Sunday, May 19, 2019

சாமியார் ஆவது எப்படி?

சாமியார் ஆவது எப்படி?

பொறந்தாலும்
ஆம்பளையா
பொறக்கக்கூடாது






ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை.  ஞானம் பிறந்து விட்டது எனக்கு.

காப்பி குடிச்சிட்டு, சொல்லிட்டு கிளம்பிற  வேண்டியதுதான்.

'எங்கேடி காப்பி'

'என்ன டி யா? விளக்குமாறு பிஞ்சிரும்'

'ஆமாண்டி பொண்டாட்டி. பாரு, இதுல கூட டீ இருக்கு'

'எனக்கு ஞானம் வந்துருச்சு. காப்பி குடிச்சிட்டு சன்யாசம் போறேன். ஒரு நாலு மொழ வேட்டி  எடுத்து வை'


'அது டூ மச் டாட். ஒரு ஈரிழை துண்டு போதும்' - அன்பு மகளின் பதில்.

'அது கூட அதிகம்தான். ஒரு கர்ச்சீப் போதும்'- நான் கொஞ்சமும்  எதிர்பார்க்காத சிந்தனை மனைவியிடமிருந்து.

பொறப்பட்டாச்சு, இனி வெள்ளியங்கிரி மலையில் போய் செட்டில் ஆயிர வேண்டியதுதான்.

இப்ப கேள்வி எல்லாம் எங்கே செட்டில் ஆவது? மலை அடிவாரம் உள்ள கிராமத்தில் தங்கலாமா, இல்லை அடிவாரத்தில் தங்கலாமா?

கிராமத்தில் தங்குவதும்  ஒன்றுதான், வீட்டில் இருப்பதும் ஒன்றுதான். மனம் அலை பாய விடக்கூடாது.

ஏழு மலை இருக்கு. மத்த சாமி மலைகளில் எல்லாம் பாத்தால், சாமியார்கள், பிச்சைக்காரர்கள் அங்குமிங்கும் தங்கி இருப்பார்கள். இந்த வெள்ளியங்கிரி மலை மேல்  மட்டும் சாமியார்கள் , பிச்சைக்காரர்கள், பிராமணர்கள்  என்று யாரும் இல்லையே. கண்ணுக்கு புலப்படாமல் நிறைய சித்தர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்கிறார்கள்.

அடிவாரத்தில் மட்டும் ஒரு சாமியார் கும்பல் இருக்கு. அதுகூட சேந்துக்கலாமா?

நோ.. நோ.. இவர்கள் பணம் கேட்கிறார்கள். நான் இல்லற வாழ்வை முற்றும் துறந்து ஞானம் பெற்றவன். அவர்களுடன் சேர்ந்து,  இரந்து வாழ மாட்டேன்.

'மலை மேல எல்லாம் ஏறி தங்க வேண்டாம் டாட்..'

'ஏம்மா..'- மகளின் அக்கறை பற்றி அவசரமாக ஆனந்தப்பட்டு கேட்டேன்.

'நீ விட்ற கொறட்டைக்கு, எல்லா மிருகங்களும் பயந்து மலய  விட்டு ஓடி, ஊருக்குள்ளாற வந்துரும்'

'மேற்கு தொடர்ச்சி மலையில், ஒரு ஜீவ ராசி கூட தங்காது'- இது என் தர்ம பத்தினி.

'சரி. என்னை யாரும் பாக்க வரவேண்டாம்'- என் தன்மானத்தை சீண்டுகிறார்கள்.

'நீ வராம, இருந்த சரி' - கலிகாலம் பேசியது.

முதல் மலை உச்சியில், வெள்ளை விநாயகர் கோவில். ஒரு சின்ன ஓய்வு மேடை இருக்கு. அங்கே தங்க முடியாதே.

ரெண்டாவது மலை முடிவில், பாம்பாட்டி சித்தர் குகை இருக்கு. அங்கிருந்து கொஞ்சம் மேலே, ஒரு நீரூற்று இருக்கு. குகைக்குள் தங்கலாம். நான் தங்கினால் அவர் எப்படி தங்குவார். இந்த குறட்டை வேற கூடவே வருது. பாவம் இல்லையா பாம்பாட்டி சித்தர். வேண்டாம் ரெண்டாவது மலை.

ஆறாவது மலை முடிவில், நீர் சுனை இருக்கு. ரொம்ப குளிரும். குளிருதுன்னு, கஞ்சா, தண்ணின்னு கெட்ட  பழக்கம் வந்துரும். பொண்டாட்டி திட்டுவா. வேண்டாம்ப்பா.

