Monday, September 11, 2023

இந்த நாளும் நமதே

இந்த நாளும் நமதே 


கரு உருவான நிலையில், அதன்  முதல் சிற்றறையில், பருப்பொருளான உடலும், சூக்குமப்பொருளான உயிரும் கலந்திருக்கிறது. கரு வளர வளர அனைத்து சிற்றறைகளிலும் இந்த விதி தொடர்கிறது. மண்ணில் பருப்பொருளான உடலின் செயல்கள் அனைத்துக்கும் மௌன சாட்சியாக உயிர் துணை போகிறது.

உயிர் ஏன் உடலை விட்டு பிரிய வேண்டும்?

மூன்று முக்கிய நிகழ்வுகளில் உயிர் உடலை விட்டு நீங்குகிறது. உயிர் உடலெங்கும் பரவி நிற்க தேவையான சக்தியில்லாத போது உடலை விட்டு நீங்குகிறது.

1. வயது மூப்பு மற்றும் நோய் வாய்ப்படுதல் 

2. அளவுக்கதிகமாக உடல் சக்தியை உபயோகப்படுத்துதல் 

3. மனதின் கிளர்ச்சியால் தொடர் எண்ண அலைகளை உருவாக்குதல்  

மூப்பும், நோயும் மனிதனால் தவிர்க்க முடியாதது. உடல் பயிற்சி என்ற பெயரில் எல்லை மீறிய உடல் ஆற்றல் வெளியேற்றம் அல்லது காமத்தீயில் உடலின் ஆற்றல் வெளியேற்றம். சரியான அளவில் உடல்  பயிற்சி, உறவு மூலம் இதை சரி செய்து கொள்ளலாம்.

மூன்றாவது காரணம் மிகவும் சூக்குமமானது. இந்த வினாடியில் நாம் செய்து கொண்டிருக்கும் செயலும், சிந்தனையும்  கூட எண்ண அலைகளை உயிருக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. இந்த எண்ண அலைகளின் ஆதிக்கம் என்னவென்று கண்கூடாக தெரியாது. எண்ண அலைகளுக்கும் இதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

எண்ணங்களை உருவாக்கும் நெஞ்சம் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது?

இதயம் இருக்கும் இடத்தை நெஞ்சம் என்று கூறுகிறோம். இதனையே ஆறாதார சக்கரங்களில், அநாகத சக்கரம் உள்ள இடமாக சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

நெஞ்சத்தின் தன்மைகளை அகத்தியர் கூறுவதை கேளுங்கள்.

அகத்தியரின் சௌமிய சாகரம் 32

கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.
                                       


உயிரோடு கலந்த சக்தி, மாயா  நிலையில் இயங்கும்  உடல்,  இரண்டுமே  உணர்வுகளை  மனதுக்கு  அனுப்புகிறது. மனதிற்கு என்று தனிப்பட்ட எந்த கோளும் அதாவது புலனுறுப்பும்  இல்லை. ஐம்புலன்கள்  வழங்கும்  அனைத்து செய்திகளும் மனதின் மூலம் எண்ணங்களாக வியாபிக்கிறது. இந்த எண்ணங்களே உயிரை ஆராதிக்கவும், அலைக்கழிக்கவும் செய்கிறது.

சமீபத்தில் ஒரு துர்மரண செய்தி ஒன்று அறிந்தேன். இறந்தவர் நல்ல உடல் நிலையில் உள்ளவர். ஒரு நாள் மாலை, சற்று மயக்கமாக வருகிறதென்று மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

மருத்துவர் அவரை பரிசோதித்துவிட்டு, 'நல்ல வேளை. ஆரம்ப நிலையிலேயே வந்து விட்டீர்கள். குணப்படுத்திவிடலாம், ரொம்ப மைல்டு ஸ்ட்ரோக்'தான். 

'இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்' - என்று ஒரு லிஸ்ட்டை டாக்டர் அவரிடம் கொடுத்திருக்கிறார்.

எப்படியோ தட்டு தடுமாறி, போன பைக்கிலேயே  வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார்.

அவரால் நம்ப முடியவில்லை தனக்கு வந்தது ஹார்ட் அட்டாக் என்று. கண்டிப்பாக இரண்டாவதாக ஸ்ட்ரோக் வரும். வந்தால் கதை முடிந்தது, என்ற பயத்தில் தூங்க முடியாமல் தவித்திருக்கிறார். 

எது நடக்கக்கூடாது என்று விரும்பினாரோ அது நடந்து விடும் என்று தீவிரமாக நம்ப ஆரம்பித்து, அந்த  எண்ண அலைகளை  தொடர்ந்து உயிருக்கு அனுப்ப, விடிவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

காற்றால் கட்டப்பட்டிருந்த உயிர், எண்ண அலைகளால்  விடுவிக்கப்பட்டுவிட்டது.

உடலில் இரண்டறக்கலந்துள்ள உயிர் எவ்வளவு நாள் இருக்கும்,  கலந்த உயிருடன் காலம் அறியில், என்று அறிய விரும்பினால், காற்றின் அழுத்தமான முடிச்சே,   
கலந்த உயிரது  காலின் நெருக்கம், முடிவு சொல்லும். நல்ல தீர்க்கமான முடிச்சு போட்டு விட்டால், கலந்த உயிரது காலுடன் கட்டில்,  நீண்ட நாட்கள் உடலை விட்டு உயிர் விலகாது, கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

திருமந்திரம்-592

கலந்த உயிருடன் காலம் அறியில் 
கலந்த உயிரது  காலின் நெருக்கம் 
கலந்த உயிரது காலுடன் கட்டில் 
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

எண்ண அலைகளை கட்டுப்படுத்துவதில் இருக்கிறது, உடலுடன் ஒட்டியுள்ள உயிரின் முடிச்சு. ஆரோக்கியமான அறம் சார்ந்த எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொள்வதன் மூலம் மனதை ஒரு முகப்படுத்தலாம்.

நாளை முதல் அறமிக்க வழிகளில் வாழ்வோம் என்று தீர்மானித்தால், நன்றாக சிந்தித்து பாருங்கள், நாளை என்று ஒன்று வாழ்வில் வரவே வராது. நாளை என்று வருவது எல்லாம் இன்றாக மாறிவிடும்.

