Sunday, September 15, 2019

கண்கள் உறங்கிடுமா - காதல் கண்கள் உறங்கிடுமா


தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா - காதல்
கண்கள் உறங்கிடுமா


'சொல்லித்தொலையேண்டா' -  நிலவொளி வீசும் மாலையும், இரவும் சந்திக்கும் வேளையில், சசியின் முகம் சந்திரகாந்தக்கல்லாக மாறி இருந்தது.

மூன்று வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை முன்னூறு வார்த்தைகள் அவன் பேசியும், அத்தனையும் அர்த்தமற்றதாக இருந்தது சசிக்கு.

'ஏழு வண்ணங்களில் பகலில் ஜொலிக்கும் இந்த உலகம், கருப்பு வெளுப்பாக இருந்தாலும், நிலா வெளிச்சத்தில் மனதிற்கு எவ்வளவு உற்சாகம் தருகிறது.' - சசியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே பேசினான். அதில் மின்னும் கண்ணீர் முத்து, அவன் காலடியில் இருந்த நிலத்தில் பட்டு, தான்   வழுக்கி செல்வது போல் உணர்ந்தான்.

ஊடலும், ஊடலினுட்பொதிந்த இளங்கோபமும், அது கொண்டுவரும் கண்ணீரும்தானே ஆண்களை அடியோடு சாய்க்கும் பெண்களின் பிரம்மாஸ்திரங்கள்.

அவர்களுக்குள் இருந்த  இடைவெளி, மனதிலும்  சரி, பெஞ்சிலும் சரி, குறையாதா  என்ற ஏக்கத்தில் அவனை ஆவலுடன் பார்த்தாள்.

'சசி, முழு நிலவின் ஒளியில், நட்சத்திரங்கள் களை  இழந்து போகிறது பார்த்தாயா?' - பூங்காவின் பெஞ்சில் இருந்து, நீரில்பட்டு தெரியும் நிலவும்,
நிலவு போன்ற அவள் முகமும் அவனை கவிஞனாக்கிக்  கொண்டிருந்தது.

'போடா, நீயும் உன் நிலவும்..'-கோபம் தலைக்கேறியது  சசிக்கு.

பிரிவை சொல்ல அவன் உறவை சொல்லவில்லை. மன முறிவை சொல்லவும், அவன் உறவுக்குள் நிலவவில்லை.

ஆனால், தன் வாழ் நாள் முழுவதிலும் ஏதோ கட்டத்தில் துக்கம் பீறிடும் வேளையில், இன்றைய இந்த பொழுது அவளுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாக அமையப்போகிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நிலவு வளரும் நாட்களில் நட்சத்திரங்கள் ஒளி குன்றுகிறது;
தேயும் நாட்களில் நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிர்கிறது.

தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவில் சகலத்து  யோனிகள்
தாரகை தாரகை தானாம் சொரூபமே.
                                                                  திருமந்திரம்-860


மூலாதாரத்தில் உள்ள உயிர் நிலையே அனைத்து  உயிர்களுக்கும்,   என்றும் ஒளிரும் நட்சத்திரம். உடல் வளரும் இளம்பிராய  நாட்களில், நட்சத்திரத்தின் ஒளி  உணர்வு நிலையில் மனிதனுக்கு தெரிவதில்லை. உடல் வளர்நிலை முடிந்து, தேய்வு நிலை தொடங்கும்போது, உயிர் ஒளிவிடத்தொடங்குகிறது.

இறைவன் தன்னுள் உயிராக உறைகிறான் என்ற எண்ணம் உண்டாகி, வீடு பேறு  நோக்கி நகரத்தொடங்குகிறான்.

இந்நிலை எய்தப்பெற்றவர்கள் முற்பிறவியில் நன்வினையாற்றியவர்கள்; பாக்கியசாலிகள்.



Friday, September 6, 2019

எங்கே நிம்மதி?

எங்கே நிம்மதி?




பெண்ணைப் படைத்து
கண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே


'பெண் என்பவள் ஒருவனுடன் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருப்பாள். ஒருவனை தீவிரமாக பார்த்துக்கொண்டிருப்பாள். ஒருவனை கனிவுடன் நினைத்துக்கொண்டிருப்பாள். மற்றொருவனுக்கு உரிமையானவளாக இருப்பாள்.'

