திருமந்திரம்-160
அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே.
அத்திப்பழம் போன்ற உடல்களை கொண்ட ஆணும், பெண்ணும் சேர்ந்து அரைக்கீரை வித்துக்கள் போன்ற தங்கள் உயிர் வித்துக்களால், குழந்தை என்னும் உணவினை தயாரித்து வைத்தனர். அத்திப்பழம் போல் இருந்த குழந்தையின் உடலும், பருவம் வந்தபின்னர் உயிர் வித்துக்களான அரைக்கீரை உயிர் வித்துக்களை விரையம் செய்கிறது. இவ்வாறாக, உயிர் வித்துக்களே உடலென்னும் அத்திப்பழத்தை உண்ண உடலில் உயிர் நிலைப்பதில்லை. உடலை விட்டு உயிர் நீங்கி பிணம் என்றான பின்னர், வாய் விட்டு கத்தி அழுது பிணத்தை எடுத்தவர்கள் சுடுகாட்டில் சென்று சுட்டு எரித்து விடுகிறார்கள்.
இதுதான் மனித வாழ்க்கையின் ஆரம்பமும், முடிவும்.
*** *** ***
'இனி ஜென்மத்துக்கும் கிரிக்கெட் பாக்க மாட்டேன்'- திங்கள் காலை அலுவலகம் வந்த தினேஷ் பொருமித்தள்ளினான்.
'சார், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் முக்கியமா, இல்லை ஓல்ட் கப் மோதுறது
முக்கியமான்னு கேட்டா, ஓல்ட் கப்தான் சொல்வேன்'- சனியன்று இதை சொன்னதும் அவன்தான்.
அப்படி என்ன ஞாயிறு நடந்திருக்கும்? வேறென்ன, இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் 2019 உலக கோப்பை நேரடி போட்டிதான். அதில்தான் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று விட்டார்களே என்று யோசிக்கிறீர்களா?
ஆட்டத்தின் சுவாரசியமே திசை திரும்பிய கதையை கேளுங்க.
மழை, நடுவில் ஆட்டத்தின் வேகத்தை குறைத்தாலும், இந்தியா எடுத்த ஓட்டத்தின் பக்கம் கூட வரமுடியாது போனது பாகிஸ்தானுக்கு. இறுதியில் பாகிஸ்தான் 40 ஓவர்களில் ஆட்டத்தை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு தோல்வியை தழுவியது.
கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் போட்டி அது. காலையில் இருந்தே, போட்டியை தொலைக்காட்சியில் காண்பதற்காக பார்வையாளர்கள் தயாராக இருந்தும், மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகவே துவங்கியது.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலம் இந்திய தேசிய நாயகனாக கொண்டாடப்படும் அபிநந்தனை வைத்து பாகிஸ்தான் விளம்பர நிறுவனங்கள் கிண்டல் செய்ய.. அதே பாணியில் இந்திய எதிர் விளம்பரங்களும் பரவலாக மக்களை சென்றடைய, ஆட்டம் என்பது ஏறக்குறைய ஒரு போர் நடப்பதற்கான உணர்வை இரு நாட்டு மக்களிடையே கிளப்பி விட்டிருந்தது. உலகமே அண்ணாந்து பார்க்கும் போட்டி அது.
இந்தியா, பாகிஸ்தானை நன்றாக அடித்து துவைத்து காயப்போட்டுக்கொண்டிருந்த போது மீண்டும் மழை.
பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் என்னவோ, எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொண்டு, ரொம்ப நல்லவர்களாக உலகக் கோப்பை.. இந்தியா.. எல்லாவற்றையும் மறந்து மந்தமாக விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அதன் உச்சம், ஆட்ட நடுவில் விக்கெட் கீப்பராக நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் கேப்டன் விட்ட கொட்டாவி.
வெற்றி தோல்வியை விட இந்த கொட்டாவிதான், உலகளாவிய விமர்சனத்திற்கான பேசு பொருளானது.
தினேஷ் போன்றவர்கள், எத்தனையோ மேட்ச் பிக்சிங்' செய்திகளை புறந்தள்ளி விட்டு ஆர்வமா, தூக்கத்தை தியாகம் பண்ணிட்டு, கிரிக்கெட் பார்த்தா அங்கே அவன் கொட்டாவி விட்டுட்டிருக்கான்.
வருடக்கணக்கில் பயிற்சி செய்து, ஒரு போருக்கு இணையான போட்டியில், தான் உண்ட அபரிமிதமான உணவோ அல்லது சரியான தூக்கமின்மையோ, அந்த போட்டியை மட்டுமல்ல, கோடிக்கணக்கான பார்வையாளர்களின் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வத்தை கொன்றே விட்டது.
அபரிமிதமான விளம்பர வெளிச்சம் பெறும் இம்மாதிரியான வீரர்கள் அவர்களது அரைக்கீரை நல்வித்தை விரையம் செய்வதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.
'இனிமேல் கிரிக்கெட் பாப்பே, நீ?'
*** ***
No comments:
Post a Comment