*** *** ***

Thursday, September 7, 2023

மெய்ப்பொருள் காண்பதறிவு

மெய்ப்பொருள் காண்பதறிவு 


நீட்டு போய் சனாதனம் வந்தது.. டும்.. டும்.. டும்..

' அப்பாடா.. ஒரு வழியா மறந்துட்டாங்க. இனி, இவங்க கவனம் எல்லாம் சனாதனம் மட்டும்தான்.'

'எதையாவது ஒழிக்கணும்னு பேசினா, தன்னால ரெண்டு கூட்டம் சேந்துக்குது.'

'ஆட்சிக்கு வந்தா, நீட் தேர்வை ஒழிப்போம்னு சொன்னது, எவ்வளவு பிரச்னை இழுத்து விட்டுருச்சு. இதுல, ஒழிக்கிற ரகசியம் தெரியும்னு சொல்லி வழிஞ்சது வேற. போதும்டா சாமி.'

'தேர இழுத்து தெருவுல உட்டாச்சு. இனி, அவனுங்களே அடிச்சுக்குவாங்க. நம்மள கவனிக்க நேரம் இருக்காது. வேடிக்கை பார்க்கலாம்.'

'இதுல ஒரு சிக்கல் இருக்கு. ஆதரவா ஒரு கோஷ்டி, எதிரா ஒரு கோஷ்டி. யாருங்கடா இவங்கன்னு பாத்தா ரெண்டுமே அரசியல் பண்றவங்க. சாதாரண மக்கள் இதுல வர்றதேயில்ல.'

'ஒண்ணா ஆதரிக்கணும்; இல்ல, எதிர்க்கணும். இந்த நடுநிலை ஆசாமிங்கதான் டேஞ்சர்.'

'சனாதனம் வேணும்னு சொல்லு, இல்ல வேண்டாம்னு சொல்லு. அதென்ன நடுவுல நிக்கிறேன்னு கேட்டா..'

எந்த பொருளானாலும் அதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும். அதற்கு தேவை, அறிவு.

மெய்ப்பொருள் காண்பதறிவு. 

அது எந்த அணியிலும் சேராத, நடு நிலை வகிக்கும் சாதாரண மக்களுக்குத்தான் புரியும். நடுநிலை வகிப்போர், சிந்திப்பவர்கள். தங்களின் அறிவினைக் கொண்டு ஆய்வு செய்பவர்கள். 

நடுநிலை வகிப்பவர்கள் ஞானம் உள்ளவர்கள். அவர்களுக்கு நரகம் வாய்க்காது. தேவர்களுடன் சேர்வார்கள். அதனால் நானும் நடுநிலை வகிக்கிறேன்.

திருமந்திரம்-320

நடுவு நின்றார்க்குஅன்றி ஞானமும் இல்லை
நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை 
நடுவு நின்றார்நல்ல தேவரும் ஆவர் 
நடுவு நின்றார்வழி நானும்நின் றேனே. 

நடுவு நிற்பது என்பது சமாதி நிலை. 

இந்த சமாதி நிலை என்பது,  இடைகலை நாடி எனப்படும் இடது நாசி வழியாக சுவாசிக்கும் குளிர்ந்த காற்றும், பிங்கலை நாடி எனப்படும் வலது நாசி வழியாக சுவாசிக்கும் சூடான காற்றும், மூலாதாரத்தில் உள்ள அக்னி நாடியில் சந்தித்து புருவ நடுவில் உள்ள சந்திர மண்டலத்திற்கு எடுத்து சென்று அதன் மீது தியானத்தில், சமாதி நிலையில் லயித்திருப்பது.

இவ்வாறு சமாதி நிலையில் இருப்பவர்கள் ஞானிகளாவர்; சொர்கத்தில் நிலை கொள்வர்; தேவர்களுக்கு இணையாக இருப்பர். எனவே, நானும் அவர்கள் வழியில் நடுவு நிற்கிறேன் என்று திருமூலர் கூறுகிறார்.

ஆனா, நம்ம அறிவு எப்படி இருக்குன்னு பாருங்க.

திருமந்திரம்-871

பாம்பு மதியைத் தினல்உறும் பாம்பது 
தீங்கு கதிரையும் சோதித்து அனலுறும் 
பாம்பு மதியம் பகைதீர்த்து உடன்கொளீ 
நீங்கல்  கொடானே நெடுந்தகை யானே.

மூலாதாரத்திலிருந்து அக்னிநாடியில் எழும் குண்டலினிப் பாம்பு  புருவ நடுவில் இருக்கும் சந்திரனை மறைத்து நிற்கும். மூலாதாரத்தில் இருக்கும் சூரியக் கதிர்களின் வெப்பத்தையும் கொண்டிருக்கும். தியானத்தின் மூலம் குண்டலினியின் இருப்பை புருவ நடுவில் உணர்ந்து கொண்டால், இறைவன் உன்னை விட்டு நீங்க மாட்டான்.

இது மெய்ப்பொருள் அறிய நினைப்போருக்கு கிடைக்கும் ஆன்மீக விளக்கம். 

இதுவே, நம்ம பகுத்தறிவு கூட்டத்திற்கு எப்படி தெரிந்தது தெரியுமா?

'இனிமேல் சந்திரனை பாம்பு விழுங்கி  விடும் என கதை அடிக்க முடியாது' - சந்திரயான் நிலவில் தரை இறங்கியபோது அவர்கள் சொன்ன கருத்து.

திருக்குறள்-423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது  அறிவு. 

'சனாதனம் இருக்குன்னு நீ சொல்றே. இல்லன்னு அவன் சொல்றான்.  சனாதனம்னு ஒண்ணு  இருந்தா நல்லா இருக்கும்ன்னு  நான்  சொல்றேன்.'

இன்றைய சூழலில், சனாதனம்னு ஒன்று இருப்பதாகவே யாருக்கும் தெரியாது. அது தானாக வேறு தளத்திற்கு மாறிவிட்டது. அதைத்தேடி கண்டு பிடித்து ஒழிப்பது என்பது, கொசுவைத்  தேடி கண்டுபிடித்து, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, ஒழிப்பது போல்தான்.  