அட. சாமியார் ஆயிட்டா, 'மகளே, என்ன வரம்  வேண்டும் கேள்'-னு சொல்லிறலாம். சாமியார் ஆன பின்னால்  ஆம்பளைங்க பொண்டாட்டிக்கு  எக்காரணம் கொண்டும் பயப்படக்கூடாது.

பொண்டாட்டி பயமில்லாமல் வாழ்க்கை. ஆஹா.. நினைத்தாலே இனிக்குதே!

ஆனாலும், ஆறாவது மலையும்  சரிப்படாது.

ஏழாவது மலையில் நிக்க கூட இடம் இல்ல. ஆனா பக்க வாட்டு சரிவுல ரெண்டு குடிசை இருக்கு. தண்ணி இல்ல, ஒண்ணும் இல்ல எப்படி தங்க? அவரே, சிவனேன்னு குகைக்குள் உக்காந்திருக்கார். முதலில், இருக்கிற குகையில் சக்தி அம்மா இருக்காங்க. நுழைவு பாறை அடியில் நம்ம ஞான முதல்வன். எல்லாம் ஒண்டுக்குடித்தனம், நமக்கெங்கே இடம் அங்கே.

யோசிச்சிட்டே இருந்ததில் நேரம் போனதே தெரியல. மணி பன்னிரண்டு பக்கம் ஆயிருச்சே.

மசாலா வாசனைவேறு  மூக்கை துளைத்து என் ஞானத்தை கேலிக்குறியாக்கியது.

பனியில்லாத மார்கழியா?
மட்டனில்லாத ஞாயிரா?

இன்னிக்கு மட்டனா?.. சிக்கனா?..

'காடை, மசாலாவில் ஊறுனது போதும். எடுத்து அவனில் வை' - மகளுக்கு கட்டளை மனைவியிடமிருந்து.

இந்த வாரம் சாமியார் ஆகாட்டி என்ன,  இந்த வாரம் வந்த ஞானம் அடுத்த வாரம் வராமலா போகும்.

'தயிர் கம்மியா இருக்கு தயிர் சட்னி பண்ண. போய் வாங்கிட்டு வாங்க'

ஹய்யா.. அப்படியே வெத்தலையும், பாக்கும், சுண்ணாம்பும் வாங்கிட்டு வந்திரலாம். ஒரு புடி புடிச்சிட்டு மத்தியானம் தூங்கினா, கொறட்ட சத்தத்துக்கு பக்கத்து வீட்டு நாய் கத்தி கிட்டு கிடக்கும். எனக்கென்ன, கத்திட்டு போகட்டும்.

சாமியார் ஆயிரலாம்னு நெனச்சோமே. சாப்பாடு யார் குடுப்பான்னு நெனக்கலியே. அதுதான் மலை மேல ஒரு சாமியார் கூட இல்ல.

நமக்கு சாப்பாடுதான் முக்கியம்.

இல்லறத்தார் சாமியார் ஆவது இப்படித்தான்.

[கல்யாணமான ஆண்களின் மனக்குமுறலை எண்ணி  எழுதப்பட்டதால், இந்த இதிகாசத்தை ஆண் இனத்துக்கு அர்ப்பணிக்கிறேன்.]

ஒரு நல்ல விஷயம். புலன்களை அடக்க கூடாதுன்னு திருமூலரே சொல்லி இருக்கார். ஐம்புலன்களை அடக்க சொல்பவன் அறிவில்லாதவன்னு சொல்லி இருக்கார்.

எனவே, வாய்க்கு ருசியா சாப்பிடுறது தப்பில்ல.

திருமந்திரம்

அஞ்சும்  அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் 
அஞ்சும்  அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும்  அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா  அறிவை அறிந்தேனே. 

தெளிந்த அறிவுடையவர் ஐம்புலன்களை அடக்க சொல்ல மாட்டார்கள். தேவர்களாலும் புலன்களை அடக்க முடியாது. அப்படியே, அடக்கினால் நாம்  உணர்வுகளற்ற ஜடத்திற்கு சமமாகிவிடுவோம். அதனால், ஐம்புலன்களையும் அடக்காமல் அதனை  அறிந்து வாழும் அறிவினை பெற வேண்டும்.


*** *** ***

நீங்களும் சாமியார் ஆகலாம்.

எளிய முறையில் சாமியார் ஆவது எப்படி என்று விளக்கி இருக்கிறேன்.

