காமமும் நாணும் உயிர் காவும்?
5 ஏப்ரல் 2023 செய்தி:
பெண்கள் கிளாமராக உடை அணிந்தால்.. சீண்டி விடுவீர்களா? பெயில் வழக்கில் விளாசிய கேரளா ஹைகோர்ட்!
அன்று முதல் இன்றுவரை இதே கதை.நோனா உடம்பின் அகத்து.
காமமும் நாணும் உயிர் காவும்?
5 ஏப்ரல் 2023 செய்தி:
பெண்கள் கிளாமராக உடை அணிந்தால்.. சீண்டி விடுவீர்களா? பெயில் வழக்கில் விளாசிய கேரளா ஹைகோர்ட்!
அன்று முதல் இன்றுவரை இதே கதை.நஞ்சுண்பார் கள்ளுண்பவர்
ஆரம்ப பள்ளியில் மதிய உணவு.
திருக்குறள் 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
[தவம் இயற்றுவோர் பசியை தாங்கும் வலிமை வாய்ந்தவர்கள். அவரினும் மேன்மை வாய்ந்தவர்கள் உணவை வழங்கி சாதாரண மக்களின் பசியை ஆற்ற வல்லவர்கள்.]
தட்டில் மதிய உணவு போட்டவுடன் சொல்லும் திருக்குறள். திருக்குறளை கோரஸாக சொல்லிவிட்டு தட்டை ஆவலுடன் பார்க்கிறான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாரியப்பன்.
ஒரு கரண்டி மக்காசோள உப்புமா. கூடவே கொஞ்சம் பருப்பு நீர். கொஞ்சம் தாளித்த தயிர்.
உப்புமாவில் கருப்பாக செல் பூச்சிகள், வெள்ளையாக சிறு புழுக்கள். முடிந்த அளவு பொருக்கி போட்டுவிட்டு சாப்பிட ஆரம்பித்தான். அதுவே காலையில் எதுவும் உண்ணாத வயிறுக்கு சுகமாக இருந்தது.
மதிய உணவில் வழங்கும் மக்காசோளமும், ஓட்ஸ் மற்றும் சமையல் எண்ணெய் கூட உலக நாடுகளின் தானம். உணவு தானியங்கள் பல மாதங்கள் பயணித்து இந்தியா வந்து சேர்ந்து, கடைநிலை குழந்தைக்கு போய் சேருமுன் உண்பதற்கு தகுதியற்ற நிலைக்கு சென்று விடுகிறது.
மாரியப்பனுடன் பிறந்தவர்கள் ஆறுபேர். நெசவு குடும்பம். யாரும் வருமானம் ஈட்டும் அளவிற்கு வளரவில்லை. மூத்த அண்ணனின் கால்கள் நெசவு குழிக்குள் எட்டியவுடன், படிப்பை நிறுத்தி நெசவு செய்ய ஆரம்பித்தாயிற்று.
அம்மாவின் கடின உழைப்பில் சொற்ப வருமானம், மற்றும் அண்ணனின் நெசவில் வரும் வருமானமே அனைவரின் வயிற்றுக்கு ஆதரவு. தங்கை ஏழு குழந்தைகளுடன் படும் அவஸ்தையை காண சகிக்காமல் உதவும் பெரியம்மா. கடைசி பையன் கைக்குழந்தை.
பகலில் ஒரு வேளை சாப்பாடு பாதி பேருக்கு. மீதமுள்ளவர்களுக்கு பள்ளியில் கொடுக்கும் மதிய உணவுதான்.
அப்பாவை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே..
அது மின்சாரம் வீட்டுக்கு வராத காலம். அம்மாவுக்கு எதிரில் அமர்ந்து மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தான் மாரியப்பன். அம்மா நெசவு செய்வதற்கு, ஊடு நூல் ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருந்தார்.
கோபமாக வந்த அப்பா, ராட்டினத்தை தாண்டி அம்மாவை எட்டி ஒரு உதை விட்டார்.