நீட் ஒழிப்பு என்ற ஒன்றை மறைக்க, சனாதனம் என்ற இன்னொன்றை இழுத்துவிட்டு  அரசியலாக்கிவிட்டார்கள்.

*** *** *** 




Tuesday, September 5, 2023

ஆஸ்திரேலிய சனாதனம்

 ஆஸ்திரேலிய சனாதனம் 




சமூக நீதி vs சனாதனம்.

ஒரே வாய்ப்பு தான், ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு.

வாக்களி:  ஆமாம் அல்லது  இல்லை.

65000 ஆண்டுகளாக  இந்த மண்ணில் வாழும்,  மண்ணின் மைந்தர்களின் குரல் சட்டமாக்கப்பட வேண்டுமா, வேண்டாமா? 

இன்று ஒடுக்கப்பட்டவர்களாக நிற்கும் அவர்களின் கலாச்சாரம், பண்பாடு காக்கப்பட வேண்டுமா வேண்டாமா?

சொல், ஒரு வார்த்தையில்.

அக்டோபர் 14, 2023. அனைத்து குடிமகன்களின் கட்டாயக்கடமை வாக்களிப்பது. ஆஸ்திரேலிய அரசின் சமூக நீதி காக்க எடுக்கும் சனாதன முயற்சி இது.

அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டுகளுக்கெல்லாம் இங்கே வேலை இல்லை. இந்தியாவில்  தேர்தல் வேளையிலோ, சட்டம் ஊழல்வாதியை நெருங்கும்போதோ  எழும் சமூக நீதி போராட்டம் அல்ல இது. 

எந்த பிரச்னையையும் உணர்வுரீதியாக அணுகும்போது எடுத்துக்கொண்ட கொள்கையின்  பொருள் நீர்த்து போகிறது. பத்து கோடி தலைக்கு என்பதும், பத்து போதும் தலை சீவ என்பதும் எடுத்துக்கொண்ட கொள்கையை கேலிக்கூத்தாக்கி விடுகிறது. அறிவுரீதியாக முடிவெடுப்பதாக இருந்தால் மக்களிடம் கருத்து கேட்பதே சிறந்ததாக இருக்கும். இந்தியாவிலும் பொது வாக்கெடுப்பு நடத்தி இதற்கொரு தீர்வு காணலாம்.

சனாதனம் வேண்டுமா? வேண்டாமா? சொல் ஒரு வார்த்தையில்.

ஒரு சாரார் தூக்கி பிடிப்பதும், ஒரு சாரார் அடித்து துவைப்பதும் எந்த விதத்திலும் மாற்றத்தை கொண்டு வராது. அடுத்த வருடம் வரப்போகும் இந்திய பாராளுமன்றத் தேர்தல் இப்பொழுதே களை கட்டிவிட்டது என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

மக்களின் அறியாமையே அரசியல்வாதிகளின் மூலதனம்.

புகை பிடிப்பது உடலுக்கு கேடு, மது அருந்துவது உடலுக்கும் குடும்பத்துக்கும் கேடு என்று அறிவுறுத்தும் அரசுதான் இவைகளின் தயாரிப்பு, உற்பத்தி  தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குவதோடல்லாமல்  கடைகளையும் திறந்து வைத்து விற்பனை இலக்குடன் செயல்பட்டுக்கொண்டு உள்ளது. 

இதில் எங்கே சமூக நீதி?

சமூக நீதி வேண்டுமா? வேண்டாமா? சொல் ஒரு வார்த்தையில்.

கடைசியில், சமூக நீதி வேண்டுமா? சனாதனம் வேண்டுமா? சொல் ஒரு வார்த்தையில்.

குடிமக்களின்  அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை. அதே மாண்பு  தனி மனிதனுக்கும், சக மனிதர்களிடையே, உயிர்களிடையே இருக்க வேண்டும்.

அடிப்படை சமூக நீதியை எப்படி  பட்டியலிடுகிறார் திருமூலர் என்று பாருங்கள்.

உன்னால் படையலிட்டு, தேங்காய், பழம் வைத்து பூஜை செய்ய முடியாவிட்டாலும், யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை, ஒரு கொத்து துளசி இலை போதும். இறைவன் இதை செய், அதை செய்  என்று உன்னிடம் சொல்லவில்லை. உனக்கு எப்பொழுதும் இறை உணர்வு இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு கையுறை என்னும்போது, பிற உயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணி அதன் பசியை போக்குவதும் மனிதனின் கடமை. யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி - இது சக மனிதர்கள் தேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே, உன்னிடம் ஒன்றுமில்லை என்றால்கூட பரவாயில்லை, சகமனிதர்களிடம் பேசும்போது இனிமையாக பேசுவதுகூட சமூகநீதிதான்.

திருமந்திரம்-252

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை   
யாவர்க்கு மாம்பசு வுக்குஒரு கையுறை  
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி 
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.
 

அடுத்த சமூக நீதியாக என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

கொடுப்பதென்று முடிவாகிவிட்டால் எல்லோருக்கும் கொடுங்கள். அவருக்கு மட்டும், இவருக்கு இல்லை என்று விலக்காதீர்கள், ஆர்க்கும் இடுமின், அவரி வர் என்னன்மின். விருந்தினர், பசித்தவர்  யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு உண்ணுங்கள். மீந்து போன பழைய உணவை உண்ணாதீர்கள், பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின். உணவு உண்பதில் மிகுந்த ஆர்வம் உள்ள நீங்கள் வேக, வேகமாக உண்ணாமல் சுவைத்து உண்ணுங்கள், வேட்கையுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின். வேகமாக உண்பதால் வயிற்றில் தொல்லை  உண்டாகும். காகங்களைப் பாருங்கள், உணவு கிடைத்தால், காக்கை கரைந்துண்ணும், தன் இனத்தை உண்ண அழைக்கும். அதைவிட முக்கியமானது பசித்து உண்பது, காலம் அறிமினே, பசித்த நேரத்தில்தான் உண்ண வேண்டும்.

