Friday, December 27, 2019

கடவுள் - ஐந்து வென்றனன்

கடவுள் - ஐந்து வென்றனன் 







அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்து பார்த்திருப்பேன்



இன்னும் கொஞ்ச நேரம் வேப்ப மர நிழலில் உட்காரலாமா, வேண்டாமா என்று யோசிக்க வைத்தார்கள்,  எதிரில் அமர்ந்திருந்த இளம் ஜோடி.  தீபாவளி திருநாளை கொண்டாட  நிறைய இளஞ்ஜோடிகள் மருதமலை ஏறிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அணிந்திருந்த புத்தம்புதிய உடைகளின் நிறமே, நகர்ப்புற வணிக வளாகங்களில் வரும் ஜோடிகளிடம் இருந்து இனம்  பிரித்து காட்டியது.

கோவில்களுக்கு வரும் மக்களும் அப்படித்தான். வசதி ஏற, ஏற ஆசையின் பிடியில் சிக்கி, ஆசையின் எல்லை தெரியாமல்  போலி வாழ்க்கைக்குள் போய் விடுகிறார்கள். கோவிலுக்கு  செல்வதெல்லாம் பத்தாம் பசலித்தனம் என்னும் எண்ணம் வளர்ந்து கொண்டுள்ளது. இன்னும் மத்தியதர  வாழ்க்கையை எட்ட  முடியாதவர்களே,  படிக்கட்டில்   மலை ஏறுபவர்களில்  அதிகமாக காண முடிந்தது.

வசதி உள்ளவர்கள், கோவில் வரை காரில் வந்து சிறப்பு தரிசன அனுமதி சீட்டு பெற்று, இடைத்தரகர்களின் ஆசியுடன் கடவுளிடம் தங்கள் தேவைகளை, ஆசைகளை   விண்ணப்பங்களாக  சமர்ப்பித்து விட்டு, வேக வேகமாக மருத்துவ மனைகளில் மருத்துவர்களை பார்க்க  தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள்.

காற்று குளிர்ச்சியா இல்லை வெயிலுக்கு காற்று இதமாக இருக்கிறதா என்று தெரியாமல் சுகமாக இருந்தது மருத மலைக்காற்று. உடல் பெரும் சுகங்களில் இதுவும் கணக்கில் சேர்த்தியே.

முருகனை தரிசிக்க வரும்போதெல்லாம் மலையின் அழகை மனம் ரசிக்காமல் போனதில்லை. இரண்டு பக்கமும் இறகை விரித்து அமர்ந்திருக்கும் பெரிய கழுகைப்போல் இருக்கும், முகில் உரசி செல்லும் மருதமலைக்  குன்றுகள், கோவில் என்றுமே அழகான காட்சிதான், என் கண்களுக்கு .

அதிக ஆரவாரமில்லாமல், இயற்கையின் ஒலியோடு மனம் ஒன்றி போக அமர்ந்திருக்கலாம் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அடைந்த குகை கோவிலில்.

நெய்யின் மணம் சற்று தூக்கலாக கிடைக்கும் சர்க்கரைப்பொங்கலை ரசித்து சுவைக்கும்போது, ஐம்புலன்களின் இன்பம் இந்த மலையிலும்  கிடைக்கும் என்பது, என்னைப்போல் அனுபவித்தவர்கள் மட்டுமே அறிந்த உண்மை.


பார்க்கையிலே ஐம்புலனை நன்றாய்க் கேளு
பதிவான சத்தமொடு பரிசம் ரூபம்
ஏர்க்கவே ரசமுடனே கெந்தம் ஐந்து
இன்பமுள்ள ஐம்புலனை அறிவதற்கு
சேர்க்கையுடன் ஐம்புலனிக் கண்டு மைந்தா
தேர்ந்து மனதறிவாலே தேர்ந்து கொண்டால்
மார்க்கமுள்ள சித்தரென்று யார்க்குந்தோணும்
மைந்தனே ஐம்புலனை வகுத்துக் காணே.
                                                        - அகத்தியரின் சௌமிய சாகரம் 30

சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்று புலன்கள் ஐந்தாகும்.  இந்தப்  புலன்களால் பெரும் அறிவு எவ்வாறு ஏற்படுகிறது என்றால் பொறிகள் எனப்படும் ஞானேந்திரியங்கள் புலன்களுடன் சேருகின்றன, இவையிரண்டும் ஆன்மாவுடன் சேர ஆன்மா அந்த அனுபவங்களை உணர்கிறது.  இதனால் அகத்தியர் புலன்களை அவற்றின் சேர்க்கையுடன் அறிந்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார்.  இவ்வாறு உலக இன்பங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது சித்தர் மார்க்கத்தில் ஒரு அம்சம் என்று அவர் நமக்குக் கூறுகிறார். 

