Friday, December 20, 2019

கடவுள் - ஒன்றவன்தானே



கடவுள் - ஒன்றவன்தானே 

மண்ணுலகில் இன்று
தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை
வடிவம் பெறுகிறார்






காணொளி:
https://www.youtube.com/watch?v=sxfc6CgjCyk

'நான் பேச மாத்தேன். கோவமா வருது.' - பாலர் பள்ளியிலிருந்து வந்த அமையாவுக்கு, ஏன்  கோபம் என்று தெரியாமல் தவித்தாள் விமலா.

'டேய், பிரகாஷ் நீயாவது சொல்லுடா, என்னாச்சு இவளுக்கு?'

'நீ பிகாஷ கேக்காதே. அவன்தான் என் பிண்ட்ஸ் கிட்ட தவிட்டு பாப்பான்னு   சொன்னது.' - 'ர' உச்சரிக்க வராது அமையாவுக்கு.

'என்ன தவிட்டுக்கா வாங்கினே?'

'இல்ல பாரு. உன்னுடைய கை, விரல்கள் எல்லாம் அப்பா மாதிரியே இருக்கு. மூக்கு பாரு என்ன மாதிரியே இருக்கு'

'நான் எங்கிந்து வந்தேன்?'

'வாடி மயிலு. என் செல்லம், அம்மா வயித்துல இருந்துதான் வந்தே'

'எதுக்கு என்ன முங்கினே? பசிச்சா தோசை சாப்பிடு'

'இல்ல தங்கம். சாமிதான் உன்னை கொண்டுவந்து என் வயித்துக்குள்ள வெச்சாரு. அப்பாகிட்ட வேணும்னா கேட்டு பாரு'

'நீ சொல்லு பாட்டி. அம்மா பொய்.. பொய்.. தினம் என் கூட படுக்குது. கண் தொந்தா அப்பா கிட்டக்கிது' - அடுத்த அதிரடி குற்றச்சாட்டில்  அமையா.


விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்நின்று  உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்புஅறுத் தானே.
                                                                                  - திருமந்திரம் 113




விண்ணிலிருந்து இறங்கி, செய்திருந்த/செய்யவிருக்கும்  வினைக்கு சமமான உடல் தந்து, குளிர்ந்த காலையும் தலைக்கு காவலாக  வைத்து, ஒப்பில்லா சூரியப்  பேரொளியை  ஆனந்த நிலையில் உடலினுள் நிறுத்தி, தான் இறை மயமானவன் என்ற எண்ணத்தையும், முற்பிறவி எண்ணங்களையும்  அவனிடமிருந்து அழித்து, ஆண்டவனே, மனிதனாக பிறக்கிறான். 

அமையவாகவும் பிறக்கிறான்.









Wednesday, December 18, 2019

கடவுள் - எண்குணம்


கடவுள் - எண்குணம் 

கடவுள் ஏன் கல்லானான் 
மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே





மீசை அரும்பாத பருவமது. ஓடிப்போன அரை நூற்றாண்டில்,   
மீசையில் கருப்பாக  ஒன்றுமில்லை.

கோவை காந்திபுரம், இப்போதைய நகர்ப்புற பேருந்து நிலையத்தின் மூலையில் நின்று கொண்டு பேருந்து வருமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். க்ராஸ் கட் சாலையும், நஞ்சப்பா சாலையும் சந்திக்கும் மூலையில்  கோவில் இருப்பதற்கான எந்த அடிப்படையும் நான் பார்க்கவில்லை.

ஒரு ஐந்து  வருடங்கள் ஓடி இருக்கலாம், கீதாலயா தியேட்டரில் உரிமைக்குரல் படம் பார்த்து விட்டு, அதே சந்திப்பில் நின்ற பொழுது இரண்டு விஷயங்கள் புதியதாக பட்டது.