இனி, எந்த  பொண்டாட்டி தொல்லையும்  இருக்காது.
என்று நினைப்பவர்கள் சற்று ஒதுங்கிக்கொள்ளவும்.








Saturday, May 18, 2019

உயிர் வலி

உயிர் வலி 

சட்டி சுட்டதடா
கை விட்டதடா

பொருள்:

'மிஸ் அழாதீங்க மிஸ். பாருங்க, எங்களுக்கும் அழுகை அழுகையா வருது'- ஆறாங்கிளாஸ் அமுதா, கணக்கு மிஸ்ஸுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள், 'ஏன்டா, வீட்டுக்கணக்கு போட்டுட்டு வரலைன்னு', சதீஷை அடித்துவிட்டு மனவலியால் கண்ணீர் விட்ட ஆசிரியைக்கு.

வகுப்பறை முழுக்க, தேம்பி அழும் சத்தம். அடிவாங்கிய சதீஸ் மட்டும், 'என்னால் தானே எல்லாரும் அழுகிறார்கள்' என்று மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தான். குழந்தைகள் கண்ணீரால்  அன்பை காட்டினார்கள்.

மனவலியை கொடுக்கும் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

'இன்றைக்கு கவிஞர் திராட்சை ரசத்தை தொடவில்லை' - தோழிகள் கடந்து செல்லும்போது சொன்ன வார்த்தைகள் தேனாய் பாய்ந்தது, மாதாந்திர ஓய்வில் இருந்த, அடிமைப்பெண் லைலாவிற்கு.

இந்த காதலின் மொழியே தனி. வாய் மட்டும் மௌனிக்கும், உடல் முழுதும் பேசும். அவர்கள் அறிய மறுப்பார்கள்  காதலர்களென்று, ஆனால்  சுற்றி உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும், அவர்கள் காதலர்கள்தானென்று.

லைலாவின் வேலை, அந்தப்  பாரசீக கவிஞருக்கு திராட்சை ரசம் ஊற்றி கொடுப்பது. மதுவிற்குள்  காதல் மனதை ஊற்றிக்கொடுத்து விட்டாள், லைலா.  மற்றவர்கள் கொடுத்ததை ஏற்கவில்லை என்பதே, அவள் காதலின் சந்தோசம்.

'காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க்  கொண்டு சேர்க்குமோ?'

காதலின் வலி காதலர்களுக்கு மட்டுமே தெரியும்.

'நைனா.. நைனா.. போவொச்சு  நைனா.. ரா நைனா'- ஐந்து வயது  மகள் கண்மணியின் கண்ணீரின் ஊடே தெரிந்த தன்  உயிரை  கடைசியாக பார்த்து ஐந்து  வருடங்கள் ஓடி விட்டது. கல் உருண்டு வந்து தொடை சதையை சிதைத்த வலியை மீறி மகளின்  கண்ணீர் கிருஷ்ண தேவராயனை கலங்கடித்தது.

போர்க்கைதிகளாக  அருள்மொழி வர்மனால் கொண்டு வரப்பட்ட பல்லாயிரம் வீரர்களில் ஒருவன். இன்று பெருவுடையார் கோவிலை கட்டும் கல் நகர்த்தும் தொழிலாளி. கடவுளை வேரறுக்க வேறென்ன காரணம் வேண்டும். இன்னும் முழுமை பெறாத நிலையில் தஞ்சை பெரிய கோவில் இருப்பது இவர்கள் கொடுத்த சாபம் அல்லாமல், வேறென்ன?

பாச வலி உயிர் வலியை மீறியது, கடவுளையும் எதிர்த்து நிற்கும்.

'மேல வரைக்கும் போனா ஆயிரத்து ஐநூறு, ஒரு தல சுமைக்கு'- தலை சுமையை இறக்கி வைத்து, சற்று ஓய்வெடுத்தவன் சொல்லிக்கொண்டிருந்தான், தானும் இதை கூலித்தொழிலாக செய்யலாம் என்று கேட்டவனுக்கு.

குறைந்த பட்சம், அறுபது கிலோ எடையுள்ள தலை சுமை, காலில் சேப்டி பின் குத்திய ஹவாய் சப்பல். படிகளற்ற, வழுக்குப்பாறை பாதை. என்னுடைய அவ்வளவு கால் வலியிலும், இவர்களின் பேச்சு, அந்த தொழிலாளியின்  உடல் வலி பற்றியும், இந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்தையும் நினைத்து கலங்கித்தான் போனது.

