ரகசியம் பரமரகசியம்
இது நமக்குள்
இருப்பது அவசியம்
'மண்ணில் உயிர்ப்பெடுத்த மறுகணமே அன்னை மடி அறியும் பரம ரகசியம் யார் சொல்லி தந்தார் கன்றினுக்கு? மனிதனாய் பிறந்ததனால், பிறவியின் திசையறியாமல் தத்தளிக்கும் எனக்கு அருள் செய்வாய்' - என்று வேண்டி நின்ற எனக்கு, கீழ்க்கண்ட அத்தியாயம் படிக்க உத்திரவு கிடைத்தது.
'முந்தைய, ஜன்மங்களிலுள்ள நல்வினைகளால் நாம் இவ்வுடம்பைப் பெற்று இருக்கிறோம். பக்தியையும், விடுதலையையும் இவ்வுதவியை கொண்டு பெறுவது தகுதியுடையதாகும். எனவே, எப்போதும் நாம் சோம்பலின்றி இருக்க வேண்டும். நமது குறிக்கோளையும் நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும்.'
- ஸ்ரீ சாய் சத் சரித்திரம்
இதே கேள்வி எனக்கு மட்டுமல்ல, மண்ணில் மனிதனாய் பிறந்து, தன்னுணர்வு எய்தப்பெற்ற பேரருளாளர்கள் மனதிலும் தோன்றியதில் ஆச்சர்யம் கொண்டேன்.
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர் எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே.
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர் எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே.
- பட்டினத்தார் பாடல் 83
இதோ, திருமூலர் மனிதப்பிறவியின், பரம ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்கும் வழியை நமக்கு காட்டுகிறார்.
நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே.
- திருமந்திரம் 85
இலை மறை, காய் மறையாக மறைத்து வைக்கப்பட்டுள்ள விண்ணுலகம் செல்லும் வழி நான் அறிந்து கொண்டு, அடையும் இன்பத்தை, உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள் மனிதர்களே!
உடலின் உணர்வுகள் விழிப்பு நிலையில் இருக்க, 'ஓம் நமக்ஷிவய' எனும் மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வாருங்கள். தானாகவே உங்கள் பிறப்பின் பரம ரகசியம் அறியத்தலைப்படுவீர்கள்.

