உயிர்களை படைத்த இறைவனுக்கு உயிர் கொடுக்கும்(?) விழா பிராண பிரதிஷ்டா.
அயோத்தியில் இறைவனை குடி அமர்த்தி விட்டார்கள். இனி அவர் அங்கே இவர்கள் கொடுக்கும் உணவினை உண்டு குடித்தனம் செய்ய வேண்டியதுதான்.
வால்மீகியின் கதாநாயகன் ஒரு ஸ்த்ரீலோலன். புலால் உண்பவன். அரச குணமிக்கவன். வடமொழி காவியத்தை தமிழாக்கிய கம்பனின் கதாநாயகன் ஒரு ஏகபத்தினி விரதன். புலால் மறுப்பவன், அரசனை மிஞ்சிய தேவ புருஷன்.
ஆச்சர்யத்தை பார்த்தீர்களா, கெட்டவன் என்று சொன்ன காவிய நாயகனை வடமாநில மக்கள் கொண்டாடுகிறார்கள்.நல்லவன் என்று சொல்லிய நாயகனை தென் மாநில மக்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
ராமனை விட்டுத்தள்ளுவோம். மனிதனாய் பிறப்பெடுத்த எவருமே இறைவனில்லை என்பதே நம் கோட்பாடு. அது கண்ணனானாலும், ஏசுவானாலும் அல்லது முஹம்மது நபி ஆனாலும் சரிதான்.
இறைவன் உண்டு என்று சொல்லும்போதே அதன் மறுபக்கமாக இல்லை என்ற பிரதிபலிப்பு உருவாகிவிடுகிறது. இல்லை என்று சொல்லும்போது உண்டு என்ற பொருள் உருவாகிவிடுகிறது. எனவே, இறைவன் இருக்கின்றானா, இல்லையா என்ற வாதம் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. உண்மையில் இந்த இரண்டு நிலையையும் தவிர்த்து ஆனந்தமயமாக வாழும் வழி அறிந்தால், இறைவன் உன்னுடன் அந்த இன்பத்தினூடே இருப்பான்.
திருக்களிற்றுப்படியார்
உண்டெனில் உண்டாகும் இல்லாமை; இல்லைஎனில் உண்டாகும்; ஆனமையின் ஓரிரண்டாம் - உண்டு இல்லை என்னும் இவைதவிர்ந்த இன்பத்தை எய்தும்வகை உன்னில் அவன் உன்னுடனே ஆம். 36
இறைவன் இருக்கின்றான் எனில் அவன் எங்கே வாழ்கிறான்? உன்னுடைய உள்ளம்தானே அவனுடைய வீடு, வேறு ஏதாவது இடத்தில் அவன் வசிக்கிறான் என்று சொல்ல முடியுமா? அவனுடைய வீடு உன்னுடைய உள்ளம்தான் என்று தெரிந்த பின்னரும் அவனை வெளியே வசிக்கும் ஆளாக எண்ணி அவனைத் தேடுகின்றாயே?
திருமந்திரம் - 2650
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்? அவனுக்கு அவன்இல்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.
சிட்னியிலிருந்து அதிகாலை புறப்பட்டு மெல்போர்ன் செல்லும் விமானத்தில் இருந்து பார்த்தபோது, மேகங்கள் செம்பஞ்சுப் பொதிகளாய் தேவர்கள் உறங்கும் பள்ளியறை மெத்தையைப்போல் தோற்றமளித்தது.
கதிரவனின் கதிர்கள் பாயாத இடங்களில் இன்னும் கருமை. நேரம் ஆக ஆக, செம்பஞ்சுப்பொதிகள் எல்லாம் வெண்பஞ்சு மெத்தைகளாக மாறியது. வானத்தில் மேலே மேலே போனாலும், மேகத்திற்கும் ஓர் எல்லையுண்டு என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
மனித உடலில் இல்லாத தேவர்கள் பள்ளி கொள்ளலாம். உடலெடுத்த எவரும் மேகத்தை மெத்தையாக்கக்கூடுமா?நான் அதன்மேல் படுத்தால் என்ன ஆகும்? சின்ன ஆசைதான். சிதறி சின்னாபின்னமாகிவிட மாட்டேனா?
ஆசைதானே அத்தனைத் துன்பங்களுக்கும் விளை நிலம்.
ஆனால், இந்த ஆசை எங்கிருந்து பிறக்கிறது?
ஆசையைப்பற்றி அறிய நாம் சுத்த மாயைக்குள் செல்ல வேண்டியதிருக்கிறது. ஆதி அந்தமற்ற இறைவன் தோற்றத்தின் போதே, இறை அம்சமாக உயிரினங்களும் தோன்றியது. இறைவனை பற்றாத இச்சா சக்தி அல்லது ஆசை உயிரிகளின் அடிப்படைக் குணம் ஆகியது.
திருமந்திரம் - 115
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியைப் போல்பசு பாசம் அநாதி
உயிரும் பாசமும் பின்னிப்பிணைந்தவை. உயிர்கள் ஆதி இறைவனை அணுகாத அளவிற்கு இந்த பாசம் என்னும் உலக ஆசை பார்த்துக்கொள்ளும். ஒரு வேளை, பற்றறுத்து தவத்தின் மூலம் அணுக நேர்ந்தால், இறைவனோடு ஒன்றாக கலந்து விடும்.
