Monday, April 3, 2023

நஞ்சுண்பார் கள்ளுண்பவர்

நஞ்சுண்பார் கள்ளுண்பவர்




ஆரம்ப பள்ளியில் மதிய உணவு. 

திருக்குறள் 225

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின்.

[தவம் இயற்றுவோர் பசியை தாங்கும் வலிமை வாய்ந்தவர்கள். அவரினும் மேன்மை வாய்ந்தவர்கள் உணவை வழங்கி சாதாரண மக்களின் பசியை ஆற்ற  வல்லவர்கள்.]

தட்டில் மதிய உணவு போட்டவுடன் சொல்லும் திருக்குறள்.  திருக்குறளை கோரஸாக  சொல்லிவிட்டு தட்டை ஆவலுடன்  பார்க்கிறான்  ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாரியப்பன்.

ஒரு கரண்டி மக்காசோள உப்புமா. கூடவே கொஞ்சம் பருப்பு நீர்.  கொஞ்சம் தாளித்த  தயிர்.

உப்புமாவில் கருப்பாக செல் பூச்சிகள், வெள்ளையாக சிறு  புழுக்கள். முடிந்த அளவு பொருக்கி போட்டுவிட்டு சாப்பிட ஆரம்பித்தான். அதுவே காலையில் எதுவும் உண்ணாத வயிறுக்கு சுகமாக இருந்தது.

மதிய உணவில் வழங்கும்  மக்காசோளமும், ஓட்ஸ் மற்றும் சமையல் எண்ணெய் கூட  உலக நாடுகளின் தானம். உணவு தானியங்கள் பல மாதங்கள் பயணித்து இந்தியா வந்து சேர்ந்து, கடைநிலை குழந்தைக்கு போய் சேருமுன் உண்பதற்கு தகுதியற்ற நிலைக்கு சென்று விடுகிறது.

மாரியப்பனுடன் பிறந்தவர்கள் ஆறுபேர். நெசவு குடும்பம். யாரும் வருமானம் ஈட்டும்        அளவிற்கு வளரவில்லை. மூத்த அண்ணனின் கால்கள் நெசவு குழிக்குள் எட்டியவுடன், படிப்பை நிறுத்தி  நெசவு செய்ய ஆரம்பித்தாயிற்று.

அம்மாவின் கடின உழைப்பில்  சொற்ப வருமானம், மற்றும் அண்ணனின் நெசவில் வரும் வருமானமே  அனைவரின் வயிற்றுக்கு ஆதரவு.  தங்கை ஏழு குழந்தைகளுடன் படும் அவஸ்தையை காண சகிக்காமல் உதவும் பெரியம்மா. கடைசி பையன் கைக்குழந்தை.

பகலில் ஒரு வேளை சாப்பாடு பாதி பேருக்கு. மீதமுள்ளவர்களுக்கு  பள்ளியில் கொடுக்கும் மதிய உணவுதான்.

அப்பாவை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே..

அது மின்சாரம் வீட்டுக்கு வராத காலம். அம்மாவுக்கு எதிரில் அமர்ந்து மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தான் மாரியப்பன். அம்மா நெசவு செய்வதற்கு, ஊடு நூல் ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருந்தார்.

கோபமாக வந்த அப்பா, ராட்டினத்தை தாண்டி அம்மாவை எட்டி ஒரு உதை விட்டார்.

'ஏண்டி, அரிசி சோறு செய்யல?'

குடிகார நண்பன் வீட்டிற்கு  வெளியே நின்று கொண்டிருந்தான். 

தேவையான அளவு அரிசி வாங்கி அனைவருக்கும் சமைக்க முடியாது என்பதால் அம்மா கம்பு வாங்கி களி செய்து வைத்திருந்தாள். அதை குடிகார விருந்தாளி நண்பனுக்கு உண்ண கொடுப்பதில் அப்பாவுக்கு  தன்மானப் பிரச்சினை.

அம்மா அப்படியே மயங்கி சாய்ந்து விட்டாள்.

அம்மா அலறிய சப்தத்தை கேட்டு பெரியம்மா ஓடி வந்தார். அப்பாவை அப்படியே பிடித்து இழுத்து வெளியே வீதிக்கு கொண்டு வந்தார்.

அதற்குள், ஊர் முழுக்க வீதியில்  கூடி விட்டது. ரொம்ப சிறிய கிராமம் அது. குடும்ப ரகசியம் என்று எதுவுமே நடக்க சாத்தியமில்லாத சமுதாயம். 

