Monday, April 10, 2023

தேன் நிலவு

தேன் நிலவு 


 

9 ஏப்ரல் 2023 செய்தி: 

அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில்.. பொங்கிய நெட்டிசன்கள்.


செய்தியை படிக்க எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது? அதுவும் பொது நிகழ்வில், ஒளிப்பதிவு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில், எப்படி இது சாத்தியம்? இதன் பின்புலம் என்னவாக இருக்கும்? எளிதில் இன்னொரு பாலியல் செய்தி என்று கடந்து போக முடியவில்லை.

எனக்கு திருமணமாகி நான்கைந்து வருடங்கள் கடந்திருக்கும். குழந்தைக்காக கோயில்கள், மருத்துவ மனைகள் என்று அலைந்து கொண்டிருந்த கால கட்டம் அது. மும்பையில் பணியில் இருந்த காலம். பொள்ளாச்சியில் இருந்து வந்த சக தோழர் ஒருவர் கோடி சுவாமிகள் என்ற அற்புத சித்தரைப்  பற்றி கூறினார்.

'எதுக்கும் ஒரு தடவை கோடி சாமியாரை பாத்துட்டு வாங்க. உங்க மாமியார் ஊரும் பொள்ளாச்சி தானே?'

'சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பொது மக்கள் தரிசனம் உண்டு.'

'இளையராஜா மாதம் தோறும் வந்து செல்கிறார்'

சரி, எப்படியும் ஒரு முறை பார்த்து வரலாம் என்று பொள்ளாச்சி சென்றபோது  கிளம்பினோம்.  சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள புரவிபாளையம் சென்றுவர  இந்த் சுசுகி பைக்கே  போதுமானதாக இருந்தது.

நல்ல கூட்டம். மேல்  மாடியில் சுவாமிகள் இருக்கிறார். ஒவ்வொருவராக அவர் பாதத்தை வணங்கி  சென்றார்கள். யாரும்   பேசவில்லை. அவரும் பேசவோ ஆசீர்வதிக்கவோ இல்லை.

அவருக்கு பருப்பு கிச்சடி சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார்கள். அவர் வாயில் போட்ட சாதத்தை கொடுத்தால் அது  அமிர்தம் போன்றது. வீசி விடாதீர்கள் என்று முதலிலேயே எச்சரித்திருந்தார்கள்.

இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அவர் பாதங்களை தொட்டு வணங்கினோம். எங்களுக்கு எதுவும் கொடுத்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்தவில்லை சுவாமிகள்.

அப்பொழுதைக்கு எங்களுக்கு அருவெறுப்பைத் தந்தது அந்த நடைமுறை.

இப்பொழுது திருமந்திரம் படிக்க ஆரம்பித்த பின்னர் அதில் சொல்லப்படும் ஆன்மீக கருத்துக்களை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

திருமந்திரம் 1949

வற்ற அனலைக்  கொழுவி மறித்தேற்றி 
துற்ற சுழிஅனல் சொருகிச்  சுடர்உற்று 
முற்று  மதியத்து அமுதை முறைமுறை 
செற்று உண்பவரே  சிவயோகி யாரே,  

உடலில் உற்பத்தியாகும் விந்து கீழே  வழிந்தோடச் செய்யாமல் மேல் நோக்கி ஏற்றி, மூலக்கனலில்  வற்றுமாறு  செய்வார்கள். பின்னர் அதனை அக்னி நாடி வழியாக சுழி முனைக்கு  தியானத்தின் மூலம் ஒளிச்சுடராக கொண்டு செல்வார்கள். அவ்வாறு கொண்டு செல்வதனால் அங்கே மதி மண்டலத்தில் அமுதம் ஊற்றெடுக்கும். அவ்வமுதத்தை அண்ணாக்கின் வழியாக செறிவுடன் உண்பவர்கள் சிவ யோகிகள்.

உண்மையான சிவ யோகிகளுக்கு அமிர்தத்தை உண்பது சாத்தியமாகி இருக்கிறது. அவர்கள் அண்ணாக்கில் அமிர்தம் கசிந்து கொண்டிருக்கும் என்பதும் உண்மை என்றாகிறது.

தலாய் லாமாவோ, கோடி சுவாமிகளோ சிவ யோகி  வகையினர்   என்றெனக்கு தெரியாது. அவர்கள் நாக்கில் அமிர்தம் ஊறுமோ என்றும் தெரியாது.

தொடர்ந்து போலிகளையே பார்த்து பழகிப்போன நமக்கு, உண்மைக்கும் வேடத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்பது மட்டும் உண்மை. 

*** *** ***












No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...