ஒன்று, அந்த சாலை சந்திப்பில் புதிதாக தோன்றி இருந்த பிள்ளையார் கோவில். இரண்டாவது கோவிலை சார்ந்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் பொன்மொழிகள்  பொறித்த கல்வெட்டு.


கடவுளை கற்பித்தவன் முட்டாள் 
கடவுளை பரப்பியவன்  அயோக்கியன் 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி 
கடவுளை மற! மனிதனை நினை!
                                                                                          - தந்தை பெரியார் 

கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை. எல்லாம் மனிதர்கள்தான். மனிதன் தன்னையே நினைத்திருக்க கடவுள் அங்கே தனக்குள் இருப்பதை அறிந்து கொள்வான். 

தனக்குள் இருப்பதற்கு என்ன பெயர் வைத்தால் என்ன? அறிவின் துணை கொண்டு பொறுமையுடன் பகுத்தறிவதைத்தானே பகுத்தறிவு என்கிறோம்.

எப்படி மனிதன் தான் கடவுள் என்று அறிந்து கொள்வது? அதற்குத்தான் திருவள்ளுவரும், திருமூலரும் இறைவனின் குணங்கள் எட்டு என்று  அளந்து சொல்லி இருக்கிறார்கள்.  அந்த எட்டு குணங்களை உணர்ந்து கொண்டாலே கடவுள் ஆகி விடலாம்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
                                                                                                 - திருக்குறள் 9

தன்னகத்தே எட்டு குணங்களை கொண்டவனின்  தாள்களை வணங்காதவனின்  ஐம்புலன்களில்,  புலன்களின் உணர்வு இருக்காது.

வாய் சுவைக்காது. மூக்கு முகராது. கண்கள் பார்க்காது. காது கேட்காது. மெய் ஸ்பரிசம் உணராது.

காலம் வரட்டும் கடவுளை தேடுவோம் என்றிருந்தால், நம் புலன்களில்  உணர்வுத்தன்மை அற்று  கடவுளை அறிந்து கொள்ளும் தன்மையே இல்லாமல் இம்மண்ணை விட்டு மறைந்து விடுவோம்.

கண்களுக்கிடையில், புருவ மத்தியில் நின்றியங்கும் இறைநிலை, எட்டு குணங்களை கொண்டியங்குகிறது. நேரடியாக மனிதனுக்கு அக்குணங்களை அறியும் தன்மை  இல்லை. தீவிர முயற்சியும், பயிற்சியுமே அறிவதற்கு வழி வகுக்கும்.

முதல் குணம்
புருவ மத்தியில் அமர்ந்து மூலாதாரத்தில் சூரியனாக, உடலுக்குள்  உயிராக மலர்ந்திருத்தல்: உயிர்

இரண்டாம் குணம்
மூலாதாரத்தில் உள்ள குண்டலினி  சக்தி, உயிருடன் சேர்ந்து   பரிமளித்தல்: சக்தி

மூன்றாம் குணம் 
உயிரையும், சக்தியையும் இணைக்கும் பற்றாக, பாசமாக  பற்றியிருத்தல்: பற்று

நான்காம் குணம் 
உடலில், சுற்று சூழலில்  ஏற்படும் நிகழ்வுகளை ஐம்புலன்களின் வாயிலாக  உணரும் குணம். மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி: மனம்

ஐந்தாம் குணம் 
ஐம்பொறிகளான, கண், காது, மூக்கு, வாய் மற்றும் மெய்  ஆகியவற்றை   ஆளும் தன்மை: ஐம்பொறிகளின் குணம் 

ஆறாம் குணம் 
ஐம்பொறிகளின் தன்மையை  ஆறு ஆதாரங்களான, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி மற்றும் ஆக்கினை  வழியாக  பரவி நிற்றல்:   6 ஆதார சக்கரங்கள்

ஏழாம் குணம் 
உயிரின் உணர்வு சக்தி, இறைநிலை,   தலையின் வழியாக  ஏழுலகாய் பரிமளித்தல்: துரியம்

எட்டாம் குணம்
பிரபஞ்சத்தின் ஆதாரமான  மூலாதாரம் தான்  என்ற இறைநிலைப் பேருணர்வு:  தன்மயமாதல் 

திருமந்திரம்-1

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான்  உணர்ந் தெட்டே.
                                                                                              


தன்னுடைய முதல் பாடலிலேயே, நான் யாரைப்பாடப்போகிறேன், அவன் எப்பேற்பட்டவன் என்பதை ஆணித்தரமாக சொல்லிவிட்டார் திருமூலர்.

