Sunday, April 14, 2024

காலம்

காலம்  


காலம் 

கால தேவன் ஒரு மாயாவி.

நீ நிஜம் என்று நினைக்கும் ஒவ்வொரு வினாடியும் காலதேவனால்  கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. வாழ்வில் காலத்தால் கிடைக்கும்  அனுபவம் அனைத்துமே ஒரு நாள்  ஒன்றுமே இல்லாமல் போய்விடக்கூடிய மாயை தான்.

நேற்று என்பது திரும்ப வராது. நாளை என்பது  வரவே வராது.

''நாளை நான் புதிய உடை உடுத்தினால்  சந்தோஷமாக இருப்பேன். அடுத்த வாரம் சம்பளம் போட்டால் சந்தோசம்தான். அவனிடமிருந்து சம்மதித்து  பதில் வந்தால் மனம் குதூகலிக்கும். இந்தப் பரீட்சையில் தேர்வாகிவிட்டால் ஆயுளுக்கும் சந்தோசம்.'' - இப்படியாக ஆளுக்கொரு சந்தோஷ எதிர்பார்ப்புகள்.

நீங்கள் கேட்டது எல்லாம் நடந்ததுதானே. நீங்கள் சொன்ன சந்தோசம் மட்டும் எங்கே போனது? வந்த வேகத்தில் காணாமல் போனது எங்கே?

உங்கள் சந்தோசத்தை கரைத்தது யார்? வேறு யாருமல்ல  காலம்.

காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.

சந்தோஷத்திற்கான   காரணிகளை அடுத்தவர் மேலோ அல்லது   நாளைக்கு, நாளைக்கு  என்று எதிர்பார்த்து காத்திருக்கும் உங்களுக்கு அந்த  'நாளை' வராமலேகூட  போய்விடக் கூடும்.

நீ பிறந்ததும்  துடிக்க ஆரம்பிக்கும்  காலக்கடிகாரம் ஒரே ஒரு முறை நிற்கும்.

அப்பொழுது உங்கள் பெயர் போய் விடும். இந்த உடல்தான் நான் என்றிருந்த நிலை மாறிவிடும். ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்து அழுவார்கள். உயிர் நீங்கிய அடுத்த கணமே  உடலை  பிணம் என்று சொல்வார்கள். மேளமடித்து, ஆட்டமாடி  சுடுகாட்டிற்கு கொண்டு சென்று உடலை எரித்துவிடுவார்கள். ஆற்றங்கரையில் இறங்கி நீரில் மூழ்கி எழுவார்கள். நீ இந்த மண்ணில் அவர்களுடன் இருந்த நினைவையும் நீரோடு கரைத்துவிடுவார்கள். 

திருமந்திரம் 

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்  
பேரினை நீக்கிப்  பிணம்என்று பேரிட்டுச் 
சூரைஅம் காட்டிடைக்  கொண்டுபோய்ச்  சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப்பு  அழிந்தார்களே.

நேற்றிருப்பார் இன்றில்லை. இன்றிருப்பார் நாளையில்லை.

காலம்தானே இங்கே சூத்திரதாரி.

காலத்தை கையாள மனிதன் அறிந்து விட்டால்?

காலத்தின் மாயவலையில் சிக்காமல் தப்பி விடலாம்தானே!

பதஞ்சலி முனிவர் தன் யோக சூத்திரத்தில், அஷ்டாங்க யோகத்தினால் சித்திகளை அடையும் ஒருவனால் முக்காலமும் அறிய முடியும் என்கிறார். 

அறியலாம், ஆனால் நிறுத்த முடியாது.

ஓடிக்கொண்டிருக்கும் காலதேவனின் தேர் சக்கரத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

மெய்கண்ட சாத்திரத்தில், முதன்மையான முப்பத்தாறு தத்துவங்களில், ஏழு வித்தியா தத்துவங்கள். வித்தியா தத்துவங்கள்,  ஆன்மா கட்டுண்டிருக்கும்  மாயையை விளக்கக்கூடியது. 

வித்தியா தத்துவங்களில் முதன்மையான மாயா தத்துவம், காலம்.

காலம் ஒரு மாயை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் உண்டோ?

