கடவுள் - தானிருந்தான் உணர்ந்தெட்டே
நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை
'உடல் தன் தேவையை அடையாமல் இருக்க முடியாது.'
'வெகுதூரம் பயணம் செய்யும் ஒருவன் தன் குதிரையை எப்படி பராமரிப்பானோ, அப்படி உடலை பராமரிக்க வேண்டும்.'
'அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம் என்னிடம் இருப்பதை எடுத்துக் கொள்ள சொல்கிறேன்.'
'பசித்து நிற்கும் ஒரு நாய்க்கு நீ அளிக்கும் உணவு, என் பசியை தீர்க்கிறது.'
தன்னுடைய தேவைக்கு கூட அன்பர்கள் அளிக்கும் பொருட்களை சேமிக்காது, உடனே தேவையானவர்களுக்கு கொடுத்து விடும் பேரன்பை மனதில் கொண்டிருந்த ஷீரடி சாய்பாபா அவர்களின் சாய் சத் சரிதத்திலிருந்து நான் புரிந்து கொண்ட அருள் வார்த்தைகள், மேலே குறிப்பிட்ட சொற்றொடர்கள்.
உலகில் எந்த மூலையில் இருந்தாலும் காலில் கயிறு கட்டி குருவியை இழுப்பதுபோல் இழுத்து உலக நன்மைக்கு பேரருள் வழங்கும் சாய்பாபா அவர்கள் என்னையும் இழுத்து அருள் வழங்கியுள்ளார் என்பதை நாளும் உணர்கிறேன்.
அதீதத் துரியத்தில் இயங்கி உலகெலாம் இன்றும் பேராசி வழங்கும் ஷீரடி சாய்பாபாவின் பொற்பாதங்களில் சங்கமிக்கும் அருள் பெற வேண்டுவோம்.
அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.
- திருமந்திரம் 2199
அதீதத்துரியமாகிய பேருறக்க நிலையில், உயிர் மிக்க அறிவுடையதாக இருக்கும். தொடர்ந்து இந்நிலையில் உயிர் நிற்க இயலுமாயில், சுடர்விட்டெழும் ஆருயிரின் அறிவுச்சுடர் ஞானக்கனல் எனப்படும் நிலையை அடையும். இதுவே சீவாக்கினியில் உயிர் பேருறக்கம் கொண்டு பரம்பொருளை அடையும் நிலை.
உரிய நனா துரியத்தில் இவனாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரனாம்
திரிய வரும் துரியத்தில் சிவமே.
- திருமந்திரம் 2273
துரியம் என்னும் பேருறக்கத்தில், நனவு, கனவு மற்றும் உறக்கம் என்றடையும் போது, உயிர் பரம் என்னும் பரம்பொருள் தன்மையை அடையும். இதன் அடுத்த நிலையில், உயிர் பரம்பொருளுடன் கலந்து இறைவனாகவே விளங்கும்.
ஆதி யோகி சிவன். முதற் சித்தர் என உணர்த்தப்பட்டவர் சிவன். எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கும் பரம்பொருளுடன் ஒன்றி நின்றவன் சிவன். நம் வாழ்நாளில், மிக அருகில், நம்முடன் வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா என்னும் சிவன்.
அப்படியெனில், பரம்பொருள் என்பது யார்?
எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்துதிரு விளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியு நின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே.
- பாம்பாட்டி சித்தர் பாடல் 9
அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, அவைகளை ஆட்டுவிக்கும் பரம்பொருளே, அனைத்து உயிர்களாகவும், அனைத்து உலகங்களாகவும் ஆகி பேரானந்தமாய் நின்றான்.
இதுவே இறைவனின் எட்டாவது குணம்.
அவன் திருவடிகளை பணிந்து நிற்பதே பேரின்பம்.