உண்மையான ஆத்திகவாதி, நாத்திகனாக-கடவுளாகத்தான்  இருக்க வேண்டும்.

இறைவனுக்கேது இறைவன்?

*** ***












Wednesday, December 4, 2019

கைலாச

கைலாச 

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை 
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை 

பொருள்: 

'கைலாச'  என்ற புதிய நாடு ஒன்று உருவாகும் பணி தீவிரமாக நடந்து  
கொண்டுள்ளது.அந்த புதிய நாட்டின் புதிய கொடிதான் நீங்கள் படத்தில் காண்பது. கொடிக்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

மேலும், அதிக விபரங்களுக்கு:
kailaasa.org பார்க்கவும் 


“Understand, wherever you put this flag, that space will intensely vibrate with Paramashiva’s breathing space. Anywhere you put this Kailaasa cosmic flag, Rishabha Dhvaja, Paramashiva’s breathing space will fill it; Paramashiva’s inner space will fill it. In your office, home, cars, temples… everywhere have this Kailaasa flag. This is directly approved by Paramashiva Himself. It is directly the flag of Paramashiva. Put this flag wherever you can, you will see Paramashiva’s intense breathing space, blessings, and protection is on you.”

~ HDH Nithyananda Paramashivam

எங்கெல்லாம் இந்த கொடியை வைக்கிறீர்களோ, அவ்விடம் பரமசிவனின் மூச்சு ஸ்தலமாக  மாறி, கடுமையாக  அதிரும் என அறியவும். இந்த ஆகாச கொடி, ரிஷப த்வாஜ-வை ,  எங்கு வைத்தாலும் பரமசிவனின் மூச்சுஸ்தலம் அங்கு நிறைக்கும்; பரமசிவனின் உள் ஸ்தலம் நிறைக்கும். உங்கள் அலுவலகம், வீடு, வாகனங்கள், கோவில்கள்.. எவ்விடத்திலும் இந்த கைலாச கொடியை வைக்கலாம். இது நேரடியாக, பரமசிவனால்  அருளப்பெற்றது.பரமசிவனின் கொடி இது. எங்கு வேண்டுமானாலும் இந்த கொடியை நாட்டுங்கள், நீங்கள் பரமசிவனின் கடுமையான மூச்சு ஸ்தலம், அருளாசிகள் மற்றும் பாதுகாப்பை பெறுவீர்கள்.

- His Divine Holiness நித்யானந்த பரமசிவம் 

------------------------------------------------------------------------------------------------------

கீழே  கொடுக்கப்பட்டுள்ள youtube இணைப்பு, நீங்கள் தன்னிலைக்கு வர மட்டுமே:


https://www.youtube.com/watch?v=6OAd4SpJtR0

Tuesday, December 3, 2019

போதை



போதை
வந்த போது
புத்தி இல்லையே


பொருள்:

'என்ன சென்ட் இது?' - உதட்டை துடைத்துக்கொண்டே  முகத்தை சுழித்தாள், மதுமிதா.

'சென்ட் இல்ல, சரக்கு' - என்ற கணவனின் பதிலால் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

'நாளைக்கு மதியம், நம்ம வீட்டுக்கு சாப்பிட பழனிச்சாமி வர்ரான். ஊரை விட்டு  போய் பத்து வருஷம் கழிச்சு இப்பதான் வந்திருக்கான்'.