*** *** *** *** *** 











Tuesday, April 9, 2024

உணவே உயிர்

உணவே உயிர் 


சமீப கால இளவயதினரின் மரணங்கள் சமுதாயத்திற்கு பெரிய சவாலை விட்டு செல்கிறது. மரணங்களுக்கான  காரணம் என்னவென்று  தெளிவாக யாராலும் சொல்ல முடியவில்லை.  அவர்களின் குடும்பங்களில் இந்த மரணங்கள் விட்டு செல்லும் ரணங்கள் ஆற்றமுடியாதவையாக உள்ளது. பெருந்தொற்று விட்டு சென்ற காயங்களே இன்னும் ஆறாத நிலையில், அகால மரணங்கள் நிறைய குடும்பங்களின் வாழ்க்கையை  கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

கடந்த  வாரம், நடுத்தர வயதுடைய பெண், தன்னுடைய பதினோறாம் வகுப்பு படிக்கும் மகள், பத்தாம் வகுப்பு படிக்கும் மகனுடன் சென்னையிலிருந்து கோவை வந்து ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். கடன் தொல்லையால் கணவன் குடும்பத்தை விட்டு சென்றதால், அபலையான பெண்ணிற்கு இரண்டு குழந்தைகளுடன் வாழ வழி தெரியவில்லை. கடன் தொல்லை  வேறு. 

என்னுடைய சிந்தனை எல்லாம், ரயிலில் பயணம் செய்யும்போது யாருமே இவர்களுடன் பேசவில்லையா? பசித்திருக்கும் மூவரின் நிலை புரியவில்லையா? என்பதுதான். எட்டு மணி நேர பயணத்தில் இவர்களை சுற்றி எத்தனை பேர் பயணித்திருப்பார்கள், உண்டிருப்பார்கள்.

பசியும், மரணமும்  பொதுவானது. ஜாதி, மதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லை. ஆண்டிக்கும் பசிக்கும் அரசனுக்கும் பசிக்கும். பேதைக்கும்  மரணமுண்டு ஞானிக்கும் மரணமுண்டு.

பசி ஆரம்பம்; மரணம் முடிவு.

பசி வேளையில், அனைவருடன் பகிர்ந்துண்ணுங்கள். வேண்டியவர், வேண்டாதவர்  என்று பிரித்து பார்க்க  வேண்டாம். பசித்து களைத்து வருபவர்களை பார்த்து அவர்கள் பசியாற உணவளித்து உண்ணுங்கள். மீதமான சமைத்த பொருட்களை வைத்திருந்து மீண்டும் மீண்டும்  உண்ணாதீர்கள். உணவில் நாட்டம் இருப்பது இயற்கை. அதற்காக பொறுமையாக சுவைத்து உண்ணாமல் அவசர அவசரமாக உண்ணாதீர்கள். காகத்தை பாருங்கள், உறவுகளை அழைத்து உண்ணுகிறது, அவ்வாறே நீங்களும் உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள். பசித்த பின், உண்ணும் நேரம் பார்த்து உண்ணுங்கள்.

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் 
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின் 
வேட்கையுடையீர் விரைந் தொல்லை உண்ணன்மின் 
காக்கை  கரைந்துண்ணும் காலம் அறிமினே.
 

யாரோ ஒருவர்,  அவர்களுடன் பேசி  கொஞ்சம் உணவளித்து இருந்தால் அவர்கள் கோவையில் எப்படியாவது உயிர் பிழைத்திருக்கலாம்.

இறை நம்பிக்கையுடன்,  கடவுளின் படம் வைத்து வணங்கும், கோயில்களுக்கு எவ்வளவோ செய்கிறோம். அவை எதுவுமே இந்த மாதிரி நடமாடும் கோயில்களான, மனிதர்களுக்கு சென்றடைவதில்லை. ஆனால், வாழ வழி தெரியாமல் மயங்கி நிற்கும் நிராதரவான மனிதர்களுக்கு  கொடுக்கும் ஆதரவும், பொருளும் நேரடியாக இறைவனையே  சென்றடைகிறது.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

காலத்தால் அழியாத அற வாழ்வு வாழ வழி வகை காட்டி சென்ற திருமூலர் போன்ற சித்தர் பெருமக்களை போற்றி வணங்கி அவர்கள் காட்டிய வழியில் நடமாடும் கோயில்களான சக மனிதர்களுக்கு உதவி வாழ்வோம்.

*** *** *** *** ***



Thursday, January 25, 2024

இறைவன் இருக்கின்றானா?

இறைவன் இருக்கின்றானா?  


பிராண பிரதிஷ்டா.

உயிர்களை  படைத்த இறைவனுக்கு உயிர் கொடுக்கும்(?) விழா பிராண பிரதிஷ்டா. 

அயோத்தியில் இறைவனை குடி அமர்த்தி விட்டார்கள்.  இனி அவர் அங்கே இவர்கள் கொடுக்கும் உணவினை உண்டு  குடித்தனம் செய்ய வேண்டியதுதான். 

வால்மீகியின் கதாநாயகன் ஒரு ஸ்த்ரீலோலன். புலால் உண்பவன். அரச குணமிக்கவன்.  வடமொழி காவியத்தை  தமிழாக்கிய கம்பனின் கதாநாயகன் ஒரு ஏகபத்தினி விரதன். புலால் மறுப்பவன், அரசனை மிஞ்சிய தேவ புருஷன்.