ஆசைகள் மனிதனிடம் மூன்று முக்கிய நிலைகள் கொண்டுள்ளது. இதனை ஏடணை என்னும் சித்தர்கள், தாரவேடணை, புத்திர்வேடணை மற்றும் அர்த்தவேடணை என்று மூன்று பகுதிகளாக சொல்கிறார்கள்.
தாரவேடணை என்பது பெண்ணாசை, ஆணாசை அல்லது உடல்மேல் ஏற்படும் ஆசை.
புத்திர்வேடணை என்பது குழந்தைகள், குடும்பம், உறவினர் மீது ஏற்படும் ஆசை.
உலக பொருட்கள், புகழ், அதிகாரம் போன்றவற்றின் மீது ஏற்படும் ஈர்ப்பு அர்த்தவேடணை.
எப்படி இந்த ஆசைகளில் இருந்து விடுபடுவது? சாதாரண காரியம் அல்லவே இந்த மூன்று ஆசைகளையும் உதறுவது.
திருவள்ளுவர் அதற்கு ஒரு வழி சொல்கிறார்.
திருக்குறள் - 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
இச்சா சக்தி இல்லாதவன் இறைவன், அதாவது எந்த பற்றும் இல்லாதவன். அவனுடன் சேரும் ஆசையை பிடித்துக்கொள்ளுங்கள். அதுவே, எல்லா ஆசைகளையும் உதறுவதற்கு உறுதுணையாக அமையும்.
ஒரு படி மேலே சென்று திருமூலர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ஒரு முறை சுண்டினால் இரண்டு வாய்ப்பு. பூ அல்லது தலை.
இரண்டு முறை சுண்டினால் வாய்ப்பு நான்கு.
இப்படியே தொண்ணூற்றாறு முறை சுண்டினால் 79228 பில்லியன் வாய்ப்புகள்.
உலகத்தின் மக்கள்தொகை சுமார் 7.9 பில்லியன்.
ஒரு மனித உயிரியின் குணம் பத்தாயிரம்வரை மாற வாய்ப்பு.
[மேற்படி கணக்கில் சந்தேகம் இருப்பவர்கள் Chat GPT-யிடம் கேட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள்.]
இங்கே முக்கிய காரணியாக நாம் பார்ப்பது 96. இந்த எண்ணிக்கை மனித உயிரியின் வாழ்க்கை தத்துவமாக சித்தர்கள் அறிந்து சொல்லி இருப்பது.
மண்ணில் வாழும் சூழலில் உயிர்களுக்கு ஏற்படும் அனுபவப்பதிவுகள், இந்த 96 தத்துவங்களின் ஏற்ற இறக்கங்களினால், அந்த உயிரி தனித்தன்மை, தனிக்குணம் பெற்று விடுகிறது.
பெற்றவரின் குணம் பிள்ளைக்கில்லை; ஓர் வயிற்றில் பிறந்தாலும் பிள்ளைகளின் குணம் ஒன்றுக்கொன்று ஒன்றுவதில்லை; ஒருவரைப்போல் இன்னொருவர் இவ்வுலகில் இல்லை.
ஆதி இறைவனைப்போல் உயிரிகள் ஆதியில் சுத்த மாயையில் தோன்றி இருந்தாலும், 96 தத்துவங்களைக்கொண்டு வாழ்வதால், வாழ்வின் அனுபவம் ஒவ்வொருவரையும் ஒரு தனித்தீவாக்கி விடுகிறது.
சுத்த மாயையில் உதிக்கும் உயிர் அசுத்த மாயையில் வாழ ஆரம்பிக்கும்போது குணாதிசயங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருமுறை பிடித்த உணவு இன்னொரு சந்தர்ப்பத்தில் பிடிக்காமல் போய் விடுகிறது. முதலில் விழுந்து, விழுந்து காதலித்து மணம் முடித்த பெண்ணைப் பின்னர் பார்க்கக்கூட சகிப்பதில்லை.
பரசிவன் தன்னருளால் சக்தியுடன் சேர்ந்து உண்டாகும் விந்துவில் உருவாகிய உயிர்கள் அனைத்தும் ஆதியில் ஒரே குணம் கொண்டவை. அங்கே உயிராக இருப்பது இறைநிலை. உயிர்கள் அசுத்த மாயையில் வாழ ஆரம்பிக்கும்போது, மாயையுடன் கூடிய மும்மலங்கள் உடலை ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது.
இறைவன் மானிட உடலில் உயிராக, ஆன்மாவாக உறைந்திருப்பதுவே அடிப்படைத் தத்துவம் ஆகும்.
மனிதன் படைத்த கடவுள்களால் சமுதாயத்திற்கு எந்தப்பலனும் இல்லை. சமுதாயம் சடங்குகள், சம்பிரதாயங்களில் மூழ்கி உண்மை உணர்வற்று மாய்கிறார்கள். பிறப்பும், இறப்பும் மனிதனின் கைகளில்லை. வாழ்நாள் முழுதும், இறைநிலை பற்றிய மயக்கத்திலேயே வாழ்ந்து மறைந்தும் போகிறார்கள்.
உண்மை நிலைதான் என்ன?
