Thursday, October 12, 2023

பழுத்தாலும் பிஞ்சு

பழுத்தாலும்  பிஞ்சு   



வயது ஏறிக்கொண்டே போகுது. உடலும் ஒத்துழைக்க மறுக்குது. இத்தனை வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம்னு நெனச்சு பாத்தா சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும்  இல்ல.

ஒரு நிலைக்குமேல் உடலின் வளர்ச்சி முடிந்து தேய்பிறையாகி விட்டது. அறிவு வளர்ச்சி என்னவோ அப்படியே நின்று விட்டது. உள்ளமும் அப்படியே உறைந்துவிட்டது.

'எவ்வளவு தடவ சொன்னாலும், தாத்தாவிற்கு வாட்சப்ல மெசேஜ் அனுப்ப வராது' - என் காது படவே பேரன், பேத்திகள் சொல்லி சிரிக்கிறார்கள்.

யோசிக்க, யோசிக்க ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது. நான் இதுவரை செய்த காரியங்களில் பாதிக்குமேல் அறிவற்ற செயல்களே. இதையே யாராவது, 'நானொரு முட்டாள்' என்று  சொல்லி இருந்தால் அவர்கள்மேல் பாய்ந்திருப்பேன் அன்றைக்கு. ஆனால், இன்றைய நிலையோ யாரும் நமக்கு சொல்லி வழிகாட்டவில்லையே என்றே  மனம்  நினைக்குது.

குறைந்தபட்சம் படிப்பு என்று ஆரம்பித்த காலத்தில், 'அ' என்று அகரத்தில் ஆரம்பித்த தமிழையாவது ஒழுங்காக காற்றேனா என்றால் அதுவுமில்லை. தமிழ் ஐயா இலக்கணம் சொல்லி தரும்போது கொஞ்சம்கூட மண்டையில் ஏறவில்லை.

பரீட்சையில் செய்யுள் எழுதும்போது, காற்புள்ளி, அரைப்புள்ளி எல்லாம் சரியா வைக்கணும். இல்லைனா மதிப்பெண் கொறஞ்சிரும்னு சொன்னது பெரிய காரியமா தெரிஞ்சது. 

'தமிழ்தானே, படிக்காமல் பரீட்சை எழுதலாம்னு நெனச்சா பெயில் ஆயிருவீங்க' - தமிழாசிரியரின் அறிவுரை எல்லாம் காற்றில் பறக்க விட்டாச்சு. தட்டுத்தடுமாறி பாஸ் மார்க் வாங்கி படிப்பையும் முடிச்சாச்சு.

சரியாக கற்றிருந்தால், தமிழில் உள்ள பொக்கிஷங்களை என்றோ கண்டடைந்திருக்கலாம். அறிவியல் இன்னும் காண முடியாத உண்மைகளை அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்து வழங்கி இருக்கும் தமிழ் பாடல்களை வாழ்க்கை முறையாக கொண்டிருந்திருக்கலாம்.

தமிழ் கற்க ஆரம்பித்தேன், அறுபதை தொட்ட நிலையில்.

திருமந்திர மாலை. முதல் பந்திலேயே  சிக்ஸர். 

திருமந்திர மாலையின் அடிப்படை  கணிதம் என்று சொல்வதைவிட, எண்ணும், எழுத்தும் பின்னிய எண்ணெழுத்தியல் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

'ப க வ த' என்ற நான்கெழுத்துக்கள்தான்  அடிப்படை. ஐம்பத்தியொரு  அக்ஷரங்களை, எண்களால்  கோர்த்து முன்னூறு பாடல்களில் திருமந்திர மாலையாக தந்திருக்கிறார்  திருமூலர்.  

இதுவே தொடக்கமாக திருமந்திரம் படிக்க ஆரம்பித்தேன். இங்கேதான் உலகக்கோப்பை சதம் அடிக்க ஆரம்பித்தேன்.

வயது என்பது வெறும் எண்தான். மாறா இளமையுடன் முதுமையை எதிர் கொள்ளும் கலையை கண்டறிந்தேன்.

இதோ,  திருமந்திர அமுதக்கடலில் ஒரு துளி.

காற்றினை சுவாசித்து, அதனை வசப்படுத்தி உள்ளே அடக்கினால், உடல் பழுத்து மூப்படைந்தாலும், தோற்றம் பளிங்கினைப்போல்  ஆனாலும்,  பிஞ்சைப்போல் இளமையாக  உடலின் தன்மை   இருக்கும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம், நல்ல குருவின் வழிகாட்டுதலுடன் பிராணாயாமம் கற்பதும், முறையாக பயிற்சி செய்வதும்தான்.

திருமந்திரம்-569

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் 
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் 
தெளியக் குருவின் திருவருள் பெற்றால் 
வளியினும் வேட்ட அளியனும் ஆமே.

பிராணாயாமத்தின்போது பூரகம் எனப்படும் சுவாசக் காற்றினை உள்ளிழுத்து, கும்பகம் எனப்படும் சுவாசித்த காற்றினை குறிப்பிட்ட கால அளவில் உள்ளே நிறுத்த வேண்டும். இக்கலையில் நன்கு தேறிய குருவின் வழி முறையை பின்பற்றினால், காற்றினும் மெல்லிய உடலை விரும்பிப்பெறலாம். 

வயது ஏற ஏற அங்கங்கள் மூப்படைந்து, உடலே சுமையாகி விடும். அங்கங்கள் மூப்படைந்தாலும் இளமையாகவும், அங்கங்கள் சுமை இல்லாமலும் இருக்க என்னவொரு எளிய தமிழ் காட்டும்  வழி!

*** *** ***




No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...