கடவுள் - ஐந்து வென்றனன்
அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்து பார்த்திருப்பேன்
இன்னும் கொஞ்ச நேரம் வேப்ப மர நிழலில் உட்காரலாமா, வேண்டாமா என்று யோசிக்க வைத்தார்கள், எதிரில் அமர்ந்திருந்த இளம் ஜோடி. தீபாவளி திருநாளை கொண்டாட நிறைய இளஞ்ஜோடிகள் மருதமலை ஏறிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் அணிந்திருந்த புத்தம்புதிய உடைகளின் நிறமே, நகர்ப்புற வணிக வளாகங்களில் வரும் ஜோடிகளிடம் இருந்து இனம் பிரித்து காட்டியது.
கோவில்களுக்கு வரும் மக்களும் அப்படித்தான். வசதி ஏற, ஏற ஆசையின் பிடியில் சிக்கி, ஆசையின் எல்லை தெரியாமல் போலி வாழ்க்கைக்குள் போய் விடுகிறார்கள். கோவிலுக்கு செல்வதெல்லாம் பத்தாம் பசலித்தனம் என்னும் எண்ணம் வளர்ந்து கொண்டுள்ளது. இன்னும் மத்தியதர வாழ்க்கையை எட்ட முடியாதவர்களே, படிக்கட்டில் மலை ஏறுபவர்களில் அதிகமாக காண முடிந்தது.
வசதி உள்ளவர்கள், கோவில் வரை காரில் வந்து சிறப்பு தரிசன அனுமதி சீட்டு பெற்று, இடைத்தரகர்களின் ஆசியுடன் கடவுளிடம் தங்கள் தேவைகளை, ஆசைகளை விண்ணப்பங்களாக சமர்ப்பித்து விட்டு, வேக வேகமாக மருத்துவ மனைகளில் மருத்துவர்களை பார்க்க தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள்.
காற்று குளிர்ச்சியா இல்லை வெயிலுக்கு காற்று இதமாக இருக்கிறதா என்று தெரியாமல் சுகமாக இருந்தது மருத மலைக்காற்று. உடல் பெரும் சுகங்களில் இதுவும் கணக்கில் சேர்த்தியே.
முருகனை தரிசிக்க வரும்போதெல்லாம் மலையின் அழகை மனம் ரசிக்காமல் போனதில்லை. இரண்டு பக்கமும் இறகை விரித்து அமர்ந்திருக்கும் பெரிய கழுகைப்போல் இருக்கும், முகில் உரசி செல்லும் மருதமலைக் குன்றுகள், கோவில் என்றுமே அழகான காட்சிதான், என் கண்களுக்கு .
அதிக ஆரவாரமில்லாமல், இயற்கையின் ஒலியோடு மனம் ஒன்றி போக அமர்ந்திருக்கலாம் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அடைந்த குகை கோவிலில்.
நெய்யின் மணம் சற்று தூக்கலாக கிடைக்கும் சர்க்கரைப்பொங்கலை ரசித்து சுவைக்கும்போது, ஐம்புலன்களின் இன்பம் இந்த மலையிலும் கிடைக்கும் என்பது, என்னைப்போல் அனுபவித்தவர்கள் மட்டுமே அறிந்த உண்மை.
பார்க்கையிலே ஐம்புலனை நன்றாய்க் கேளு
பதிவான சத்தமொடு பரிசம் ரூபம்
ஏர்க்கவே ரசமுடனே கெந்தம் ஐந்து
இன்பமுள்ள ஐம்புலனை அறிவதற்கு
சேர்க்கையுடன் ஐம்புலனிக் கண்டு மைந்தா
தேர்ந்து மனதறிவாலே தேர்ந்து கொண்டால்
மார்க்கமுள்ள சித்தரென்று யார்க்குந்தோணும்
மைந்தனே ஐம்புலனை வகுத்துக் காணே.
- அகத்தியரின் சௌமிய சாகரம் 30
- அகத்தியரின் சௌமிய சாகரம் 30
சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்று புலன்கள் ஐந்தாகும். இந்தப் புலன்களால் பெரும் அறிவு எவ்வாறு ஏற்படுகிறது என்றால் பொறிகள் எனப்படும் ஞானேந்திரியங்கள் புலன்களுடன் சேருகின்றன, இவையிரண்டும் ஆன்மாவுடன் சேர ஆன்மா அந்த அனுபவங்களை உணர்கிறது. இதனால் அகத்தியர் புலன்களை அவற்றின் சேர்க்கையுடன் அறிந்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு உலக இன்பங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது சித்தர் மார்க்கத்தில் ஒரு அம்சம் என்று அவர் நமக்குக் கூறுகிறார்.
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
- திருக்குறள் 1101
ஒண்தொடி கண்ணே உள.
- திருக்குறள் 1101
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த பெண்ணிடத்தில் உள்ளன.
இவ்வின்பம் இருபாலாரும் உய்த்து உணரக்கூடியதே. போக வாழ்வும் இறை நிலை உணரும் வழிகளில் ஒன்றே. இல்லறத்தாருக்கு கிடைத்துள்ள அருமையான வாய்ப்பு.
போகமும் உட்புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம்விரித்து ஆட்டுஒழிந்து
ஏகப்படம்செய்து உடம்புஇடம் ஆமே.
- திருமந்திரம் 1621
உயிரென்னும் பாம்புக்கு படம் ஐந்து என்று குறிப்பிட்டது மெய், வாய், கண், காது, மூக்கு என்னும் ஐம்பொறிகளை. நாலது ஆவது இந்த ஐம்பொறிகளால் நுகரும் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி. உயிராகிய பாம்பு, மனம் என்னும் புற்றில் ஐந்து புலன்களுடன் பதுங்கி இருக்கிறது. ஆகம் இரண்டும் என்பது நுண்ணுடல் மற்றும் பரு உடலைக்குறிக்கிறது. இவ்விரு உடலும் ஒன்றாக இணைந்து உடலில் வாழ்வதே, இறைவனின் ஐந்தாம் குணம் ஆகும்.