'ஏண்டி, அரிசி சோறு செய்யல?'
குடிகார நண்பன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.
தேவையான அளவு அரிசி வாங்கி அனைவருக்கும் சமைக்க முடியாது என்பதால் அம்மா கம்பு வாங்கி களி செய்து வைத்திருந்தாள். அதை குடிகார விருந்தாளி நண்பனுக்கு உண்ண கொடுப்பதில் அப்பாவுக்கு தன்மானப் பிரச்சினை.
அம்மா அப்படியே மயங்கி சாய்ந்து விட்டாள்.
அம்மா அலறிய சப்தத்தை கேட்டு பெரியம்மா ஓடி வந்தார். அப்பாவை அப்படியே பிடித்து இழுத்து வெளியே வீதிக்கு கொண்டு வந்தார்.
அதற்குள், ஊர் முழுக்க வீதியில் கூடி விட்டது. ரொம்ப சிறிய கிராமம் அது. குடும்ப ரகசியம் என்று எதுவுமே நடக்க சாத்தியமில்லாத சமுதாயம்.
பந்தலில் இருந்து ஒரு மூங்கிலை இழுத்தெடுத்தார் அப்பா. நிலை தடுமாறும் போதையிலும் எப்படி அவரால் பந்தலில் இருந்து மூங்கிலை உருவ முடிந்தது என்று ஆச்சரியம் மாரியப்பனுக்கு.
மூங்கில் குச்சியை ஓங்கி பெரியம்மா தலை மீது அடித்தார். கண் இமைக்கும் நேரத்தில் பெரியம்மா கைகளை உயர்த்தி, பெருவிரல், ஆள்காட்டிவிரலுக்கு நடுவில் பிடித்துக்கொண்டார். பிடித்ததோடு நில்லாமல் மூங்கிலையும் இழுத்து விட்டார்.
நிலை தடுமாறி நின்றவரை ஊரின் இளவட்டங்கள் பிடித்துக்கொண்டது. இரு கைகளையும் பின்னால் கட்டி புளிய மர வேரோடு சேர்த்து கட்டி விட்டார்கள்.
அப்பாவும் 'விட்டது சனி' என்று குடும்ப பாரத்தை அம்மா மீது சுமத்திவிட்டு பிரிந்து சென்று விட்டார்.
முப்பத்தைந்து வயது நிரம்பாத அம்மாவுக்கு தன்னோடு சேர்த்து எட்டு உயிர்களை காப்பாற்ற வேண்டிய கடமை.
நாட்கள் அப்படியே ஓடிவிடாதே. வறுமை ருத்ர தாண்டவம் ஆடியது.
உண்ண எதுவுமே இல்லாத ஒரு நாளில்.. 'நல்ல தங்காள்'- முடிவெடுக்கிறாள் அம்மா.
வீட்டில் அங்கே, இங்கே என்று தேடி பார்த்ததில், ஒரு கால் படி அளவு கொள்ளுப்பயர் கிடைத்தது. அதை ஊறவைத்து, ஆட்டாங்கல்லில் போட்டு ஆட்டி, உப்புமா செய்கிறாள் அம்மா.
அம்மா கொடுத்ததை எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டான் மாரியப்பன்.
அன்றைக்கு அந்த எட்டு உயிர்களை எந்த சக்தி காப்பாற்றியதோ தெரியாது. யாருக்கும் எதுவும் ஆகவில்லை. ஆனால், குடி கெடுக்கும் குடியின் கொடுமையை நன்குணர்ந்தான் மாரியப்பன்.
திருக்குறள்-926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
குடிப்பவர் குடிப்பது விஷத்தை. இவர்கள் தூங்குபவர்கள், செத்தவர்கள் போன்று எதற்கும் உபயோகமற்றவர்.