பகல் வேளையில் நீர் நிரம்பிய குடங்களில் எல்லாம் கதிரவன் தோன்றி இருப்பான். அவனை குடத்துக்குள்ளேயே வைத்து மூடிவிடலாம் என மூடினால் குடத்துக்குள் அடங்கி இருக்க மாட்டான். அவ்வாறே, விஷத்தை உண்ட இறைவனும், ஒவ்வொரு உடலிலும் மேவி நிற்கின்றான். அவனை உடலில் அடைத்து வைப்போம் என்றெண்ணுவது கைகூடாது என்றும் அறியவேண்டும்.
திருமந்திரம் - 2002
கடம்கடம் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடம்கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றது அப்பரிசு ஆமே.
உன்னுடைய உடலே இறைவன் குடி இருக்கும் வீடு. வேறெங்கும் இறைவன் தங்குவதுமில்லை. இறைக்கென்று தனி வீடு இருக்கிறதா என்ன? உன்னுடல்தான் அவன்வாழும் வீடென்று தெரிந்த பின்னரும், இறைவனை வேறென்று எண்ணி வெளியில் தேடி அலைகின்றீர்களே!
திருமந்திரம் - 2650
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்? அவனுக்கு அவன்இல்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.
அவர்களும் செவந்த்-பி கிளாஸ் என்பதால் என்னை சந்தோஷமாக, குன்றின் உச்சியில் இருந்த வகுப்பறைக்கு கூட்டி சென்றார்கள்.
வகுப்பறைக்கு குடிநீர் எடுக்க, குன்றுக்கு கீழே வந்த அவர்களின் உற்சாகமான பேச்சும், கிளு கிளு சிரிப்பும், அதிசயமாக இருந்தது எனக்கு.
'பிக்கண்ணுனே' - செல்லும் வழியில் விக்கிப்பழ மரத்தடியில் கிடந்த பழத்தை பொறுக்கிய பார்வதி சத்தம் போட்டாள்.
'எனகா.. எனகா ' - சரோஜா கெஞ்சினாள்.
எனக்கு படுகு மொழி தெரியாது. ஆனால் அவர்கள் பேசியது மனதில் அப்படியே பதிவாகிவிட்டது.
இந்த முதல் நாள் நினைவு மலர்கள் என் மனதில் பசுமரத்தாணிபோல் உயிரில் பதிந்து விட்டது.
இந்த நிகழ்வின் எந்த அம்சமும், அது வெயிலாகட்டும், குளிராகட்டும், மணமாகட்டும், சிறுமிகளாகட்டும் வாழ்வில் அதனை ஒத்த நிகழ்வுகள் வர நேரிட்டால், மனம் பாய்ந்து அங்கு ஒரு நிமிடம் வாசம் செய்துவிட்டு, அங்கிருந்து எண்ணங்கள் மனதில் கிளை விட்டு வளரும்.
மனதின் தன்மையே அதுதான்.
கடனே என்று எதையோ செய்து கொண்டிருப்போம். அந்த செயலின் விளைவுகள், மூளையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அனுபவப்பதிவுகளுடன் ஒன்றும்போது, அந்த அனுபவ நிகழ்வை எடுத்து வைத்து மனம் அசை போடும். சிறு மயிரிழை அளவு ஒத்துப்போகும் செயல்களை கூட மனம் விட்டு வைக்காமல் தாவி விடும்.
மிகுந்த சிரமப்பட்டு தியானத்தில் அமர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்கும் வேளையில், ஊதுபத்தி மணம்கூட, முப்பது வருடங்களுக்கு முன்னர் சுவாசித்த மணத்துடன் ஒத்துப்போனால், மனம் அங்கே போய் நின்று நம் தியானத்தை கேலிப்பொருளாக்கும்.
இவ்வாறு தொடரும் எண்ண அலைகள் மனதை ஓரிடத்தில் நில்லாமல் தொடர்ந்து திசை திருப்பிக்கொண்டே இருக்கும்.
அனுபவ நினைவுகளுடன் எண்ண அலைகளை ஒப்பீடு செய்ய விழி, செவி, மூக்கு, வாய் மற்றும் மெய் முதலியன மனதிற்கு தொடர்ந்து கொடுக்கும் செய்திகள் முக்கிய காரணிகளாக அமைகின்றன. கூடவே, புதிய அனுபவங்களை மூளையில் சேமித்து வைக்கவும் செய்கிறது.
மனிதனுக்கு இன்பத்தை கொடுக்கும் இதே காரணிகள்தான் துன்பத்திற்கும், மயக்கத்திற்கும் காரணமாகின்றன.
புலன்களுக்கு, புறக்காரணிகளால் கிடைக்கும் இன்பம், சிற்றின்பம் என்னும் போகம். அகக்காரணிகளால் கிடைக்கும் இன்பம், பேரின்பம் என்னும் போதம்.
போதம் என்பது ஞானம். விழிப்புணர்வில் மெய்யுணர்வு, மெய்யறிவு பெற்று துரிய நிலையில் பெரும் பேராஇயற்கை அல்லது முடிநிலை. இந்நிலையே சுத்தம் எனப்படும்.
இதுவே ஆன்மா சுத்த நிலையில் பெரும் போதம் என்னும் ஆனந்தமாகும்.
