பூஜ்யத்திற்குள்ளே ராஜ்யம்
வெள்ளியங்கிரி மலை
'கொஞ்ச அடக்கி வாசிங்க. இதுவரைக்கும் போயிட்டு வந்தது போதும்.' - இல்லத்தரசியிடம் போட்ட விண்ணப்பம் முதலில் ரிஜெக்டட்.
'பத்திரமா போயிட்டு வா, அப்பா.' - இளவரசியின் அப்ரூவல்.
எப்படியோ 'அப்படி இப்படி' சொல்லி ஹோம் மினிஸ்டர் கிட்டயும் பெர்மிஷன் வாங்கி இந்த முறையும் வெற்றிகரமாக வெள்ளியங்கிரி மலை போயிட்டு வந்தாச்சு.
ஏப்ரல் 6-ம் தேதி, பங்குனி பௌர்ணமிக்கு மறுநாள், மாலை ஏழு மணிக்கு துவங்கிய பயணம் அடுத்தநாள் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு நிறைவு பெற்றது. நான்-ஸ்டாப் பதினேழு மணி நேர மராத்தான் மலையேற்றம்.
'மலை ஏறிட்டு வந்துட்டேன்டா.. இதுதான் கடைசி. இனிமேல் ஏற மாட்டேன்.'
'நீ இப்படித்தான் போன முறையும் சொன்னே.' - தம்பியின் பதில்.
மழையில் சிக்கிய மலைப்பாதை, கொஞ்ச நஞ்சம் இருந்த மண்ணையும் அரிப்பில் விட்டுவிட்டு வெறும் கற்குவியல்களாக கிடக்கிறது. ஆறாவது மலை மட்டும் கொஞ்சம் நடக்கிறமாதிரி பாதை. மற்றதெல்லாம் கற்குவியல்கள். கைகளும், கால்களுடன் சேர்ந்து தவழ்ந்து செல்ல வேண்டியதுதான்.
புனிதமான மலை. வெறுங்காலில்தான் ஏறவேண்டும் என்ற கொள்கையெல்லாம் இங்கே செல்லுபடியாகாது. ஏழாவது மலையில் இறைவனை தரிசிக்கும்போதுகூட கால்செருப்பு ஒரு தடையில்லை. கூடவே முடிஞ்சா knee cap போட்டுக்கணும்.
'குமாரு, இன்னும் கொஞ்ச தூரம்தான் வெள்ளை விநாயகர் வந்துரும். அதுக்கப்புறம் ப்ளைன்ஸ். சைக்கிள் ஓட்டலாம்னா பாத்துக்கோயேன்' - முதல் முறை மலை ஏறும் நண்பன் கேட்ட 'இன்னும் எவ்வளவு ஏறணும்?' என்ற கேள்விக்கு பதில் சொன்னான் நண்பன்.
அவர்கள் நின்றிருந்த இடமோ முதல் மலையில் அரை மலை கூட தேறாது.
'இப்படி சொல்லித்தாண்டா போன வருஷம் என்னயும் கூட்டிட்டு போனாங்க. இந்த வருஷமும் வர்றேன்னா பாத்துக்கோ. அடுத்த வருஷம் நீயும் வருவே.' - நம்பிக்கையுடன் சொன்னான்.
'அது சரி. ஏன்டா வயிறு புல்லா சாப்பிட வேண்டாம்னு சொன்னே?'
'சாப்பிட்டிருந்தா.. இந்நேரம் உனக்கு வாந்தி வந்திருக்கும். இல்லே அவசரம்னா காட்டுக்குள்ளேதான் போகணும். டேஞ்சர். அதான் அளவா திங்க சொன்னேன்.'
'அதல்லாம, வழி முழுக்க தற்காலிக கடைகள் இருக்கு. பசிக்கு தேவையானது கிடைக்கும். சுக்கு காப்பி, கம்மங்கூழ், மூலிகை சூப், ஆரஞ்சு மிட்டாய், தர்ப்பூசணி, மேகி.. இப்படி நிறைய.'
'நல்ல ஆரோக்கியமான உடல் நிலை இருந்தா, மலை ஏற ஆறு மணி நேரம், இறங்க ஆறு மணி நேரம். இதுதான் கணக்கு.' - வனத்துறை காப்பாளர் 'எவ்வளவு நேரம் ஆகும்?' என்று கேட்ட மலையேறிக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
'இங்கே பாருடா.. இப்ப மணி பதினொன்ரை. கொஞ்சம் வேகமா போனோம்னா சாமி கும்பிட்டுட்டு ஒரு மணிக்கெல்லாம் அடிவாரம் வந்துரலாம்.' நண்பர்கள் இப்பொழுதுதான் முதல் முறையாக முதல் மலையே ஏற ஆரம்பித்திருக்கிறார்கள்.