அந்த காலகட்டத்தில், கள்ள சாராயம் என்று பட்டை சாராயம் மட்டுமே கிடைத்தது. மதுவிலக்கு பூரண அமலில் இருந்தது. அப்படியும் கிராமங்களில் கள்ள சாராயம் தேவைக்கதிகமாகவே புழக்கத்தில் இருந்தது.
திருமந்திரம் 326
காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்
மாமல மும்சம யத்தில் மயல்உறும்
போமதி யாகும் புனிதன் இணைஅடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.
கேடான எண்ணங்களுடையவர்களின் குணமே காமமும், கள்ளுண்ணும் தன்மையும். சில சமயங்களில் தன்னிலை மறந்த ஆணவம் பிறக்கும். மூளை கெட்டு ஓங்கார வடிவான இறைவனின் திருவடிகளை வணங்கி ஆனந்தத்தேனை பருகும் உணர்வு அற்று போகும்.
இன்றைக்கு, அரசே மது விற்பனை செய்கிறது. பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நிகராக விற்பனை இலக்குகளுடன்.
சூதாட்ட தடை சட்ட அனுமதிக்காக, இறந்தவர்களின் சாம்பலை தமிழக ஆளுநருக்கு அனுப்பும் நூதன போராட்டத்தை கையில் எடுத்திருப்பவர்களுக்கு மாரியப்பனின் வாழ்த்துகள்.
அப்படியே, மாரியப்பன் போன்றோர்களின் இரத்தத்தை எடுத்து தமிழக முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தையும் முன்னெடுங்கள். நானும் இரத்தம் வழங்குகிறேன், மாரியப்பன் என்ற முறையில்.
*** *** ***
ரகசியம் பரம ரகசியம்
திருமந்திரம் கற்போம்
நான் ஏன் பிறந்தேன்?
திருமந்திரம் கற்போம்
பாடல் 113
பாடல்:
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் ருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பு அறுத்தானே.
- திருமந்திரம் 113
மனித உடல் பிறப்பெடுக்கும் முறையை விளக்கும் பாடல் இது. முதலில் விண்ணின் என்ற வார்த்தையின் பொருளைப்பார்ப்போம்.
விண் என்பது ஆகாயம். ஆகாயத்தின் கூறுகள் மனித வாழ்வில் ஐந்து வித உணர்வுகளை கொண்டது.
1. காமம்
2. குரோதம்
3. லோபம்
4. மதம்
5. மாச்சரியம்
காமம் என்பது அளவற்ற ஆசை. அது பொன்னாகட்டும், பொருளாகட்டும், பெண்ணாகட்டும், குடும்பமாகட்டும், ஆசை அளவு கடந்தால் அதனை காமம் என்று கூறலாம்.
குரோதம் என்பது மற்றவர்கள் மீது கொள்ளும் கோபம், வெகுண்டெழுதல், பழிவாங்குதல் போன்றவை ஆகும்.
லோபம் என்றால் சுய லாப நோக்கு. தனக்கு, தனக்கு என்று எதையும் ஒதுக்கி வைத்துக்கொள்வது. தன்னால்தான் எதுவும் நடக்கிறது என்றோ, தன்னை விட்டால் யாரும் செய்ய முடியாது என்ற சுயநலத்தன்மை.
மதம் என்பது நன்மையோ, தீமையோ ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு அதற்காக அலைவது. மதம் பிடித்து அலைகிறான் என்ற பேச்சினை கேட்கிறோமல்லவா.
மாச்சரியம் இது பொறாமை. எனக்கில்லையே, அவனுக்கு மட்டும் அழகான மனைவி இருக்கிறாளே என்ற ஆதங்கம். அவளுக்கு எவ்வளவு நீளமான கூந்தல் என்று பெண்கள் பெருமூச்செறிந்ததை பார்த்திருப்பீர்கள்.
இந்த ஆகாயத்தின் கூறுகள்தான் மனிதனின் அடிப்படை தன்மைகள்.