ஆச்சர்யத்தை பார்த்தீர்களா, கெட்டவன் என்று சொன்ன காவிய நாயகனை  வடமாநில மக்கள் கொண்டாடுகிறார்கள்.நல்லவன் என்று சொல்லிய நாயகனை  தென் மாநில மக்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

ராமனை விட்டுத்தள்ளுவோம். மனிதனாய் பிறப்பெடுத்த எவருமே  இறைவனில்லை என்பதே நம் கோட்பாடு. அது கண்ணனானாலும், ஏசுவானாலும் அல்லது முஹம்மது நபி  ஆனாலும் சரிதான்.

இறைவன் உண்டு என்று சொல்லும்போதே அதன் மறுபக்கமாக இல்லை என்ற பிரதிபலிப்பு  உருவாகிவிடுகிறது. இல்லை என்று சொல்லும்போது உண்டு என்ற பொருள் உருவாகிவிடுகிறது. எனவே, இறைவன் இருக்கின்றானா, இல்லையா என்ற வாதம் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. உண்மையில் இந்த  இரண்டு நிலையையும் தவிர்த்து ஆனந்தமயமாக  வாழும்  வழி அறிந்தால், இறைவன் உன்னுடன் அந்த இன்பத்தினூடே  இருப்பான்.


திருக்களிற்றுப்படியார்

உண்டெனில் உண்டாகும் இல்லாமை; இல்லைஎனில்
உண்டாகும்; ஆனமையின் ஓரிரண்டாம் - உண்டு இல்லை
என்னும் இவைதவிர்ந்த இன்பத்தை எய்தும்வகை
உன்னில் அவன் உன்னுடனே ஆம். 36

இறைவன் இருக்கின்றான் எனில் அவன் எங்கே வாழ்கிறான்?  உன்னுடைய உள்ளம்தானே அவனுடைய வீடு, வேறு ஏதாவது இடத்தில் அவன் வசிக்கிறான் என்று சொல்ல முடியுமா? அவனுடைய வீடு உன்னுடைய உள்ளம்தான் என்று தெரிந்த பின்னரும் அவனை வெளியே  வசிக்கும் ஆளாக  எண்ணி அவனைத் தேடுகின்றாயே?

திருமந்திரம் - 2650 

இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை 
அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்? 
அவனுக்கு அவன்இல்லம் என்றென்று அறிந்தும் 
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.


*** *** ***


Thursday, January 4, 2024

ஆசை அலைகள் ஓய்வதில்லை

ஆசை அலைகள் ஓய்வதில்லை



கருஞ்சிவப்பில் கீழ் வானம். 

இரவும் பகலும் கைகுலுக்கிக்கொள்ளும்  அதிகாலை வேளை.   

சிட்னியிலிருந்து அதிகாலை புறப்பட்டு மெல்போர்ன் செல்லும் விமானத்தில் இருந்து பார்த்தபோது, மேகங்கள் செம்பஞ்சுப்  பொதிகளாய்  தேவர்கள் உறங்கும் பள்ளியறை மெத்தையைப்போல் தோற்றமளித்தது. 

கதிரவனின் கதிர்கள் பாயாத இடங்களில் இன்னும் கருமை. நேரம் ஆக ஆக, செம்பஞ்சுப்பொதிகள் எல்லாம் வெண்பஞ்சு மெத்தைகளாக மாறியது. வானத்தில்  மேலே மேலே  போனாலும்,  மேகத்திற்கும்  ஓர் எல்லையுண்டு என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

மனித உடலில் இல்லாத தேவர்கள் பள்ளி கொள்ளலாம். உடலெடுத்த எவரும் மேகத்தை மெத்தையாக்கக்கூடுமா? நான்  அதன்மேல் படுத்தால் என்ன ஆகும்? சின்ன ஆசைதான். சிதறி சின்னாபின்னமாகிவிட மாட்டேனா?

ஆசைதானே அத்தனைத் துன்பங்களுக்கும் விளை நிலம். 

ஆனால், இந்த ஆசை எங்கிருந்து பிறக்கிறது?

ஆசையைப்பற்றி அறிய நாம் சுத்த மாயைக்குள் செல்ல வேண்டியதிருக்கிறது. ஆதி அந்தமற்ற இறைவன் தோற்றத்தின் போதே, இறை அம்சமாக  உயிரினங்களும் தோன்றியது. இறைவனை பற்றாத  இச்சா சக்தி அல்லது ஆசை உயிரிகளின் அடிப்படைக் குணம் ஆகியது.

திருமந்திரம் - 115

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் 
பதியைப் போல்பசு பாசம் அநாதி 

உயிரும் பாசமும் பின்னிப்பிணைந்தவை. உயிர்கள் ஆதி இறைவனை அணுகாத அளவிற்கு இந்த பாசம் என்னும் உலக ஆசை பார்த்துக்கொள்ளும். ஒரு வேளை, பற்றறுத்து தவத்தின் மூலம் அணுக நேர்ந்தால், இறைவனோடு ஒன்றாக கலந்து விடும்.

