ஜெனரல் டையர்
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் வாடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கலயங்கள் வாடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
காலையில் வீட்டில் உண்ண உணவில்லாமல், பள்ளியில் வழங்கும் மதிய உணவுக்காக, நண்பகல் வரை காத்திருந்து, தட்டில் போடப்பட்ட ஓட்ஸ் உப்புமா, அதற்கு சுடுநீரில் கலக்கிய பருப்புப்பொடி தேவாமிர்தமாக தெரிந்தது முருகனுக்கு, வாய் மட்டும் முணுமுணுத்தது, உண்ணுமுன் சொல்லும் திருக்குறளை.
ஒரு மக்களின் முதல்வர் ஆரம்பித்து வைத்த, மதிய உணவு திட்டத்தை, இன்னொரு மக்கள் திலகம் விரிவாக்கம் செய்கிறார், இளமையில் வறுமையின் கொடுமையை உணர்ந்த ஏழைப்பங்காளர்கள்.
ஒரு மைதானத்துக்குள் பூட்டி, மனித உயிர்கள் என்ற இரக்கமின்றி, மிருகங்களை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளிய ஜாலியன்வாலாபாக் நிகழ்வில்கூட, வினாடி நேரத்தில் உயிர் பிரிந்திருக்கும்.
ஆயிரக்கணக்கான மைல் தூரம், குழந்தைகளை சுமந்து, உண்ண உணவும், நீருமின்றி, காவலர்களுக்கு அஞ்சி, அடிவாங்கி பாரம் சுமக்கும் எனதருமை இந்தியக்குடிமக்களே, பேய்க்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறீர்கள். தப்பித்தவறி, உயிரோடு ஊர் போய் சேர்ந்தாலும், உங்களை வாழ விட மாட்டார்கள் இந்த ஜெனரல் டையர்கள். கொன்றொழிக்காமல் ஓய மாட்டார்கள். வாழும்வரை நரகம்தான்.
'நெஞ்சு பொறுக்குதில்லையே'
இருபது லட்சம் கோடி பேரிடர் விநியோகம், மும்மடங்கு விமான கட்டணம் பெற்று பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவை, அமெரிக்காவிற்கே மருந்து ஏற்றுமதி, சீனாவில் உள்ள உலக வர்த்தக நிறுவனங்கள் நம் நாட்டிற்கு - சற்றேறக்குறைய வல்லரசு நாடாகிவிட்டது இந்தியா.
உண்மையில், கேள்வி கேட்க நாதியற்றவர்கள், தேசிய நெடுஞ்சாலை எங்கும் சிதறிக்கிடக்க, இந்தியாவே ஒரு ஜாலியன்வாலாபாக் ஆகிவிட்டது.
நாம் ஒன்றே, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலுக்கு அச்சாரமாக வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. நாம் தானமாக வழங்கும் வாக்கை எப்படி வழங்கக்கூடாது என்றும், வழங்கினால் என்ன ஆகும் என்று சாபமே கொடுக்கிறார் திருமூலர்.
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென் றஞ்சலி யத்தனாய்
எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.
- திருமந்திரம் 506
மண்வாழ் உயிர்கள் அனைத்தும் இறைவன் என்றெண்ணி வாழாதார்க்கு, பூமியையும், மலையையும் தானமாக வாக்காக கொடுத்தால், கொடுத்தவனும், பெற்றவனும் ஏழுவகை நரகங்களிலும் விழுந்துழல்வார்கள்.
No comments:
Post a Comment