கடவுள் - எண்குணம்
கடவுள் - எண்குணம்
கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே
மீசை அரும்பாத பருவமது. ஓடிப்போன அரை நூற்றாண்டில்,
மீசையில் கருப்பாக ஒன்றுமில்லை.
கோவை காந்திபுரம், இப்போதைய நகர்ப்புற பேருந்து நிலையத்தின் மூலையில் நின்று கொண்டு பேருந்து வருமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். க்ராஸ் கட் சாலையும், நஞ்சப்பா சாலையும் சந்திக்கும் மூலையில் கோவில் இருப்பதற்கான எந்த அடிப்படையும் நான் பார்க்கவில்லை.
ஒரு ஐந்து வருடங்கள் ஓடி இருக்கலாம், கீதாலயா தியேட்டரில் உரிமைக்குரல் படம் பார்த்து விட்டு, அதே சந்திப்பில் நின்ற பொழுது இரண்டு விஷயங்கள் புதியதாக பட்டது.
ஒன்று, அந்த சாலை சந்திப்பில் புதிதாக தோன்றி இருந்த பிள்ளையார் கோவில். இரண்டாவது கோவிலை சார்ந்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் பொன்மொழிகள் பொறித்த கல்வெட்டு.
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுளை மற! மனிதனை நினை!
- தந்தை பெரியார்
கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை. எல்லாம் மனிதர்கள்தான். மனிதன் தன்னையே நினைத்திருக்க கடவுள் அங்கே தனக்குள் இருப்பதை அறிந்து கொள்வான்.
தனக்குள் இருப்பதற்கு என்ன பெயர் வைத்தால் என்ன? அறிவின் துணை கொண்டு பொறுமையுடன் பகுத்தறிவதைத்தானே பகுத்தறிவு என்கிறோம்.
எப்படி மனிதன் தான் கடவுள் என்று அறிந்து கொள்வது? அதற்குத்தான் திருவள்ளுவரும், திருமூலரும் இறைவனின் குணங்கள் எட்டு என்று அளந்து சொல்லி இருக்கிறார்கள். அந்த எட்டு குணங்களை உணர்ந்து கொண்டாலே கடவுள் ஆகி விடலாம்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
- திருக்குறள் 9
தன்னகத்தே எட்டு குணங்களை கொண்டவனின் தாள்களை வணங்காதவனின் ஐம்புலன்களில், புலன்களின் உணர்வு இருக்காது.
வாய் சுவைக்காது. மூக்கு முகராது. கண்கள் பார்க்காது. காது கேட்காது. மெய் ஸ்பரிசம் உணராது.
காலம் வரட்டும் கடவுளை தேடுவோம் என்றிருந்தால், நம் புலன்களில் உணர்வுத்தன்மை அற்று கடவுளை அறிந்து கொள்ளும் தன்மையே இல்லாமல் இம்மண்ணை விட்டு மறைந்து விடுவோம்.
கண்களுக்கிடையில், புருவ மத்தியில் நின்றியங்கும் இறைநிலை, எட்டு குணங்களை கொண்டியங்குகிறது. நேரடியாக மனிதனுக்கு அக்குணங்களை அறியும் தன்மை இல்லை. தீவிர முயற்சியும், பயிற்சியுமே அறிவதற்கு வழி வகுக்கும்.
முதல் குணம்
புருவ மத்தியில் அமர்ந்து மூலாதாரத்தில் சூரியனாக, உடலுக்குள் உயிராக மலர்ந்திருத்தல்: உயிர்
இரண்டாம் குணம்
மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி, உயிருடன் சேர்ந்து பரிமளித்தல்: சக்தி
மூன்றாம் குணம்
உயிரையும், சக்தியையும் இணைக்கும் பற்றாக, பாசமாக பற்றியிருத்தல்: பற்று
நான்காம் குணம்
உடலில், சுற்று சூழலில் ஏற்படும் நிகழ்வுகளை ஐம்புலன்களின் வாயிலாக உணரும் குணம். மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி: மனம்
ஐந்தாம் குணம்
ஐம்பொறிகளான, கண், காது, மூக்கு, வாய் மற்றும் மெய் ஆகியவற்றை ஆளும் தன்மை: ஐம்பொறிகளின் குணம்
ஆறாம் குணம்
ஐம்பொறிகளின் தன்மையை ஆறு ஆதாரங்களான, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி மற்றும் ஆக்கினை வழியாக பரவி நிற்றல்: 6 ஆதார சக்கரங்கள்
ஏழாம் குணம்
உயிரின் உணர்வு சக்தி, இறைநிலை, தலையின் வழியாக ஏழுலகாய் பரிமளித்தல்: துரியம்
எட்டாம் குணம்
பிரபஞ்சத்தின் ஆதாரமான மூலாதாரம் தான் என்ற இறைநிலைப் பேருணர்வு: தன்மயமாதல்
திருமந்திரம்-1
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான் உணர்ந் தெட்டே.
தன்னுடைய முதல் பாடலிலேயே, நான் யாரைப்பாடப்போகிறேன், அவன் எப்பேற்பட்டவன் என்பதை ஆணித்தரமாக சொல்லிவிட்டார் திருமூலர்.
உண்மையான ஆத்திகவாதி, நாத்திகனாக-கடவுளாகத்தான் இருக்க வேண்டும்.
இறைவனுக்கேது இறைவன்?
*** ***
No comments:
Post a Comment