Saturday, January 18, 2020

கடவுள் - தானிருந்தான் உணர்ந்தெட்டே

கடவுள் - தானிருந்தான் உணர்ந்தெட்டே






நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை



'உடல் தன் தேவையை அடையாமல் இருக்க முடியாது.'

'வெகுதூரம் பயணம் செய்யும் ஒருவன் தன் குதிரையை எப்படி பராமரிப்பானோ, அப்படி உடலை பராமரிக்க வேண்டும்.'

'அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம் என்னிடம் இருப்பதை எடுத்துக் கொள்ள சொல்கிறேன்.'

'பசித்து நிற்கும் ஒரு நாய்க்கு நீ அளிக்கும் உணவு, என் பசியை தீர்க்கிறது.'

தன்னுடைய தேவைக்கு கூட அன்பர்கள் அளிக்கும் பொருட்களை சேமிக்காது, உடனே தேவையானவர்களுக்கு கொடுத்து விடும் பேரன்பை மனதில் கொண்டிருந்த ஷீரடி சாய்பாபா அவர்களின் சாய் சத் சரிதத்திலிருந்து நான் புரிந்து கொண்ட அருள் வார்த்தைகள், மேலே குறிப்பிட்ட சொற்றொடர்கள்.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் காலில் கயிறு கட்டி குருவியை இழுப்பதுபோல் இழுத்து உலக நன்மைக்கு பேரருள் வழங்கும் சாய்பாபா அவர்கள் என்னையும் இழுத்து அருள் வழங்கியுள்ளார் என்பதை நாளும் உணர்கிறேன்.

அதீதத் துரியத்தில் இயங்கி உலகெலாம் இன்றும் பேராசி வழங்கும் ஷீரடி சாய்பாபாவின் பொற்பாதங்களில் சங்கமிக்கும் அருள் பெற வேண்டுவோம்.


அதீதத் துரியத்து அறிவனாம்  ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.
                                                                     - திருமந்திரம் 2199


அதீதத்துரியமாகிய பேருறக்க நிலையில், உயிர் மிக்க அறிவுடையதாக இருக்கும். தொடர்ந்து இந்நிலையில் உயிர் நிற்க இயலுமாயில், சுடர்விட்டெழும் ஆருயிரின் அறிவுச்சுடர் ஞானக்கனல் எனப்படும் நிலையை அடையும். இதுவே சீவாக்கினியில் உயிர் பேருறக்கம் கொண்டு பரம்பொருளை அடையும் நிலை.


உரிய நனா துரியத்தில் இவனாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரனாம்
திரிய வரும் துரியத்தில் சிவமே.
                                                                     - திருமந்திரம் 2273


துரியம் என்னும் பேருறக்கத்தில், நனவு, கனவு மற்றும் உறக்கம் என்றடையும் போது, உயிர் பரம் என்னும் பரம்பொருள் தன்மையை அடையும். இதன் அடுத்த நிலையில், உயிர் பரம்பொருளுடன் கலந்து இறைவனாகவே விளங்கும்.

ஆதி யோகி சிவன். முதற் சித்தர் என  உணர்த்தப்பட்டவர் சிவன். எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கும்  பரம்பொருளுடன் ஒன்றி நின்றவன் சிவன். நம் வாழ்நாளில், மிக அருகில், நம்முடன் வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா என்னும் சிவன்.

அப்படியெனில், பரம்பொருள் என்பது யார்?

எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்துதிரு விளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியு நின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே.
                                                                   - பாம்பாட்டி சித்தர் பாடல் 9


அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, அவைகளை ஆட்டுவிக்கும் பரம்பொருளே, அனைத்து உயிர்களாகவும், அனைத்து உலகங்களாகவும் ஆகி பேரானந்தமாய் நின்றான்.

இதுவே இறைவனின்  எட்டாவது குணம்.

அவன் திருவடிகளை பணிந்து  நிற்பதே பேரின்பம்.







6 comments:

  1. ஐயா
    திருமந்திரம் 2199 பாடல் கடைசி அடி முதல் சீர் "முதிய" என்று தொடங்கும் முரணை பற்றி விளக்கம் தர இயலுமா

    நன்றி

    ReplyDelete
    Replies

    1. இலக்கணம் எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. என்னுடைய கவனம் எல்லாம் செய்யுளின் பொருள் சார்ந்தது. நீங்கள்தான் இந்த மாதிரியான வேறுபாட்டிற்கு, காரணம் என்னவாக இருக்கும் என்று தெளிவு படுத்த வேண்டும். எனவே மன்னிக்கவும், விளக்கம் தர இயலாமைக்கு.

      Delete
  2. எனக்கும் இலக்கண அறிவு பள்ளியில் வரை படித்தது தான்

    திருமந்திரத்தில் எதுகைமோனை மிகச்சரியாக பொருந்தி வரும்

    முதல் 3 அடியில் உள்ள முதல் சீர்கள் அதீத என்று தொடங்கும் போது கடைசி வரியும் அதே எதுகையில் தான் தொடங்கி இருக்க வேண்டும் என்பதே என் ஐயம்

    முடிவான கருத்து என்பது கடைசி வரி தான் அது மாற்றப்பட்டிருக்குமோ என்று தான் கேட்டேன்

    ReplyDelete
  3. ஐயா
    இந்த குறிப்பிட்ட பாடலுக்கு விளக்கம் எழுதலாம் பாட்டை எப்படி தெரிவு செய்கிறீர்கள்

    அல்லது குறிப்பிட்ட ஒரு மந்திரம் உங்களை எழுத தூண்டுகிறதா?
    நன்றி

    ReplyDelete

  4. "அதீத அனலில் துரியத்து முற்றுமே" என்று இருந்திருக்குமோ?
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாடலின் எதுகை பற்றிய உங்கள் கணிப்பு சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது.



      பாடல் தேர்வைப்பொறுத்த மட்டில், 'எண்குணத்தான்' என்னும் எட்டு குணங்கள் என்ன என்பதை தேடியதில் கிடைத்த பாடல்கள் அவை. திருமந்திரத்தின் முதல் பாடலே எட்டு குணத்தை தெரிவித்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், தூண்டுதலாகவும் அமைந்தது.

      Delete

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...