'காந்திபுரம் பஸ் ஒரு மணிக்கு அடிவாரத்துல இருந்து இருக்கு. இங்கிருந்து சுமார் முப்பத்தஞ்சு கிலோமீட்டர் இருக்கும். சீக்கிரம் போய் காஞ்சிபுரம் பஸ் புடிச்சிரலாம்.' - நம்பிக்கையுடன் சொன்னான் நண்பன்.
'நல்ல வேளை. பிரகாஷ் வரல. வந்திருந்தா அவனுக்கு தனியா இருபத்தஞ்சு லிட்டர் தண்ணி கேன் சுமக்கணும்.'
'ஏண்டா தண்ணி சுமக்கணும். ஆளுக்கொரு பாட்டில் இருந்தா போதும்.'
'ரெண்டாவது மலை முடியிற இடத்துல ஒரு சுனை இருக்கு. இன்னும் கொஞ்சம் மேல போன கைதட்டி சுனை இருக்கு. ஆறாவது மலை, ஏழாவது மலையிலும் தண்ணி புடிச்சிக்கலாம்.'
ஈஷா யோகா மையத்தில் ஆதியோகியை பார்த்துவிட்டு, அப்படியே வெள்ளியங்கிரி மலை ஏற்றம் செய்யலாம் என்று நிறைய பேர் வருகிறார்கள்.
இளைஞர்களாக இருப்பதால் மூங்கில் குச்சி எடுத்து செல்வதை இளமைக்கு சவாலாக நினைக்கக்கூடாது. கையில் குச்சி, இரண்டு கால்கள், இரண்டு கைகள் போதாமல் நிறைய இடங்களில் தூக்கிவிட இன்னும் இரண்டு கைகள் தேவைப்படும், நினைவில் கொள்ளுங்கள்.
'சார்.. இந்த முறை நிறைய டோலி சர்வீஸ். மக்கள் கூட்டம் அதிகமாயிருச்சு.'
'போயிருச்சுங்க. கீழ கொண்டு வந்து சேக்கணும்' - டோலி தூக்கிகள் சொல்லிக்கொண்டே மலை ஏறினார்கள்.
உடலில் உள்ள அத்தனை நோய்களையும் கண்டறிந்து சொல்லி விடும் இந்த மலை ஏற்றம்; சில சமயங்களில் மோட்சமும் கிடைத்துவிடும். இதற்குமேல் உடலில் சக்தியில்லை என்னும் பட்சத்தில் ஒரே தீர்வு டோலி சேவைதான். உயிர் இறையடி சேர்ந்துவிட்டாலும் டோலிதான்.
'மலை ஏறுவது ஒருவகையில் வைராக்கியம். ஆனால், இறங்குவதற்கு அரசு ரோப்-கார் வசதி செய்து தரலாம். மலம்புழாவில் பாருங்கள், அருமையாக இருக்கிறது ரோப்-கார் சவாரி. நல்ல கூட்டமும் வரும். அதே சமயம் நல்ல வருமானமும் இருக்கும்.'
இதையும் கவனத்தில் வச்சுக்குங்க.
'ஏறும்போதும், இறங்கும்போதும் புஷ் புஷ்ன்னு மூக்கிலும் வாயிலும் மூச்சு விட வேண்டாம்.'
'முடிஞ்ச அளவுக்கு மூக்கில் மூச்சு விடுங்க.. வாயில் மூச்சு விட்டா தொண்டைக்குழி வரைக்கும் எரிச்சல் எடுக்கும். காப்பிகூட குடிக்க முடியாது'
நண்பரிடம் விளக்கி கொண்டிருந்தார் ஒருவர்.
'அன்னிக்கு ஆறாவது மலையில் நின்னுட்டிருந்தேன். சட சடன்னு மழை. விடாம ஒரு ரெண்டு மணி நேரம்.'