பிறவிப்பெருங்கடல் கூட நீந்தி விடலாம்; வீட்டின் தலைவாசலைக்கூட  தாண்ட  முடியாத வாழ்க்கை வலி இந்த விளிம்பு நிலை மக்களுக்கு.

ஏழாவது மலை, கையில் ஊன்று கோலோடு, அடுத்த  அடி  எப்படி வைப்பது என்று தடுமாற வைக்கும் பாதை அது.

'மழைக்காலத்தில் மலை ஏற அனுமதி கிடையாதுங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்ன நெறைய  சனம், செத்துருச்சுங்க மழையில'- அடிவாரத்தில் பக்தர்கள் பேசிக்கொண்டிருந்த செய்தி மனதிலாடியது.

சித்திரை பௌர்ணமி நாட்களில், ஒருவருக்கொருவர் இடைவெளி இல்லாத நெருக்கும் கூட்டம். மேலிருந்து  கால் வழுக்கியோ, தவறியோ விழுந்தால் நேராக இறைவனடிதான். குறைந்தது நாற்பது, ஐம்பது பேரையாவது கீழே இழுத்து சென்று விடும். பெரிய மழை தேவை இல்லை; கொஞ்சம்  தூறலே போதும், வழுக்கி விழுவதற்கு.

முதல் மலை இறங்கும்போது,

 'கொஞ்சம் வயசானவர் சாஞ்சிட்டாருங்க.. கூட வந்தவங்க யாராவது இருந்தா போங்க சீக்கிரம்'

சற்று முன், ஊன்று கோல் தளர்ந்து, ஏற முடியாமல் சென்றவராக இருக்கும் என நினைத்தேன். திரும்பிப்  பார்க்கக்கூட தெம்பில்லை உடம்பில்.

அதே  வாரம்,  செய்திகளில் வெளிநாட்டவர் ஒருவர் மலை ஏறும்போது உயிரிழந்த செய்தி  வந்தது.

உயிரையே பறிக்கும் உயிர் வலி.

கூட்டைத்  திறந்துவிட்டால் அந்த குருவி பறந்து விடும்.

இந்த மாய உலகினை இன்ப மையமாக அனுபவிக்க கிடைத்த ஐந்து இந்திரியங்களும் செயல் நிலை இழந்து, அவைகளை இயக்கும் காமம்  என்னும் சக்தி  விலகும்போது, குருவி பறந்து விடுகிறது.















Friday, May 17, 2019

நீலம்

நீலம் 

வானுக்கும்
கடலுக்கும் 
நீல நிறம் 

பொருள்:

'மூணு வெரல, டீஸ்பூன் மாதிரி பண்ணி, தயிர் சாதத்தை வாயில வச்சா, கடவா பல்லுல சிக்குன முந்திரி சுவையா, மாதுளம் பழம் சுவையா..' - பட்டி மன்ற பேச்சாளரின் குரல் அரங்கத்தை ஆக்கிரமித்தது.

ஐந்தாவது மலையின் இறக்கத்தில், இடது முட்டியில், மின்சாரம் பாய்ந்தது போல்  ஒரு இழுப்பு. இடது கால் ஊன்றி எடுத்து வைக்க முடியவில்லை.

ஒரு கையில் தண்ணீர் பாட்டில்.. இன்னொரு கையில் ஊன்றுகோல்..

இடது காலை முதலில் மெதுவாக வைத்து, ஊன்று கோல் ஊன்றி, அந்த பலத்தில், வலது கால் எடுத்து பக்க வாட்டில் வைத்தால் ஒரு அடி இறங்கலாம்.

அம்மா பட்ட கஷ்டத்திற்கு மலை ஏறுவது  ஒன்றும் பெரிதல்ல  என்ற என்னுடைய வைராக்கியம் முழுவதும் காணாமல் போனது. ஏழாவது மலையில் கண்ட அதிசய தரிசனம் என்னவானதென்றே தெரியவில்லை. இந்த உடலை, அடிவாரம் வரை கொண்டு செல்வதே வாழ்வின் ஒரே லட்சியம் ஆகிப்போனது.

இறையருளாவது மண்ணாங்கட்டியாவது. இனிமேல், வெள்ளியங்கிரி மலை பக்கமே வரக்கூடாது, இது புது வைராக்கியம்.

இருள் மறைந்து, கிழக்கில் செவ்வானம். இனி, கைப்பேசி வெளிச்சம் தேவை இல்லை.

'அண்ணே, நாலாவது மலை வந்துருச்சா?'- காலில்  செருப்பில்லாமல் வந்து கொண்டிருந்தவரின் கேள்வி.

உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. உயிர் எப்பொழுதும்போல், எனக்கென்னவென்று, சிவனே என்று இருக்கிறது. உடலையும், உயிரையும் இணைக்கும் ஆசை மட்டுமே மிச்சம். ஒவ்வொரு அடியும் நரக  வேதனை.

சூரியனின் அரும்புதல்வி இந்த பூமி. எல்லா வளங்களையும் தந்து, தேவர்களும் பொறாமைப்படும், மனித இனம் மகிழ்ந்து  வாழ சுகமான சொர்கம். மனிதன் வாழ மட்டுமே உரிமை கோரலாம். ஒரு சிறு துரும்பைக்கூட இங்கிருந்து தன்னுடன் எடுத்து செல்ல முடியாது.
உடல் இங்கிருந்தே உருவானது, இங்கேயே மறைவதுதான் இயற்கை.

'வலது கை தூக்குறவங்களுக்கு தயிர் சாதம், இடது கை தூக்குறவங்களுக்கு பிரியாணி'- என்று பிரியாணியே சிறந்தது என்ற தன் வாதத்திற்கு வலு சேர்த்துக்கொண்டிருந்தார் எதிரணி பேச்சாளர்.

அன்னமய கோஷமான இந்த உடல், உணவு சார்ந்த இன்பங்களை எப்பொழுதும் முழுமையாக பெற விழைகிறது.

எதற்கு இந்த மனித வாழ்வு? உண்ண மட்டுமா? உடலின்பம் பெற  மட்டுமா?

இறைவனின் பிரதிபிம்பம் மனிதன் என்பது உண்மையானால், இந்த சொர்கத்தில் ஏன் இந்த நரகம்?

கர்ம வினைப்படியே  எல்லாம் நடக்கும்  என்றால், முதல் பிறவியில் எனக்கேது  கர்ம பலன்? தொடரும் பிறவிகளில் மட்டும், நான் கேட்டா எதுவும் கிடைத்தது, கர்மவினை என்னைத்  தொடர.

எல்லாம்  'அவன்'  என்றால், கர்மவினையும் அவனுக்கே  சொந்தம்.

'அண்ணே, நாகராஜண்ணே, அற்புதமாய் கிடைத்த இந்த வாழ்வில் நீ ஆடிய ஆட்டத்திற்கு பலன் வேண்டாமா?. அதாண்ணே இது..'- மின்னல் வெட்டு, மனதில்.

மேகமில்லா நீல நிற வானில் இருந்து சாரல்.

'இந்த சில்வண்டுகள் ரீங்காரம் பண்ணும்போது, இந்த சாரல் வரும். எதனால் என்று தெரியாது'- யாருக்கோ யாரோ சொன்ன பதில்.

மனதிற்குள்ளும் சாரல்.

கண்களும் வேர்க்கும் இந்த வெயிலில், கண்களில் ஒளியாக உயிர் பாய்ச்சிய செய்தி.

என்னே ஒரு பேரன்பு என் மேல்; இறைவா, உன் கருணையே கருணை. என் கருமையம் கொண்ட களங்கத்தை களையவா, இந்த நாடகம், வேதனை.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
                                                                            -திருக்குறள்

கடைசிப்படி (அல்லது முதல் படி) இறங்கியதும், திரும்பி நின்று,
'ஆண்டவா மீண்டும் மீண்டும்  ஏழு மலை ஏறி உன்னைக்காண இந்த உடலில் சக்தி தா'- என்று வேண்டிய என் கண்களில் உச்சி வெயில் வானம், நீல நிறம்..













Friday, May 10, 2019

நானே நானா?

அடி நானே நானா?

நானே நானா?
என்னை நானே
மறந்தேனா?

பொருள்: 

'நெற்றிக்கண் திறப்பினும்  குற்றம் குற்றமே' - என்ற நக்கீரனின் குரல் அல்ல, நக்கீரியின் குரல் என்னை திருமந்திரத்தை மீண்டும் படிக்க வைத்தது.

'அப்பாழுக்கப்பாழ்'- இது சரியான தமிழ் வார்த்தையல்ல என்பது  வாதம்.

'நான் நானில்லை'- என்ற அற்புதமான மின் புத்தகத்தை படித்து விட்டு, எழுதிய என் கருத்தில் இயல்பாக வந்த வார்த்தை.

அகம், புறம் எப்படி மனித வாழ்வில் உள்ளதோ அதற்கு சமமான நிலையில் அடி, முடி என்பது இறை நிலையில் இருப்பதாக அறிகிறோம்.

