பேரறிவு
நல்ல பொழுதையெல்லாம்
தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டைக்கெடுத்ததுடன்
தானும் கெட்டார்
தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டைக்கெடுத்ததுடன்
தானும் கெட்டார்

'ஐயோ.. போயிட்டீங்களா' - உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் தெருப்பெண்கள் எல்லாம் கூடி மாவடு ஊறுகாய் போடுவதை, இரவு பணி முடித்து தூக்க கலக்கத்தில் கீழே சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்து, சாய்ந்து விழும் பரந்தாமனை பார்த்துக்கொண்டே, மாடிக்கு ஓடினாள் மனைவி சரளா.
எழுபதுகளில் அதிக விற்பனை சுற்றில் இருந்த குமுதம் வார இதழில் வந்த மகத்தான சிறுகதைதான், என் நினைவிலிருந்து, மேலே சொல்லப்பட்ட வாக்கியச்சிறுகதை.
மனித வாழ்வின் நிலையாமையை திருமூலரும் இப்படித்தான் சொல்லி இருக்கிறார். இல்லாள் சுவைபட சமைத்து வைத்திருந்த உணவையும், அவளையும் சுவைக்கும் மனிதன், கணப்பொழுதில் தன்னுயிர் போவது அறியாமல் உயிர் நீக்கின்றான் .
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தது ஒழிந்தாரே.
- திருமந்திரம் 146
மண்ணில் பிறப்பெடுக்கும் மனிதன் பத்து வகையான அறிவு பெற முயற்சிக்க வேண்டும். ஐம்புலன்களால் பெறுகின்ற ஐந்தறிவு, ஐந்தறிவால் பெரும் பகுத்தறிவும், நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அனுபவ அறிவாக ஏழாவது அறிவும், கல்வியறிவாக எட்டும், கல்வி, கேள்விகளில் சிறந்த குருவிடம் பெரும் ஒன்பதாவது அறிவும், இவையனைத்தையும் இணைக்கும் பாலமாக பரம்பொருளின் பற்றாகிய, பத்தாவதாக பேரறிவும் பெறுதல் வேண்டும்.
மனிதனின் வாழ்நாளில், அறியாப்பருவமும், உறக்கமுமாக அழிகின்ற ஆண்டுகள் இருபத்தெட்டு. முப்பத்து மூன்று வருடங்கள் தன்னிலையொடு, பத்து அறிவை பெரும் முயற்சியில் இருக்க முடிந்தால், அறுபத்தி இரண்டாம் ஆண்டில் இருந்து அவனுடைய வாழ்நாள், நூறாண்டுகளுக்கு மேலாக இருக்கும்.
அழிகின்ற ஆண்டவை ஐஅஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்ப தாகும்
கழிகின்ற கால(ம்) அறுபத்து இரண்டென்ப
எழுகின்ற ஈர்ஐம்பது எண்ணற்று இருந்ததே.
- திருமந்திரம் 742
No comments:
Post a Comment