பந்தலில் இருந்து ஒரு மூங்கிலை இழுத்தெடுத்தார் அப்பா. நிலை தடுமாறும் போதையிலும் எப்படி அவரால் பந்தலில் இருந்து மூங்கிலை உருவ முடிந்தது என்று ஆச்சரியம் மாரியப்பனுக்கு.

மூங்கில் குச்சியை ஓங்கி பெரியம்மா தலை மீது அடித்தார். கண் இமைக்கும் நேரத்தில் பெரியம்மா கைகளை உயர்த்தி, பெருவிரல், ஆள்காட்டிவிரலுக்கு நடுவில் பிடித்துக்கொண்டார். பிடித்ததோடு நில்லாமல் மூங்கிலையும் இழுத்து விட்டார்.

நிலை தடுமாறி நின்றவரை ஊரின் இளவட்டங்கள் பிடித்துக்கொண்டது.  இரு கைகளையும் பின்னால் கட்டி புளிய மர வேரோடு சேர்த்து கட்டி விட்டார்கள். 

அப்பாவும்  'விட்டது சனி' என்று குடும்ப பாரத்தை அம்மா மீது சுமத்திவிட்டு பிரிந்து சென்று விட்டார்.

முப்பத்தைந்து வயது நிரம்பாத அம்மாவுக்கு தன்னோடு சேர்த்து எட்டு உயிர்களை காப்பாற்ற வேண்டிய கடமை.

நாட்கள் அப்படியே ஓடிவிடாதே. வறுமை ருத்ர  தாண்டவம்  ஆடியது. 

உண்ண எதுவுமே இல்லாத ஒரு நாளில்.. 'நல்ல தங்காள்'- முடிவெடுக்கிறாள் அம்மா. 

வீட்டில் அங்கே, இங்கே என்று தேடி பார்த்ததில், ஒரு கால் படி அளவு கொள்ளுப்பயர் கிடைத்தது. அதை ஊறவைத்து, ஆட்டாங்கல்லில் போட்டு ஆட்டி, உப்புமா செய்கிறாள் அம்மா.

அம்மா கொடுத்ததை எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டான் மாரியப்பன்.

அன்றைக்கு அந்த எட்டு உயிர்களை எந்த சக்தி காப்பாற்றியதோ தெரியாது. யாருக்கும் எதுவும் ஆகவில்லை. ஆனால், குடி கெடுக்கும் குடியின் கொடுமையை நன்குணர்ந்தான் மாரியப்பன்.

திருக்குறள்-926

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

குடிப்பவர் குடிப்பது விஷத்தை. இவர்கள் தூங்குபவர்கள், செத்தவர்கள் போன்று எதற்கும் உபயோகமற்றவர்.

அந்த காலகட்டத்தில், கள்ள சாராயம் என்று பட்டை சாராயம் மட்டுமே கிடைத்தது. மதுவிலக்கு பூரண அமலில் இருந்தது. அப்படியும் கிராமங்களில் கள்ள சாராயம் தேவைக்கதிகமாகவே புழக்கத்தில் இருந்தது.

திருமந்திரம் 326

காமமும் கள்ளும் கலதிகட்கே  ஆகும் 
மாமல மும்சம யத்தில் மயல்உறும்
போமதி யாகும் புனிதன் இணைஅடி  
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

கேடான எண்ணங்களுடையவர்களின் குணமே காமமும், கள்ளுண்ணும் தன்மையும். சில சமயங்களில் தன்னிலை மறந்த ஆணவம் பிறக்கும். மூளை கெட்டு ஓங்கார  வடிவான  இறைவனின் திருவடிகளை வணங்கி ஆனந்தத்தேனை பருகும் உணர்வு அற்று போகும்.

இன்றைக்கு, அரசே மது விற்பனை செய்கிறது. பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நிகராக விற்பனை இலக்குகளுடன்.

சூதாட்ட தடை சட்ட அனுமதிக்காக, இறந்தவர்களின் சாம்பலை தமிழக ஆளுநருக்கு அனுப்பும் நூதன போராட்டத்தை கையில் எடுத்திருப்பவர்களுக்கு மாரியப்பனின் வாழ்த்துகள். 

அப்படியே, மாரியப்பன் போன்றோர்களின் இரத்தத்தை எடுத்து தமிழக முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தையும் முன்னெடுங்கள். நானும் இரத்தம் வழங்குகிறேன், மாரியப்பன் என்ற முறையில்.

*** *** ***






 


 




No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...