போதானந்த வேளையில், மலரின் மொட்டுக்குள் மணம் அடங்கி இருப்பதுபோல், ஜீவனுக்குள் அடங்கி இருக்கும் இறை மணம் வெளிப்படும். தியானத்தில் துரிய நிலையில், மெய்யுணர்வில் நிற்பவரின் சுழுமுனை நாடியில் கஸ்தூரி மணம் பரவி நிற்பதைபோல் இறைமணம் பரவி நிற்பதை உணர்ந்தின்புறுவார்கள்.
கேவல நிலை என்னும் பிறப்பின் முன்னரும், சுத்த நிலை எனப்படும் இறப்பின் பின்னரும் இல்லாமல் சகல நிலையில் இருக்கும் நாம் எவ்வாறு போதானந்தப்பொருள் பெறுவது என்ற கேள்வி மனதில் தோன்றுகிறதல்லவா?
அதற்கான பயிற்சி இதோ!
எளியமுறை நான்கு படிகள்:
1. குறைந்த பட்சம் ஒரு முப்பது நிமிட நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி.
2. காயகற்ப பயிற்சி அறிந்திருந்தால், காயகற்ப பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
3. தியானப்பயிற்சி துவங்குமுன்னர் ஒரு பத்து நிமிடம் பிராணாயாமப் பயிற்சி.
4. தியானம்:
முதலில், நம் புலன்களை கருத்தில் கொண்டு அவற்றை அகத்தின் உள்ளே நிலை பெறுமாறு தியானப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆக்கினையில், புருவ மத்தியில் இருக்கும் இறை நிலையை மனதில் எண்ணுங்கள். அங்குள்ள ஜோதியை கண்களில் உள்முகமாக கண்டு உணர தலைப்படவும். அங்கு எழும் நாதத்தை காதுகளால் கேட்கவும். அந்த ஆகுதியில் உண்டாகும் மணத்தை முகருங்கள். அண்ணாக்கில் வழியும் அமிர்தத்தை உண்பதாக கருத்தில் கொள்ளுங்கள். உடலின் ஒவ்வொரு சிற்றறையிலும் பேரானந்தம் பரவுவதை, இந்நிலையில் சிந்தித்திருங்கள்.
பேரானந்த நிலையில் இருப்பதை பதினைந்து நிமிடத்திலிருந்து வளர்த்துக்கொண்டே செல்லுங்கள்.
பிரபஞ்சம் அடங்கி நிற்பதும், ஆரம்பித்து வளர்வதும் மாயை.
திருமந்திரம் - 177
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.
தினந்தோறும் கிழக்கில் உதயமாகும் சூரியன், மாலையில் மறைகிறது. துள்ளிக்குதித்தோடும் கன்றாய் நம் முன்னே தோன்றும் எருது சில நாட்களில் மூப்பெய்தி நம் கண் முன்னே இறந்தும் போகிறது. இவைகள், தொடர்ந்து மனித வாழ்வில் தோன்றும் உண்மை நிகழ்வுகள். ஆனால், அவை நம் கண் முன்னே தோன்றிய மாயா நிகழ்வுகள் என்று ஏனோ எண்ணத்தோன்றுவதில்லை.
நாம் பிறக்கும்போது, நம்முடன் இருந்தவர்கள் அனைவரும் இன்று நம்மோடு இல்லை. வந்து போகும் அவர்களின் நினைவுகள் நாட்போக்கில் நின்று விடும். வரும் நாட்களில் இந்த மண்ணில் நாம் வாழ்ந்ததற்கான நம் எச்சங்களும் அவ்வளவுதான். சில வருடங்களில், காலம் எல்லாவற்றையும் துடைத்தழித்துவிடும்.
மானிடம் ஒடுங்கி நிற்பதும், பிறந்து வளர்வதும் மாயை.
நாம் மாயா உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணரச் செய்வது மனம். இந்த உணர்வு நிலை தருவதுதான் விழிப்புணர்ச்சி. விழிப்புணர்வு நிலையில்தான் போதம் எனப்படும் மெய்யுணர்வும் பெறப்படுகிறது.
உள்ளமே அனைத்துமாய் நிற்கும் மனிதனுக்கு, மரணத்தின் போது அதுவும் மறைந்து மாயை நிலை பெறுகிறது.
மரணத்தில் மாயும் மனம்
ஜனனத்தில் மீண்டும் வரும்
மாய்வதும் மீள்வதும் மாயை.
மனமும், மனத்தால் விளையும் கருமங்களுமே பிறவிச்சுழலையும், பிறவிச்சுழலை விடுவிக்கவும் செய்கிறது. ஒருமுகப்படுத்தி செய்யும் தவத்தால் பிறவிச்சக்கரம் நின்று விடுகிறது.
திருமந்திரம் - 81
பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்கு முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே.
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது, மறுபடி பிறந்திருக்கும். இது பொது விதி. நன்றாக முயன்று இறைவனடி சேர தவம் இருப்பவர்கள், வீடு பேறடைந்து, மறுபடியும் மண்ணில் பிறக்க மாட்டார்கள்.
திருமூலர் மீண்டும் பிறந்திருக்கிறாரே! முந்தைய பிறவியில் அவர் தவம் செய்யவில்லையா என்ற கேள்வி எழுகிறதல்லவா? அந்த கேள்விக்கு அவரே, பதில் தருகிறார்.
