அகரம் தமிழுக்கு சிகரம்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்:
ஆதி பகவான் அகரம் முதலான எழுத்துக்களை முதலில் உலகில் படைத்தான்.
----------------------------------------------------------
உன்னலரும் பரசிவன்ற னருளாலே நாத
முதிக்கு மிகுங் குடிலைதனில் விந்துவரு நாதந்
தன்னிலதி னொளிவளருஞ் சதாசிவரா மவரிற்
றயங்கவரு மீசர்வித்தை தனையளிப்ப ரதனான்
மன்னுவரிவ் வகையைவர் வாய்மையினான் முன்னே
வந்திடுமென் றுரைசெய்த விந்துவழா வகையே
முன்னுதவு சூக்குமாதி யொருநான்கு மென்று
மொழிந்திடுவ றருங்கலைகள் முதிர்ந்து ளோரே.
- சிவப்பிரகாசம் 21
பரமசிவனது சத்தியின் வியாபாரத்தால் சுத்த மாயையிலே நாதம் தோன்றும். நாதத்தில் விந்து தோன்றும்.
நாதம் என்பது உலகம் பிறக்கும்போது உண்டான ஓங்கார ஒலி.
வாக்குக்களாலாவது வன்னம் [எழுத்து]. அதாவது ஒலியால் வருவது எழுத்து. அல்லது ஒலியின் வரி வடிவம் எழுத்து.
'ஓம்' என்று எழுதுவது ஓங்கார ஒலியின் வரி வடிவம்.
ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.
- திருமந்திரம் 381
ஆதி இறைவனோடு இரண்டறக்கலந்திருக்கும் பராசக்தியின் ஜோதியில் நாதம் ஒலிக்கும். இந்த ஓங்கார நாதத்தை மூன்று எழுத்துக்களாக பிரிக்கலாம்.
ஓம் = அ +உ +ம்
ஓர்எழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈர்எழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
'மூ'எழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மா எழுத்தாலே மயக்கமே உற்றதே. - திருமந்திரம் 885
முதல் எழுத்து அ.
அகரத்தில் ஆரம்பிக்கிறது மற்ற எழுத்துவகைகள்.
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம.. வெகுகோடி -திருப்புகழ் 170
நாதமும், விந்துவும் ஆதியில் தோன்றியவை.
இப்பொழுது, திருக்குறளின் பொருளை மீண்டும் படித்துப்பார்ப்போம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்:
ஆதி பகவான் அகரம் முதலான எழுத்துக்களை முதலில் உலகில் படைத்தான்.
*** *** ***
திருக்குறள் முதல் பாடலிலே ஆன்மீகத்தின் உச்சம் தொட்டிருப்பது ஆச்சர்யம் என்றால்,
கடவுளின் எட்டு குணங்களை முதல் பாடலிலே பாடி உச்சம் தொட்டது திருமந்திரம்.
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான் உணர்ந் தெட்டே.
- திருமந்திரம் 1
*** *** ***
நாம் இதுவரை முதல் திருக்குறளின் பொருளை எப்படி படித்தோம் என்று பார்ப்போம்:
மு.வ விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
கலைஞர் விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
ஜி. யு. போப் விளக்கம்:
A, as its first of letters, every speech maintains;
The 'Primal Deity' is First through all the world's domains
ஒவ்வொரு மொழியும் 'அ'-வை முதல் எழுத்தாக கொண்டுள்ளது; உலகம் ஆதி பகவானை முதன்மை தெய்வமாக கொண்டுள்ளது.
*** *** ***
சமீபத்திய செய்தி:
தமிழக ஆளுநர், 'திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய ஜி. யு. போப், திருக்குறளில் இருந்த ஆன்மீக அறிவை தவிர்த்து விட்டார்'- என்று கருத்து தெரிவித்தார்.
இந்த கருத்து உண்மையா என்று கற்றறிந்தோர் மட்டுமே சொல்ல இயலும். அரசியல்வாதிகளின் அறிவு அரசியலுக்கு மட்டுமே, திருக்குறளுக்கு உதவாது.
மீண்டும் அறிவு சார்ந்த பெரியோர் முனைந்தால் திருக்குறளின் பொருளை ஆன்மீக சிந்தனையோடு உலகிற்கு வழங்கலாம்.
*** *** ***
No comments:
Post a Comment