விண்ணின் றிழிந்து
இழிந்து, இந்த வார்த்தையை கவனித்தால், வானத்திலிருந்து வழிந்து என்ற பொருள் தருகிறது. வானத்திலிருந்து குதிக்கவில்லை, மெதுவாக தேன் வழிவதைப்போல் வழிந்து வருகிறார்.
வினைக்கீடாய்
நீ பல பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைகளின் பலன்கள்.
ஜக்கி வாசுதேவ் ஒரு நேர்காணல் கேள்வி நேரத்தில் தவித்ததை சொல்லத்தான் வேண்டும்.
'மனிதன் தன் முதல் பிறப்பில் எப்படி பாவமோ, புண்ணியமோ செய்திருக்க முடியும்? - இது பார்வையாளர் கேட்ட கேள்வி.
'இதை
நெறைய பேர்கிட்ட கேட்டுட்டு என்கிட்ட கேக்குறீங்க. நல்ல கேள்வி..' - இப்படியாக மழுப்பல் பதில்தான் ஜக்கியிடம் இருந்து பெற முடிந்தது.
அதற்கான பதில் நம் சித்தர் பெருமானிடம் இருந்து வருவதைப்பாருங்கள்.
'பதியினைப் போல்பசு பாசம் அனாதி'
பதி - ஆதி இறைவன் [பேரறிவு]
பசு - உயிரணு அல்லது ஜீவன்கள் [சிற்றறிவு]
பாசம் - தளை அல்லது பற்று [அறிவிலி]
இம்மூன்று நிலைகளுமே ஆதியில் தோன்றியவை. ஜீவன் ஒவ்வொறு பிறப்பிலும், அதனை பற்றி நிற்கும் தளைகளால் நல்வினை, தீவினை என்ற செயல்களில் ஈடுபடுகிறது.
புல்லாகி, பூண்டாகி இறுதியில் மனிதனாகும் தன் முதல் பிறப்பில் பல்வேறு வினைகளை கடந்து வர வாய்ப்பிருக்கிறது. மீண்டும் மனிதனாக பிறப்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
மெய்கொண்டு
உன்னுடைய இருவினைப்பயன்களுக்கேற்ப உடலினை கொண்டு வந்து தருகிறான்.
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
தன்னுடைய குளிர்ந்த பாதங்களை ஜீவனின் தலைக்கு காவலாக முதலில் வைக்கிறான்.
நாம் புரிந்து கொள்ள வேண்டிய சங்கதி ஒன்றிங்குண்டு. அதாவது ஒவ்வொரு மனிதனின் தலையின் உச்சியில் இறைவனின் தாள், அதாவது பாதம் இருக்கிறது.
கடவுள் வாழ்த்தில் திருவள்ளுவர் இறைவனின் திருவடிகளை முழுமையாக போற்றுவதைப்பாருங்கள்:
கற்றதின் முழுப்பயன் - 'நற்றாள் தொழுவது'.
'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்' - ஆயிரம் மலர்கள் மலரக்கூடிய உச்சந்தலையின் மேல் நிற்கும் இறைவனின் மாண்புமிக்க தாள்கள்.
'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்' - மனக்கவலை மாற்றும் மருந்து.
'அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்' - பிறவிப்பெருங்கடல் நீந்தலரிது.
'தாளை வணங்காத் தலை' - ஜடத்தை போன்று உணர்வற்றவர்கள்.
'இறைவன் அடிசேரா தார்' - பிறவிக்கடல் நீந்தார்.
உண்ணின் ருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக்
ஒப்பற்ற பேரொளியுடன், பேரானந்தத்தையும் ஜீவனின் அகக்கண்களுக்கு காட்டினான் இறைவன்.
களிம்பு அறுத்தானே.
ஜீவனின் முந்தைய பிறவிகளின் நினைவுகளை மனதில் இருந்து அழித்து விட்டான். தன் ஜீவன் அனாதியானது என்றோ, முக்தியடையும் வரை பிறவிச்சுழலில் சிக்கியிருக்கும் என்றோ ஜீவனுக்கு தெரியாமல் மறைந்து நிற்கும்.
