கடமை
போய் விட்டால்?
ஊரில் அனைவரும் சேர்ந்து சத்தம் போட்டு அழுவார்கள்.
பெயரை நீக்குவார்கள். பிணம் என்று புதுப்பெயர் சூட்டுவார்கள்.
சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரியூட்டுவார்கள்.
தண்ணீரில் மூழ்கி இறந்தவனின் நினைவுகளை மறந்து விடுவார்கள்.
திருமந்திரம்-145
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்
சூரையாம் காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே.
அப்புறம்?
அப்புறமென்ன, அவரவர் வேலைய பாத்துட்டு, அடுத்த வேளை கஞ்சிக்கு அல்லாடுவார்கள்.
அவ்வளவுதான் வாழ்க்கை.
இறந்துவிட்டால், பொத்தி பொத்தி வைத்த இந்த உடல் என்னாகும்?
என்னவானால் என்ன?
காக்கை சொந்தம் கொண்டாடும். யாரும் பழித்து பேசினாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை.
இறந்தவனின் வாயில் பால் ஊற்றினால் என்ன? பழகியவர்கள் புகழ்ந்து பேசினால்தான் ஆகப்போவது என்ன?
தோலினாலான இந்த உடல் என்னும் பைக்குள் அமர்ந்து, அனைத்து கர்ம வினைகளையும் செய்யும் அந்த கூத்தன் புறப்பட்டு போன இந்த உடலால் எந்த பலனும் இல்லை.
திருமந்திரம்-167
காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என்
பாற்றுழிப் பெய்யில்என் பல்லோர் பழிச்சில்என்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.
இதுதான் வாழ்க்கை. இதற்கு மேல் ஒன்றுமில்லை.
நமக்கு முன்னர் வாழ்ந்தவர்கள், இதே மனநிலையில் இருந்திருந்தால் இன்றும் நாம் காட்டுமிராண்டிகளாகத்தான் வாழ வேண்டி இருந்திருக்கும்.
ஆனால், உண்மை நிலை அப்படி இல்லையே? நம் பெற்றோர்களின் காலத்திற்கும் நாம் வாழும் வாழ்க்கைக்கும், வாழ்க்கைத் தரத்தில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது?
ஒவ்வொரு துறையிலும் மனித இனம் முன்னேறிக்கொண்டே இருப்பதன் ரகசியம் என்ன?
இரண்டு முக்கிய கூறுகள்.
1. தன் பிறப்பின் பொருளுணர்ந்து வாழ்க்கையை மனித இன மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்பு.
2. தான் உண்மை என அனுபவத்தில் உணர்ந்து, கொண்டாடுவதை அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்லுதல்.
முதல் கூறு சித்தர்கள், ஞானிகள் போன்றவர்களுக்கு சாத்தியமாகி இருக்கிறது.
இரண்டாவது கூறு நம்மைப்போன்ற சாதாரண மக்களுக்கு. இதுவே நம் வாழ்வின் கடமை.
*** *** ***
No comments:
Post a Comment