- இதென்ன புதுப்பழக்கம் இவனுக்கு என்று நினைக்ககூட மனமில்லாமல், பத்து வருடங்களுக்கு பின்னால் எண்ணங்கள் ஓடியது. பக்கத்து வீட்டில் இருந்த பழனிச்சாமி ஓடிப்போன நாள்  நினைவில் ஆடியது.

'அப்படின்னா, அதுவும் சரக்கா?'

இன்னும் அவனுக்கு அந்த பழக்கம் போகலையா? இவனுக்கு வேறு குடுத்திருக்கான்.

*****

'இந்நேரம் ஊர் பூரா தெரிஞ்சிருக்கும். போலீசுக்கும் தகவல் போயிருக்கும்'- ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருந்த பழனிச்சாமிக்கு போதை சுத்தமாக தெளிந்து, பயம் மட்டும் மிச்சம் இருந்தது.

மதுமிதா வீட்டின் பின்புறத்தில் இருந்து, குளித்த தலையுடன் வெளியே வருவது கண்ணில் நிழலாடியது நினைவுக்கு வந்தது.

தன்னிலை மறைத்த போதையில், மதுமிதா அழைப்பது போன்ற பிரம்மையில், அவளை கட்டி அணைத்தது.. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது  நினைவுக்கு வரவில்லை.

மதுமிதா, 'அம்மா' என்று கத்தியபோதுதான், அவளை என்ன செய்தோம் என்று  புத்தியில் உரைத்தது.  அவளிடம்  இருந்து சட்டையில் பதிந்த  ஈரத்தை துடைத்து விட்டுக்கொண்டான்.

திரும்ப ஓடி வரும்போது, தூளி காலில் இடறி சுவற்றில் மோதியது. ஒருவேளை, அதிலிருந்த அவள்  அக்கா மகளின் குழந்தை செத்திருக்குமோ?

நினைக்க, நினைக்க ஒரே பயமாகவும், குழப்பமாகவும்  இருந்தது.

அப்பொழுதுதான் கொல்கொத்தா புறப்பட்டுக்கொண்டிருந்த ஹௌரா எக்ஸ்பிரஸில், ஓடிப்போய் ஏறிக்கொண்டான்.

*****

'அம்மா..' என்று கத்தி விட்டு அதிர்ச்சியில் உறைந்தாள், மதுமிதா.

நல்ல வேளை, வீட்டில் யாரும் இல்லை. அம்மாவும், அக்காவும் கோவிலுக்கு போயிருந்தார்கள்.

'கொழந்தை தூங்குறான். பாத்துக்கோ. நாங்க கோயிலுக்கு போயிட்டு வர்ரோம்' - தூரமானதால் குளிக்க சென்றவளிடம்,  அக்கா சத்தம் போட்டு சொல்லி விட்டு போயிருந்தாள்.

மின்னல் வேகத்தில், மைக்ரோ செகண்ட் நேரத்தில்  நடந்து முடிந்திருந்தது.
பழனிச்சாமியின்  ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவோ,  நிராகரிக்கவோ அவளுக்கு சந்தர்ப்பமே இல்லை.

ஹை வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல் உடலும், மனமும் விழித்துக்கொண்டது.  உடலில் உள்ள  எழுபத்திரண்டாயிரம் நாடிகளும்  உயிர்ப்பு நிலைக்கு போயிருந்தது.

முதல் இரண்டு நாட்கள், மிதமான காய்ச்சலும், ஒரு வாரம் வரையிலும் நடுக்கமுமாக இருந்தவள், பக்கத்து வீட்டில் பழனிச்சாமி காணாமல் போய்  தேடுகிறார்கள் என்ற செய்தி வந்த பின்னால்தான், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

கொஞ்ச நாட்களில், தனக்குத்தானே ரசித்து சிரித்துக்கொள்ளும் அளவிற்கு,  அந்த நினைவும், மணமும்  அவளை ஆக்கிரமித்துக்கொண்டது.