அகம், அதாவது அடி  என்று எடுத்துக்கொண்டால், மூன்று வகையான பாழ் நிலை உள்ளது.

அப்பாழ், மாயை பாழ், உயிர் பாழ் மற்றும் அமைதி பாழ் என மூன்று வகையாக உள்ளது. நான் என்பதை அறிய முதலில் இந்த முப்பாழை கடக்க வேண்டும்.


மாயப்பாழ் சீவன் வியோமோப்பாழ் மன்பரன்
சேயமுப்பாழ் எனச் சிவசக்தியில்  சீவன்
ஆயவியாப்தம் எனும் முப்பாழாம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல் முடிவாகுமே.
                                                                      -திருமந்திரம்

புறம், அதாவது முடி என்று எடுத்துக்கொண்டால், பரந்த வெளி மட்டுமே. அது நம் சிரசில் ஆரம்பித்து எல்லை இல்லாமல் பரவெளி தாண்டி, பாழ் வெளி நீண்டு சென்று கொண்டே உள்ளது.

அப்பாழ், அரிதினும் அரிதானது. பெரிதினும் பெரிதான பரம்பொருள்.

துரியம் அடங்கிய சொல்அறும் பாழை
அரிய பரம்பரம் என்பார்கள் ஆதர்
அரிய பரம்பரம்  என்றே துதிக்கும்
அருநிலம்  என்பதை யார் அறிவாரே.
                                                      -திருமந்திரம்

இதைத்தான் என்னை சொல்ல வைத்திருக்கிறது, 'அப்பாழுக்காப்பாழ்' என்று.

என்னுள் இருக்கும் 'நான் நானில்லை'; எல்லாமே நான்.
அணுவும் நான், பேரண்டமும் நான்.

மிக்க நன்றி அம்மா!

மனம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்!





Saturday, May 4, 2019

உறைவிடம்

உறைவிடம் 

நான்
ஏதுமறியாதவன்
ஞானத்தங்கமே

பொருள்:

ஆற்றங்கரை என்றார்கள் தேடினேன், அகப்படவில்லை.
கோவில் கருவறையில் இருக்கலாமென்றார், அங்குமில்லை.
சிகரங்களில் அலைந்து பார்த்தேன், சிக்கவில்லை அங்கும்.

கண்மூடி மௌனித்தால், சிரசில் வந்து நின்றிடுமாம்.

மௌனத்தில், மூச்சுக்காற்றில், ஓம் என்ற  பிரணவம் இருக்கட்டும்.

"புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட  வுள்ளே நின்மல மாக்கில்
உருப்புச் சிவக்கும் உரோமங் கருக்கும்
புறப்பட்டு போகான் புரி சடையோனே"
                                                                  -திருமந்திரம்

மௌனத்தில், 'நமக்ஷிவய'  என்னும் பஞ்சாக்ஷரம், சஹஸ்ரஹாரத்திலிருந்து, மூலாதாரம் செல்லும் வழிமொழி இருக்கட்டும்.

"மூவெழுத்தும் ஈரெழுத்துமாகி நின்ற
மூலமதை யறிந்துரைப்போன் குருவுமாகும்
ஊவெழுத்துக் குள்ளே தானிருக்கு தப்பா
உணர்வதுவே கண்டறிந்தோ னவனே  யாசான்"
                                                                      -அகஸ்தியர்

இறைவனையும், உயிரையும் இணைத்து காட்டும் உணர்வுப்பாலம், மௌனம். பிரணவமும், பஞ்சாக்ஷரமும் கலந்த ஒலி அலைகள் காட்டிடுமாம் அந்த இறை நிலையை.

'ஓம் நமக்ஷிவய'


  • Tamil Amav உண்மை ..! 
    மௌனமே ...!
    மனத்தின் மௌனமே ...!

    மந்திரங்கள் உரத்து ஒலிக்கையிலும் மௌனமே ....! 
    மனத்தில் மௌனமே ..!
    ஓயாமல் ஓதிய மந்திரத்தின் உதவியால் ஊதி அணைக்கப்பட்டது இரைச்சலோடு கொழுந்துவிட்டு கிளம்பிய எண்ணங்கள் ...
    உதட்டுவழி வெளிவந்த அல்லது வராத மந்திரத்தால் மன ஒலி ஒடுங்கியது ...
    மௌனம் தான்
    மனத்தின் மௌனம் தான்
    மோன நிலை 
    இறைநிலை 
    இன்ப நிலை 
    இறை மந்திரம் ஈந்த பேரின்பநிலை ... 
    மனோரூபி மனிதர்கள் 
    மந்திரரூபியாக மலர்கையில் 
    மண்ணகம் இறைமகத்துவமடைகிறது ..!
    ஓம் நமச்சிவாய ..!