 பெண்ணைப்பற்றிய இந்த விளக்கம், வேறெங்குமில்லை, நம்ம மஹாபாரதத்தில் சொன்னதுதான்.

தன்னுடைய குளிர்சாதன அறையில் இருந்து வெளியே வந்த நிர்வாக இயக்குனர்  சாதனா, பிரபல தொழிற்சாலையில் இருந்து வந்த மூத்த பொறியாளரை முகத்தில் புன்முறுவலோடு வரவேற்றாள். அவள் பார்வையில், மெக்கானிக் மோகன் காரை ஸ்டார்ட் செய்ய முடியாமல் திணறுவது  பட்டது. கார் சரியாகாமல் போனால் மகனை பள்ளியில் இருந்து அழைத்துவர கணவருக்கு சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

அட, மஹாபாரதம் சொன்னது சரிதான். மல்டி டாஸ்கிங் பெண்களால் மட்டும்தான் பண்ண முடியும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறது.

சாதனா, பொறியாளரை வரவேற்று பேசுகிறாள். மெக்கானிக் மோகனை பார்க்கிறாள். மகனை நினைக்கிறாள். கணவனிடம் சொல்ல எண்ணம் கொள்கிறாள்.

அவ்வளவுதானா..

திருக்குறள் 56

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.                                                                 

தன்னைக்காத்துக்கொள்ளும் பொறுப்பு  பெண்களுக்கு, அவர்களின் மூச்சுக்காற்றை போன்றது. மணவாழ்வில், கணவன், குழந்தைகள், கணவனை சார்ந்த உற்றார், உறவினர் அல்லாமல் பிறந்த வீட்டின் பெருமை குறையாத பேச்சுடன் சோர்வில்லாமல் வாழ்பவள்தான் பெண்.

இன்னும் இருக்கு பாருங்க..

திருமந்திரம் 1053

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச்   செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்றில்லை
அவளன்றி ஊர்புகு மாறு அறியேனே.
                                                                  

சக்தியின் வடிவம் பெண்.
சக்தியை அறியாத தேவர்கள் இல்லை. சக்தியின்றி எந்த தவமும் நிறைவேறாது. ஐம்புலன்களில் இந்திரியம் என்னும் ஆற்றல் இல்லாமல் போகும். சக்தியின்றி இறைவனடி சேருவதும் இயலாது.

சக்தியின்றி  தேவர்களும், அவர்கள் ஆற்றும் தவமும், செய்யும் கடமையும் செய்வதற்கியலாமல் இறைவனின் திருவடி சேரவும் வேறு  வழியில்லை.


பெண்ணைப் படைத்து
மண்ணைப்  படைத்த
இறைவன் இனி-அவளே.

Thursday, September 5, 2019

நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

நெஞ்சத்தில் பேரெழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்


எழுத்துக்களுக்கு உயிர் உண்டா? உயிர் உண்டென்றால், அதனை ஏற்க உடல் உண்டா?

உடலும், உயிரும் கொண்டது தமிழ்.

ஐம்பத்தோர் அக்ஷரங்களில் உடலை வகைப்படுத்தி வைத்திருப்பதும் தமிழ்.

ஐந்தே எழுத்துக்களில் உயிர் பெற்று நிற்பதும் தமிழ்.

அ-இ-உ-எ-ஒ

அனந்த மொன்றேன் றறைந்திட ஆனந்தம்
ஆனந்தம் ஆ-ஈ-ஊ-ஓமென்று ஐந்திடம்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அதுஆயிடும்
ஆனந்தம் அம்-ஹ்ரீம்-அம்-க்ஷம் ஆம் ஆகுமே.
                                                              -திருமந்திரம் 910


சிவமும், சக்தியும் ஒன்றிய நிலையில் ஆனந்த நிலையில் இருப்பதும் தமிழ்.

மொழி அறிவு பெற்ற அனைத்து உயிர்களின் சிரசில் நிற்பதும் தமிழ்.

a - e - i - o - u  என்று ஆங்கிலத்துக்கு உயிர் எழுத்து வழங்கியதும் தமிழ்.