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால், இதுதான் முதல் உறவு.

*****

அமரர்களும் அடக்க முடியாத, ஐம்புலன்களை கட்டுக்குள் கொண்டுவர திருமூலர், பரியங்க யோகம் என்ற  ஒரு யோகத்தை நமக்கு காட்டுகிறார்.
பரியங்க [கட்டில்]  யோகத்தின் மூலம், ஐம்புலன்களும் நம்முடன் சேர்ந்தியங்கும் வகையும், இந்திரியங்களின் சக்தி உடலில் சேமிப்பதற்கான வழியும், வானீர் அமுதம் சுரப்பதற்கான உபாயமும்  ஆகும் என்று கூறுகிறார்.

ஆனால், ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால், ஆணுக்கு வயது முப்பதும், பெண்ணுக்கு வயது இருபதும் இருக்க வேண்டும்.

ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே 
                                                                                                                    - திருமந்திரம் 833

இதுல ஏதாவது தப்புத்தண்டா  பண்ணினீங்க, என்னாகும்னு போகர் சித்தர் சொல்றாரு கேளுங்க.

கருமமாய்ப்  பூதமெல்லாம் லயமே செய்து
   காரணமாந் தத்துவத்தை லயமே செய்து

நருமமாய்க் குருபதத்தி னாடி நின்று
   நயந்துமே யேறுவார்  கடினம் மெத்த

பருமமாய்ப் பரியங்க யோகத் தாலே
   பரிந்து மலம் விடுவார்கள் கருமங் கருமம்

நிருமமாய் மிக்கான ராச யோக
   நிலைத்தல்லோ சாதித்து நினைவைப் பாரே.                             353

                                                                     - சித்தர் போகரின் ஏழாயிரம் பாடல்கள்











                         


Tuesday, November 12, 2019

குரு வழி நாடல்


நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்


'கொடம்புளி போட்டு மீன் தலைக்குழம்பு, மீன் வறுவல், மீன் சில்லி இன்னும் மீன் பொரியல் செஞ்சு தர்றேன்'- மீனாவின் மீதிருந்த காதலை விட மீன்தான் சுரேஷின் மனதில் மின்னலடித்தது.

'தவத்தில்  சிறப்பு என்னன்னு பார்த்தா, அஷ்டமா சித்திகளும் வசமாயிரும். உடம்பு பொன்போல மிளிரும். முடி கருப்பா எப்பவும் இருக்கும்.. ' - இப்படியாக பரமானந்த குருவின் தெய்வீக உரை போய்க்கொண்டிருந்தது.

'இன்னிக்கு நெறஞ்ச அமாவாசை. யாராவது மீன் சாப்பிடுவாளா? வெண்டக்கா சம்பார்தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க'- புதுப்பொண்டாட்டி மீனாவின் வார்த்தைகளை மீறவா முடியும்.

'ஆழ்ந்த தவ நிலையில் குண்டலினி புருவ மத்தியில், நெற்றியில் வருவதோ, உச்சந்தலையில் துரியத்தில் நிற்பதோ கற்பனையே தவிர நிஜமல்ல'- ஆன்மீகத்தை சந்தைப்பொருளாக்கி  காசு பார்க்கும் சத்குரு, நேரடித்தொலைக்காட்சியில் விவரித்துக்கொண்டிருந்தார்.

'அச்சச்சோ.. புது வருஷத்தன்னிக்கு யாராச்சும் மீன் கேப்பாளா. நீங்க கேக்கறேள். இன்னொரு நாள் வைச்சுக்கலாம்.'- முழுகாமல் இருக்கும் மனைவியிடம் கோபம் கொள்ள மனமில்லாமல் போனது சுரேஷுக்கு.

