Monday, October 9, 2023

சொர்கமும், நரகமும் நம் வசமே

சொர்கமும், நரகமும் நம் வசமே




சொர்கமும், நரகமும் நம் வசமே

மின்னலிடை வரும் தேனும்பாலும்
கன்னலிதழ் தரும் அந்திவேளை 
கலந்திடும் வெள்ளியும் வியாழத்தில் 
வாழ்த்திடும் திங்களும் செவ்வாயில். 

பொருள்:

மின்னலைப்போல், கண்கள்  கூசும் அழகுடைய உன் இடை, பால் கொடுக்கும் செம்புகளை  சுமந்து கொண்டிருக்கிறது. மேலும் அது தேன் ஊறும் சுனையை  தாங்கி நிற்கிறது. தேனுடன் பால் கலந்து கரும்பு சாறு போல் கொடுக்கும் உன் இதழ்களில் நான் பருகும் மாலை மயங்கும் வேளை அது. உன்னுடன் இணைந்த உறவில், வெள்ளியை  போன்ற வெண்மையான என் உயிரணுக்கள்,  உறவின் உச்சத்தில் உன்னுடைய செம்மையான  சுரோணிதத்தில் கலந்திருக்கும். முழு மதியைப்போல் அழகுடைய பெண்ணே, உறவின் மகிழ்வில் மயங்கி உன்னுடைய சிவந்த வாயில் என்னை வாழிய பல்லாண்டு என்று வாழ்த்துவாய்!

பெண்ணைப்போல் இன்பம் தரும் சொர்கமுமில்லை; பெண்ணைப்போல் துன்பம் தரும் நரகமுமில்லை. 

உடலுக்குள் இரண்டு பறவைகள் உள்ளன. ஒன்று அறியாமையினால் 'இது இன்பம்', 'இது துன்பம்', 'இதை நான் அனுபவிக்கிறேன்' என்னும் ஜீவாத்மா. இன்பம், துன்பம் என்பது  ஆணவ மலத்தின் வெளிப்பாடான கன்ம மலத்தின் கூறுகள்.

மற்றொறு பறவை அதற்கு  சாட்சியாக அமர்ந்துகொண்டிருக்கும் பரமாத்மா. 

எப்பொழுது  ஜீவாத்மா, பரமாத்மாவின் தன்மையை உணர்ந்து அதனை  நெருங்குகிறதோ, அப்பொழுதே அறியாமை அகன்று இன்ப, துன்ப வினை அற்றுவிடும்.

பரமாத்மா, ஜீவாத்மா மற்றும் பற்று என்னும் மூன்றும் ஆதியில் இருந்தவை. இவைகளுக்கு, மற்ற பொருட்கள், உயிர்களைப்போன்று தோற்றம் இல்லை. தோன்றிய எதுவும் மறைந்து விடுவது இயற்கை.

 திருமந்திரம் 115

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் 
பதியைப்போற்  பசு பாசம் அநாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு  பாசம்நி லாவே.                                             

உடலில் இருக்கும் பசு, ஜீவாத்மா என்னும் பறவை, பற்றின் இன்ப துன்ப அறியாமையினால் பதியை, பரமாத்மாவை அணுகுவதில்லை. ஒருவேளை, பரமாத்மாவை அணுகினால், ஜீவாத்மாவும், பற்றும் [பாசம்] பரமாத்மாவுடன் கலந்துவிடும்.

உடலில் உயிர் இருக்கும்வரை மூச்சுக்காற்றின் மூலம்  இறைக்கனல் உடலில் பாய்ந்துகொண்டே இருக்கும். இக்கனலே, உயிர்க்கனல் உடலின் சிற்றறைகளில் சேமித்து வைத்த சக்தியை எரிக்க உதவும் நெருப்பு பொறி ஆகும். இறைக்கனலின் தன்மையால் சக்தி எரிக்கப்பட்டு உடல் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது.

திருமந்திரம் 117

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே 
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா 
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் 
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.                                                                                  -                                                                                 

குவிக்கப்பட்ட சூரியக்கனல் பஞ்சை எரித்துவிடும். ஆனால், உடலை எப்பொழுதும் சுற்றிவரும்  இறைக்கனல் உடலை எரிப்பதில்லை. [மாறாக உணவில் இருந்து சிற்றறையில் சேமிக்கப்பட்ட சத்தினை எரிக்கும் பொறியாக அமைகிறது.] இவ்விறைக்கனலின் தன்மையை உணர்ந்து கொண்டவர்களின் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள், சூரியக்கனல்  குவியலின்  முன்னர் இருக்கும்  பஞ்சு எரிவதுபோல் எரிந்துவிடும்.

மேற்குறிப்பிட்ட இரு திருமந்திரப் பாடல்களிலும் ஒரு ஒற்றுமையை காணலாம்.

பதியணு கிற்பசு  பாசம்நி லாவே.  

சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

முதல் பாடலில் ஜீவாத்மா பற்று நீங்கி பரமாத்மாவை  சேருதல். இரண்டாவது பாடல் பரமாத்மா முன்னர் மும்மலங்கள் அழிந்துவிடும்.

மும்மலங்கள் மறைந்த நிலையில், இன்ப துன்ப நிலை அகன்று, பேரின்ப நிலைக்குள் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலந்துவிடும்.

*** *** ***



No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...