பலபிறவிகளில் பெற்ற அறிவு நுண்ணறிவாக ஜீவனின் கருவில் பதிவுகள் இருக்கும். அந்த அறிவின் பதிவினை அந்தக்கரணங்களான மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என்னும் நான்கு நிலையிலிருந்தும் அகற்றி நிற்பான் இறைவன்.
*** *** ***
சூது என்ன செய்யும்?
இது பொறுப்பதில்லை - தம்பி
எரிதழல் கொண்டு வா..
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்..
பீமன் வெகுண்டெழுந்தான்.
தருமன் தலை குனிந்தான். தரும தேவதையும் தலை குனிந்தாள்.
அதர்மம் கர்ஜித்தது.
தகாத வழியில் துரியோதனன் பெற்ற வெற்றியால் பார்வையற்ற தந்தை திருதராஷ்டிரனின் மனம் மகிழ்ந்தது. குலத்துக்கே குருவான பீஷ்மர் தன் கையாலாகாத்தனத்தை எண்ணி வெட்கினான். கவுரவ, பாண்டவ இளவரசர்களுக்கு அத்தனை கலைகளிலும் பயிற்சி தந்த ஆச்சாரியர்கள் செய்வதறியாது வேதனையில் மௌன சாட்சியாக நின்றார்கள்.
' துச்சாதனா, பாஞ்சாலியின் ஆடையை அகற்றி என் தொடையில் அமர்த்து' - துரியோதனின் ஆணையை ஏற்று துகில் உரிந்தான் துச்சாதனன்.
பாஞ்சாலியின் தஞ்சக்குரல் கேட்டு கண்ணன் கை கொடுத்தான்.
'துரியோதனனின் குருதி பூசி கூந்தல் முடிப்பேன்' - சபதமேற்றாள் பாஞ்சாலி.
'என் கதையால் அவன் தொடையை அடித்து குருதி தருவேன்' - கண் சிவந்தான் பீமன்.
மகாபாரதத்தின் ஆணி வேர் இந்த சூதாட்டம்.
பெண்ணாசை, பிள்ளையாசை மற்றும் பொருளாசை.
மனிதனை அலைக்கழிக்கும் மூன்று பேராசைகளும் ஒருங்கே இந்த சூதில் அரங்கேறியது.
சூதாட்டத்தில் இறங்கியவர்களுக்கு காமம் கூட இரண்டாம்பட்சம் தான்.
திருமூலரும் தன் பங்கிற்கு சூதின் தீவிரத்தை விளக்குவதை பார்ப்போம்.
பெண்ணை சூது விளையாட்டிற்கு ஒப்பாக கூறுகிறார்.
'சூதொத்த மென்முலையாளும் நற்சூதனும்' - இந்த வரிகளில் கலவியின் போது பெண்கள் சூதாட்டத்தைப் போன்றவர்கள். அதிலும் பல பாடல்களில் 'ஆயிழையார் ', மெல்லியல் மாதர்' என்று பல விதங்களில் பெண்களை குறிப்பிட்டவர், இந்த பாடலில் மட்டும் மென்முலையாளும் என்று கூறுகிறார். உறவு என்பதே ஒரு சூதாட்டம் போல. அதில் விளையாட்டு மைதானம் பெண் என்றால் சூதாட்டக்கருவி மென்முலைகள் என்கிறார்.
பரியங்க யோகம் மூலம் இறைவனை தலையில் தரிசிக்கலாம். அதிலும் ஒரே நேரத்தில், உறவில் பங்கேற்கும் தலைவனும், தலைவியும் இறைவனை தரிசிக்கும் கலையை விளக்கவே இப்பாடல்.