பதியை சென்றணு காப்பசு பாசம் 
பதியணு கிற்பசு பாசம் நிலாவே.

ஆசைகள் மனிதனிடம் மூன்று முக்கிய நிலைகள் கொண்டுள்ளது. இதனை ஏடணை என்னும் சித்தர்கள், தாரவேடணை, புத்திர்வேடணை மற்றும் அர்த்தவேடணை  என்று மூன்று பகுதிகளாக சொல்கிறார்கள்.

தாரவேடணை என்பது பெண்ணாசை, ஆணாசை அல்லது உடல்மேல் ஏற்படும் ஆசை.

புத்திர்வேடணை என்பது குழந்தைகள், குடும்பம், உறவினர் மீது ஏற்படும் ஆசை.

உலக பொருட்கள், புகழ், அதிகாரம் போன்றவற்றின் மீது ஏற்படும் ஈர்ப்பு அர்த்தவேடணை

எப்படி இந்த ஆசைகளில் இருந்து விடுபடுவது? சாதாரண காரியம் அல்லவே இந்த மூன்று ஆசைகளையும்  உதறுவது.

திருவள்ளுவர் அதற்கு ஒரு வழி சொல்கிறார்.

திருக்குறள் - 350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்  
பற்றுக பற்று விடற்கு. 

இச்சா சக்தி இல்லாதவன் இறைவன், அதாவது எந்த பற்றும் இல்லாதவன். அவனுடன் சேரும் ஆசையை பிடித்துக்கொள்ளுங்கள். அதுவே, எல்லா ஆசைகளையும் உதறுவதற்கு உறுதுணையாக அமையும்.

ஒரு படி மேலே சென்று திருமூலர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

திருமந்திரம் - 2615

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் 
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் 
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள் 
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

ஆசையே படாதீர்கள். இறைவனோடு சேரவேண்டுமென்றுகூட ஆசைப்படாதீர்கள். ஆசையே துன்பத்தின் விளைநிலம். ஆசையை விடுவதே இன்பத்தின் ஆரம்பம்.

ஆசையற்றவன் ஆதி இறைவன். ஆசையற்றிருந்தால் நீயும் இறைவனே!

ஆசையின் அலைகள் கடலலைகளை விட அதிக வலிமை பெற்றிருக்கிறது.

ஆசை அலைகள் என்றும் ஓய்வதில்லை.

*** *** ***








Thursday, December 28, 2023

பூவா? தலையா?

பூவா? தலையா? 




'பூவா? தலையா?'

பூவும் விழலாம்.. தலையும் விழலாம்..

ஒரு முறை சுண்டினால் இரண்டு வாய்ப்பு.  பூ அல்லது தலை.

இரண்டு முறை சுண்டினால் வாய்ப்பு நான்கு.

இப்படியே தொண்ணூற்றாறு முறை சுண்டினால் 79228 பில்லியன் வாய்ப்புகள்.

உலகத்தின் மக்கள்தொகை சுமார் 7.9 பில்லியன்.

ஒரு மனித உயிரியின்  குணம் பத்தாயிரம்வரை  மாற வாய்ப்பு.

[மேற்படி கணக்கில் சந்தேகம் இருப்பவர்கள் Chat GPT-யிடம் கேட்டு சரி பார்த்துக்  கொள்ளுங்கள்.]

இங்கே முக்கிய காரணியாக நாம்  பார்ப்பது 96. இந்த எண்ணிக்கை மனித உயிரியின் வாழ்க்கை தத்துவமாக சித்தர்கள் அறிந்து சொல்லி இருப்பது.

மண்ணில் வாழும் சூழலில் உயிர்களுக்கு ஏற்படும் அனுபவப்பதிவுகள், இந்த 96 தத்துவங்களின் ஏற்ற இறக்கங்களினால், அந்த உயிரி தனித்தன்மை, தனிக்குணம்  பெற்று விடுகிறது.

பெற்றவரின் குணம் பிள்ளைக்கில்லை; ஓர் வயிற்றில் பிறந்தாலும் பிள்ளைகளின் குணம் ஒன்றுக்கொன்று  ஒன்றுவதில்லை; ஒருவரைப்போல் இன்னொருவர் இவ்வுலகில் இல்லை.

ஆதி இறைவனைப்போல் உயிரிகள் ஆதியில் சுத்த மாயையில் தோன்றி இருந்தாலும், 96 தத்துவங்களைக்கொண்டு வாழ்வதால், வாழ்வின் அனுபவம் ஒவ்வொருவரையும் ஒரு தனித்தீவாக்கி விடுகிறது. 