நிறை குடம்.. வேறென்ன சொல்ல!

  

Thursday, May 2, 2019

சந்தி

சந்தி 

சந்திப்போமா
இன்று
சந்திப்போமா



கொதிக்க, கொதிக்க சுக்கு காப்பி.. சிறு துளி நாக்கை சுட்டது.

ஏற்றத்தில் உள்ள அடர்ந்த வனம் தாண்டி, சற்று சமவெளி பாதை ஆரம்பிக்கும் சந்திப்பு. வாடிக்கையாளர் அமர்வதற்கு, இரண்டு மூங்கில்களை இணைத்த இருக்கை.

அதிகாலை 1 மணி.

மலை ஏறிய வியர்வை ஒருபுறம். குளிர் காற்று மறுபுறம்.. உடலை ஜில்லிக்க வைக்கும்  குளிர்ப்பிரதேசம்.

'சூடான சுக்கு காப்பி.. சுக்கு காப்பி'-  கடைக்காரரின் அழைப்பு ஒன்றிரண்டு மலை எறிகளை நிற்க வைக்கிறது.

'இருபது ருபாய்'- விலை என்னவென்று கேட்டவருக்கு பதில் சொல்லுகிறார், மனைவி காப்பி தயாரிக்க, வாடிக்கையாளர்களை கவனித்துக்கொண்டிருந்த கடை முதலாளி. இரண்டு பேர் கண்களிலும் தூக்கமிருப்பது தெளிவாக தெரிகிறது.

என்ன பெரிதாக வியாபாரம் செய்து விட முடியும். மீறி, மீறிப்போனால் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே கடை நடத்த முடியும். பகலில் சுக்கு காப்பி தேவை இருக்காது. போட்ட பணம் எடுக்க முடியுமா போன்ற கேள்விகள், கணக்கர்  வேலையை  மனம் கணித்துப் பார்க்கிறது.

காப்பி சுவைக்குள்  மனம் செல்கிறது. 

'நான்காவது மலையும், ஐந்தாவது மலையும் சந்திக்கிறது இங்கே'- காதில் விழுந்த இந்த செய்தியில் சந்தியில் ஏனோ மனம் ஒட்டிக்கொண்டது.

பகலும், இரவும் எங்கே சந்திக்கும்.. இரவு தன் பணி முடித்து, இரவும், பகலும் எங்கே சந்திக்கும்.

பௌர்ணமி நிலவு மறைந்து கருக்கல்  வருவதற்குள் ஏழாவது மலை ஏறி அந்த வெள்ளியங்கிரி நாதன் சந்நிதி அடைந்து விட வேண்டும். கருக்கல்,  அமாவாசை இரவை விட இருட்டு அடர்த்தியாக இருக்கும்.

விழிப்பும், உறக்கமும் எங்கே சந்திக்கும்.. உறக்கம் முடித்து விழிப்பை எங்கே சந்திக்கும்..

உள்ளிழுக்கும்  மூச்சுக்காற்றும், வெளி விடும் மூச்சுக்காற்றும் எங்கே சந்திக்கும்..

நல்ல இரத்தமும், கரி ஏறிய இரத்தமும் எங்கே சந்திக்கும்..

விழிப்பும், உறக்கமும் சந்திக்கும் மாத்திரை அளவு நேரத்திற்குள்,  எண்ணங்கள் ஒரு புது உலகை படைத்து, நம்மை அவ்வுலகத்துடன் இணைத்ததை உணர்ந்திருப்போம். ஐம்புலன்கள் ஓய்வு பெரும் நேரமிது.

அனால், ஐம்புலன்களும் விழிப்பு நிலையில், தன்னிலை கரைந்து, நம் உயிர்,  இறைமையை சந்தி செய்யும்  காலம், மோட்ச நிலை.

அதுவே பிரம்மானந்தம்..

சித்தவேதம் விளக்குகிறது, மோட்சத்தை.

சந்தியில் உள்ளது சகலமும்.

[கடைசியில், என்னையும் மறை பொருளில் எழுத வைத்து விட்டாயே, வெள்ளியங்கிரி ஆண்டவா!]

Tamil Amav முக்தி நிலை என்பது 
உண்மையில் எய்த வேண்டிய ஒன்றா என்று பலமுமுறை எண்ணிப்பார்த்ததுண்டு ...... 
எனக்கென்னவோ இல்லை என்று தான் பதில் வரும் ..... 