கட்டோன்றி மட்டோன்றா காலத்தே வாளொடு
முட்டோன்றி மூத்த குடி.

                                                                                   -புறப்பொருள் வெண்பா மாலை

ஆதிபகவனுக்கு முன்னரே தோன்றிய தமிழினை போற்றி உயிரென வணங்குவோம். எப்படியென்றால், ஆதிபகவன் பேசியது தமிழ். ஏற்கனவே தமிழ் இருந்ததனால்தான் அவனால் தமிழ் பேச முடிந்தது.

பின்னை என்னே இப்பிறவி பெறுவது 
முன்னை நான்குமுயல் தவம் செய்கிலர் 
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே.
                                                                           - திருமந்திரம் 
 
நெஞ்சத்தில் தமிழ்  எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்.

*** ***














Friday, August 30, 2019

ஒண்ணுமொண்ணும் ரெண்டு உன்மேலாசையுண்டு

ஒண்ணுமொண்ணும் ரெண்டு
உன்மேலாசையுண்டு



கேள்வி: ஒண்ணும் ஒண்ணும் என்ன?

                   'ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா' - கூட்டல்

                    'ஓரோண் ஒண்ணு' - பெருக்கல், வகுத்தல்

                   'ஒண்ணும் ஒண்ணும் பதினொண்ணு' - பார்த்தல்

                   'நீ பாதி நான் பாதி கண்ணே!' - பங்காளர்கள்

                  'ஒண்ணுமே தெரியல ஒலகத்திலே' - கழித்தல்

எது சரியான பதில் என்பது கேள்வியல்ல. பதில் சொல்லவே கேள்வி என்றெண்ணாமல், கேள்வி சரியானதா என்று கேட்கும் காலத்தில் நம் தலைமுறை.


வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூரும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.
                                                                       திருமந்திரம்-249


ஒண்ணு:  மலையிடை நின்றிருக்கும் வானீர்,  அருவியாக வழிகிறது என்றுரைக்க தேவை இல்லை.

இன்னொண்ணு: நம்முள்ளே [யோகத்தால், தலை உச்சியில்] ஊறுகின்ற
நுண்ணிய தெளிந்த நீரான வானீர், நுரையோ, அழுக்கோ இல்லாமல்,  நம் பாவங்களை கழுவுகிறது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
                                                                            திருக்குறள்-20

ஒண்ணு: நீரின்றி அமையாது உலகம்.

இன்னொண்ணு: யாராயிருந்தாலும், தலையாகிய  வானத்தில் யோக நிலை இல்லாவிட்டால், வானீர்  ஒழுகாது.

'அதாண்ணே இது' - இனிமேல் யாரும் இன்னொண்ணு எங்கேன்னு கேக்காதீங்க. அப்படித்தான், மேற்சொன்ன குறளுக்கு, பொருள் எழுதி உள்ளார்கள்.

பின் குறிப்பு: யாரும் திருக்குறள் தேர்வில் இந்த பொருள் எழுதி, மதிப்பெண் கிடைக்கவில்லை என்று  குறை கூற வேண்டாம்.




Sunday, August 25, 2019

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ


'அன்புடைய ஆசிரியர் அவர்களுக்கு, தங்கள் தினசரி மற்றும் பதிப்புகளில்
'கருப்பு' என்பது  'கறுப்பு'  என்று அச்சாகி வருவதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.'

இதற்கு பதில் வரலாம், வராமலும் போகலாம்.

தமிழ் எழுத்துக்கள்,  வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்னும் மூன்று பிரிவுகளாக உள்ளதின் அவசியம், அவர் அறிவு நிலைக்கு எட்டாமலும் இருக்கலாம்.

ஆனால், தமிழ் எழுத்துக்களின் முக்கியம் பற்றி அறிய முற்படுபவர்            கண்டிப்பாக திருமூலரின், திருமந்திர மாலை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

எண்வகை கன்மங்கள் 45 வகையின் விரிவாக 323 மந்திரங்கள் தமிழ் எழுத்துக்களின் அடிப்படையில், கணிக்கப்பட்டிருப்பது தமிழுக்கு  இருக்கக்கூடிய அறிவியல் ரீதியான சிறப்பாக அமைந்திருக்கிறது.