'இறைவன் தன்னை நன்றாக மக்களுக்கு அறியும்படி செய்வதற்காக, தமிழில் என்னை பாடச்சொல்லி, பூமியில் மீண்டும் என்னை பிறக்க வைத்தான்.'
மனம்தான் அனைத்துக்கும் அச்சாணி என்றால் அந்த மனம் எங்கே இருக்கிறது?
உடலுக்குள் உள்ளம் இருப்பதாகத்தானே நம் எண்ணம். உண்மையில் உள்ளத்துக்குள்ளேதான் உடல் இருக்கிறது.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்.
உள்ளம் என்னும் பெருங்கோயிலுக்குள் இருப்பதுதான் உடல்.
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டதாக எண்ணிக்கொள்ளுமாம். உண்மை, உள்ளம் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுதான் போகும். மீண்டும் பிறப்பெடுத்து உள்ளம் கண் திறக்கும்வரை மாயா உலகமான இந்த பூலோகம் அந்த உயிருக்கு இருள்தான்.
சுத்த மாயையின் அருளால் பிறப்பெடுக்கும் உயிரிகள், முற்பிறவிகளின் வினைப்பயனுக்கேற்ப உடலெடுக்கிறது. இந்த பிறவியில் நமக்கு கிடைத்திருக்கும் உடல், பல பிறவிகளில் நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த நல்வினை, தீவினைக்கேற்பவே அமைந்திருக்கிறது.
வினைக்கீடாய் மெய்க்கொண்டு.
இவ்வினைகள் அசுத்த மாயையின் தூண்டுதலால் நடைபெறுகிறது. மனித இச்சைகள் அதிகமாக தூண்டப்படும்பொழுது காரியங்கள் சில நேரம் நேர்மறையாகவும், சில நேரம் எதிர்மறையாகவும் நடந்தேறிவிடுகிறது.
இவ்வாறு மனிதனின் செயல்கள், இரு வினைகள், மூன்று நிலையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
முதல் நிலை, நம்முடைய செயல்கள், நாம் விரும்பி செய்ததாக கொள்ளப்பட்டு ஆகாமியம் என்று சொல்லப்படுவது. உலகில் வாழும் ஒவ்வொரு வினாடியும் இந்தக்கணக்கு விரிந்து கொண்டே செல்லும்.
நம்முடைய செயல்கள் நம்மை சுற்றி சூக்குமமாய் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலை சஞ்சிதம் என்று சொல்லப்படுகிறது. மனம் அஞ்சுவதும், மகிழ்வதும் முன்னர் செய்த வினைகள் நம்மை சூழ்ந்து நின்று இயக்குவதால்தான்.
செயல்களின் விளைவு நிலையே, இன்பம், துன்பம் என்னும் மூன்றாம் நிலையான பிராரத்தம் எனப்படுவது. நல்வினைப்பயனாக நல்ல உடலைப்பெற்றவன் பூவுலக வாழ்வினை ஆழ்ந்து இன்பமாய் அனுபவிப்பான். தீவினைப்பயனை சொல்லவே வேண்டாம், உலக வாழ்வில் துன்பம் என்று சொல்லக்கூடிய அனைத்தையும் அனுபவித்து, மேலும் மேலும் தீவினைக்குள் செலுத்திக்கொண்டிருக்கும்.
ஆழ்ந்து சிந்தித்தால், அனைத்துக்கும் மூல காரணம் மாயை என்பது புலனாகும்.
உலகே மாயம். வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் சுகமே மாயம்.
இனி பூர்வாசிரமப் பெயர் சரிப்பட்டு வராது. புதிய அவதாரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்?
இனிமேல் என் முழு உடையே கர்ச்சீப் தான். 'கர்ச்சீப் சாமியார்' சரிப்படுமா?
நோ.. நோ.. தமிழ் சாமியார்க்கு ஆங்கிலத்தில் பெயரா? அப்ப, கைக்குட்டை சாமியார்?
ok தான். அஞ்சு வருஷமா ஒரே பதவியில் இருப்பது கொஞ்சம் சரியில்லை. சோ, சாமியாருக்கு பதவி உயர்வு கொடுத்து சித்தர் ஆக்கி விடலாம்.
இனிமேல் நான், கைக்குட்டை சித்தர்.
***
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் கைக்குட்டை சித்தர்..
'சாமீ.. ஒரு சந்தேகம். தீர்த்து வைங்க சாமி'
'சொல் மகனே' - என்னுடைய பிரச்னையே என்னன்னு, எனக்கே தெரியாது.. வந்துட்டானுங்க சந்தேகத்தை தூக்கிகிட்டு, மனதில் நினைத்த படியே கேட்டார் சித்தர்.
' சாமீ, உங்களை பார்த்தா நல்லா படிச்சு, நல்ல குடும்ப அநுபவஸ்தரா தெரியுது. எப்படி சித்தர் ஆனீங்க'
'வாழ்க்கைய அனுபவித்து முடிக்கிற ஒவ்வொரு மனிதனும் இறுதியில் அடைய வேண்டிய இடம் இதுதான் என்பதற்கு நான் ஒரு அடையாளம்' - ம்ம்.. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன், பெருமூச்சுடன் பதில் வந்தது சித்தரிடமிருந்து.
