Friday, August 30, 2019

ஒண்ணுமொண்ணும் ரெண்டு உன்மேலாசையுண்டு

ஒண்ணுமொண்ணும் ரெண்டு
உன்மேலாசையுண்டு



கேள்வி: ஒண்ணும் ஒண்ணும் என்ன?

                   'ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா' - கூட்டல்

                    'ஓரோண் ஒண்ணு' - பெருக்கல், வகுத்தல்

                   'ஒண்ணும் ஒண்ணும் பதினொண்ணு' - பார்த்தல்

                   'நீ பாதி நான் பாதி கண்ணே!' - பங்காளர்கள்

                  'ஒண்ணுமே தெரியல ஒலகத்திலே' - கழித்தல்

எது சரியான பதில் என்பது கேள்வியல்ல. பதில் சொல்லவே கேள்வி என்றெண்ணாமல், கேள்வி சரியானதா என்று கேட்கும் காலத்தில் நம் தலைமுறை.


வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூரும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.
                                                                       திருமந்திரம்-249


ஒண்ணு:  மலையிடை நின்றிருக்கும் வானீர்,  அருவியாக வழிகிறது என்றுரைக்க தேவை இல்லை.

இன்னொண்ணு: நம்முள்ளே [யோகத்தால், தலை உச்சியில்] ஊறுகின்ற
நுண்ணிய தெளிந்த நீரான வானீர், நுரையோ, அழுக்கோ இல்லாமல்,  நம் பாவங்களை கழுவுகிறது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
                                                                            திருக்குறள்-20

ஒண்ணு: நீரின்றி அமையாது உலகம்.

இன்னொண்ணு: யாராயிருந்தாலும், தலையாகிய  வானத்தில் யோக நிலை இல்லாவிட்டால், வானீர்  ஒழுகாது.

'அதாண்ணே இது' - இனிமேல் யாரும் இன்னொண்ணு எங்கேன்னு கேக்காதீங்க. அப்படித்தான், மேற்சொன்ன குறளுக்கு, பொருள் எழுதி உள்ளார்கள்.

பின் குறிப்பு: யாரும் திருக்குறள் தேர்வில் இந்த பொருள் எழுதி, மதிப்பெண் கிடைக்கவில்லை என்று  குறை கூற வேண்டாம்.




Sunday, August 25, 2019

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ


'அன்புடைய ஆசிரியர் அவர்களுக்கு, தங்கள் தினசரி மற்றும் பதிப்புகளில்
'கருப்பு' என்பது  'கறுப்பு'  என்று அச்சாகி வருவதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.'

இதற்கு பதில் வரலாம், வராமலும் போகலாம்.

தமிழ் எழுத்துக்கள்,  வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்னும் மூன்று பிரிவுகளாக உள்ளதின் அவசியம், அவர் அறிவு நிலைக்கு எட்டாமலும் இருக்கலாம்.

ஆனால், தமிழ் எழுத்துக்களின் முக்கியம் பற்றி அறிய முற்படுபவர்            கண்டிப்பாக திருமூலரின், திருமந்திர மாலை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

எண்வகை கன்மங்கள் 45 வகையின் விரிவாக 323 மந்திரங்கள் தமிழ் எழுத்துக்களின் அடிப்படையில், கணிக்கப்பட்டிருப்பது தமிழுக்கு  இருக்கக்கூடிய அறிவியல் ரீதியான சிறப்பாக அமைந்திருக்கிறது.

சொல்லிய எட்டுக்குந் தோன்றிய துருவமும்
நல்லறை எட்டினில் நாடும் இலக்கமும்
நல்ல பதினாறறைமுதல் நாலினிற்
சொல்லும் பகவத தோன்ற விட்டதே.
                                                         - திருமந்திர மாலை


மொத்தம் நான்கு எழுத்துக்கள்: ப க வ த

வெறும் நான்கு வரிப்பாடல்களில், எழுத்துக்களின் நுண்ணிய பங்களிப்பில், ராசிகள், நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் மந்திரங்கள் பற்றிய தெளிவான
விளக்கங்கள்.