சொல்லிய எட்டுக்குந் தோன்றிய துருவமும்
நல்லறை எட்டினில் நாடும் இலக்கமும்
நல்ல பதினாறறைமுதல் நாலினிற்
சொல்லும் பகவத தோன்ற விட்டதே.
                                                         - திருமந்திர மாலை


மொத்தம் நான்கு எழுத்துக்கள்: ப க வ த

வெறும் நான்கு வரிப்பாடல்களில், எழுத்துக்களின் நுண்ணிய பங்களிப்பில், ராசிகள், நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் மந்திரங்கள் பற்றிய தெளிவான
விளக்கங்கள்.

எழுத்துக்களின் வரிசை முறையில் எண்களின் பங்களிப்பும் சேர, ஒரு மாயா ஜாலமே நடத்துகிறது திருமந்திர மாலை.

இந்த சிறப்பு தொடர வேண்டுமானால், எழுத்துப்பிழை வராமல் எழுத கற்றுக்கொள்வதே தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப்பெரிய தொண்டாக அமையும் என்பது திண்ணம்.






Thursday, August 22, 2019

மனதின் அக்ஷரம் மந்திரம்

மனதின் அக்ஷரம் மந்திரம்





மாணவர் மன்றம் தமிழ் தேர்வு நடந்து கொண்டிருந்தது.

தமிழில் எழுதவும்: AUSTRALIA 

            1. ஆஸ்திரேலியா
            2. அவுஸ்திரேலியா
            3. ஆஸ்ட்ரேலியா

'சார்.. தமிழில் இல்லாத எழுத்தில் எப்படி எழுதுவது?. எப்படி எழுதினாலும் 'ஸ்' எழுத்து இல்லாமல் எழுத முடியவில்லை. அவுத்திரேலியா என்று எழுதலாமா?'

பெயர் சொல்லை தமிழ்ப்படுத்தினால் அபாயம். HOMEBUSH என்ற பெயரை எப்படி தமிழில் எழுத முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.

ஹோம்புஷ் என்பதை எப்படி தமிழாக்கம் செய்வது?

கிரந்த [ஆதி] தமிழ் எழுத்துக்களை எப்படி  சிறப்பு தமிழ் எழுத்துக்கள் என்று சொல்வது?

ஐம்பத்தொரு அக்ஷரங்களில் ஒன்றாக இருந்த,  தமிழில் சிறப்பு எழுத்துக்களாக அறியப்பட்ட எழுத்துக்கள், ஏதோ ஒரு கால கட்டத்தில் தமிழ் இழந்துவிட்ட எழுத்துக்கள், இன்று வடமொழி எழுத்துக்களாக  நமக்கு சொல்லிக்  கொடுக்கப்பட்டு வருகிறது.


திருமந்திரம் 2866

காயம் பலகை கவறுஐந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே.

                                                                         

ஐம்பத்தோர் அக்கரம் என்பது ஐம்பத்து ஒன்று  அக்ஷரங்கள். இதுவே உடலில்  முழுமையாக உறைந்துள்ளது என்பது பாடலில் நமக்கு வேண்டிய பொருள்.

சரியான அக்ஷரங்களை, முறையாக பயன்படுத்தினால், அது  தெளிவான மந்திரங்களாக  உடலின் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகளை தூண்டும் கிரியாவூக்கியாகவும்  அமையும்.

இனி, அக்ஷரங்களின் பலனைப்பார்ப்போம்.

நமச்சிவாய, நமட்சிவாய, நமசிவாய, நமசிவய, நமக்ஷிவய - இவற்றில் எது சரியான பஞ்சாக்ஷர மந்திரத்தை குறிக்கிறது?

நமக்ஷிவய என்பதே சரியான பதில்.

திருமூலர் திருமந்திர மாலை என்னும் நூலில், முன்னூறு பாடல்களில் மந்திரங்கள் எழுதுவதற்கான சூத்திரங்களை வழங்கி இருக்கிறார். அந்த மந்திரங்கள்  இந்த ஐம்பத்தொரு அக்ஷரங்களை மூலமாக கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது.  