திருமந்திரம்-250

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் 
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின் 
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் 
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

இறைவன் பெயரை சொல்லி பால், தேன் அபிஷேகம் செய்வதாலோ, ஆடு, கோழி என்று பலி கொடுத்து உணவு படைப்பதாலோ  எந்த பலனும் இல்லை. இறைவனும் உண்பதில்லை; மனிதனும் உண்பதில்லை. அதே உணவில்லாமல் பரிதவிக்கும் ஒரு மனிதனுக்கு கொடுத்தால் அவனுக்கும் பசி நீங்கும். அவனுள் இருக்கும் இறைவனும் மகிழ்ந்திருப்பான்.

திருமந்திரம்-1857

படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில் 
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா 
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.  

சமூக நீதியோ, சனாதனமோ எதுவாக இருப்பினும்  அதை தீர்மானிப்பது மனிதனின் அடிப்படை குணமே. மனித உடல் எடுக்கும்போதே மூன்று குணங்கள் அவனோடு பிறந்து விடுகிறது.

அவைகள்  சாத்வீகம், ராஜஷம்  மற்றும் தாமசம்.

இதில் தாமச  குணத்தை ஒதுக்கி, ராஜஸ குணத்தில் முன்னேறி  உயர்வான சாத்வீக குணத்தை அடைய, அடைய மனிதன்  அழகாக சமூக நீதி வாழ்க்கையில் இணைந்து உலகையே சொர்க்கமாக்குகிறான்.

*** *** ***




 


Sunday, September 3, 2023

உனக்குள் ஒரு ஆதித்யா

உனக்குள் ஒரு ஆதித்யா 


செப்டம்பர் 2, 2023.

ஆதித்யனின் சூரியனை நோக்கிய பயணம் வெற்றிகரமாக துவங்கியது. அறிவியல் ஆய்வில் இது இன்னொரு மைல்கல். பூமித்தாயின், மண்ணின் மைந்தர்கள், தாயினை காக்க எடுத்துக்கொள்ளும் அன்பு முயற்சி இது.

உனக்குள்ளேயும்  ஒரு ஆதவன் ஒளிர்ந்து கொண்டிருப்பது பற்றி தெரியுமா? ஆதவனின் ஒளி பெற்ற நிலவின் கதிர்கள் உனக்குள்ளும்  இருப்பது தெரியுமா?

அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு, பூமித்தாய் வழங்கிய நம் உடலையும், இறையருள் வழங்கிய உயிரைப்பற்றியும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

எரிக்கும் கதிர்களை உடைய சூரியன் உனக்குள்ளே குளிர்ந்த கதிர்களை வீசுகிறான். எரிகதிர் ஞாயிறு மின்பனி சோரும், மூலாதாரத்தில் உதிக்கும் இந்த சூரியன் உடல் முழுதும் கதிர்களை வீசிய வண்ணம் உள்ளான். ஆனால் சூரியனைப்போல் எரிக்காமல். அங்கி மிகாமல், உடலைக்காக்கும் அளவிற்கு பனிபோல் குளிர்ந்து வீசிக்கொண்டிருக்கிறான். 

இந்த நிலவைப்பாருங்கள். எரிகதிர் சோமன் எதிர்நின்று எரிப்ப, மூலாதாரத்தில் இருந்து வரும் குளிர்ந்த ஒளிக்கதிர்களைப் பெற்றும், உடலையே  எரித்துவிடக்கூடிய வெப்பத்தின் ஒளியை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஐம்புலன்களின் ஆட்சியால் உடல் காமத்தீயில் கனன்று கொண்டிருக்கிறது.

விரிகதிர் உள்ளே விளங்கும் என்ஆவி, உயிர் சூரியக்கதிர்களின் இயக்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த சூரியக்கதிர்களும், சந்திரகாந்த ஒளிக்கதிரும் ஒன்றானால், ஒருகதிர் ஆகில் உவா அதுவாமே, அதுவே உலகில் நாம் அடையும் பேருவுகையான பேரின்பம் ஆகும்.

திருமந்திரம் - 1988

எரிகதிர் ஞாயிறு மின்பனி சோரும் 
எரிகதிர் சோமன் எதிர்நின்று எரிப்ப 
விரிகதிர் உள்ளே விளங்கும் என்ஆவி 
ஒருகதிர் ஆகில் உவா அதுவாமே.

சூரியன் என்றால் சுட வேண்டும். அது எப்படி குளிர்ந்த கதிர்களைத்தரும். உடலில் உள்ள  சூரியன் வழங்குவது இறைக்கனல். சூரியக்கதிர்களை குவியச்செய்தால் அது அதனைச்சூழ்ந்துள்ள பஞ்சினை எரித்து விடும். ஆனால், உடலினை சுற்றி உள்ள இந்த சூரியக்கதிர்களோ  உடலை எரிப்பதில்லை, சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ்பஞ்சைச்  சுட்டிடா.

இந்த இறைக்கனலும் சூரியனைப்போல் சுடும். இறைக்கனல் சுடுவது, சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே, மும்மலங்கள் எனப்படும் ஆணவம், கன்மம், மாயை சுட்டெரிக்கப்படுகிறது.

திருமந்திரம்-117

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே 
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச்  சுட்டிடா 
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் 
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. 


சூரியன் முன்னர் அற்ற மலங்களே என்னும்போது, மும்மலங்கள் அழிந்து போகிறது.

ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்பவையே மும்மலங்கள்.

1. ஆணவம்:

முக்காலமும் உணர்ந்த ஞானி என்று  சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். 

முக்காலம் என்றால்?

இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலம். யாரும் எளிதாக சொல்லி விடலாம். அதையே ஞானியிடம் கேட்டால், பிறப்பின்முன், பிறப்பு மற்றும் இறப்பின்பின் என்று சொல்வார்.

பிறப்பின் முன் இருந்த இடம் இரவு, கேவலம். பிறப்பில் இருப்பது பகல், சகலம். இறப்பின் பின் உயிர் செல்லுமிடம் இராப்பகல் அற்ற இடம், சுத்தம்.