'அது சரி சாமி.. அதென்ன கைக்குட்டை அடைமொழி, ஏதாவது அர்த்தம் இருக்கா சாமீ?'
'பாத்தா தெரியலையா.. என்னுடைய முழு ஆடையே கைக்குட்டைதான்' - முதலில் நான்கு மொழ வேட்டி போதும்னு இருந்தேன்.. ஈரிழை துண்டு கூட வேண்டாம்.. ஒரு கைக்குட்டை போதும்னு சொல்லிட்டா என் தர்ம பத்தினி.
'ஆண்டவரே..இவ்வளவு எளிமையா இருக்கீங்களே, எனக்கு இன்னொரு சந்தேகம்'
'சொல்லப்பா' - எப்படியோ இன்றைக்கு பொழுது போக ஒரு வழி காட்டிவிட்டான் அந்த உண்மையான ஆண்டவன்.
'உலகம் உருண்டை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எப்படியாவது என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தெய்வமே'
'சரி.. காலங்கார்த்தால உன் சந்தேகத்தை தெரிவித்ததால், உனக்கு நல்ல பதிலை தருகிறேன்.. கை பேசி வைத்திருக்கிறாயா?'
'அதில்லாமலா? அதில்லாமல் யாரும் கழிப்பறை கூட செல்வதில்லையே சாமி!'
'கிடக்கட்டும் சனியன். அதை எடுத்து நான் சொல்லும் மந்திரத்தை பதிவு செய்'
'ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..ஓம்.. ஹரி ஓம்..'
'இதை உன் அழைப்போசையாக சேமித்து வைத்துக்கொள். இதில் என் தவத்தின் வலிமையை உட்செலுத்தி இருக்கிறேன். மிகவும் சக்தி வாய்ந்தது'
'போய் வா! இன்று மாலை வேளை பூஜைக்கு வந்து சேர்.. உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்'
***
'கும்பிடறேன் சாமி'
'வந்தாச்சா மகனே?'
'சாமி.. நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரலையே சாமி'
'நம்ம பக்த கோடிகள் மாலை வேளை பூஜைக்கு வந்தாச்சா பார்'
'ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..ஓம்.. ஹரி ஓம்..' - அழைப்பு மணி ரீங்கரித்தது. காலையில் சித்தர் கொடுத்த அதே அழைப்போசை.
'பெண்ணே அந்த அழைப்பு மணி எங்கிருந்து கிடைத்தது?'
'என்னுடைய நண்பன் எனக்கு மிகவும் பிரத்தியேகமாக கொடுத்த பரிசு இது. இமய மலையில் சித்தர்கள், அகோரிகள், பிரபஞ்சவாசிகள் ஒன்று கூடி அற்புதமான நேரத்தில், நடத்திய பூஜையில் கிடைத்த நாதம் இது.'
'இதன் பலன் என்னவென்று சொல்ல முடியுமா?'
'இன்று காலையில்தான் என் நண்பன் ஆஸ்திரேலியாவில் இருந்து எனக்கு அனுப்பி வைத்தான். அதுதான் உங்கள் தரிசனம் கிடைக்க உதவி இருக்கிறது'
'பக்தா.. உனக்கு இன்னும் ப்ளாக் போடும் பழக்கம் போகவில்லையா? பரவாயில்லை. உன் உலக உருண்டை சந்தேகம் தீர்ந்ததா?' - சித்தர் பக்தன் ப்ளாக்கில் அழைப்பு மணி லிங்க் கொடுத்திருப்பான் என்றெண்ணி கேட்டார்.
'என் எண் சாண் உடம்பையும் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் சாமி. என் சந்தேகம் மட்டுமல்ல.. இனி எல்லாமே நீங்கள்தான். எனக்கும் ஒரு கைக்குட்டை கொடுத்து உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் சாமி'
'பக்தா.. என்ன வார்த்தை சொல்லி விட்டாய். எதற்காக இந்த திடீர் முடிவு?'
'குருவே, இன்று உங்கள் தெய்வீக வாக்கை என் வருங்கால மனைவி என்றெண்ணியிருந்த காதலியிடம் கொடுத்தேன். யாரிடமும் கொடுக்க வேண்டாம். ரொம்ப புனிதமானது என்று சொல்லி இருந்தேன். சே.. வாழ்க்கையில் யாரை நம்புவது என்றே தெரியவில்லை' - அருகிலிருந்த காதலியை முறைத்துக்கொண்டு சொன்னான்.
'பதற வேண்டாம்.. கொஞ்சம் பொறு.. என் ஞான திருஷ்டியில் பார்த்து சொல்கிறேன்'
'பெண்ணிடம் ஒன்றை சொல்லி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னால் அது இந்திய அளவில் ட்ரெண்டாகிவிடும் என்று தெரியாதா? ரகசியம் என்று வேறு சொல்லி இருக்கிறான்; அப்படின்னா அது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்க வேண்டும்.' - என்று நினைத்துக்கொண்டே ஞான உலகில் நுழைந்தார் சித்தர்.
