கிரியாவூக்கி - சிவசக்தி
[சொன்னது: நிலவில் வெப்பம் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ். இருந்தது: +50 டிகிரி செல்சியஸ். சொன்னது: தண்ணீர் உறைந்து இருக்கிறது. இல்லாதது: மேகங்கள்]
இந்திய நேரம் மாலை 6 மணி. 23 ஆகஸ்ட் 2023.
உலகமே வியந்து வானத்தை பார்த்துக்கொண்டிருந்தது தொலைக்காட்சியில்.
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
வாழ்த்துகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்ந்த அனைத்து சக தோழர்களுக்கும். நீங்கள் கொடுத்த பரிசு அளப்பரியது. தொடரும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.
சந்திரயான் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது.
தரை இறங்கிய இடம், சிவசக்தி.
இனி சிவசக்தி பற்றி கொஞ்சம் ஆய்வு செய்து பார்ப்போம்.
முதலில் கிரியாவூக்கி என்றால் என்னவென்று சொல்லி விடலாம்.
தானெந்த மாற்றமும் அடையாமல், தன்னை சார்ந்தவர்களின் செயலாற்றலை ஊக்கப்படுத்துவதே கிரியாவூக்கி. இதை ஆங்கிலத்தில் CATALYST என்று சொல்வார்கள்.
சிவன் ஒரு கிரியாவூக்கி.
சிவம் என்பது ஞானம் மற்றும் நாதம். தனித்து இயங்காது.
சக்தி என்பது கிரியா சக்தி. விந்து எனப்படும் ஒளி வடிவானவள். சிவத்துடன் சேர்ந்து இயங்குபவள். இவளுடன் இணைந்திருப்பது இச்சா சக்தி என்னும் ஆசை.
சிவமும் சக்தியும் சேர்ந்து இயங்குவதே சிவசக்தி.
நாதத்தில் விந்துவும் அதாவது ஒலியில், ஒளி இயல்பாகவே கலந்தியங்கும் தன்மை உள்ளது. இடி, மின்னலை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
இவ்வாறான ஒலியும், ஒளியுமாக கலந்து, நாதவிந்துக்களில் தீதற்று அகம்வந்த சிவசத்தியாக நம் உடலில் கலந்திருக்கிறது. இந்த சிவசக்தியே, பேதித்து ஞானங்கிரியை பிறத்தலால், உடல் இன்பத்தை தூண்டி ஆசையை தோற்றுவிக்கிறது. அந்த இச்சையின் தோற்றமே உடலில் விந்தாக, வித்தாக மலர்கிறது.
திருமந்திரம் - 382
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற்று அகம்வந்த சிவசத்தி என்னவே
பேதித்து ஞானங்கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே.
இங்கே நாம் முப்பத்தாறு தத்துவங்களின் அங்கமான சிவ தத்துவங்களைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
சிவ தத்துவங்கள் ஐந்து.
அவை முறையே, 1. ஞானம் 2. கிரியா சக்தி 3. சுத்த வித்தை 4. ஈஸ்வரம் 5. சதாசிவம் எனப்படும்.
ஞானத்துடன் சேர்ந்த கிரியாசக்தி சிவசக்தி. இந்த சிவசக்தியில் ஞானம் மிக்கு இச்சை குறைவாக இருப்பின் அது சுத்த வித்தை, ஞானிகளை சாரும். இச்சை அதிகமாக இருந்தால் ஈஸ்வரம், நம்மைப்போன்றோரை சாரும். ஞானமும் இச்சையும் சமமாக இருந்தால் அது சதாசிவம், யோகிகளை சாரும்.
இந்த சிவசக்தி உடலில் நின்று இயங்கும் இடம் சுழி முனை எனப்படும் நெற்றி ஆகும். இதனையே சந்திர மண்டலம் என்று அனைத்து சித்தர்களும் எடுத்து சொல்லி இருக்கிறார்கள். இங்கே உற்பத்தி ஆவது அமிர்தம் அல்லது சோமப்பால். இதனையே சிவயோகிகள் உண்டு சமாதியில் லயித்திருப்பார்கள்.
இச்சா சக்தியின் மிகுதியால் உண்டாகும் விந்து, வாதித்த இச்சையில் வந்தெழும் விந்து, புதிய உயிர்களை உருவாக்கும் திறன் கொண்டது.
கீழ் நோக்கி பாயும் தன்மை கொண்ட விந்துவை, கீழே சென்று வீணாகாமல் மறித்து மேலே ஏற்ற வேண்டும். அதற்கு, வற்ற அனலைக் கொழுவி, மூச்சுக்காற்றைக் கொண்டு மூலாதார நெருப்பில் விந்துவை மேலே சுழுமுனைக்கு கொண்டு செல்ல வேண்டும். பின்னர் தியானத்தில், துற்ற சுழிஅனல் சொருகிச் சுடர்உற்று, சுழுமுனையில் நிலைத்திருக்க, முழு நிலவின் அமுதை, முற்ற மதியத்து அமுதை, சிவயோகியர் உண்டு தியானத்தில் களித்திருப்பார்கள்.
திருமந்திரம் - 1949
வற்ற அனலைக் கொழுவி மறித்தேற்றி
துற்ற சுழிஅனல் சொருகிச் சுடர்உற்று
முற்ற மதியத்து அமுதை முறை முறை
செற்று உண்பவரே சிவயோகி யாரே.
சிவசக்தியில் அமிர்தம் உருவாகட்டும். உலகம் முழுவதும் அதன் பலனை அனுபவிக்கட்டும்.
வாழ்க இஸ்ரோ! வளர்க அதன் பணி!!
*** ***
No comments:
Post a Comment