சுத்த மாயையில் உதிக்கும் உயிர் அசுத்த மாயையில் வாழ ஆரம்பிக்கும்போது குணாதிசயங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருமுறை பிடித்த உணவு இன்னொரு சந்தர்ப்பத்தில் பிடிக்காமல் போய் விடுகிறது. முதலில் விழுந்து, விழுந்து காதலித்து மணம் முடித்த  பெண்ணைப் பின்னர் பார்க்கக்கூட  சகிப்பதில்லை.

பரசிவன் தன்னருளால் சக்தியுடன் சேர்ந்து உண்டாகும் விந்துவில் உருவாகிய  உயிர்கள் அனைத்தும் ஆதியில் ஒரே குணம் கொண்டவை. அங்கே உயிராக இருப்பது இறைநிலை. உயிர்கள் அசுத்த மாயையில் வாழ ஆரம்பிக்கும்போது, மாயையுடன் கூடிய  மும்மலங்கள் உடலை  ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது. 

இறைவன் மானிட உடலில் உயிராக, ஆன்மாவாக உறைந்திருப்பதுவே  அடிப்படைத் தத்துவம் ஆகும்.

மனிதன் படைத்த கடவுள்களால் சமுதாயத்திற்கு எந்தப்பலனும் இல்லை. சமுதாயம் சடங்குகள், சம்பிரதாயங்களில் மூழ்கி உண்மை உணர்வற்று மாய்கிறார்கள்.  பிறப்பும், இறப்பும் மனிதனின் கைகளில்லை. வாழ்நாள் முழுதும், இறைநிலை பற்றிய  மயக்கத்திலேயே  வாழ்ந்து மறைந்தும்  போகிறார்கள்.

உண்மை நிலைதான் என்ன?

பகல் வேளையில் நீர் நிரம்பிய குடங்களில் எல்லாம் கதிரவன் தோன்றி இருப்பான். அவனை குடத்துக்குள்ளேயே  வைத்து மூடிவிடலாம் என மூடினால் குடத்துக்குள் அடங்கி இருக்க மாட்டான். அவ்வாறே, விஷத்தை உண்ட இறைவனும், ஒவ்வொரு உடலிலும் மேவி நிற்கின்றான். அவனை உடலில் அடைத்து வைப்போம் என்றெண்ணுவது கைகூடாது என்றும் அறியவேண்டும்.

திருமந்திரம் - 2002

கடம்கடம் தோறும் கதிரவன் தோன்றில் 
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் 
விடம்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றது அப்பரிசு ஆமே. 

உன்னுடைய உடலே இறைவன்  குடி இருக்கும்  வீடு. வேறெங்கும் இறைவன்  தங்குவதுமில்லை. இறைக்கென்று தனி வீடு இருக்கிறதா என்ன? உன்னுடல்தான் அவன்வாழும் வீடென்று தெரிந்த பின்னரும், இறைவனை வேறென்று எண்ணி  வெளியில் தேடி அலைகின்றீர்களே! 

திருமந்திரம் - 2650 

இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை 
அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்? 
அவனுக்கு அவன்இல்லம் என்றென்று அறிந்தும் 
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.

என்ன மடமை இது.

*** *** ***


Wednesday, December 20, 2023

மனதை கேளது சொல்லும்

மனதை கேளது சொல்லும்





 

இளங்காலை வெயில்.  மென்மையான யூகலிப்டஸ் மணம் கலந்த  ஊட்டி மலைக் காற்றும், குளிரும்.

'ஹேனே.. இல்லி பா' - சரித்திர ஆசிரியர் ஜோகியின் குரலுக்கு தேன் சிட்டுக்களாய் பறந்து வந்தார்கள், ஏழாம் வகுப்பு மாணவிகளான சரோஜாவும், பார்வதியும்.

என்னைக்காட்டி, 'இவன, செவந்த்-பி கிளாஸ்ல சேத்தி  புடு'.

அவர்களும் செவந்த்-பி கிளாஸ் என்பதால் என்னை சந்தோஷமாக, குன்றின் உச்சியில் இருந்த வகுப்பறைக்கு கூட்டி சென்றார்கள்.

வகுப்பறைக்கு குடிநீர் எடுக்க, குன்றுக்கு கீழே  வந்த அவர்களின் உற்சாகமான பேச்சும், கிளு கிளு சிரிப்பும், அதிசயமாக இருந்தது  எனக்கு.

'பிக்கண்ணுனே' - செல்லும் வழியில் விக்கிப்பழ மரத்தடியில் கிடந்த பழத்தை பொறுக்கிய பார்வதி சத்தம் போட்டாள்.

'எனகா.. எனகா ' - சரோஜா கெஞ்சினாள். 

எனக்கு படுகு மொழி தெரியாது. ஆனால் அவர்கள் பேசியது மனதில் அப்படியே பதிவாகிவிட்டது.