'உன் காதலி அமெரிக்காவில் உள்ள தன் தங்கைக்கு கொடுத்த அழைப்போசை அவளது தோழிக்கு கை மாறி..தோழி ஆஸ்திரேலியாவில் உள்ள அவள் அண்ணனுக்கு அதை கொடுக்க, இந்தியாவில் உள்ள தன் காதலிக்கு அவன் அனுப்பி இருக்கிறான்' - சீடனாம் சீடன். இருக்கிறதே சின்ன மடம். அதையும் பங்கு போட வந்துட்டான்.
காலையில் கொடுத்த அழைப்போசை மாலைக்குள் உலகை ஒருமுறை சுற்றி கொடுத்த இடத்திற்கே வந்துவிட்டது. அப்படின்னா, உலகம் உருண்டைதானே?
'என்னை மன்னிச்சிரும்மா, இதுக்கெல்லாமா கோவிச்சுக்குவே?' - கூட வந்திருந்த காதலியை கெஞ்சினான்.
'போ.. போ.. அந்த சாமியார் கிட்டவே போ.. ஒரு கைக்குட்டை கட்டிக்கிட்டு. பக்கம் வந்தியா.. பிஞ்சிரும்'.
'சே.. சே.. எதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். இந்த ரிங் டோனை இப்பவே டெலீட் பண்ணிர்ரேன்'.
'மகனே.. அது டெலீட் பண்ணக்கூடிய ஓசையல்ல..இறை ஓசை. அண்ட சராசரங்களிலும் உன் உடலின் ஒவ்வொரு செல்லிலும் தன்னிச்சையாய் பிறந்து வளரும் ஓசை' - அசரீரி கேட்டது.
***
சித்தராவது எப்படி?
நாமும் சித்தராகலாம் என்று தோன்றுகிறதல்லவா?
அதிகம் மெனக்கெட வேண்டாம் ஜென்டில்மேன், ரொம்ப சிம்பிள். உடலில் உள்ள நவத்துவாரங்களின் தன்மை அறிந்து அமைதியாக இருந்தால் போதும்.
ஐம்புலன்கள், தன்மாத்திரைகள் என்று அறியப்படும் பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் மற்றும் நுகர்தல் என்னும் செயல்களை செய்கிறது. இந்த செயல்கள் ஐம்புலன்களில் உள்ள இந்திரியம் என்னும் ஆற்றலால் நடைபெறுகிறது.
தன்மாத்திரைகளுக்கு குறிப்பாக இரண்டு பண்புகள் உண்டு. ஒன்று உடலுக்கு வெளியே இருந்து வரும் செயல்களை அறியும் உணர்வு. மற்றொன்று உடலுக்கு உள்ளே நடக்கும் செயல்களை அறியும் உள்உணர்வு.
எந்த ஒரு முனைப்பும் இன்றி வெளியே நடப்பதை உணரும் புலன்கள், அகத்தில் இருந்து வரும் செயல்களின் வெளிப்பாட்டை இந்திரியங்கள் உணர்த்துவதில்லை.
கண்களால் புருவ மத்தியில் இருக்கும் இறைநிலையை காண முடியும். காதால் மூலாதாரத்தில் எழும் மணி ஓசை அல்லது இசையை கேட்க முடியும். மூக்கால் அகத்தில் இருந்து வரும் நறுமணத்தை அறிந்து கொள்ள முடியும். வாயால் அண்ணாக்கில் ஊரும் அமிர்தத்தை சுவைக்க முடியும். உடலோ பேரின்ப நிலையான நிரந்தர ஆனந்தத்தை எந்நேரமும் அனுபவிக்க முடியும்.
அகத்தியரின் சௌமிய சாகரம் Verse 30
பார்க்கையிலே ஐம்புலனை நன்றாய்க் கேளு
பதிவான சத்தமொடு பரிசம் ரூபம்
ஏர்க்கவே ரசமுடனே கெந்தம் ஐந்து
இன்பமுள்ள ஐம்புலனை அறிவதற்கு
சேர்க்கையுடன் ஐம்புலனிக் கண்டு மைந்தா
தேர்ந்து மனதறிவாலே தேர்ந்து கொண்டால்
மார்க்கமுள்ள சித்தரென்று யார்க்குந்தோணும்
மைந்தனே ஐம்புலனை வகுத்துக் காணே.
புலன்களை வகுத்துப்பார்த்தால் அவை தரும் இன்பம் இரண்டு வகையானது. முதல் வகை நாமெல்லோரும் ஐம்புலன்களால் புறத்தில் அனுபவிப்பது. இரண்டாம் வகை, சித்தரைப்போல் வாழ வழிகாட்டும் அக புலனின்பம். இதனை மனதில் எழும் அறிவு நிலை கொண்டே அறிய முடியும்.
மனதில் எழும் அறிவு நிலை என்பது தியானத்தின் உச்சமான சமாதி நிலையில் நிகழ்வது.
மனதில் எழும் அறிவு நிலையே இதனை சாத்தியமாக்கும் என்கிறார் திருமூலரும்.
அஞ்சையும் அடக்குஅடக்கு என்பார் அறிவிலார்
அஞ்சையும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சையும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சையும் அடக்கா அறிவை அறிந்தேனே.
ஐம்புலன்களையும் அறிவால் அறிந்து அதன் போக்கிலேயே சென்று, திசை மாற்றி, இறைநிலையில் நின்று பேரின்பம் கொள்வர் சித்தர் பெருமக்கள்.
'ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மாதிரி கடைசி ஆள் வரைக்கும் நின்னு அடிச்சாங்க..'
இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட திரை வசனம்.
நேற்று [07-NOV-2023] நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரே நடந்த போட்டியில், அது நகைச்சுவை அல்ல உண்மை என்று உலகிற்கு நடத்தி காட்டி விட்டார்கள்.
போட்டியின் ஆரம்பத்தில், வர்ணனையாளர்கள் உட்பட, அரங்கமே ஆப்கானிஸ்தான் பக்கம்தான். சமூக வலைத்தளங்களிலும் அவர்களுக்கு சாதகமான கருத்துக்கள்தான்.
அதிசயமாக எனக்கு மட்டும், ஆஸ்திரேலியா உப்பை சாப்பிடுவதாலோ என்னவோ, அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற மன ஈர்ப்பு இருந்தது. நூறைத்தாண்டாது என்ற நிலை வந்தபோது கூட, மேலே சொன்ன வசனம் மனதில் வந்து போனது.
ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று பொதுவான குணங்கள் உண்டு. சாத்துவீகம், ராஜஸம் மற்றும் தாமஸம். முதல் மற்றும் இறுதி குணங்கள் அனைவரையும் முன்னிலைப்படுத்தினாலும், இடை குணமான ராஜ குணம் மட்டுமே போற்றப்படுகிறது.
ராஜ குணத்திற்கு மட்டுமே போராடும் தன்மை இருக்கிறது. அதற்கு சாதகமாக இருப்பது கன்மேந்திரியங்கள் என்னும் கால்கள், கைகள், வாய், கருவாய் மற்றும் எருவாய்.
ஆஸ்திரேலியாவிற்கு போராட்டம் ஆரம்பித்தவுடன், களமிறங்கிய விளையாட்டு வீரருக்கு, கால்கள் தள்ளாட ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே ஒரு விபத்தில் சிக்கியதால் உடல் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை. உடலில் உள்ள தசை நார்கள் எல்லாம் முழுக்கதவடைப்பு. உதவிக்கு நின்றது கைகளும் அந்த ராஜ குணம் மட்டுமே.
திருமந்திரம் 245
வேந்தன் உலகை மிகநன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர் பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப் பாய்ந்த புலியன்ன பாவம் அகத்தானே.
புலியைப்போல் பாய்ந்து தன் நாட்டின் வெற்றியை தேடித்தந்தது இந்த ராஜ குணம்.
ஆட்டம் இழந்த முதல் ஏழு வீரர்கள் சந்தித்த அதே ஆடுகளம் மற்றும் அதே பந்து வீச்சாளர்கள். வெற்றியின் விளிம்பில் நின்றிருந்த எதிரணி பந்து வீச்சாளர்களின் வேகம் இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிப்பட்டது.
அவனுக்கு வெற்றி, தோல்வி பற்றி சிந்திக்க நேரமில்லை. வலியை போக்க வழியுமில்லை. கூட ஆடும் வீரரின் முழு ஒத்துழைப்பு மட்டுமே தேவை.
ஒன்றே ஒன்றை மட்டும் கவனம் கொள்ள வேண்டி இருந்தது. இது நாள் வரை பயிற்சி செய்த ஆட்டத்தை மட்டும் ஆடினால் போதுமானது. ஓட்டத்தை ஓடி எடுக்க முடியாது. நூற்றி முப்பது கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்தை, உடலை வளைத்தோ, குனிந்தோ அடிக்கவும் முடியாது. தலைக்கவசம் கூட பாரமே. அதையும் கழற்றி வைத்தாயிற்று.
பந்தை கணிக்க வேண்டியது, எல்லைக்கோ, எல்லை தாண்டியோ அடிக்க வேண்டியது மட்டுமே முடியும். அதாவது நான்கு அல்லது ஆறு ஓட்டங்கள் மட்டும் அடிக்க முடியும்.
சாதனையாளர்கள் பயிற்சியினால் மட்டும் இதை சாத்தியப்படுத்துகிறார்கள் என்று சொல்வது அறிவீனம். இவ்வளவு இக்கட்டான சூழலில் அவர்களின் உண்மை அறிவு அபரிமிதமாக செயல்பட ஆரம்பிக்கும்.
திருக்குறள் 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்.
காந்தாரா திரைப்படத்தில் இறுதியில் கதாநாயகனின் சண்டைக்காட்சியும், தேவராட்டமும் எளிதில் மறக்க கூடியதல்ல. அதற்கு ஒரு படி மேலே சென்று, நேற்று ஆடிய ஆட்டம், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆழிப்பேரலை.
ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொருவருக்கும் மயிர்க்கால் சிலிர்த்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிரணி வீரர்கள் இத்தகைய ஆட்டத்தின் அங்கமாக இருந்தோம் என்பதே பெரும் பெருமையாக கொள்வார்கள்.
எது எப்படியோ, விளையாட்டில் ஆர்வம் கொண்டு பயிற்சி செய்யும் இளைய சமுதாயத்திற்கு இந்த ஒரு நாள் ஆட்டம் நல்ல தூண்டுகோலாக அமையும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்காது.