பிறப்பிற்கு முன் இரவு நிலையில் உயிர் இருக்கிறது. அதற்கு உலகில் உள்ள எதையும் பார்க்கவோ தெரிந்து கொள்ளவோ முடியாது.   இருக்கும் ஒன்றை அறிந்து கொள்ள இயலாத  நிலையில் இருப்பது ஆணவம்.

இதையே, நாம் உறங்கும்போது எல்லாம் இருக்கிறது. ஆனால், எதையும் தெரிந்து கொள்ளும் உணர்வு நம் புலன்களுக்கு இல்லை என்றும் கொள்ளலாம். அல்லது, ஒரு அறையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அறையில் வெளிச்சம் அற்ற நிலை ஏற்படுகிறது. இப்பொழுது கண்களால் எதையும் காண முடியவில்லை. இம்மாதிரியான நிலையே ஆணவ நிலை எனப்படும்.

எவ்வாறு மண்ணில் உயிர்ப்பெடுக்கும் எவ்வுயிரும் காமத்தை இயங்குதளமாக கொண்டிருக்கிறதோ, அதேபோல் மெய்ப்பொருளை உணரவொட்டாத ஆணவ நிலையும் கொண்டே பிறக்கிறது.

2. கன்மம் 

இரண்டாவதாக, உடலெடுத்து  வருகையில், பிறப்புடன் சகலத்தில், சகலருக்கும்  வருவது கன்மம் எனப்படும் கர்ம வினை.

வினைக்கீடாய் மெய்க்கொண்டு, மனிதனுக்கு உடல் கிடைப்பதே அவன் முற்பிறவியில் செய்த இரு வினைகளுக்கேற்பத்தான்.

வள்ளுவர் கூட இருள் சேர் இருவினையும் என்று குறிப்பிடுவது, நீங்கள் செய்யக்கூடிய வினைகள் தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, இறப்பிற்குப்பின் உங்களுடன் நிலைத்திருக்கும் என்பதைத்தான்.

3. மாயை  

அடுத்து வருவதுதான் மாயை.

முப்பத்தாறு தத்துவங்களில் மாயையை விளக்குவது வித்யா தத்துவங்கள்.

வித்யா தத்துவங்கள் ஏழு. 

அவை முறையே, 

1. காலம் 2. நியதி 3. கலை 4. வித்தை  5. அராகம் 6. புருடன் 7. மாயை. 

நம் கண் முன்னர் தோன்றும் காட்சிகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இதுதான் உண்மை என்றோ, நிலையானது என்றோ எதுவுமில்லை. ஆனால், மனம் அதை ஏற்க மறுத்து, இந்த உயிர் நிலையானது, உடல் நிலையானது, நாம் பெரும் சுகானுபவங்கள் நிலையானது என்று அதன் பின்னர் ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதிவரை உண்மை நிலையை, மாயையின் இருப்பை, மனம் அறிவதே இல்லை. 

விரிகதிர் உள்ளே விளங்கும் என்ஆவி 
ஒருகதிர் ஆகில் உவா அதுவாமே.

இறைக்கனல் என்னும் சூரியன், சுழு முனையில் இறைக்கதிருடன் இணைந்து தன்மயமாகும் போது, 

சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் 
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. 

இங்கே, சூரியன் மும்மலங்களை அழித்து இறைவனுடன் ஐக்கியமாகிறான்.

*** *** ***







Thursday, August 31, 2023

கிரியாவூக்கி - சிவசக்தி

கிரியாவூக்கி - சிவசக்தி 


[சொன்னது: நிலவில் வெப்பம் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ்.  இருந்தது: +50 டிகிரி செல்சியஸ். சொன்னது: தண்ணீர் உறைந்து இருக்கிறது. இல்லாதது: மேகங்கள்]

இந்திய நேரம் மாலை 6 மணி. 23 ஆகஸ்ட் 2023.

உலகமே வியந்து வானத்தை பார்த்துக்கொண்டிருந்தது தொலைக்காட்சியில்.

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

வாழ்த்துகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்ந்த அனைத்து சக தோழர்களுக்கும். நீங்கள் கொடுத்த பரிசு அளப்பரியது.  தொடரும் உங்கள்  முயற்சிகள் வெற்றி பெறட்டும்.  

சந்திரயான் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது.

தரை இறங்கிய  இடம், சிவசக்தி.

இனி சிவசக்தி பற்றி கொஞ்சம்  ஆய்வு செய்து பார்ப்போம்.

முதலில் கிரியாவூக்கி என்றால் என்னவென்று சொல்லி விடலாம்.

தானெந்த மாற்றமும் அடையாமல், தன்னை சார்ந்தவர்களின் செயலாற்றலை ஊக்கப்படுத்துவதே கிரியாவூக்கி. இதை ஆங்கிலத்தில் CATALYST என்று சொல்வார்கள்.

சிவன் ஒரு கிரியாவூக்கி. 

சிவம் என்பது ஞானம் மற்றும் நாதம். தனித்து இயங்காது.

சக்தி என்பது கிரியா சக்தி. விந்து எனப்படும் ஒளி வடிவானவள். சிவத்துடன் சேர்ந்து இயங்குபவள். இவளுடன் இணைந்திருப்பது இச்சா சக்தி என்னும் ஆசை.

சிவமும் சக்தியும் சேர்ந்து இயங்குவதே சிவசக்தி.

நாதத்தில் விந்துவும் அதாவது ஒலியில், ஒளி இயல்பாகவே கலந்தியங்கும் தன்மை உள்ளது. இடி, மின்னலை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இவ்வாறான ஒலியும், ஒளியுமாக கலந்து, நாதவிந்துக்களில் தீதற்று அகம்வந்த  சிவசத்தியாக நம் உடலில் கலந்திருக்கிறது. இந்த சிவசக்தியே, பேதித்து  ஞானங்கிரியை பிறத்தலால், உடல் இன்பத்தை தூண்டி ஆசையை தோற்றுவிக்கிறது. அந்த இச்சையின் தோற்றமே உடலில் விந்தாக, வித்தாக மலர்கிறது.

திருமந்திரம் - 382

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற்று அகம்வந்த  சிவசத்தி என்னவே 
பேதித்து  ஞானங்கிரியை பிறத்தலால் 
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே.