'போதத்தை உன்னவே போகாது வாயுவும்' - கலவியின் போது ஆணும், பெண்ணும் புருவ நெற்றியில் நினைவை வைத்து இறைவனை போற்றி நினைக்கவேண்டும். இவ்வாறு செய்வதனால், காம வாயு எனப்படும் அபான வாயுவின் தன்மை அடங்கி நிற்கும்.
இவ்வாறு காம வாயு அடங்கி நிற்பதனால்,
'மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில்' - மேகத்தை போன்ற வெண்மையான ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்தில் சேராது ஆணின் உடலிலே தங்கி விடும்.
'தாதில் குழைந்து தலை கண்டவாறே' - தங்களுடைய கலவி இன்பத்தில், தலையில் இறைவனை தரிசிப்பார்கள்.
நான் சொல்ல வந்தது சூதின் தீமைகளைப்பற்றி.
இணைய வழி சூதாட்டத்தடை சட்டம் பற்றி.
இந்திய பாராளுமன்றத்தில் மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டது.
தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி, இரு முறையும் ஒப்புதல் பெற முடியவில்லை. இப்பொழுது மூன்றாம் முறைக்கு தயார் ஆகிறார்கள்.
தீங்கென்று தெரிந்தும், எரிதழல் கொண்டுவா, என்று சமூக நீதியாளர்கள், அரசியல்வாதிகள் பொங்காதது ஏன்?
உண்மையில் நடந்தது என்ன?
யாருக்கும் தெரியாது. தெரியவும் விட மாட்டார்கள்.
ஏனென்றால், ' அரசியலில், இது சாதாரணமப்பா'.
ஆனால், இது மக்களுக்கு சாதா ரணமப்பா.
*** *** ***
திருமந்திரம் 826
போதத்தை உன்னவே போகாது வாயுவும்
மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலையாளும் நற்சூதனும்
தாதில் குழைந்து தலை கண்டவாறே.
'என்னங்க..'
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
- திருக்குறள் 66
'பாப்பா.. உன் பேரென்ன?'
'என் பேரு.. என் பேரு.. ம்.. ம்.. சொன்னா..'
'சொல்லு'
'சொன்னா'
'தம்பி, அவ பேரு ஸ்வர்ணா. அதைதான் அவ்வளவு அழகா சொல்றா'
ஓசை. ஊறு, ஒளி, சுவை, நாற்றம்.
பஞ்ச பூதங்களில் ஒன்று ஆகாயம். ஆகாயத்திலிருந்து இயற்கையாக நாதம், அதாவது ஓசை எழுகிறது. ஓசையைத்தொடர்ந்துதான் ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் உணர்வுகள் காற்று, நெருப்பு, நீர், நிலம் என்னும் பூதங்களை முறையாக பற்றி நிற்கிறது.
அண்டத்திலிருப்பதுதான் பிண்டத்தில் இருக்கிறது என்ற சொல் உண்மையானால் பிண்டத்தில் ஓசை எங்கே உண்டாகிறது? எப்படி அந்த ஓசை உணர்வுமிக்க சொல்லாக மாறி குரலில் இருந்து வெளிப்படுகிறது.
நீ பேசும் சொற்கள் குரலிலிருந்து எப்படி வெளிப்படுகிறது?
கேள்வி குழந்தையின் காதுக்கு சென்றவுடன் உரிய பதில் தருவதற்கு என்ன தேவை என்று பார்ப்போம்.
முதலில் பதில் தருவதற்கான ஓசை.
இந்த ஓசை மூலாதாரத்தில் இருந்து கிடைக்கிறது. அதற்கு சூக்குமை என்று பெயர். பேரண்டத்தில், சுத்த வெளியில் தொடர்ந்து ஒலிக்கும் ஓங்கார நாதம், மூலாதாரத்திலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
அடுத்தாக ஓசைக்கு உணர்வு சேர்க்க வேண்டும். அது சுவாதிஷ்டானத்தில் நடக்கும் செயல். இதனை பைசந்தி என்பார்கள். உணர்வு என்பது கேட்கப்படும் அல்லது கேட்கவிருக்கும் கேள்விக்கேற்ப மாறும்.