இந்த முதல் நாள் நினைவு மலர்கள் என் மனதில் பசுமரத்தாணிபோல் உயிரில் பதிந்து விட்டது. 

இந்த நிகழ்வின் எந்த அம்சமும், அது வெயிலாகட்டும், குளிராகட்டும், மணமாகட்டும், சிறுமிகளாகட்டும்  வாழ்வில் அதனை ஒத்த  நிகழ்வுகள் வர நேரிட்டால், மனம் பாய்ந்து அங்கு ஒரு நிமிடம் வாசம் செய்துவிட்டு, அங்கிருந்து எண்ணங்கள் மனதில்  கிளை விட்டு வளரும்.

மனதின் தன்மையே அதுதான்.

கடனே என்று எதையோ செய்து கொண்டிருப்போம். அந்த செயலின் விளைவுகள், மூளையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அனுபவப்பதிவுகளுடன் ஒன்றும்போது, அந்த அனுபவ  நிகழ்வை  எடுத்து வைத்து மனம் அசை போடும்.  சிறு மயிரிழை அளவு ஒத்துப்போகும் செயல்களை கூட மனம் விட்டு வைக்காமல் தாவி விடும்.

மிகுந்த சிரமப்பட்டு தியானத்தில் அமர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்கும் வேளையில், ஊதுபத்தி மணம்கூட, முப்பது வருடங்களுக்கு முன்னர் சுவாசித்த மணத்துடன் ஒத்துப்போனால், மனம் அங்கே போய் நின்று நம் தியானத்தை  கேலிப்பொருளாக்கும்.

இவ்வாறு தொடரும் எண்ண அலைகள் மனதை ஓரிடத்தில் நில்லாமல் தொடர்ந்து  திசை திருப்பிக்கொண்டே இருக்கும்.

அனுபவ நினைவுகளுடன்  எண்ண அலைகளை ஒப்பீடு செய்ய  விழி, செவி, மூக்கு, வாய் மற்றும் மெய் முதலியன மனதிற்கு தொடர்ந்து கொடுக்கும் செய்திகள்   முக்கிய காரணிகளாக அமைகின்றன. கூடவே, புதிய அனுபவங்களை மூளையில் சேமித்து வைக்கவும் செய்கிறது.

மனிதனுக்கு இன்பத்தை கொடுக்கும் இதே காரணிகள்தான் துன்பத்திற்கும், மயக்கத்திற்கும்  காரணமாகின்றன.

புலன்களுக்கு, புறக்காரணிகளால் கிடைக்கும் இன்பம், சிற்றின்பம் என்னும்  போகம். அகக்காரணிகளால் கிடைக்கும் இன்பம், பேரின்பம்  என்னும் போதம். 

போதம் என்பது  ஞானம். விழிப்புணர்வில்  மெய்யுணர்வு, மெய்யறிவு பெற்று துரிய நிலையில் பெரும் பேராஇயற்கை  அல்லது முடிநிலை. இந்நிலையே சுத்தம் எனப்படும்.

இதுவே ஆன்மா சுத்த நிலையில் பெரும் போதம் என்னும்  ஆனந்தமாகும்.

உண்மை விளக்கம் - 1

பொய்காட்டிப்  பொய்யகற்றிப்  போதாநந் தப்பொருளாம் 
மெய்காட்டும்   மெய்கண்டாய்! விண்ணப்பம்;- பொய்காட்டா
மெய்யா! திருவெண்ணை  வித்தகா! சுத்த வினா 
ஐயா!நீ தான்கேட் டருள். 
  

ஆன்ம தத்துவங்கள் 24, வித்யா தத்துவங்கள் 7, சிவ தத்துவங்கள் 5 என்னும்  முப்பத்தாறு தத்துவங்களில், ஆன்ம தத்துவங்கள் பொய்யான, நிலையில்லாத இன்பம், துன்பம், மயக்கம் என்னும் மூவுணர்வுகளைத்தருகிறது. 

புலன்களால் பெறப்படும் இந்தப்பொய்யான மாயை அகலும்போது போதானந்தப்பொருள் வெளிப்படுகிறது. 

இறை நிலை, ஜோதியாய், அறிவாய் வெளிப்பட்டு இன்பம் வழங்குவதே போதானந்தப்பொருள். இதனையே, துரிய அருள்  நிலை என்றும் துரியாதீத ஆனந்த நிலை எனவும் சொல்வார்கள்.

திருமந்திரம் - 1459

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
வோவியம் போல வுணர்ந்தறி வாளர்க்கு 
நாவி யணைந்த நடுத் தறியாமே.   