'உலக மக்கள் என்னை தொடர்வதை விட வேறேதும் கதியில்லை. நான் பத்து நிமிடம் அதிகம் தூங்கினால்,  சூரிய உதயமும் பத்து நிமிடம் தாமதப்படும். அனைத்து விலங்குகளுடன் பேச நான் கண்டுபிடித்திருக்கும் சாப்ட்வேர் விரைவில் புழக்கத்துக்கு வரும்.'- அள்ளி வீசிக்கொண்டிருந்தார், அடிவருடிகளின்  பின்னணி இசையோடு, ஆனந்த குரு.

'வேண்டாம்ப்பா. அம்மா கோச்சுப்பா.'- சிக்கன் பர்கர் கேட்ட மகனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தான் சுரேஷ்.

'ஒண்ணும்  பெருசா இல்ல. மூச்சு விடுறதில கொஞ்சம் திணறல் ஏற்பட்டு சிவபதம் அடைந்து விட்டார். அவர் விட்டு சென்ற பிராணாயாம பயிற்சியை நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.'- சீடர்களுக்கு குரு விட்டு சென்ற பாதையை விளக்க ஆரம்பித்தார்  தலைமை சீடர்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா  குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே.
                                                            திருமந்திரம் - 1680

லௌகிக வாழ்விலும் சரி, ஆன்மீக வாழ்விலும் சரி நாம் குருட்டாட்டம்தானே  ஆடிக்கொண்டிருக்கிறோம்.

இறந்தவனை கொல்ல முடியாது; மனதில்
நுழையாதவனை வெளியேற்ற  முடியாது.
இறந்தவனை கொல்வதும், நுழையாதவனை
வெளியேற்றுவதும் குருட்டாட்டமே!










Wednesday, November 6, 2019

அறிவிலார்

இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் கொண்டு வா



ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

அதிகாரம்:  நீத்தார் பெருமை          குறள் எண்: 25


மு.வ உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
கலைஞர் உரை:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

என்னுரை:
ஐந்து புலன்களின் இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பவனின் ஆற்றல் எத்தகையது என்றால், அகன்ற வானத்தில் வாழும் தேவர்களின் அரசனான இந்திரனது வாகனமான யானை ஐராவதத்தின் ஆற்றலுக்கு ஒப்பானது ஆகும்.

இந்திரன்-அகலிகை:
அழகில் மிக உயர்ந்தவளாக இருக்கின்ற அகலிகை மேல் இந்திரனுக்கு ஆசை உண்டாகிறது. அவள் ஆற்றங்கரையில் இருக்கும் சமயம் தன்னுடைய விருப்பத்தினை வெளியிட்டு அகலிகையின் கோபத்திற்கு ஆளாகிறான். தன் கணவன், கௌதம முனிவரை  தவிர  பிறரை நினையாமல் வாழும் கற்புக்கரசியாக அகலிகை இருந்ததால், ஒருநாள் கௌதமர் ஆற்றங்கரைக்கு செல்லும் நேரம், கௌதமராக உருமாறி அகலிகையை அடைகிறான்.

இந்திரனா ஐந்தவித்தான்?

அஞ்சும் அடக்கு  அடக்கு என்பர் அறிவிலார் 
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு 
அஞ்சும் அடக்க அறிவு அறிந்தேனே.
                                                     -திருமந்திரம் 2033

வானத்து தேவர்களாலும் அடக்க முடியாத, ஐம்புலனிச்சையை அடக்கு, அடக்கு என்று சொல்வது அறியாமையே ஆகும்.

சாணியும்  வண்ணமும்   நீருண்ணும், உண்ணா  
எழுத்தாணி கொண்ட வண்ணம். 








Monday, November 4, 2019

முடத்தெங்கு



காற்றடிக்கும் திசையினிலே
காற்றாடி போகுமப்பா..
போகுமிடம் சேருமிடம்
யாரறிய கூடுமப்பா..





'இது ரொம்ப எளிமையான சவால்.  அருமையான,  வைரங்களால் இழைக்கப்பட்ட காலணி சிறியதாக இருப்பதால், காலை கொஞ்சம் செதுக்கி அணிந்து கொள்ள சொல்லுங்கள்' - பேரரசர் துக்ளக்கின் தீர்வை  கேட்டு அரசவை அதிர்ச்சி அடைந்தது.