இங்கே நாம் முப்பத்தாறு தத்துவங்களின் அங்கமான சிவ தத்துவங்களைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது. 

சிவ தத்துவங்கள் ஐந்து. 

அவை முறையே, 1. ஞானம் 2. கிரியா சக்தி 3. சுத்த வித்தை 4. ஈஸ்வரம் 5. சதாசிவம் எனப்படும். 

ஞானத்துடன் சேர்ந்த கிரியாசக்தி சிவசக்தி. இந்த சிவசக்தியில் ஞானம் மிக்கு இச்சை குறைவாக இருப்பின் அது சுத்த வித்தை, ஞானிகளை சாரும். இச்சை அதிகமாக  இருந்தால் ஈஸ்வரம், நம்மைப்போன்றோரை சாரும். ஞானமும் இச்சையும் சமமாக  இருந்தால் அது சதாசிவம், யோகிகளை சாரும்.

இந்த சிவசக்தி உடலில் நின்று இயங்கும் இடம் சுழி முனை எனப்படும் நெற்றி ஆகும். இதனையே சந்திர மண்டலம் என்று அனைத்து சித்தர்களும் எடுத்து சொல்லி இருக்கிறார்கள். இங்கே உற்பத்தி ஆவது அமிர்தம் அல்லது சோமப்பால். இதனையே சிவயோகிகள் உண்டு சமாதியில்  லயித்திருப்பார்கள்.

இச்சா சக்தியின் மிகுதியால் உண்டாகும் விந்து, வாதித்த இச்சையில் வந்தெழும் விந்து, புதிய உயிர்களை உருவாக்கும் திறன் கொண்டது.

கீழ் நோக்கி பாயும் தன்மை கொண்ட விந்துவை, கீழே சென்று வீணாகாமல் மறித்து மேலே ஏற்ற வேண்டும். அதற்கு, வற்ற அனலைக் கொழுவி, மூச்சுக்காற்றைக் கொண்டு மூலாதார நெருப்பில் விந்துவை மேலே சுழுமுனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.  பின்னர் தியானத்தில், துற்ற சுழிஅனல் சொருகிச் சுடர்உற்று,  சுழுமுனையில் நிலைத்திருக்க, முழு நிலவின் அமுதை,  முற்ற மதியத்து அமுதை, சிவயோகியர் உண்டு தியானத்தில் களித்திருப்பார்கள்.

திருமந்திரம் - 1949

வற்ற அனலைக் கொழுவி மறித்தேற்றி 
துற்ற சுழிஅனல் சொருகிச் சுடர்உற்று 
முற்ற மதியத்து அமுதை முறை முறை 
செற்று உண்பவரே  சிவயோகி யாரே.

சிவசக்தியில் அமிர்தம் உருவாகட்டும். உலகம் முழுவதும் அதன் பலனை அனுபவிக்கட்டும்.

வாழ்க இஸ்ரோ! வளர்க அதன் பணி!!

*** ***




Tuesday, August 15, 2023

ஆதித்யா - சூரிய வெப்பமானி


ஆதித்யா - சூரிய வெப்பமானி  



ஆதித்யா - சூரிய வெப்பமானி

மட்டிட்டது அறிவியல். மட்டற்றது ஆன்மிகம்.

அறிவியலின் எல்லை ஆறறிவுக்கு உட்பட்டது. ஆன்மீகத்தின் எல்லை மனித அறிவுக்கு அப்பாற்பட்டது.

சூரியனின் எரிபொருள், ஹைட்ரஜன்  என்று  சொல்லும் அறிவியல், உயிரின் எரிபொருள் என்னவென்று சொல்ல முடியவில்லை.

ஒரு நாள் வரலாம்.. அது பிரளய காலமாக இருக்கலாம். சூரியனின் எரிபொருள் தீர்ந்து போகலாம், அறிவியல் அனுமானப்படி. சூரியகாந்தப்புயல் கோள்கள் தோறும் வீசலாம். உயிரினமே அற்ற மயான கிரகமாகக்கூட பூமி மாறலாம். 

ஆனால், மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் உயிரினத்தின், உயிர்காந்தப்பற்று மாறவே மாறாது. உயிரின் உள்ளே கனன்றுகொண்டிருக்கும்  இறைக்கனல்  தீரவே தீராது. 

ஆதித்யா L1: சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக செல்லும் விண்கலம். பூமிக்கு வாசற்படியில் இருக்கும் நிலவில், என்ன இருக்கிறதென்று சொல்ல  முடியாத அறிவியல், இங்கிருந்து வெறும் பதினைந்து  லட்சம் கிலோமீட்டரில் நிலை நிறுத்தப்படும் ஆதித்யா  L1, அதைவிட தொண்ணூற்றொன்பது மடங்கு தள்ளி,  பூமியிலிருந்து பதினைந்து கோடி கிலோமீட்டர்  தள்ளி இருக்கும் சூரியனை ஆய்வு செய்யப்போகிறது. சூரியனின் உள்வெப்பநிலையும், ரொம்ப அதிகமில்லை.. ச்சும்மா..  ஒன்றரை கோடி டிகிரி செல்சியஸ்தான். இதுவும்  அறிவியல் ஆய்வில் அறிவித்த  செய்திகளே!

படிப்பதற்கே நகைச்சுவையாக தோன்றும் இந்த செய்தி, சூரியனின் எரிபொருள் உண்மையை உலகுக்கு உரைக்குமானால், இஸ்ரோவின் முயற்சி  வெற்றிபெற மனித குலம் வாழ்த்த வேண்டும்.

ஆன்மிகம் காட்டும் வழியை பாருங்கள்.

ரொம்ப அதிகமில்லை ஜென்டில்மேன். ஜஸ்ட், ஒரு பன்னிரண்டு அங்குலம். ஆய்வு செய்தாலே போதும். உயிரின் எரிபொருளை, ஆய்வு செய்து  அறிந்து கொள்ளலாம்.

வாருங்கள், அது  எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.