எழுத்துக்களின் வரிசை முறையில் எண்களின் பங்களிப்பும் சேர, ஒரு மாயா ஜாலமே நடத்துகிறது திருமந்திர மாலை.

இந்த சிறப்பு தொடர வேண்டுமானால், எழுத்துப்பிழை வராமல் எழுத கற்றுக்கொள்வதே தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப்பெரிய தொண்டாக அமையும் என்பது திண்ணம்.






Thursday, August 22, 2019

மனதின் அக்ஷரம் மந்திரம்

மனதின் அக்ஷரம் மந்திரம்





மாணவர் மன்றம் தமிழ் தேர்வு நடந்து கொண்டிருந்தது.

தமிழில் எழுதவும்: AUSTRALIA 

            1. ஆஸ்திரேலியா
            2. அவுஸ்திரேலியா
            3. ஆஸ்ட்ரேலியா

'சார்.. தமிழில் இல்லாத எழுத்தில் எப்படி எழுதுவது?. எப்படி எழுதினாலும் 'ஸ்' எழுத்து இல்லாமல் எழுத முடியவில்லை. அவுத்திரேலியா என்று எழுதலாமா?'

பெயர் சொல்லை தமிழ்ப்படுத்தினால் அபாயம். HOMEBUSH என்ற பெயரை எப்படி தமிழில் எழுத முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.

ஹோம்புஷ் என்பதை எப்படி தமிழாக்கம் செய்வது?

கிரந்த [ஆதி] தமிழ் எழுத்துக்களை எப்படி  சிறப்பு தமிழ் எழுத்துக்கள் என்று சொல்வது?

ஐம்பத்தொரு அக்ஷரங்களில் ஒன்றாக இருந்த,  தமிழில் சிறப்பு எழுத்துக்களாக அறியப்பட்ட எழுத்துக்கள், ஏதோ ஒரு கால கட்டத்தில் தமிழ் இழந்துவிட்ட எழுத்துக்கள், இன்று வடமொழி எழுத்துக்களாக  நமக்கு சொல்லிக்  கொடுக்கப்பட்டு வருகிறது.


திருமந்திரம் 2866

காயம் பலகை கவறுஐந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே.

                                                                         

ஐம்பத்தோர் அக்கரம் என்பது ஐம்பத்து ஒன்று  அக்ஷரங்கள். இதுவே உடலில்  முழுமையாக உறைந்துள்ளது என்பது பாடலில் நமக்கு வேண்டிய பொருள்.

சரியான அக்ஷரங்களை, முறையாக பயன்படுத்தினால், அது  தெளிவான மந்திரங்களாக  உடலின் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகளை தூண்டும் கிரியாவூக்கியாகவும்  அமையும்.

இனி, அக்ஷரங்களின் பலனைப்பார்ப்போம்.

நமச்சிவாய, நமட்சிவாய, நமசிவாய, நமசிவய, நமக்ஷிவய - இவற்றில் எது சரியான பஞ்சாக்ஷர மந்திரத்தை குறிக்கிறது?

நமக்ஷிவய என்பதே சரியான பதில்.

திருமூலர் திருமந்திர மாலை என்னும் நூலில், முன்னூறு பாடல்களில் மந்திரங்கள் எழுதுவதற்கான சூத்திரங்களை வழங்கி இருக்கிறார். அந்த மந்திரங்கள்  இந்த ஐம்பத்தொரு அக்ஷரங்களை மூலமாக கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது.  

எதனால் இந்த ஐம்பத்தொரு அக்ஷரங்கள்,  ஏனைய எழுத்துக்களிலிருந்து  வேறுபட்டு நிற்கிறது?

