தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா - காதல்
கண்கள் உறங்கிடுமா
'சொல்லித்தொலையேண்டா' - நிலவொளி வீசும் மாலையும், இரவும் சந்திக்கும் வேளையில், சசியின் முகம் சந்திரகாந்தக்கல்லாக மாறி இருந்தது.
மூன்று வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை முன்னூறு வார்த்தைகள் அவன் பேசியும், அத்தனையும் அர்த்தமற்றதாக இருந்தது சசிக்கு.
'ஏழு வண்ணங்களில் பகலில் ஜொலிக்கும் இந்த உலகம், கருப்பு வெளுப்பாக இருந்தாலும், நிலா வெளிச்சத்தில் மனதிற்கு எவ்வளவு உற்சாகம் தருகிறது.' - சசியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே பேசினான். அதில் மின்னும் கண்ணீர் முத்து, அவன் காலடியில் இருந்த நிலத்தில் பட்டு, தான் வழுக்கி செல்வது போல் உணர்ந்தான்.
ஊடலும், ஊடலினுட்பொதிந்த இளங்கோபமும், அது கொண்டுவரும் கண்ணீரும்தானே ஆண்களை அடியோடு சாய்க்கும் பெண்களின் பிரம்மாஸ்திரங்கள்.
அவர்களுக்குள் இருந்த இடைவெளி, மனதிலும் சரி, பெஞ்சிலும் சரி, குறையாதா என்ற ஏக்கத்தில் அவனை ஆவலுடன் பார்த்தாள்.
'சசி, முழு நிலவின் ஒளியில், நட்சத்திரங்கள் களை இழந்து போகிறது பார்த்தாயா?' - பூங்காவின் பெஞ்சில் இருந்து, நீரில்பட்டு தெரியும் நிலவும்,
நிலவு போன்ற அவள் முகமும் அவனை கவிஞனாக்கிக் கொண்டிருந்தது.
'போடா, நீயும் உன் நிலவும்..'-கோபம் தலைக்கேறியது சசிக்கு.
பிரிவை சொல்ல அவன் உறவை சொல்லவில்லை. மன முறிவை சொல்லவும், அவன் உறவுக்குள் நிலவவில்லை.
ஆனால், தன் வாழ் நாள் முழுவதிலும் ஏதோ கட்டத்தில் துக்கம் பீறிடும் வேளையில், இன்றைய இந்த பொழுது அவளுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாக அமையப்போகிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நிலவு வளரும் நாட்களில் நட்சத்திரங்கள் ஒளி குன்றுகிறது;
தேயும் நாட்களில் நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிர்கிறது.
தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவில் சகலத்து யோனிகள்
தாரகை தாரகை தானாம் சொரூபமே.
திருமந்திரம்-860
மூலாதாரத்தில் உள்ள உயிர் நிலையே அனைத்து உயிர்களுக்கும், என்றும் ஒளிரும் நட்சத்திரம். உடல் வளரும் இளம்பிராய நாட்களில், நட்சத்திரத்தின் ஒளி உணர்வு நிலையில் மனிதனுக்கு தெரிவதில்லை. உடல் வளர்நிலை முடிந்து, தேய்வு நிலை தொடங்கும்போது, உயிர் ஒளிவிடத்தொடங்குகிறது.
இறைவன் தன்னுள் உயிராக உறைகிறான் என்ற எண்ணம் உண்டாகி, வீடு பேறு நோக்கி நகரத்தொடங்குகிறான்.
இந்நிலை எய்தப்பெற்றவர்கள் முற்பிறவியில் நன்வினையாற்றியவர்கள்; பாக்கியசாலிகள்.
No comments:
Post a Comment