பிரபஞ்சம் தொடர்ந்து விளக்கியது...... 
மனிதர்களின் , பிற உயிர்களின் , சடத்தின் இயல்பு நிலை முக்தி நிலை .... 
சடம் அதிலிருந்து வழுவுவதில்லை.....
பிறவுயிர்கள் உணர்வால் அந்நிலையிலிருந்து சற்று ததும்புகின்றன.... இருப்பினும் தள்ளிப்போவதில்லை .....
அந்தோ பரிதாபம் மானுடம் 
இயல்பு நிலை தனக்கு முக்தி நிலை என்பதை மறந்துவிட்டது ....
உண்மையில் மாயை வலுவானதுதான் ......
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவன் யாரென அவனுக்கே நினைவு வாரா வகையில் நொடிபொழுது சோராமல் அவனை மூல நிலையிலிலிருந்து தான் வேறு பட்டவன் என்று எண்ணி அதனை தேடும் அளவிற்கு கொணர்ந்துவிட்டது.
யாம் தேட , நாட , சந்திக்க , அடைய 
முயற்சிப்பது நம்மிடமே இருக்கும் ஒன்றை..... 
இயல்பு நிலை , நழுவாமல் இருக்க தொடர்ச்சியாக மேற்கொள்ளும் முயற்சியே முக்தி நிலைக்கான யுக்தி 
என்று பிரபஞ்ச சக்தி பலநேரம் எனக்கு 
புத்தி சொன்னதுண்டு ....
இரண்டு இருந்தால் சந்திக்கும் 
ஒன்றுதான் எனில் சந்திப்பு எங்கனம் சாத்தியம்...!
நன்றியுடன் 
முனைவர் பச்சைவதி



நம் இயல்பு நிலை 'ஆனந்த நிலை'. புலன்களின் தொடர் போராட்டத்தில் இருக்கும் மனம் ஆனந்த நிலையை அறவே  இழந்து, இயல்பு நிலையை சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் முடிந்து விடுகிறது.

முக்தி, மோக்ஷம் என்பதெல்லாம், நம்மைப்போன்றோருக்கு,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

நம் வாழ்க்கை முறையும், இயல்பு நிலையும் இரண்டாகி ஒன்றை ஒன்று சந்திக்காமல், ஒன்றாக ஒன்றி இருப்பதே நாம் அடையக்கூடிய முக்தி.

சரிதானா?

மிக்க நன்றி, ஆழ்ந்த பொருட்செறிவு மிக்க கருத்தை வழங்கியமைக்கு.



















Friday, April 26, 2019

ஊறுகாய்

ஊறுகாய்

ஊறுகாய்
வினைத்தொகை

பொருள்:

முக்காலத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஊறுகாயே, அந்த ஆதிபகவன்.
ஊறிய, ஊறும். ஊறப்போகும் காயல்லவா ஊறுகாய். எனவே, முக்காலமும் தன்னுள் ஏற்றிருக்கும் இறைவனே ஊறுகாய்.

மறை நூல்களில், மறைபொருளாய் உள்ள  தத்துவத்தை 'தத்தக்கா பித்தக்கா' என பிள்ளை அறிவு கொண்டு, ஊறுகாய் ஆக்கி, அவரவர் ஆன்மீக, நாத்திக நாட்டத்திற்கு  ஏற்ப தொட்டுக்கொண்டிருக்கிறோம்.

மறைபொருள்
வினைத்தொகை

இயற்கையில் அல்லது  இறைமையில் ,
மறைந்து நிற்கும் உண்மைகளை விளக்கவும் [இறந்த காலம்]
மறைந்து நிற்கும் உண்மைகளை அறியவும் [நிகழ் காலம்]
மறைந்து நிற்கும் உண்மைகளை உணரவும் [எதிர் காலம்]
மறை நூல்கள் உதவுகின்றது.

'செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே'

காதிலே தேன் ஊற்றுவதா? என்று வெகுண்டெழும் நாத்திகம்.
தேன்சுவை போன்றதின்பம்  என மகிழ்வது ஆத்திகம்.

மறை என்றால்  – சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் (SYMBOLIC LANGUAGE, CODED LANGUAGE, SECRET LANGUAGE) நவில்வது என்று பொருள்; மறை = மறைத்துச் சொல்லுதல். 
மறை என்றால் – உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் (OMNIPRESENT, OMNISCIENT, OMNIPOTENT FORCE) சொல்லும் மந்திரங்கள்.


கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...