நாம் சுவாசிக்கும் காற்று எட்டு விரற்கடை தூரம் உள் சென்று,  பின்னர்  திரும்புகிறது. இடது நாசி வழியாக செல்லும் காற்று  சந்திர கலை. இரவைக்குறிக்கிறது. வலது நாசி வழியாக செல்லும் காற்று சூரிய கலை. இது பகலைக்குறிக்கிறது.

பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவுள்ளது. இங்கே பன்னிரண்டு என்பது தூரத்தையும், ஆனை என்பது சுவாசிக்கும் காற்றையும் குறிப்பிடுகிறது. பகல் இரவு என்பது இரு நாசிகள் வழியாக சென்றுவரும் காற்று. 

எட்டு விரற்கடை எப்படி பன்னிரண்டாகலாம்? இந்த கேள்வி நமக்குள் எழுவது நியாயமானதே. அதனால்தான் பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன் என்கிறார் திருமூலர்.

எட்டு விரற்கடை அளவே உள்ளே சென்று திரும்பும் மூச்சுக்காற்று. வெளியேறும் வாயுவை உள்முகமாகவே  மேலும் நான்கு விரற்கடை மேலேற்றி கொண்டு செல்ல வேண்டும். 

முதலில் நாம் சுவாசிக்கும் காற்றில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

மூச்சுக்காற்றில் உள்ளது பத்து வகையான வாயுக்கள். குறிப்பாக இரண்டு வாயுக்களைப்பற்றி தெரிந்துகொள்வோம். ஒன்று பிராணன் மற்றொன்று  அபானன். பிராண வாயு உயிருடன் இணைந்து மேல்நோக்கி செல்லும் தன்மை உடையது. அபான வாயு கீழ் நோக்கி செல்லும் தன்மை உடையது, உயிர் வித்துக்களை வெளிசெலுத்த உந்து சக்தி தந்து  புதிய  உயிரை உருவாக்குவதுதான்  இதன் வேலை. இவ்வாயுவை மேல்நோக்கி எழுப்பும்போது, கூடவே, உயிர் சக்தியான விந்து சக்தியும் மேலே செல்ல ஆரம்பிக்கும்.

இரு வாயுக்களும் மூலாதாரத்தில் சந்திக்கின்றன. இவ்வாறு சந்திக்கும் வாயுக்கள் தங்கள் வேலை முடிந்ததும் மூக்கு வழியாக வெளியேறி விடுகிறது.

இவ்வாறு வெளியேறும் வாயுவை மூச்சுப்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சியின் மூலம் உள்முகமாக திருப்பி மேலும் நான்கு விரற்கடை சுழுமுனைக்கு மேலேற்ற வேண்டும். ஆக, எட்டு விரற்கடை சென்று திரும்பும் மூச்சுக்காற்று இப்போது பன்னிரண்டு விரற்கடை.

இவ்வாறாக  பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்,  பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே.  தியானத்தின் மூலம் இரு வாயுக்களையும் சுழுமுனை நாடி வழியாக சுழு முனைக்கு கொண்டு செல்பவர்களுக்கு, மூன்று நாடிகளும் ஒன்றாய் இணைந்து செயல்படும்.

திருமந்திரம் 577

பன்னிரண்டு ஆனைக்குப் பகல்இர வுள்ளது
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன் 
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின் 
பன்னிரண்டு ஆனைக்குப் பகல்இரவு இல்லையே. 

நாம் சுவாசிக்குக் காற்று,  கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்  ஓடுவர் மீளுவர், உள்ளும் வெளியும் போய்  வந்து கொண்டிருக்கும். இது பன்னிரண்டு அங்குலமும் செல்லும், பன்னிரண்(டு) அங்குலம் நீடுவர். எட்டு அங்குலத்தில் திரும்பும் இக்காற்று, எண்விரல் கண்டிப்பர், நான்கு விரற்கடை சேர்ந்து பன்னிரண்டு விரற்கடை ஆனால்,  நால்விரல் கூடிக்கொளின் கோல அஞ்செழுத்து ஆமே, அதுவே நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் பலனாகும்.

திருமந்திரம் 576

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் 
ஓடுவர் மீளுவர் பன்னிரண்(டு) அங்குலம் 
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் 
கூடிக் கொளின்கோல அஞ்செழுத்து ஆமே.

மூலாதாரத்தில் இருந்து எழும் இறைக்கனலுக்கு எரிபொருள் நாம்  சுவாசிக்கும் காற்று. சுவாசிப்பது நின்று விட்டால், உயிர் உடலை விட்டு நீங்கி விடுகிறது.

சூரியனுக்கு எரிபொருள் ஹைட்ரஜன், அது சரி. சூரியனை முதலில் பற்ற வைத்தது யார்? உயிருக்கு எரிபொருள் பிராண வாயு. பிராண வாயுவை எரிக்கும் அல்லது தூண்டும் கனல் எது?

அதுவே உயிருக்குள் கரைந்திருக்கும் இறைக்கனல். உடலெங்கும் பரவி இருக்கும் இறைக்கனல், பிராணவாயுவுடன் சேர்ந்து சிற்றறைகளில் உள்ள சத்தினை எரிக்கிறது. இதுவே உடலின் ஆற்றலாகவும், வெப்பமாகவும் இருக்கிறது.

 ஆனால் இறைக்கனலின் மூலம் யாருக்குத்தெரியும்?

*** *** ***




Saturday, August 12, 2023

வாழ்ந்தாக வேண்டும்

வாழ்ந்தாக வேண்டும்  


வாழ்ந்தாக வேண்டும்.

தன்னை விரும்பிய பெண்ணின் காதலை நேரடியாக ஏற்காமல்,  விளையாட்டாக மறுத்ததன்  விளைவு அவளின் மரணம். அவளில்லாத வாழ்வு மரண வேதனையை  தந்தாலும், உயிருடன் வாழ்ந்து இப்பிறவிக்கடன் தீர்க்க வேண்டிய கட்டாயம், கதாநாயகனுக்கு.

வாழ்ந்தாக வேண்டும்.  வா.. வா.. கண்ணே!

காதல் கைகூடியவன்  கூட இந்தப்  பாடலை கேட்டால் ஒரு நிமிடம் கரைந்து போவான்.

ராசாத்தி.. ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது.  

