இந்த நாளும் நமதே
கரு உருவான நிலையில், அதன் முதல் சிற்றறையில், பருப்பொருளான உடலும், சூக்குமப்பொருளான உயிரும் கலந்திருக்கிறது. கரு வளர வளர அனைத்து சிற்றறைகளிலும் இந்த விதி தொடர்கிறது. மண்ணில் பருப்பொருளான உடலின் செயல்கள் அனைத்துக்கும் மௌன சாட்சியாக உயிர் துணை போகிறது.
உயிர் ஏன் உடலை விட்டு பிரிய வேண்டும்?
மூன்று முக்கிய நிகழ்வுகளில் உயிர் உடலை விட்டு நீங்குகிறது. உயிர் உடலெங்கும் பரவி நிற்க தேவையான சக்தியில்லாத போது உடலை விட்டு நீங்குகிறது.
1. வயது மூப்பு மற்றும் நோய் வாய்ப்படுதல்
2. அளவுக்கதிகமாக உடல் சக்தியை உபயோகப்படுத்துதல்
3. மனதின் கிளர்ச்சியால் தொடர் எண்ண அலைகளை உருவாக்குதல்
மூப்பும், நோயும் மனிதனால் தவிர்க்க முடியாதது. உடல் பயிற்சி என்ற பெயரில் எல்லை மீறிய உடல் ஆற்றல் வெளியேற்றம் அல்லது காமத்தீயில் உடலின் ஆற்றல் வெளியேற்றம். சரியான அளவில் உடல் பயிற்சி, உறவு மூலம் இதை சரி செய்து கொள்ளலாம்.
மூன்றாவது காரணம் மிகவும் சூக்குமமானது. இந்த வினாடியில் நாம் செய்து கொண்டிருக்கும் செயலும், சிந்தனையும் கூட எண்ண அலைகளை உயிருக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. இந்த எண்ண அலைகளின் ஆதிக்கம் என்னவென்று கண்கூடாக தெரியாது. எண்ண அலைகளுக்கும் இதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
எண்ணங்களை உருவாக்கும் நெஞ்சம் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது?
இதயம் இருக்கும் இடத்தை நெஞ்சம் என்று கூறுகிறோம். இதனையே ஆறாதார சக்கரங்களில், அநாகத சக்கரம் உள்ள இடமாக சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
நெஞ்சத்தின் தன்மைகளை அகத்தியர் கூறுவதை கேளுங்கள்.
அகத்தியரின் சௌமிய சாகரம் 32
கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.
உயிரோடு கலந்த சக்தி, மாயா நிலையில் இயங்கும் உடல், இரண்டுமே உணர்வுகளை மனதுக்கு அனுப்புகிறது. மனதிற்கு என்று தனிப்பட்ட எந்த கோளும் அதாவது புலனுறுப்பும் இல்லை. ஐம்புலன்கள் வழங்கும் அனைத்து செய்திகளும் மனதின் மூலம் எண்ணங்களாக வியாபிக்கிறது. இந்த எண்ணங்களே உயிரை ஆராதிக்கவும், அலைக்கழிக்கவும் செய்கிறது.
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலுடன் கட்டில்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.
எண்ண அலைகளை கட்டுப்படுத்துவதில் இருக்கிறது, உடலுடன் ஒட்டியுள்ள உயிரின் முடிச்சு. ஆரோக்கியமான அறம் சார்ந்த எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொள்வதன் மூலம் மனதை ஒரு முகப்படுத்தலாம்.
நாளை முதல் அறமிக்க வழிகளில் வாழ்வோம் என்று தீர்மானித்தால், நன்றாக சிந்தித்து பாருங்கள், நாளை என்று ஒன்று வாழ்வில் வரவே வராது. நாளை என்று வருவது எல்லாம் இன்றாக மாறிவிடும்.
*** *** ***
No comments:
Post a Comment