டமில், தமில், டெமில், தமிள்... தமிழை செதுக்கி விட்டோம்!

'என்னை விட இந்தக்காலணிகள் மதிப்பு வாய்ந்ததாக இருப்பதால் அதனை தலையில் அணிவதே  சரி.' - முல்லா, தன்னுடைய செய்கைக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.

தாய் மொழி தமிழ், மொழிகளுக்கெல்லாம் தாய். தமிழன்டா, தமிழச்சிடா...

'அரசே, காலணியை குழந்தையாக இருக்கும்போதே மாட்டிவிட்டால் போதும். சிறிது, பெரிதென்ற பேச்சுக்கே இடமில்லை'- தெனாலி ராமன் பதிலால் கிருஷ்ண தேவராயர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

ஆதி மொழி அப்படியே இருக்கட்டும், சிந்திக்கவோ, வளரவோ  விட மாட்டோம்.

'மருமகனுக்காக  சமைத்ததை, மகனுக்கு பரிமாறி  வயிறெரியும் தாயும் உண்டானால் அவளும் முடத்தெங்குதான்' - வாய்விட்டு சத்தமாக படித்துக்கொண்டிருந்தான் சேகர்.

தன்னுடைய வீட்டு எல்லையை தாண்டி வளைந்து, நீருற்றி வளர்த்தவருக்கு பலன் தராமல், அடுத்தவருக்கு பலன் தரும் தென்னை மரமே, முடத்தெங்கு.

'கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.'
 
இதனுட்  1கழற்பெய்குடமாவது  கொள்வோனுணர்வு  சிறிதாயினுந் தான்
கற்றதெல்லாம் ஒருங்குரைத்தல். 2மடற்பனை யென்பது  பிறராற் கிட்டுதற்கு
அரிதாகி  இனிதாகிய  பயன்களைக் கொண்டிருத்தல். 3முடத்தெங்கென்பது
ஒருவர்  நீர்வார்க்கப்  பிறர்க்குப்  பயன்படுவதுபோல  ஒருவர்  வழிபடப்
பிறர்க்கு  உரைத்தல். 4குண்டிகைப் பருத்தியென்பது  சொரியினும்  வீழாது
சிறிதுசிறிதாக     வாங்கக்    கொடுக்குமதுபோலக்   கொள்வோனுணர்வு
பெரிதாயினுஞ் சிறிது சிறிதாகக் கூறுதல்.
                                                                      - சிறப்புப்பாயிரம் [தொல்காப்பியம்]


நாங்க படிக்கும்போதும் சொல்லித்தந்தாங்க. எனக்குதான், மண்டைல  ஏறல.

தமிழில் எழுத்துக்கள்:
   உயிர் எழுத்துக்கள்: 12
மெய்யெழுத்துக்கள்: 18

உயிர் மெய்யெழுத்துக்கள்: 216
உயிர் மெய்யெழுத்துக்கள் கூட்டெழுத்துக்களே அன்றி தனி எழுத்துக்கள் அல்ல.


தமிழில் மொத்த எழுத்துக்கள் 30.

எழுத்து எனப்படுப 
அகரம் முதல் னகர இறுவாய்  
முப்பஃது என்ப 
சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.

                                                                                -எழுத்ததிகாரம் [தொல்காப்பியம்] 

தமிழ் கற்க முப்பது எழுத்துக்களே போதும் என்று, தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வோம்; எடுத்து செல்வோம்.


சிறப்பு 
எழுத்துக்களை படித்தாலே வார்த்தை வந்துவிடும். 

  ன்  பு  -  எழுத்து
அன்பு  - சொல்
அன்பு -  பொருள்

O  V  E - ஆங்கிலத்தில் எழுத்துக்களை படித்தால் சொல்லோ, பொருளோ வராது.
















ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...