங்கிப்போகிறான், தன்  இளம் மனைவியை தவிக்க விட்டு சென்றபோது.

தனக்கு சேவை செய்ய வந்த இளம் பெண்ணை, சுகம் தர இயலாத போதும்,  மணந்த ஈ.வெ.ரா.வும் பெண்ணுரிமைப் போரில் புறமுதுகிட்டு விடுகிறான். 

நடிகர் நெப்போலியனின் தந்தைப்பாசமும், அந்த திருதராஷ்ட்ரனின் தந்தைப்  பாசத்திற்கு குறைந்தது அல்ல என்றாலும், நடந்ததென்னவோ ஒரு பெண்ணுக்கிழைத்த அநீதியே.

ஓஷோ:

"காமம் என்பது இயல்பானது என்பதினை மனதில் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் நிச்சயமாக காமத்தினை கடந்து செல்லமுடியும். ஆனால், அதனை அடக்குவதால் நிச்சயமாக கடக்க முடியாது. இப்படி அடக்கினால் அது வேறொரு வழியில் வெளிப்பட காத்துக்கொண்டிருக்கும். அப்படி அடக்குவது ஒன்று சமூகத்திற்கு மாறான ஒழுக்க கேட்டினை உருவாக்கும், அல்லது அதன் மீதான அதீத பைத்தியத்தினை உருவாக்கும். (இது எவ்வளவு பெரிய பேருண்மை இன்று கற்பழிப்புகள் அதிகரிப்பதற்கும், காமம் சார் திரைப்படங்களுக்கான வரவேற்பும் இந்த காரணத்தின் அடிப்படையில் அமைந்ததுதான்). நீங்கள் அதனைக்கடந்து செல்ல வேண்டும் என்றால் இயல்பாக அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே அதற்கான முதற் தகுதி!"

"அடிப்படையில் காமம் இறைவனால் கொடுக்கப்பட்ட புனிதமான ஒன்று, அதனை நாம் உயர்ந்த சக்தியாக மாற்றிக்கொள்ளவேண்டியது எமது கடமை. கடவுளால் கொடுக்கப்பட்ட அனைத்தும் புனிதமானவையே, இங்கு கடவுள் எனும் போது அது குறித்த ஒரு நபரினையோ, மத நம்பிக்கையினையோ குறிப்பதல்ல! இந்த பிரபஞ்சத்தின் முழு இருப்பையும் குறிக்கும்.காமத்தினை வெல்லவேண்டுமாயின்
காமத்தின் மீதான வெறுப்பினை இல்லாததாக்குங்கள்!"

To Read Full Blog :

VEDHAYOGA SIDDHARKAL MARKAM NACHANDUPATTI - வேதயோக சித்தர்கள் மார்க்கம்: காம ரகசியம் - 03: காமத்தின் மீதான வெறுப்பு சரியா?

*** *** *** *** ***


  


ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...