இனி அவனது வாழ்க்கையில் எந்த பற்றும் இல்லை. பற்றற்ற வாழ்வில் உடலில் உயிர் உள்ளவரை வாழ்ந்தாக வேண்டும். உயிருக்கும் உடலுக்கும் உள்ள பந்தத்தை வாழ்ந்துதான் தீர்த்தாக வேண்டும்.

வெந்ததை தின்று வேளை வரும்போது போய் சேரலாம்  என்றிருப்பவர்களுக்கு எதுவும் தேவை இல்லை.

இந்த பிறவி கிடைத்ததற்கு, வாழும் நாட்களில் உயிரை இறை நிலைக்கு கொண்டு செல்ல எண்ணுபவர்கள் அதற்கான முயற்சியை செய்துதான் ஆக வேண்டும் 

வாழ்வது என்று முடிவாகிவிட்டால், ஆரோக்கியமாக உடலையும், மனதையும் வைத்து வாழ வேண்டும். இறைவன் இணையடி  சேரும் வண்ணம் இறையருள் பெரும் வழியில் வாழ வேண்டும்.

அது அவ்வளவு எளிதல்ல.

இங்கேதான், பல பிறவிகளில் உயிர் பெற்று வந்த கர்ம வினைகள் செயலுக்கு வருகின்றது. மும்மலமான  ஆணவம், கன்மம், மாயை என்ற மாய  வலைப் பின்னலை  மனிதன் அறிய முற்படுகிறான். ஒவ்வொரு படி முன்னேற்றமும் பல படிகள் பின்னோக்கி தள்ளும்.

காமம் எப்படி மண்ணில் பிறப்பெடுத்த அனைவருக்கும், அது தேவர்களானாலும் சரி, பொதுவாக உள்ளதோ அதேமாதிரி மும்மலமும் அனைவருக்கும் பொதுவானதே. மும்மலங்களால் உயிர்வர்கம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. தன்னை உணர்ந்து இறை நிலைக்கு செல்ல  மனிதர்களுக்கு இது மூன்று படிக்கற்களாக இருக்கிறது.   

அவர்களை,

1.விஞ்ஞானாகலர்
2. பிரளயாகலர்
3. சகலர்

என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

மூன்றாவது அல்லது  இறையை அணுகி இறுதி நிலையில் இருப்பவர்களுக்கு அடுத்த பிறவி கிடையாது. இவர்கள் பிறவிப்பெருங்கடல் நீந்தியவர்கள். மும்மலங்களில் ஆணவ மலம் மட்டும் கொண்டவர்கள். இம்மாதிரியான மூன்றாம் படிநிலை  அடைந்தவர்கள்  விஞ்ஞானாகலர்.

இரண்டாம் படியில் ஆணவம், கன்மம் என்னும் இரு மலங்களைக்கொண்டவர்கள் பிரளயாகலர் ஆவார்கள். இவர்களின் பிறவிகள், அடுத்த பிரளய காலம்  வரை தொடர்ந்திருக்கும்.

முதல் படியில் உள்ள நாமெல்லாம் மும்மலங்களில் சிக்கியவர்கள். தொடர்ந்து பிறவிச்சுழலில் சிக்கி சீக்கி அடிப்பவர்கள். அதனால்தான் நம்மை சகலர் என்றழைக்கிறார்கள்.

இம்மூன்று உயிர்வர்கத்தின் வேற்றுமைகளை திருமூலர் தெளிவாக விளக்குகிறார்.

விஞ்ஞானர் நால்வரும்  என்னும் நான்கு வகை குணங்கள் இவை:

1. ஆணவ மலம் மட்டும் கொண்டவர்கள் 

2. மறுபிறப்பற்றவர்கள்

3. சுத்த மாயையில் செயல்படுபவர்கள் 

4. பிறவியிலே ஆணவ மலம் கொண்டவர்கள் என ஒரு வகையும், சகலராக மும்மலம் கொண்டவர்களாக  பிறந்து, ஆணவ மலம் மட்டும் உள்ளவர்களாக  தங்களை உயர்த்திக்கொண்டவர்கள். 

மெய்ப்பிரள யாகலத்து  அஞ்ஞானர் மூவரும்  என்று பிரளயாகலரின் மூன்று குணங்களை சொல்கிறார்.

1. ஆணவ மலம், கன்ம மலம் மட்டும் கொண்டவர்கள் 

2. பிரளய காலம் வரை இவர்களின் பிறவிச்சுழல் தொடரும்

3. சுத்த மாயையில் செயல்படுபவர்கள் 

சகலத்தின் அஞ்ஞானர் மூவரும் என்று சகலரின் மூன்று குணம் சொல்கிறார்.

1. ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்னும் மும்மலம் கொண்டவர்கள் 

2. பிறவிச்சுழலில் இருந்து மீள முடியாதவர்கள் 

3. அசுத்த மாயையில் நின்று  செயல்படுபவர்கள் 

ஆகும் பதின்மராம் விஞ்ஞான ராதிகள் வேற்றுமை தானே என்று மூன்று வகை உயிர்வர்கத்தின் வேற்றுமைகள் பத்து என்று  விவரித்து கூறுகிறார்.

திருமந்திரம் 493

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்(து)
அஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின் 
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம் 
விஞ்ஞான ராதிகள் வேற்றுமை தானே.

விடிவே இல்லையா சகலருக்கு? பிறவிப்பெருங்கடல் நீந்தி இறையடி சேரவே  முடியாதா?

முடியும்.

தொடர் ஆன்ம முன்னேற்ற முயற்சியால், சகலராக பிறப்பெடுத்திருந்தாலும், விஞ்ஞானாகலர்  நிலைக்கு செல்ல முடியும்.

தெய்வமே முடியாதென்று சொன்னாலும், தீவிர முயற்சி அதற்கான பலனைக்கொடுக்கும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக்  கூலி தரும்.

என்னும் வள்ளுவரின் வாக்கு பொய்க்காது.

*** *** ***
இம்மாதிரியான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முகநூல் தமிழ் குடில்  குழுவில் இணைந்து கொள்ள வரவேற்கப்படுகிறீர்கள்.

தமிழ் குடில் | Facebook





கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...