நான் ஏன் பிறந்தேன்?
திருமந்திரம் கற்போம்
பாடல் 113
பாடல்:
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் ருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பு அறுத்தானே.
- திருமந்திரம் 113
மனித உடல் பிறப்பெடுக்கும் முறையை விளக்கும் பாடல் இது. முதலில் விண்ணின் என்ற வார்த்தையின் பொருளைப்பார்ப்போம்.
விண் என்பது ஆகாயம். ஆகாயத்தின் கூறுகள் மனித வாழ்வில் ஐந்து வித உணர்வுகளை கொண்டது.
1. காமம்
2. குரோதம்
3. லோபம்
4. மதம்
5. மாச்சரியம்
காமம் என்பது அளவற்ற ஆசை. அது பொன்னாகட்டும், பொருளாகட்டும், பெண்ணாகட்டும், குடும்பமாகட்டும், ஆசை அளவு கடந்தால் அதனை காமம் என்று கூறலாம்.
குரோதம் என்பது மற்றவர்கள் மீது கொள்ளும் கோபம், வெகுண்டெழுதல், பழிவாங்குதல் போன்றவை ஆகும்.
லோபம் என்றால் சுய லாப நோக்கு. தனக்கு, தனக்கு என்று எதையும் ஒதுக்கி வைத்துக்கொள்வது. தன்னால்தான் எதுவும் நடக்கிறது என்றோ, தன்னை விட்டால் யாரும் செய்ய முடியாது என்ற சுயநலத்தன்மை.
மதம் என்பது நன்மையோ, தீமையோ ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு அதற்காக அலைவது. மதம் பிடித்து அலைகிறான் என்ற பேச்சினை கேட்கிறோமல்லவா.
மாச்சரியம் இது பொறாமை. எனக்கில்லையே, அவனுக்கு மட்டும் அழகான மனைவி இருக்கிறாளே என்ற ஆதங்கம். அவளுக்கு எவ்வளவு நீளமான கூந்தல் என்று பெண்கள் பெருமூச்செறிந்ததை பார்த்திருப்பீர்கள்.
இந்த ஆகாயத்தின் கூறுகள்தான் மனிதனின் அடிப்படை தன்மைகள்.
விண்ணின் றிழிந்து
இழிந்து, இந்த வார்த்தையை கவனித்தால், வானத்திலிருந்து வழிந்து என்ற பொருள் தருகிறது. வானத்திலிருந்து குதிக்கவில்லை, மெதுவாக தேன் வழிவதைப்போல் வழிந்து வருகிறார்.
வினைக்கீடாய்
நீ பல பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைகளின் பலன்கள்.
ஜக்கி வாசுதேவ் ஒரு நேர்காணல் கேள்வி நேரத்தில் தவித்ததை சொல்லத்தான் வேண்டும்.
'மனிதன் தன் முதல் பிறப்பில் எப்படி பாவமோ, புண்ணியமோ செய்திருக்க முடியும்? - இது பார்வையாளர் கேட்ட கேள்வி.
'இதை
நெறைய பேர்கிட்ட கேட்டுட்டு என்கிட்ட கேக்குறீங்க. நல்ல கேள்வி..' - இப்படியாக மழுப்பல் பதில்தான் ஜக்கியிடம் இருந்து பெற முடிந்தது.
அதற்கான பதில் நம் சித்தர் பெருமானிடம் இருந்து வருவதைப்பாருங்கள்.
'பதியினைப் போல்பசு பாசம் அனாதி'
பதி - ஆதி இறைவன் [பேரறிவு]
பசு - உயிரணு அல்லது ஜீவன்கள் [சிற்றறிவு]
பாசம் - தளை அல்லது பற்று [அறிவிலி]
இம்மூன்று நிலைகளுமே ஆதியில் தோன்றியவை. ஜீவன் ஒவ்வொறு பிறப்பிலும், அதனை பற்றி நிற்கும் தளைகளால் நல்வினை, தீவினை என்ற செயல்களில் ஈடுபடுகிறது.
புல்லாகி, பூண்டாகி இறுதியில் மனிதனாகும் தன் முதல் பிறப்பில் பல்வேறு வினைகளை கடந்து வர வாய்ப்பிருக்கிறது. மீண்டும் மனிதனாக பிறப்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
மெய்கொண்டு
உன்னுடைய இருவினைப்பயன்களுக்கேற்ப உடலினை கொண்டு வந்து தருகிறான்.
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
தன்னுடைய குளிர்ந்த பாதங்களை ஜீவனின் தலைக்கு காவலாக முதலில் வைக்கிறான்.
நாம் புரிந்து கொள்ள வேண்டிய சங்கதி ஒன்றிங்குண்டு. அதாவது ஒவ்வொரு மனிதனின் தலையின் உச்சியில் இறைவனின் தாள், அதாவது பாதம் இருக்கிறது.
கடவுள் வாழ்த்தில் திருவள்ளுவர் இறைவனின் திருவடிகளை முழுமையாக போற்றுவதைப்பாருங்கள்:
கற்றதின் முழுப்பயன் - 'நற்றாள் தொழுவது'.
'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்' - ஆயிரம் மலர்கள் மலரக்கூடிய உச்சந்தலையின் மேல் நிற்கும் இறைவனின் மாண்புமிக்க தாள்கள்.
'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்' - மனக்கவலை மாற்றும் மருந்து.
'அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்' - பிறவிப்பெருங்கடல் நீந்தலரிது.
'தாளை வணங்காத் தலை' - ஜடத்தை போன்று உணர்வற்றவர்கள்.
'இறைவன் அடிசேரா தார்' - பிறவிக்கடல் நீந்தார்.
உண்ணின் ருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக்
ஒப்பற்ற பேரொளியுடன், பேரானந்தத்தையும் ஜீவனின் அகக்கண்களுக்கு காட்டினான் இறைவன்.
களிம்பு அறுத்தானே.
ஜீவனின் முந்தைய பிறவிகளின் நினைவுகளை மனதில் இருந்து அழித்து விட்டான். தன் ஜீவன் அனாதியானது என்றோ, முக்தியடையும் வரை பிறவிச்சுழலில் சிக்கியிருக்கும் என்றோ ஜீவனுக்கு தெரியாமல் மறைந்து நிற்கும்.
பலபிறவிகளில் பெற்ற அறிவு நுண்ணறிவாக ஜீவனின் கருவில் பதிவுகள் இருக்கும். அந்த அறிவின் பதிவினை அந்தக்கரணங்களான மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என்னும் நான்கு நிலையிலிருந்தும் அகற்றி நிற்பான் இறைவன்.
*** *** ***
No comments:
Post a Comment