போதானந்த வேளையில், மலரின் மொட்டுக்குள் மணம் அடங்கி இருப்பதுபோல், ஜீவனுக்குள் அடங்கி இருக்கும் இறை மணம் வெளிப்படும். தியானத்தில் துரிய நிலையில், மெய்யுணர்வில் நிற்பவரின் சுழுமுனை நாடியில் கஸ்தூரி மணம் பரவி நிற்பதைபோல் இறைமணம் பரவி நிற்பதை  உணர்ந்தின்புறுவார்கள்.

கேவல நிலை என்னும் பிறப்பின் முன்னரும், சுத்த நிலை எனப்படும் இறப்பின் பின்னரும் இல்லாமல் சகல நிலையில் இருக்கும் நாம் எவ்வாறு போதானந்தப்பொருள் பெறுவது என்ற கேள்வி மனதில் தோன்றுகிறதல்லவா?

அதற்கான பயிற்சி இதோ!

எளியமுறை நான்கு படிகள்:

1. குறைந்த பட்சம் ஒரு முப்பது நிமிட நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி.

2. காயகற்ப பயிற்சி அறிந்திருந்தால், காயகற்ப பயிற்சி செய்வது  மிகவும் நல்லது.

3. தியானப்பயிற்சி துவங்குமுன்னர் ஒரு பத்து நிமிடம் பிராணாயாமப் பயிற்சி.

4. தியானம்:

முதலில், நம் புலன்களை கருத்தில் கொண்டு அவற்றை அகத்தின் உள்ளே நிலை பெறுமாறு தியானப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கினையில், புருவ மத்தியில் இருக்கும் இறை நிலையை மனதில் எண்ணுங்கள். அங்குள்ள ஜோதியை கண்களில் உள்முகமாக கண்டு உணர தலைப்படவும். அங்கு எழும் நாதத்தை காதுகளால் கேட்கவும். அந்த ஆகுதியில் உண்டாகும் மணத்தை முகருங்கள். அண்ணாக்கில் வழியும் அமிர்தத்தை உண்பதாக கருத்தில் கொள்ளுங்கள். உடலின் ஒவ்வொரு சிற்றறையிலும் பேரானந்தம் பரவுவதை, இந்நிலையில் சிந்தித்திருங்கள்.

பேரானந்த நிலையில் இருப்பதை பதினைந்து நிமிடத்திலிருந்து வளர்த்துக்கொண்டே செல்லுங்கள்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

போதானந்தமும் மனப்பழக்கம்.

*** *** ***




 




Wednesday, December 13, 2023

தீதும் நன்றும் மனம் தரும் மாயை

 தீதும் நன்றும் மனம் தரும் மாயை 



மரணத்தில் மாயும்  மனம் 
ஜனனத்தில் மீண்டும்   வரும் 
மாய்வதும் மீள்வதும்  மாயை.
                                               
பிரபஞ்சம் அடங்கி நிற்பதும், ஆரம்பித்து வளர்வதும்  மாயை.

திருமந்திரம் - 177

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே 
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் 
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் 
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே. 

தினந்தோறும் கிழக்கில் உதயமாகும் சூரியன், மாலையில் மறைகிறது. துள்ளிக்குதித்தோடும் கன்றாய் நம் முன்னே தோன்றும் எருது சில நாட்களில் மூப்பெய்தி நம் கண் முன்னே இறந்தும்  போகிறது. இவைகள், தொடர்ந்து மனித வாழ்வில் தோன்றும் உண்மை நிகழ்வுகள். ஆனால், அவை நம் கண் முன்னே தோன்றிய மாயா நிகழ்வுகள் என்று ஏனோ எண்ணத்தோன்றுவதில்லை.

நாம் பிறக்கும்போது, நம்முடன் இருந்தவர்கள் அனைவரும் இன்று நம்மோடு இல்லை. வந்து போகும் அவர்களின் நினைவுகள் நாட்போக்கில் நின்று விடும். வரும் நாட்களில் இந்த மண்ணில் நாம் வாழ்ந்ததற்கான நம் எச்சங்களும் அவ்வளவுதான். சில வருடங்களில்,  காலம்  எல்லாவற்றையும்  துடைத்தழித்துவிடும். 

மானிடம் ஒடுங்கி நிற்பதும், பிறந்து வளர்வதும் மாயை.

நாம் மாயா உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணரச் செய்வது மனம். இந்த உணர்வு நிலை தருவதுதான் விழிப்புணர்ச்சி. விழிப்புணர்வு நிலையில்தான்  போதம் எனப்படும் மெய்யுணர்வும் பெறப்படுகிறது.

உள்ளமே அனைத்துமாய் நிற்கும் மனிதனுக்கு, மரணத்தின் போது அதுவும் மறைந்து மாயை நிலை பெறுகிறது.

மரணத்தில் மாயும்  மனம் 
ஜனனத்தில் மீண்டும்   வரும் 
மாய்வதும் மீள்வதும்  மாயை.

