சூது என்ன செய்யும்?
இது பொறுப்பதில்லை - தம்பி
எரிதழல் கொண்டு வா..
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்..
பீமன் வெகுண்டெழுந்தான்.
தருமன் தலை குனிந்தான். தரும தேவதையும் தலை குனிந்தாள்.
அதர்மம் கர்ஜித்தது.
தகாத வழியில் துரியோதனன் பெற்ற வெற்றியால் பார்வையற்ற தந்தை திருதராஷ்டிரனின் மனம் மகிழ்ந்தது. குலத்துக்கே குருவான பீஷ்மர் தன் கையாலாகாத்தனத்தை எண்ணி வெட்கினான். கவுரவ, பாண்டவ இளவரசர்களுக்கு அத்தனை கலைகளிலும் பயிற்சி தந்த ஆச்சாரியர்கள் செய்வதறியாது வேதனையில் மௌன சாட்சியாக நின்றார்கள்.
' துச்சாதனா, பாஞ்சாலியின் ஆடையை அகற்றி என் தொடையில் அமர்த்து' - துரியோதனின் ஆணையை ஏற்று துகில் உரிந்தான் துச்சாதனன்.
பாஞ்சாலியின் தஞ்சக்குரல் கேட்டு கண்ணன் கை கொடுத்தான்.
'துரியோதனனின் குருதி பூசி கூந்தல் முடிப்பேன்' - சபதமேற்றாள் பாஞ்சாலி.
'என் கதையால் அவன் தொடையை அடித்து குருதி தருவேன்' - கண் சிவந்தான் பீமன்.
மகாபாரதத்தின் ஆணி வேர் இந்த சூதாட்டம்.
பெண்ணாசை, பிள்ளையாசை மற்றும் பொருளாசை.
மனிதனை அலைக்கழிக்கும் மூன்று பேராசைகளும் ஒருங்கே இந்த சூதில் அரங்கேறியது.
சூதாட்டத்தில் இறங்கியவர்களுக்கு காமம் கூட இரண்டாம்பட்சம் தான்.
திருமூலரும் தன் பங்கிற்கு சூதின் தீவிரத்தை விளக்குவதை பார்ப்போம்.
பெண்ணை சூது விளையாட்டிற்கு ஒப்பாக கூறுகிறார்.
'சூதொத்த மென்முலையாளும் நற்சூதனும்' - இந்த வரிகளில் கலவியின் போது பெண்கள் சூதாட்டத்தைப் போன்றவர்கள். அதிலும் பல பாடல்களில் 'ஆயிழையார் ', மெல்லியல் மாதர்' என்று பல விதங்களில் பெண்களை குறிப்பிட்டவர், இந்த பாடலில் மட்டும் மென்முலையாளும் என்று கூறுகிறார். உறவு என்பதே ஒரு சூதாட்டம் போல. அதில் விளையாட்டு மைதானம் பெண் என்றால் சூதாட்டக்கருவி மென்முலைகள் என்கிறார்.
பரியங்க யோகம் மூலம் இறைவனை தலையில் தரிசிக்கலாம். அதிலும் ஒரே நேரத்தில், உறவில் பங்கேற்கும் தலைவனும், தலைவியும் இறைவனை தரிசிக்கும் கலையை விளக்கவே இப்பாடல்.
'போதத்தை உன்னவே போகாது வாயுவும்' - கலவியின் போது ஆணும், பெண்ணும் புருவ நெற்றியில் நினைவை வைத்து இறைவனை போற்றி நினைக்கவேண்டும். இவ்வாறு செய்வதனால், காம வாயு எனப்படும் அபான வாயுவின் தன்மை அடங்கி நிற்கும்.
இவ்வாறு காம வாயு அடங்கி நிற்பதனால்,
'மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில்' - மேகத்தை போன்ற வெண்மையான ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்தில் சேராது ஆணின் உடலிலே தங்கி விடும்.
'தாதில் குழைந்து தலை கண்டவாறே' - தங்களுடைய கலவி இன்பத்தில், தலையில் இறைவனை தரிசிப்பார்கள்.
நான் சொல்ல வந்தது சூதின் தீமைகளைப்பற்றி.
இணைய வழி சூதாட்டத்தடை சட்டம் பற்றி.
இந்திய பாராளுமன்றத்தில் மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டது.
தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி, இரு முறையும் ஒப்புதல் பெற முடியவில்லை. இப்பொழுது மூன்றாம் முறைக்கு தயார் ஆகிறார்கள்.
தீங்கென்று தெரிந்தும், எரிதழல் கொண்டுவா, என்று சமூக நீதியாளர்கள், அரசியல்வாதிகள் பொங்காதது ஏன்?
உண்மையில் நடந்தது என்ன?
யாருக்கும் தெரியாது. தெரியவும் விட மாட்டார்கள்.
ஏனென்றால், ' அரசியலில், இது சாதாரணமப்பா'.
ஆனால், இது மக்களுக்கு சாதா ரணமப்பா.
*** *** ***
திருமந்திரம் 826
போதத்தை உன்னவே போகாது வாயுவும்
மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலையாளும் நற்சூதனும்
தாதில் குழைந்து தலை கண்டவாறே.
No comments:
Post a Comment