கல்யாணமான கணவன்களுக்குத்தான் தெரியும் மனைவியின் 'என்னங்க' என்பதில் உள்ள எழுபத்தி இரண்டாயிரம் அர்த்தங்களும். மனித உடலில் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகள் உள்ளது; அதாவது பாதைகள். மனைவியின் அந்த 'என்னங்க' என்ற ஓசையில் உள்ள அர்த்தங்களை புரிந்து கொள்ள அத்தனை நாடிகளையும் உபயோகிக்க தெரிந்தவன்தான் வாழத்தெரிந்த கணவன்.
மனைவி கணவனை 'என்னங்க' என்று அழைக்கையில் கண்டிப்பாக சுவாதிஷ்டானத்தில் உணர்வு நிலையை பெற்றிருப்பாள். பட்டு சேலை கேட்கும்போது கெஞ்சலாக தோன்றும் அதே வார்த்தை, அவன் கஷ்டப்பட்டு ஒளித்து வைத்த ஒரு பொருள் அவள் கைக்கு கிடைக்கும்போது லேசர் கதிர் வீச்சுபோல் இருக்கும். அந்த பொருள், சாதாரண கைக்குட்டையாக கூட இருக்கலாம். பெண்ணின் கைகுட்டையாகவோ, லேசாக சிவப்பு கறை இருந்துவிட்டால் முடிந்தது அவன் வாழ்வு. ஆயுட்கால அடிமை சாசனம் எழுதி வைத்துவிட வேண்டியதுதான்.
அடுத்தது சொல். உணர்வு நிலை பெற்ற ஓசை, பதில் தரவோ அல்லது பேசவோ சொற்களை பெற்றாக வேண்டும். வெறும் உணர்வு நிலையிலே நின்று விட்டால், வரும் ஓசை முக்கலும், முனகலுமாக நின்று விடும். கடும் காய்ச்சலில் படுத்திருக்கும் ஒருவனின் முனகல் அவனது வேதனை உணர்வை மட்டுமே காட்டும்.
சொல் உண்டாவதற்கு மனதின் ஒத்துழைப்பும் தேவை. மூளையின் உதவியுடன் மனம் யோசிக்கும். பதில் தரலாமா? பதில் தருவதானால் என்ன பதில் தருவது?
முடிவெடுத்தபின் உருவாவதுதான் சொல். சொல், மத்திமை எனப்படும் கழுத்தில் உண்டாகிறது. சொற்கள் பேசுபவரின் ஆளுமைக்கேற்ப தெளிவான வாக்கியங்களாக, ஒலியாக வெளிப்படுகிறது.
சொற்களாக மாறி குரல் வழியாக ஒலியாக வருவதை வைகரி என்பார்கள். இதுவும் இரண்டு வகைப்படும். ஸ்தூல வைகரி என்பது ஒலி குரலில் இருந்து ஒலிப்பது. இதுவே ஒலி வெளிப்படாமல் மனதுக்குள்ளே ஜெபிப்பது சூக்கும வைகரி எனப்படும். மந்திரங்கள் உச்சரிக்க வேண்டியது சூக்கும வைகரியில்தான்.
ஓசை, உணர்வு, மனம், சொல், குரல்.
ஒவ்வொரு முறை நாம் வாய் திறந்து பேசும்போதும், மேற்சொன்ன வரிசையில்தான் நடக்கிறது.
*** *** ***
அகரம் தமிழுக்கு சிகரம்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்:
ஆதி பகவான் அகரம் முதலான எழுத்துக்களை முதலில் உலகில் படைத்தான்.