'எங்கேயும் ஒதுங்க முடியாது. ஏழாவது மலை ஏறிக்கொண்டிருந்தவர்களிடமிருந்து ஒரே அலறல் சப்தம். சப்த நாடியும் ஒடுங்கிருச்சு. நெறைய பேர் செத்து போயிட்டாங்க'
'மழை நின்னதும் என்ன வேகத்தில் கீழே இறங்கினோம்னே தெரியாது. உயிர் பயம்னா என்னன்னு அன்னிக்குத்தான் புரிஞ்சது'
'பாரஸ்ட் டிபார்ட்மென்ட் இந்த மாதிரி சமயத்தில், எந்த நிமிஷமும் மலை ஏற்றத்தை நிறுத்திருவாங்க. பாருங்க நெறைய வனத்துறை கேம்ப் போட்டுருக்காங்க.'
'புதுசா மலை ஏற பிளான் பண்றவங்க அனுமதி உண்டா இல்லையான்னு தெரிஞ்சிட்டு வரலாம். அதுக்கு வாட்ஸாப் 70921 44676 நம்பரில்
கேட்டீங்கன்னா சொல்வாங்க. நானும் கேட்டுட்டுதான் 6-ம் தேதி மலை ஏறினேன்.'
இந்த முறை அடிவாரத்திலிருந்தே வனத்துறை ஆதிக்கம்தான். மேலே பூசாரிகூட வனத்துறை சீருடையில் இருந்தவர்தான் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு, திருநீறு பாக்கெட் கொடுத்தார். திருநீறு பாக்கெட் உபயம் கோவை, ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ். பாக்கெட்டில் வெள்ளியங்கிரி என்பதை வெள்ளிங்கிரி என்று அச்சடித்திருந்தார்கள்.
'மேல கோயில்ல போய் கொஞ்ச நேரம் படுத்திரலாம்.'
'தம்பீ.. நீங்க நெனைக்கிறமாதிரி கோயில் இல்ல இது. எப்படி இப்ப வரிசையா ஏறிட்டிருக்கோமோ, அப்படியே சாமி இருக்கிற குகை வாசலோட சாமிய கும்பிட்டுட்டு கீழே வரிசையா இறங்கிறணும்.'
'படுக்கணும்னா, திறந்த வெளியில்தான் படுக்கணும். புல்லிலோ, பாறையிலோ எங்கே வேணும்னாலும் படுக்கலாம். என்ன கொஞ்சம் பனி இருக்கும், குளிரும்.'
ஏழாவது மலை உச்சியில் நிறைய பக்தர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நிறைய பேர் ஸ்வெட்டர், பெட்ஷீட் கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் அதிகாலை கேட்கும் டம்று முழக்கத்தையும், சூரியோதய நேரத்தில் இறைவனை தரிசிக்கவும் காத்திருக்கிறார்கள்.
நான் சொன்னது ஒன்று கூட மிகைப்படுத்தி சொல்லவில்லை. இனி வரும் சித்ரா பௌர்ணமி நாட்களில், ஏறப்போகிறவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவே இப்பதிவு.
இது தேவையா?
இவ்வளவு கஷ்டப்பட்டு மலை ஏறத்தான் வேண்டுமா? இறைவன் அங்கே மட்டும்தான் இருக்கிறானா?
கேள்விகள் மனதில் எழுவது இயற்கையே..
கடப்பது கடினம் என்று தெரிந்தே எடுக்கும் முயற்சிகள் வெற்றியுடன் கடந்தபின் கிடைக்கும் திருப்திக்கு எது ஈடு?
அது மட்டுமா?
அடிவாரத்தில் முதல் படிக்கட்டில் கால் வைத்தவுடன் நம்மை பத்திரமாக பயணிக்க வைக்கும் சித்தர் பெருமக்களின் அருமையை வேறு எப்படித்தான் நாம் உணர முடியும்?
நாத வடிவான ஞான தலைவன், ஜோதி வடிவான சக்தி தலைவியை தன்னுள் கொண்டு, பேரின்பத்தை இயக்கமாக உணர்ந்திருக்கிறான். ஐம்புலன்களின் ஆதிக்கத்தை வென்றவன் ஆறாதாரமாக உடலில் வியாபித்திருக்கிறான். பேரண்டமான ஏழுலகையும் ஆளும் அவன் அனைத்தும் தன்மயமாகி ஏதுமற்றவனாக பூஜ்யமாக மலை உச்சியில் நிற்கிறான்..
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான் குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான் உணர்ந்தேட்டே.
- திருமந்திரம்
உங்கள் வெள்ளியங்கிரி மலைப்பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துகள்.
*** *** ***