எழுத்துக்கள் புறத்தொடர்பிற்காக, வார்த்தைகளாக  உச்சரிக்கப்படுகிறது. அக்ஷரங்கள் அகத்தொடர்பிற்காக மனதால் அர்ச்சிக்கப்படுகிறது. இதனாலேயே மனத்தால் உச்சரிக்கப்படும் அக்ஷரங்கள் மந்திரம் எனப்பட்டது.

மனதின் அக்ஷரம் மந்திரம்.

*** *** ***








                 







  

Sunday, July 7, 2019

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜா

பொருள்:

'சம்திங் ராங் வித் தி மெஷின்' - மனதை ஆறுதல் படுத்த, நான்காவது எடை காட்டும் கருவியையும் குற்றம் சாட்டினாள், வினோதினி.

'இதுக்கு மேல் வெயிட் போட்டே, உன்னுடைய ஹார்ட் தாங்காது'- மருத்துவரின் குரல் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.

*** ***

ஒரே ஒரு ராஜாவிற்கு ஐந்து அழகிய இளம் பொண்டாட்டிகள்.

'வினோ உன்னுடைய  டயட் மீல், டேபிள்ள வச்சிருக்கேன்' - அம்மாவின் அழைப்பு, காதுகளில் தேனாய் ஒலித்தது..

சமையலறையிலிருந்து வந்த மீன் வருவலின் மணம், பொண்டாட்டி நறுமுகையின் மூக்கைத்துளைத்தது.

'ஒரே ஒரு குட்டியூண்டு மீன் துண்டு எடுத்துக்கட்டுமா?'

பொண்டாட்டி பொற்சுவைக்கோ, சமயலறையில் பரிமாறப்படும் சப்தமே, நாக்கை நீரில் தத்தளிக்க வைத்தது.

'நான் டயட்ல இருக்கேன். மீன் வெயிட் போடாது. ஜஸ்ட் டூ பீஸ் சேத்துக்கலாம்'

பொண்டாட்டி கயல்விழியின்  கண்கள், டைனிங் டேபிள் மேல் இருந்த மீன் வறுவலை விட்டு அகலவேயில்லை.

நாசூக்காக டிஸ்ஸு பேப்பரில் எடுத்து தட்டில் போட்டுக்கொண்டாள்.
'வாரத்துல வர்றது ஒரு ஞாயிற்றுக்கிழமை. இன்னிக்கு மட்டும் புல்லா சாப்ட்டுட்டு ஒரு குட்டி தூக்கம். நாளைக்கு இருந்து ஸ்ட்ரிக்ட் டயட்' - வினோதினியின் கைகள் டயட் மீலை ஒதுக்கியது.

ஐந்து அழகிய இளம் மனைவிகளுக்கும், எண்ணங்களால் கட்டளை இடும், ஒரே அதிகாரி மனம்.

உடலை ஆட்டுவிக்கும் உயிர் நிலையான மன்னன், தன்னுடன்  இணைந்திருக்கும் ஐந்து  மனைவிகளைப்  பற்றிய சிந்தனை அற்றவன். அழகும், இளமையும் போய்விட்டால், அவர்கள் குடி  இருக்கும் உடலை உதறி விட்டு, அடுத்த உடல் தேடி போய் விடுவான்.

தானே புலன்ஐந்தும் தன்  வசமாயிடும்
தானே  புலன்ஐந்தும் தன்வசம் போயிடும்
தானே  புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.
                                                                    - திருமந்திரம்


மறை பொருள்:

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களும் நம் வசமாக வேண்டும். ஐம்புலன்களும் நம்மை இயக்கும் தன்மையை இழக்க வேண்டும்.
அவைகள் விரும்பிய வண்ணம் நம்மை இயக்கிய குணம் மாற வேண்டும். இவைகள் அனைத்தும் நடக்க வேண்டுமென்றால், நாம்  தனி ஒருவனாக, இறை நிலை தியானித்து அமைதியாக இருக்க வேண்டும்.









