Thursday, March 23, 2023

ரகசியம் பரம ரகசியம்

ரகசியம் பரம ரகசியம் 

திருமந்திரம் கற்போம் 



ரகசியம் பரம ரகசியம்  
இது நமக்குள்
இருப்பது அவசியம் 

'மண்ணில் உயிர்ப்பெடுத்த மறுகணமே அன்னை மடி அறியும் பரம ரகசியம் யார் சொல்லி தந்தார் கன்றினுக்கு? 

மனிதனாய் பிறந்ததனால், பிறவியின்  திசையறியாமல் தத்தளிக்கும் எனக்கு அருள் செய்வாய்' -  என்று வேண்டி நின்ற எனக்கு, கீழ்க்கண்ட அத்தியாயம் படிக்க உத்திரவு கிடைத்தது.

'முந்தைய, ஜன்மங்களிலுள்ள  நல்வினைகளால் நாம் இவ்வுடம்பைப் பெற்று இருக்கிறோம். பக்தியையும், விடுதலையையும் இவ்வுதவியை கொண்டு பெறுவது தகுதியுடையதாகும். எனவே, எப்போதும் நாம் சோம்பலின்றி இருக்க வேண்டும். நமது குறிக்கோளையும் நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய்  இருக்க வேண்டும்.'
                                                                             -  ஸ்ரீ சாய் சத் சரித்திரம் 
 
இந்தப் பிறவி   அச்சம்  எனக்கு மட்டுமல்ல, மண்ணில் மனிதனாய் பிறந்து, தன்னுணர்வு எய்தப்பெற்ற பேரருளாளர்கள் மனதிலும் தோன்றியதில் ஆச்சர்யம் கொண்டேன். 

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர்  எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே.
                                           - பட்டினத்தார் பாடல் 83

இதோ, திருமூலர் மனிதப்பிறவியின்,  பரம ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்கும் வழியை நமக்கு காட்டுகிறார்.

நான்பெற்ற  இன்பம் பெறுக இவ்வையகம் 
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் 
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே.
                                                                  - திருமந்திரம் 85

இலை மறை, காய் மறையாக மறைத்து வைக்கப்பட்டுள்ள விண்ணுலகம்  செல்லும் வழி அறிந்து கொண்டு, நான் அடையும் இன்பத்தை, உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள் மனிதர்களே!
உடலின் உணர்வுகள் விழிப்பு நிலையில் இருக்க, 'நமக்ஷிவய' எனும் மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வாருங்கள். தானாகவே உங்கள் பிறப்பின் பரம ரகசியமான வானுலகு செல்லும் மார்க்கத்தை, முக்தியை  அறியத்தலைப்படுவீர்கள்.

உணர்வுறு மந்திரத்தை எப்படி, எவ்வளவு முறை சொல்ல வேண்டும் என்னும் ரகசியத்தையும்   கூறுகிறார்.

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலுமேற்
சூக்கும மான வழியிடைக் காணலாம் 
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம் 
சூக்கும மான சிவனதா னந்தமே. 
                                                        - திருமந்திரம் 909  

இதில் ரகசியம் என்னவென்றால், 'க்ஷிவயநம'  என்னும் மந்திரத்தை விழிப்புணர்வு நிலையில் இருந்து எட்டாயிரம் முறை ஜெபிக்க வேண்டும். அப்படி ஜெபித்தால், ஒன்று,  தலையில்  உள்ள விண்ணுலகம்  செல்லும் ரகசிய வழியைக்காணலாம். இரண்டாவது ரகசியமாக  உன்னைத்தொடர்ந்து வரும் வினைப்பயனை அழித்து விடலாம். மூன்றாவது, உன்னுள் ரகசியமாக ஏகமாக இருக்கும் சிவானந்தத்தை நீயும் பெறலாம்.

முதல் பாடல் விளக்கத்தில் 'நமக்ஷிவய' என்று சொன்னேன். சூக்கும பாடல் விளக்கத்தில்  'க்ஷிவயநம' என்று சொன்னேன் என்று பார்க்கிறீர்களா?
'நமக்ஷிவய' என்பது உடலை மையமாக கொண்ட 'தூல பஞ்சாக்ஷரம்'.
'க்ஷிவயநம' என்பது சூக்கும பஞ்சாக்ஷரம்.

சிவனுடன் ஏகமாகி முக்தியடைய விரும்புபவர்கள் சொல்ல வேண்டிய பஞ்சாக்ஷரம், சூக்கும பஞ்சாக்ஷரம்  'க்ஷிவயநம'.

சூக்கும பஞ்சாக்ஷர மகிமையை சொல்கிறேன் கேளுங்கள்:

ஆணவ மலமும் திரோதமும் நீங்கும் பொருட்டுச் சூக்கும பஞ்சாக்ஷரத்தை ஜெபிக்க வேண்டும். அங்ஙனம் ஜெபித்தலினால் திரோதனா சத்தி மலத்தை நீக்கி அருட்சத்தியாய் மாறி நின்று பிரகாசிக்கும். பின்பு, அவ்வருள் தாரகமாக அதனில் அடங்கி அதுவேயாய்ச் சிவத்தோடு ஏகமாகும். சூக்கும பஞ்சாக்ஷர மகிமை இதுவாம்.

 

No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...