Friday, May 17, 2019

நீலம்

நீலம் 

வானுக்கும்
கடலுக்கும் 
நீல நிறம் 

பொருள்:

'மூணு வெரல, டீஸ்பூன் மாதிரி பண்ணி, தயிர் சாதத்தை வாயில வச்சா, கடவா பல்லுல சிக்குன முந்திரி சுவையா, மாதுளம் பழம் சுவையா..' - பட்டி மன்ற பேச்சாளரின் குரல் அரங்கத்தை ஆக்கிரமித்தது.

ஐந்தாவது மலையின் இறக்கத்தில், இடது முட்டியில், மின்சாரம் பாய்ந்தது போல்  ஒரு இழுப்பு. இடது கால் ஊன்றி எடுத்து வைக்க முடியவில்லை.

ஒரு கையில் தண்ணீர் பாட்டில்.. இன்னொரு கையில் ஊன்றுகோல்..

இடது காலை முதலில் மெதுவாக வைத்து, ஊன்று கோல் ஊன்றி, அந்த பலத்தில், வலது கால் எடுத்து பக்க வாட்டில் வைத்தால் ஒரு அடி இறங்கலாம்.

அம்மா பட்ட கஷ்டத்திற்கு மலை ஏறுவது  ஒன்றும் பெரிதல்ல  என்ற என்னுடைய வைராக்கியம் முழுவதும் காணாமல் போனது. ஏழாவது மலையில் கண்ட அதிசய தரிசனம் என்னவானதென்றே தெரியவில்லை. இந்த உடலை, அடிவாரம் வரை கொண்டு செல்வதே வாழ்வின் ஒரே லட்சியம் ஆகிப்போனது.

இறையருளாவது மண்ணாங்கட்டியாவது. இனிமேல், வெள்ளியங்கிரி மலை பக்கமே வரக்கூடாது, இது புது வைராக்கியம்.

இருள் மறைந்து, கிழக்கில் செவ்வானம். இனி, கைப்பேசி வெளிச்சம் தேவை இல்லை.

'அண்ணே, நாலாவது மலை வந்துருச்சா?'- காலில்  செருப்பில்லாமல் வந்து கொண்டிருந்தவரின் கேள்வி.

உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. உயிர் எப்பொழுதும்போல், எனக்கென்னவென்று, சிவனே என்று இருக்கிறது. உடலையும், உயிரையும் இணைக்கும் ஆசை மட்டுமே மிச்சம். ஒவ்வொரு அடியும் நரக  வேதனை.

சூரியனின் அரும்புதல்வி இந்த பூமி. எல்லா வளங்களையும் தந்து, தேவர்களும் பொறாமைப்படும், மனித இனம் மகிழ்ந்து  வாழ சுகமான சொர்கம். மனிதன் வாழ மட்டுமே உரிமை கோரலாம். ஒரு சிறு துரும்பைக்கூட இங்கிருந்து தன்னுடன் எடுத்து செல்ல முடியாது.
உடல் இங்கிருந்தே உருவானது, இங்கேயே மறைவதுதான் இயற்கை.

'வலது கை தூக்குறவங்களுக்கு தயிர் சாதம், இடது கை தூக்குறவங்களுக்கு பிரியாணி'- என்று பிரியாணியே சிறந்தது என்ற தன் வாதத்திற்கு வலு சேர்த்துக்கொண்டிருந்தார் எதிரணி பேச்சாளர்.

அன்னமய கோஷமான இந்த உடல், உணவு சார்ந்த இன்பங்களை எப்பொழுதும் முழுமையாக பெற விழைகிறது.

எதற்கு இந்த மனித வாழ்வு? உண்ண மட்டுமா? உடலின்பம் பெற  மட்டுமா?

இறைவனின் பிரதிபிம்பம் மனிதன் என்பது உண்மையானால், இந்த சொர்கத்தில் ஏன் இந்த நரகம்?

கர்ம வினைப்படியே  எல்லாம் நடக்கும்  என்றால், முதல் பிறவியில் எனக்கேது  கர்ம பலன்? தொடரும் பிறவிகளில் மட்டும், நான் கேட்டா எதுவும் கிடைத்தது, கர்மவினை என்னைத்  தொடர.

எல்லாம்  'அவன்'  என்றால், கர்மவினையும் அவனுக்கே  சொந்தம்.

'அண்ணே, நாகராஜண்ணே, அற்புதமாய் கிடைத்த இந்த வாழ்வில் நீ ஆடிய ஆட்டத்திற்கு பலன் வேண்டாமா?. அதாண்ணே இது..'- மின்னல் வெட்டு, மனதில்.

மேகமில்லா நீல நிற வானில் இருந்து சாரல்.

'இந்த சில்வண்டுகள் ரீங்காரம் பண்ணும்போது, இந்த சாரல் வரும். எதனால் என்று தெரியாது'- யாருக்கோ யாரோ சொன்ன பதில்.

மனதிற்குள்ளும் சாரல்.

கண்களும் வேர்க்கும் இந்த வெயிலில், கண்களில் ஒளியாக உயிர் பாய்ச்சிய செய்தி.

என்னே ஒரு பேரன்பு என் மேல்; இறைவா, உன் கருணையே கருணை. என் கருமையம் கொண்ட களங்கத்தை களையவா, இந்த நாடகம், வேதனை.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
                                                                            -திருக்குறள்

கடைசிப்படி (அல்லது முதல் படி) இறங்கியதும், திரும்பி நின்று,
'ஆண்டவா மீண்டும் மீண்டும்  ஏழு மலை ஏறி உன்னைக்காண இந்த உடலில் சக்தி தா'- என்று வேண்டிய என் கண்களில் உச்சி வெயில் வானம், நீல நிறம்..













No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...