Wednesday, June 19, 2019

அத்திப்பழம்

அத்திப்பழம்











அத்திப்பழக் கன்னத்திலே கிள்ளி விடவா

திருமந்திரம்-160

அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே.

                                                                    


அத்திப்பழம் போன்ற உடல்களை கொண்ட ஆணும், பெண்ணும் சேர்ந்து  அரைக்கீரை வித்துக்கள் போன்ற தங்கள் உயிர் வித்துக்களால், குழந்தை என்னும்  உணவினை தயாரித்து வைத்தனர்.  அத்திப்பழம் போல் இருந்த குழந்தையின் உடலும், பருவம் வந்தபின்னர் உயிர் வித்துக்களான அரைக்கீரை உயிர் வித்துக்களை விரையம் செய்கிறது. இவ்வாறாக, உயிர் வித்துக்களே உடலென்னும் அத்திப்பழத்தை உண்ண உடலில் உயிர் நிலைப்பதில்லை. உடலை விட்டு உயிர் நீங்கி பிணம் என்றான பின்னர், வாய் விட்டு கத்தி அழுது பிணத்தை எடுத்தவர்கள் சுடுகாட்டில் சென்று சுட்டு எரித்து விடுகிறார்கள்.

இதுதான் மனித வாழ்க்கையின் ஆரம்பமும், முடிவும்.

*** *** ***
 
'இனி ஜென்மத்துக்கும் கிரிக்கெட் பாக்க மாட்டேன்'- திங்கள் காலை அலுவலகம் வந்த தினேஷ் பொருமித்தள்ளினான்.

'சார், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் முக்கியமா, இல்லை ஓல்ட்  கப் மோதுறது
முக்கியமான்னு கேட்டா, ஓல்ட் கப்தான் சொல்வேன்'- சனியன்று இதை சொன்னதும் அவன்தான்.

அப்படி என்ன ஞாயிறு நடந்திருக்கும்? வேறென்ன, இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் 2019 உலக கோப்பை நேரடி போட்டிதான். அதில்தான் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று விட்டார்களே என்று யோசிக்கிறீர்களா?

ஆட்டத்தின் சுவாரசியமே திசை திரும்பிய கதையை கேளுங்க.

மழை, நடுவில் ஆட்டத்தின் வேகத்தை குறைத்தாலும், இந்தியா எடுத்த ஓட்டத்தின் பக்கம் கூட வரமுடியாது போனது பாகிஸ்தானுக்கு. இறுதியில் பாகிஸ்தான் 40 ஓவர்களில் ஆட்டத்தை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு தோல்வியை தழுவியது.

கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் போட்டி அது. காலையில் இருந்தே, போட்டியை தொலைக்காட்சியில் காண்பதற்காக பார்வையாளர்கள் தயாராக இருந்தும், மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகவே  துவங்கியது.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலம் இந்திய தேசிய நாயகனாக கொண்டாடப்படும் அபிநந்தனை வைத்து பாகிஸ்தான் விளம்பர நிறுவனங்கள் கிண்டல் செய்ய.. அதே பாணியில் இந்திய எதிர் விளம்பரங்களும் பரவலாக மக்களை சென்றடைய, ஆட்டம் என்பது ஏறக்குறைய ஒரு போர் நடப்பதற்கான உணர்வை இரு நாட்டு மக்களிடையே கிளப்பி விட்டிருந்தது. உலகமே அண்ணாந்து பார்க்கும் போட்டி அது.

இந்தியா, பாகிஸ்தானை நன்றாக  அடித்து துவைத்து காயப்போட்டுக்கொண்டிருந்த போது  மீண்டும் மழை.

பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் என்னவோ, எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொண்டு, ரொம்ப நல்லவர்களாக உலகக் கோப்பை.. இந்தியா.. எல்லாவற்றையும் மறந்து மந்தமாக விளையாடிக்கொண்டு  இருந்தார்கள். அதன் உச்சம், ஆட்ட நடுவில்  விக்கெட் கீப்பராக நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் கேப்டன் விட்ட கொட்டாவி.

