'என்னங்க..'
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
- திருக்குறள் 66
'பாப்பா.. உன் பேரென்ன?'
'என் பேரு.. என் பேரு.. ம்.. ம்.. சொன்னா..'
'சொல்லு'
'சொன்னா'
'தம்பி, அவ பேரு ஸ்வர்ணா. அதைதான் அவ்வளவு அழகா சொல்றா'
ஓசை. ஊறு, ஒளி, சுவை, நாற்றம்.
பஞ்ச பூதங்களில் ஒன்று ஆகாயம். ஆகாயத்திலிருந்து இயற்கையாக நாதம், அதாவது ஓசை எழுகிறது. ஓசையைத்தொடர்ந்துதான் ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் உணர்வுகள் காற்று, நெருப்பு, நீர், நிலம் என்னும் பூதங்களை முறையாக பற்றி நிற்கிறது.
அண்டத்திலிருப்பதுதான் பிண்டத்தில் இருக்கிறது என்ற சொல் உண்மையானால் பிண்டத்தில் ஓசை எங்கே உண்டாகிறது? எப்படி அந்த ஓசை உணர்வுமிக்க சொல்லாக மாறி குரலில் இருந்து வெளிப்படுகிறது.
நீ பேசும் சொற்கள் குரலிலிருந்து எப்படி வெளிப்படுகிறது?
கேள்வி குழந்தையின் காதுக்கு சென்றவுடன் உரிய பதில் தருவதற்கு என்ன தேவை என்று பார்ப்போம்.
முதலில் பதில் தருவதற்கான ஓசை.
இந்த ஓசை மூலாதாரத்தில் இருந்து கிடைக்கிறது. அதற்கு சூக்குமை என்று பெயர். பேரண்டத்தில், சுத்த வெளியில் தொடர்ந்து ஒலிக்கும் ஓங்கார நாதம், மூலாதாரத்திலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
அடுத்தாக ஓசைக்கு உணர்வு சேர்க்க வேண்டும். அது சுவாதிஷ்டானத்தில் நடக்கும் செயல். இதனை பைசந்தி என்பார்கள். உணர்வு என்பது கேட்கப்படும் அல்லது கேட்கவிருக்கும் கேள்விக்கேற்ப மாறும்.
கல்யாணமான கணவன்களுக்குத்தான் தெரியும் மனைவியின் 'என்னங்க' என்பதில் உள்ள எழுபத்தி இரண்டாயிரம் அர்த்தங்களும். மனித உடலில் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகள் உள்ளது; அதாவது பாதைகள். மனைவியின் அந்த 'என்னங்க' என்ற ஓசையில் உள்ள அர்த்தங்களை புரிந்து கொள்ள அத்தனை நாடிகளையும் உபயோகிக்க தெரிந்தவன்தான் வாழத்தெரிந்த கணவன்.
மனைவி கணவனை 'என்னங்க' என்று அழைக்கையில் கண்டிப்பாக சுவாதிஷ்டானத்தில் உணர்வு நிலையை பெற்றிருப்பாள். பட்டு சேலை கேட்கும்போது கெஞ்சலாக தோன்றும் அதே வார்த்தை, அவன் கஷ்டப்பட்டு ஒளித்து வைத்த ஒரு பொருள் அவள் கைக்கு கிடைக்கும்போது லேசர் கதிர் வீச்சுபோல் இருக்கும். அந்த பொருள், சாதாரண கைக்குட்டையாக கூட இருக்கலாம். பெண்ணின் கைகுட்டையாகவோ, லேசாக சிவப்பு கறை இருந்துவிட்டால் முடிந்தது அவன் வாழ்வு. ஆயுட்கால அடிமை சாசனம் எழுதி வைத்துவிட வேண்டியதுதான்.
அடுத்தது சொல். உணர்வு நிலை பெற்ற ஓசை, பதில் தரவோ அல்லது பேசவோ சொற்களை பெற்றாக வேண்டும். வெறும் உணர்வு நிலையிலே நின்று விட்டால், வரும் ஓசை முக்கலும், முனகலுமாக நின்று விடும். கடும் காய்ச்சலில் படுத்திருக்கும் ஒருவனின் முனகல் அவனது வேதனை உணர்வை மட்டுமே காட்டும்.
சொல் உண்டாவதற்கு மனதின் ஒத்துழைப்பும் தேவை. மூளையின் உதவியுடன் மனம் யோசிக்கும். பதில் தரலாமா? பதில் தருவதானால் என்ன பதில் தருவது?
முடிவெடுத்தபின் உருவாவதுதான் சொல். சொல், மத்திமை எனப்படும் கழுத்தில் உண்டாகிறது. சொற்கள் பேசுபவரின் ஆளுமைக்கேற்ப தெளிவான வாக்கியங்களாக, ஒலியாக வெளிப்படுகிறது.
சொற்களாக மாறி குரல் வழியாக ஒலியாக வருவதை வைகரி என்பார்கள். இதுவும் இரண்டு வகைப்படும். ஸ்தூல வைகரி என்பது ஒலி குரலில் இருந்து ஒலிப்பது. இதுவே ஒலி வெளிப்படாமல் மனதுக்குள்ளே ஜெபிப்பது சூக்கும வைகரி எனப்படும். மந்திரங்கள் உச்சரிக்க வேண்டியது சூக்கும வைகரியில்தான்.
ஓசை, உணர்வு, மனம், சொல், குரல்.
ஒவ்வொரு முறை நாம் வாய் திறந்து பேசும்போதும், மேற்சொன்ன வரிசையில்தான் நடக்கிறது.
*** *** ***
No comments:
Post a Comment