எதனால் இந்த ஐம்பத்தொரு அக்ஷரங்கள்,  ஏனைய எழுத்துக்களிலிருந்து  வேறுபட்டு நிற்கிறது?

எழுத்துக்கள் புறத்தொடர்பிற்காக, வார்த்தைகளாக  உச்சரிக்கப்படுகிறது. அக்ஷரங்கள் அகத்தொடர்பிற்காக மனதால் அர்ச்சிக்கப்படுகிறது. இதனாலேயே மனத்தால் உச்சரிக்கப்படும் அக்ஷரங்கள் மந்திரம் எனப்பட்டது.

மனதின் அக்ஷரம் மந்திரம்.

*** *** ***








                 







  

Sunday, July 7, 2019

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜா

பொருள்:

'சம்திங் ராங் வித் தி மெஷின்' - மனதை ஆறுதல் படுத்த, நான்காவது எடை காட்டும் கருவியையும் குற்றம் சாட்டினாள், வினோதினி.

'இதுக்கு மேல் வெயிட் போட்டே, உன்னுடைய ஹார்ட் தாங்காது'- மருத்துவரின் குரல் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.

*** ***

ஒரே ஒரு ராஜாவிற்கு ஐந்து அழகிய இளம் பொண்டாட்டிகள்.

'வினோ உன்னுடைய  டயட் மீல், டேபிள்ள வச்சிருக்கேன்' - அம்மாவின் அழைப்பு, காதுகளில் தேனாய் ஒலித்தது..

சமையலறையிலிருந்து வந்த மீன் வருவலின் மணம், பொண்டாட்டி நறுமுகையின் மூக்கைத்துளைத்தது.

'ஒரே ஒரு குட்டியூண்டு மீன் துண்டு எடுத்துக்கட்டுமா?'

பொண்டாட்டி பொற்சுவைக்கோ, சமயலறையில் பரிமாறப்படும் சப்தமே, நாக்கை நீரில் தத்தளிக்க வைத்தது.

'நான் டயட்ல இருக்கேன். மீன் வெயிட் போடாது. ஜஸ்ட் டூ பீஸ் சேத்துக்கலாம்'

பொண்டாட்டி கயல்விழியின்  கண்கள், டைனிங் டேபிள் மேல் இருந்த மீன் வறுவலை விட்டு அகலவேயில்லை.

நாசூக்காக டிஸ்ஸு பேப்பரில் எடுத்து தட்டில் போட்டுக்கொண்டாள்.
'வாரத்துல வர்றது ஒரு ஞாயிற்றுக்கிழமை. இன்னிக்கு மட்டும் புல்லா சாப்ட்டுட்டு ஒரு குட்டி தூக்கம். நாளைக்கு இருந்து ஸ்ட்ரிக்ட் டயட்' - வினோதினியின் கைகள் டயட் மீலை ஒதுக்கியது.

ஐந்து அழகிய இளம் மனைவிகளுக்கும், எண்ணங்களால் கட்டளை இடும், ஒரே அதிகாரி மனம்.

உடலை ஆட்டுவிக்கும் உயிர் நிலையான மன்னன், தன்னுடன்  இணைந்திருக்கும் ஐந்து  மனைவிகளைப்  பற்றிய சிந்தனை அற்றவன். அழகும், இளமையும் போய்விட்டால், அவர்கள் குடி  இருக்கும் உடலை உதறி விட்டு, அடுத்த உடல் தேடி போய் விடுவான்.

தானே புலன்ஐந்தும் தன்  வசமாயிடும்
தானே  புலன்ஐந்தும் தன்வசம் போயிடும்
தானே  புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.
                                                                    - திருமந்திரம்


மறை பொருள்:

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களும் நம் வசமாக வேண்டும். ஐம்புலன்களும் நம்மை இயக்கும் தன்மையை இழக்க வேண்டும்.
அவைகள் விரும்பிய வண்ணம் நம்மை இயக்கிய குணம் மாற வேண்டும். இவைகள் அனைத்தும் நடக்க வேண்டுமென்றால், நாம்  தனி ஒருவனாக, இறை நிலை தியானித்து அமைதியாக இருக்க வேண்டும்.









கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...