வெற்றி தோல்வியை விட இந்த கொட்டாவிதான், உலகளாவிய விமர்சனத்திற்கான பேசு பொருளானது.

தினேஷ் போன்றவர்கள், எத்தனையோ மேட்ச் பிக்சிங்'  செய்திகளை புறந்தள்ளி விட்டு ஆர்வமா, தூக்கத்தை தியாகம் பண்ணிட்டு, கிரிக்கெட் பார்த்தா அங்கே அவன் கொட்டாவி விட்டுட்டிருக்கான்.

வருடக்கணக்கில் பயிற்சி செய்து, ஒரு போருக்கு இணையான போட்டியில், தான் உண்ட அபரிமிதமான உணவோ அல்லது சரியான தூக்கமின்மையோ, அந்த போட்டியை மட்டுமல்ல, கோடிக்கணக்கான பார்வையாளர்களின் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வத்தை கொன்றே விட்டது.

அபரிமிதமான விளம்பர வெளிச்சம் பெறும்  இம்மாதிரியான வீரர்கள் அவர்களது அரைக்கீரை நல்வித்தை விரையம் செய்வதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.


'இனிமேல் கிரிக்கெட் பாப்பே, நீ?'

*** ***

 













Monday, June 17, 2019

மனிதன்

மனிதன் 

படைத்தானே
மனிதனை ஆண்டவன்
படைத்தானே

பொருள்:

'இதெல்லாம் ஒண்ணும்  வேலைக்காகாது. பேசாம, கும்பகோணம் போய் நவக்கிரஹ கோயில்களை சுத்தி வாங்க. மூணு மாசத்துல கை  மேல பலன் இருக்கும்' - அந்த ஆண்டவனை விட்டால் நமக்கு யார் இதை தர முடியும்.

'பொள்ளாச்சில இருந்து டவுன் பஸ்தான், கோடி சாமியார். இளையராஜா கூட மாச மாசம் வர்ராரு. அவர் ஆசீர்வதிச்சாலே போதும்.'

'இன்னும் மூட நம்பிக்கையில் இருங்க. கல்லார் பழ தோட்டத்துல, துரியன் பழம் இருக்கு. வாங்கி சாப்டுட்டு, பால் சாப்பிடுங்க பெட்டுக்கு போறதுக்கு முன்னாடி'

'சாரி. இந்த மாசம் IVF பார்ம் ஆகல. நெக்ஸ்ட் மந்த் ட்ரை பண்ணுவோம்'

கோவில், கோவிலாய் அலையும் பெண்ணுக்குத் தெரியும், இதெல்லாம் ஒரு வலியே அல்ல, 'முழுசா ஒரு வருஷம் ஆச்சு, இன்னுமா ஒரு புழு பூச்சி உண்டாகல', 'அவ குடுத்தா, நீ சாப்டுவியா?' என்று திருமணமாகாத மகளை கண் முன்னே கண்டிக்கும் போது உண்டாகும் வேதனைக்கு.

வாடகைத்தாய், சுவீகாரம் எடுப்பதெல்லாம் ஒருவர் எடுக்கும் சாதாரண  முடிவல்ல, தான் சார்ந்திருக்கும் கணவன், இருவீட்டு குடும்ப அமைப்பு, சமுதாயம் இதில் பங்கெடுக்கும்போது.

ஆனால், மானிடப் பிறப்பு என்பது எப்படி நடக்கிறது என்பதை, முதல் தந்திரத்தில், திருமூலர் கூறுவதை பாருங்கள்.


விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்நின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்புஅறுத் தானே.
                                                                                       - திருமந்திரம்

மறை பொருள்:

எங்கும் பரந்து விரிந்த பேரண்டத்தில் உள்ள பரஞ்சோதியில் இருந்து இறங்கி வெளிப்படும் உயிரானது, காரியங்கள் செய்வதற்கு ஏற்றவாறு மானிட உடலைப்பெறுகிறது. கால்கள் மண்ணிலே ஊன்றியும், தலை  விண்ணோக்கி யும் இருக்குமாறு உடல் அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. அந்த உடலுக்குள் நின்று, தான் பிரிந்து வந்த பரஞ்சோதியின் ஒளியை உள்ளே வைப்பத்தோடல்லாமல், அந்த உயிரின் நிலை என்றென்றும் ஒப்புயர்வற்ற பேரானந்தம் என்ற அடிப்படையை நியதி ஆக்குகிறது. முதல் பிறவியோ, முந்நூறாவது பிறவியோ, ஒவ்வொரு பிறவியிலும், அதன் முந்தைய நிலையின் நினைப்பை அழித்து புதிய உயிர் மண்ணில் மானிடராக புது வாழ்வை தொடர்கிறது.

புல்லரிக்கிறது, தமிழில் நம் முன்னோர்கள்,  நமக்கு விட்டு சென்ற பொக்கிஷத்தை உணரும்போது.

புது உயிர்களை உருவாக்குவதில்  மனிதனின் பங்கு என்பது 'காக்கை உட்காரப்  பனம்பழம் விழுவது'  போலத்தான்.

படைத்தானே.. படைத்தானே..
மனிதனை ஆண்டவன்
படைத்தானே..






Saturday, June 15, 2019

சாதனையாளர்

சாதனையாளர்

வெற்றி பெற்ற
மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை



பொருள்:


'அதிகப்பிரசங்கி, உக்காருடா'-  கேள்வி கேட்ட சரவணனை உட்கார சொன்னார்  தமிழாசிரியர்.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்று எண்ணையும், எழுத்தையும் மிக விரிவாக விளக்கிக்கொண்டிருந்தவர், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மாணவனை அதட்டினார்.

'என்ன தப்பாய் கேட்டுவிட்டேன்?'

'ஐயா நீங்கள் சொல்லித்தருவதெல்லாம் ஏற்கனவே மற்றவர்கள் உருவாக்கி உலகுக்கு  தெரியப்படுத்தியது. நாம் புதிதாக இதுபோல்  உருவாக்க என்ன செய்ய வேண்டும்?'

பேரண்டத்தின் முதல் அணு கருவாகும் முன்னர், உருவான எண்ணும், எழுத்தும் அதை சார்ந்த மொழியும் மனித சமுதாயத்தின் ஆணி வேர்.

கல்லும், காற்றும் தோன்று முன்னே  தோன்றிய எழுத்தை, அளந்ததல்லவா எண்கள். ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பின் கால அளவு, மாத்திரை எனும் அலகில், கணக்கிடும் இலக்கணம் எண்கள் தானே.

ஆதி பகவான் உலகுக்கு தெரிவித்ததாக அறிவதெல்லாம் எண்ணும், எழுத்தும் தானே. எனவே, அவருக்கு முன்னரே தோன்றியதாக இருக்க வேண்டும், அகர முதல எழுத்துக்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                                             - திருக்குறள் 

நாம் இதுவரை அறிந்து வந்த குறளின் பொருளே  வேறுபடுகிறது.

இன்றுவரை நாம் அறிந்ததும், பேரறிஞர்கள் விட்டு சென்றது எல்லாமே இந்த மூல அறிவான எண்ணும், எழுத்தும்  அடிப்படையில் தானே.

எழுத்துக்களே மறை நூல்கள், செய்யுள்கள், உரைநடை கதைகள், கட்டுரைகள் மற்றும் மொழி எதுவானாலும்.

இறை நிலையே இல்லை, இருந்தால் காட்டு, இருந்திருந்தால் நலமே, என எள்ளி நகைக்கும் நாம், எண் மற்றும் எழுத்துக்கு ஈடாக புதியதாக எதை ஈன்றிருக்கிறோம்?

ஈன்றிருந்தால் நாம் சாதனையாளர்தான்.









கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...