மனமும், மனத்தால் விளையும் கருமங்களுமே பிறவிச்சுழலையும், பிறவிச்சுழலை விடுவிக்கவும் செய்கிறது. ஒருமுகப்படுத்தி செய்யும் தவத்தால் பிறவிச்சக்கரம் நின்று விடுகிறது.

திருமந்திரம் - 81

பின்னைநின்று  என்னே  பிறவி பெறுவது 
முன்னை நன்கு முயல்தவம் செய்கிலர் 
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே.

மானிடர் ஆன்மா மரணம் எய்தாது, மறுபடி பிறந்திருக்கும். இது பொது விதி. நன்றாக முயன்று இறைவனடி சேர தவம் இருப்பவர்கள், வீடு பேறடைந்து, மறுபடியும் மண்ணில் பிறக்க மாட்டார்கள். 

திருமூலர் மீண்டும் பிறந்திருக்கிறாரே! முந்தைய பிறவியில் அவர் தவம் செய்யவில்லையா என்ற கேள்வி எழுகிறதல்லவா? அந்த கேள்விக்கு அவரே, பதில் தருகிறார்.

'இறைவன் தன்னை நன்றாக மக்களுக்கு அறியும்படி செய்வதற்காக, தமிழில் என்னை பாடச்சொல்லி,   பூமியில் மீண்டும் என்னை  பிறக்க வைத்தான்.'

 மனம்தான் அனைத்துக்கும் அச்சாணி என்றால் அந்த மனம் எங்கே இருக்கிறது? 

உடலுக்குள் உள்ளம் இருப்பதாகத்தானே நம் எண்ணம். உண்மையில் உள்ளத்துக்குள்ளேதான் உடல் இருக்கிறது.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்.

உள்ளம் என்னும் பெருங்கோயிலுக்குள் இருப்பதுதான் உடல்.
  
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டதாக எண்ணிக்கொள்ளுமாம். உண்மை, உள்ளம் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுதான் போகும். மீண்டும் பிறப்பெடுத்து உள்ளம் கண் திறக்கும்வரை மாயா உலகமான இந்த பூலோகம் அந்த உயிருக்கு இருள்தான். 

சுத்த மாயையின் அருளால் பிறப்பெடுக்கும் உயிரிகள், முற்பிறவிகளின் வினைப்பயனுக்கேற்ப  உடலெடுக்கிறது. இந்த பிறவியில் நமக்கு கிடைத்திருக்கும் உடல், பல பிறவிகளில் நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த நல்வினை, தீவினைக்கேற்பவே  அமைந்திருக்கிறது.

வினைக்கீடாய் மெய்க்கொண்டு.

இவ்வினைகள் அசுத்த மாயையின் தூண்டுதலால் நடைபெறுகிறது. மனித இச்சைகள் அதிகமாக தூண்டப்படும்பொழுது காரியங்கள் சில நேரம் நேர்மறையாகவும், சில நேரம் எதிர்மறையாகவும் நடந்தேறிவிடுகிறது.

இவ்வாறு மனிதனின் செயல்கள், இரு  வினைகள்,  மூன்று நிலையில் தொடர்ந்து  நடந்து கொண்டிருக்கிறது.

முதல் நிலை, நம்முடைய செயல்கள், நாம் விரும்பி செய்ததாக கொள்ளப்பட்டு ஆகாமியம்  என்று சொல்லப்படுவது. உலகில் வாழும் ஒவ்வொரு வினாடியும் இந்தக்கணக்கு விரிந்து கொண்டே செல்லும்.

நம்முடைய செயல்கள் நம்மை சுற்றி சூக்குமமாய்  சூழ்ந்து கொண்டிருக்கும் நிலை சஞ்சிதம் என்று சொல்லப்படுகிறது. மனம் அஞ்சுவதும், மகிழ்வதும் முன்னர் செய்த வினைகள் நம்மை சூழ்ந்து நின்று இயக்குவதால்தான்.

செயல்களின் விளைவு நிலையே, இன்பம், துன்பம் என்னும் மூன்றாம் நிலையான பிராரத்தம் எனப்படுவது. நல்வினைப்பயனாக நல்ல உடலைப்பெற்றவன் பூவுலக வாழ்வினை ஆழ்ந்து இன்பமாய் அனுபவிப்பான். தீவினைப்பயனை சொல்லவே வேண்டாம், உலக வாழ்வில் துன்பம் என்று சொல்லக்கூடிய அனைத்தையும் அனுபவித்து, மேலும் மேலும் தீவினைக்குள் செலுத்திக்கொண்டிருக்கும்.

ஆழ்ந்து சிந்தித்தால், அனைத்துக்கும் மூல காரணம் மாயை என்பது புலனாகும்.

உலகே மாயம். வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் சுகமே மாயம்.

*** *** ***


 



 
  



கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...