----------------------------------------------------------
உன்னலரும் பரசிவன்ற னருளாலே நாத
முதிக்கு மிகுங் குடிலைதனில் விந்துவரு நாதந்
தன்னிலதி னொளிவளருஞ் சதாசிவரா மவரிற்
றயங்கவரு மீசர்வித்தை தனையளிப்ப ரதனான்
மன்னுவரிவ் வகையைவர் வாய்மையினான் முன்னே
வந்திடுமென் றுரைசெய்த விந்துவழா வகையே
முன்னுதவு சூக்குமாதி யொருநான்கு மென்று
மொழிந்திடுவ றருங்கலைகள் முதிர்ந்து ளோரே.
- சிவப்பிரகாசம் 21
பரமசிவனது சத்தியின் வியாபாரத்தால் சுத்த மாயையிலே நாதம் தோன்றும். நாதத்தில் விந்து தோன்றும்.
நாதம் என்பது உலகம் பிறக்கும்போது உண்டான ஓங்கார ஒலி.
வாக்குக்களாலாவது வன்னம் [எழுத்து]. அதாவது ஒலியால் வருவது எழுத்து. அல்லது ஒலியின் வரி வடிவம் எழுத்து.
'ஓம்' என்று எழுதுவது ஓங்கார ஒலியின் வரி வடிவம்.
ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.
- திருமந்திரம் 381
ஆதி இறைவனோடு இரண்டறக்கலந்திருக்கும் பராசக்தியின் ஜோதியில் நாதம் ஒலிக்கும். இந்த ஓங்கார நாதத்தை மூன்று எழுத்துக்களாக பிரிக்கலாம்.
ஓம் = அ +உ +ம்
ஓர்எழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈர்எழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
'மூ'எழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மா எழுத்தாலே மயக்கமே உற்றதே. - திருமந்திரம் 885
முதல் எழுத்து அ.
அகரத்தில் ஆரம்பிக்கிறது மற்ற எழுத்துவகைகள்.
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம.. வெகுகோடி -திருப்புகழ் 170
நாதமும், விந்துவும் ஆதியில் தோன்றியவை.
இப்பொழுது, திருக்குறளின் பொருளை மீண்டும் படித்துப்பார்ப்போம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்:
ஆதி பகவான் அகரம் முதலான எழுத்துக்களை முதலில் உலகில் படைத்தான்.
*** *** ***
திருக்குறள் முதல் பாடலிலே ஆன்மீகத்தின் உச்சம் தொட்டிருப்பது ஆச்சர்யம் என்றால்,
கடவுளின் எட்டு குணங்களை முதல் பாடலிலே பாடி உச்சம் தொட்டது திருமந்திரம்.
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான் உணர்ந் தெட்டே.
- திருமந்திரம் 1
*** *** ***
நாம் இதுவரை முதல் திருக்குறளின் பொருளை எப்படி படித்தோம் என்று பார்ப்போம்:
மு.வ விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
கலைஞர் விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
ஜி. யு. போப் விளக்கம்:
A, as its first of letters, every speech maintains;
The 'Primal Deity' is First through all the world's domains
ஒவ்வொரு மொழியும் 'அ'-வை முதல் எழுத்தாக கொண்டுள்ளது; உலகம் ஆதி பகவானை முதன்மை தெய்வமாக கொண்டுள்ளது.
*** *** ***
சமீபத்திய செய்தி:
தமிழக ஆளுநர், 'திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய ஜி. யு. போப், திருக்குறளில் இருந்த ஆன்மீக அறிவை தவிர்த்து விட்டார்'- என்று கருத்து தெரிவித்தார்.
இந்த கருத்து உண்மையா என்று கற்றறிந்தோர் மட்டுமே சொல்ல இயலும். அரசியல்வாதிகளின் அறிவு அரசியலுக்கு மட்டுமே, திருக்குறளுக்கு உதவாது.
மீண்டும் அறிவு சார்ந்த பெரியோர் முனைந்தால் திருக்குறளின் பொருளை ஆன்மீக சிந்தனையோடு உலகிற்கு வழங்கலாம்.
*** *** ***
கல்லிலே கலைவண்ணம் எனக்கு தீப ஆராதனை. இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...