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
                                                           - திருக்குறள் 1101


கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த பெண்ணிடத்தில் உள்ளன.

இவ்வின்பம் இருபாலாரும் உய்த்து உணரக்கூடியதே. போக வாழ்வும் இறை நிலை உணரும்  வழிகளில் ஒன்றே. இல்லறத்தாருக்கு கிடைத்துள்ள அருமையான வாய்ப்பு.

நாகமும் ஒன்று படம் ஐந்து நாலது 
போகமும் உட்புற்றில் பொருந்தி  நிறைந்தது 
ஆகம் இரண்டும் படம்விரித்து ஆட்டுஒழிந்து 
ஏகப்படம்செய்து உடம்புஇடம்  ஆமே.
                                                               - திருமந்திரம் 1621


உயிரென்னும் பாம்புக்கு படம் ஐந்து என்று குறிப்பிட்டது  மெய், வாய், கண், காது, மூக்கு என்னும் ஐம்பொறிகளை. நாலது ஆவது இந்த ஐம்பொறிகளால் நுகரும் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி. உயிராகிய பாம்பு,  மனம் என்னும் புற்றில் ஐந்து புலன்களுடன் பதுங்கி இருக்கிறது. ஆகம் இரண்டும் என்பது நுண்ணுடல் மற்றும் பரு உடலைக்குறிக்கிறது. இவ்விரு உடலும் ஒன்றாக இணைந்து உடலில் வாழ்வதே, இறைவனின் ஐந்தாம் குணம் ஆகும்.









Thursday, December 26, 2019

கடவுள் - உணர்ந்தனன் நான்கு

கடவுள் - உணர்ந்தனன் நான்கு  





காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும்  அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்



வருத்தம் தெரிவித்த சரளாவிற்கு, மனதுக்குள் நன்றி தெரிவித்தான் சரவணன்.

வெட்கம் பிடுங்கி தின்றது ஒரு பக்கம்; உடல் முழுக்க புல்லரிக்கும் ஆனந்தம் மறுபக்கம், சரளாவிற்கு.

குண்டும் குழியுமான சாலையை காரணம் சொல்வதா, நகர்ப்புற பேருந்தில் இருந்த நெரிசலா, இல்லை திடீரென்று பேருந்தை நிறுத்திய ஓட்டுனரை குற்றம் சொல்வதா?

மாத்திரை கால அளவில் நிகழ்ந்து முடிந்து விட்டது.

இதுநாள்வரை கண்களால்  மட்டுமே பேசிக்கொண்டிருந்தவர்களை உடலால்  மோத வைத்து, அணைக்க  வைத்தது பேருந்தின் திடீர் நிறுத்தம்.

இருவரும் தன்னிலை அடையவில்லை. இது, இவர்களின்  இறுதி நாள் வரை தொடரும் மறக்க முடியாத இன்ப பேருணர்வாக அமையும்  என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

இப்பொழுது நடந்தது என்ன?

உடல்கள் ஒன்றை ஒன்று அணைத்து மீண்டது, இமைக்கும் கால அளவில்.

உடலின் அனைத்து  சிற்றறைகளுக்கும் செய்தி பரிமாறப்பட்டது. ஆனால் அதை உணர்ந்தது உடலின் எந்த பகுதி? உடல் ஒரு கருவியே, அதாவது புலன்களின் ஓரங்கமான ஞானேந்திரியம் மட்டுமே.

உணர்ந்தது மனம். மனம் என்பது ஒளி உடல். இது பல கோடி பிறப்புகளை கொண்டது.

கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.
                                          - அகத்தியரின் சௌமிய சாகரம் 32


உயிரோடு கலந்த சக்தி, மாயை நிலையில் இயங்கும்  உடல்,  உணர்வுதனை மனதுக்கு  வழங்குகிறது. மனதிற்கு என்று தனிப்பட்ட எந்த கோளும் அதாவது புலனுறுப்பும்  இல்லை.

ஆயினும், 1. மனம்  2. புத்தி/அறிவு  3. ஆங்காரம்  4. சித்தி என்ற நான்கு படிகளில் மனித உணர்வுகளை வழி நடத்துகிறது.



கண்டிட்ட மனத்தாலே தவமு மாச்சு 
    கவர்ந்தவுயி ராவதும்  மனமே யாச்சு

மண்டிட்ட வாயுமேல் மனமு மாச்சு 

    மகத்தான சஞ்சலத்தால் மனம்பே யாச்சே 

அண்டிட்ட தீப்போல மனந்தான் சென்றே 

    யகண்டத்திற் சென்றாலதுதான்  போதம்

மண்றிட்ட  மனம் விட்டால் ஞானம் போச்சு 
    வாசியைத்தா னழுகவிட்டால் யோகம் போச்சே.
                                                           - போகர் 7000 - 146


உயிரின் சக்தியாக மனம் இயங்குவதை தவத்தால் அறியலாம். வாசி யோகம் வழியாக மனதின் நான்காம் தன்மையான ஞானத்தை, சித்தியை அடையலாம். 

நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச் 
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி 
ஓன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே 
நின்றான் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.
                                                  - திருமந்திரம் 1066


உடலும் உயிருமாய் ஒன்றி நிற்கும் ஒளி உடலில் நிற்கும் மனம், ஐம்புலன்களால் பெறப்படும் செய்திகளை  உணர்வு நிலையாய்  அறிகிறது. எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் மனம் அனுபவத்தை மட்டும் எடுத்து கர்ம வினையாக சேமித்து கொள்கிறது.

மனம் - உணர்வு, இவை மனிதனுக்கு வழங்கப்பட்ட,கடவுளின் நான்காம் குணம். 

அணுவியல்/அறிவியல்  கடவுளின் மூன்றாம் குணத்துடன் என்னிடமிருந்து விடை பெற்றுக்கொண்டது.

Tuesday, December 24, 2019

கடவுள் - நின்றனன் மூன்றினுள்

கடவுள் - நின்றனன் மூன்றினுள்





ஏதோ ஏதோ ஏதோ
ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி
வந்தது எனக்கும்



'அணுவியலில் கண்டறியப்பட்ட தனிமங்கள், அதன் குணங்களுக்கேற்ப, திட, திரவ மற்றும் வாயு என பகுத்தறியப்பட்டுள்ளது. தனிமங்களின் அணுக்களின்  நியூக்ளியஸ் என்னும் கருவானது, புரோட்டான் மற்றும் நியூட்ரோன்களை கொண்டுள்ளது. இதில், நிறையுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்கேற்ப அதனைச் சுற்றி வரும் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை அமைந்து உள்ளது.' - இது அறிவியல் சொல்லித்தரும் பாடம்.

இதில் நியூட்ரானை உயிர் என்று எடுத்துக்கொண்டால், புரோட்டான் சக்தியாக நிற்கிறது. உயிரையும், சக்தியையும் கொண்டுள்ள உடல் இயங்க எலக்ட்ரான் என்னும் எதிர் சக்தி தேவைப்படுகிறது, அந்த எதிர் சக்தியை 'மாயை' என்று நமக்கு உணர்த்தும் ஆன்மீக குணமே கடவுளின் மூன்றாம் குணம்.

இந்த மாயையின்பால் சிக்கித்  திணறும் மனிதர்களின் தலையாய ஆசைகளை போகர் சித்தர் இவ்வாறு தெரிவிக்கிறார்:

உலகினரின் இயக்கம்:
    1. மண்ணாசை
    2. உணவாசை
    3. பெண்ணாசை [ஆணாசை]
    4. பொன்னாசை
    5. குடியாசை
    6. குடும்ப ஆசை

புகழுக்காகவும், அதிகாரத்திற்காகவும் கொள்ளும் ஆசையும் மாயையில் சேர்த்தியே.

கோடியென்ற நரசென்ம மண்ணா சையாலுங் 
    குணமான தீனியதி னாசை யாலுஞ் 

மோடியென்ற மோகப்பெண் ணாசை யாலும் 
    மோகத்தால் பூட்டும்பொன் னாசை யாலுஞ் 

குடியென்ற சுகபோகச் சுகியி னாலுந் 
    துணையான பாசத்தின் மயக்கத் தாலும் 

வாடியென்ற வுலகமெல்லா மயக்க மாச்சு 
    மக்களே வாய் ஞானப்பேச்சு மாச்சே.
                                                               - போகர் 7000  - 16

மேற்கண்ட ஆசைகளின் பிடியிலிருந்து வெளியேற திருவள்ளுவர் வழி சொல்லுகிறார்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

                                                                                         - திருக்குறள் 350

இறைவனின் மூன்றாம் குணமான மாயையில்,  பிடிப்பு இல்லாமல் இருக்கும் இறைவனை விரும்பி பற்றிக்கொள்ளுங்கள்.


உற்றமுப் பாலொன்று மாயாள்  உதயமாம் 
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து 
பெற்றவள் நாதம் பரையிற் பிறத்தலால் 
துற்ற பரசிவன் தொல் விளை யாட்டிதே. 
                                                                                      - திருமந்திரம் 399



விண்ணிலிருந்து மண்
ணில் மனிதனாக பிறப்பெடுக்கும் இறைவன், பேரொளியாக உயிராகவும், அளவற்ற சக்தியாகவும் மனித  உடலாக  பரிமளிக்கிறார். உயிரும், சக்தியும் இயங்க மாயை என்னும் மூன்றாம் பரிமாணத்தை ஏற்கிறார்.

இதனையே உலகம் இயங்க தேவையான ஆதார வித்துவாக  கொள்ளலாம்.

உயிர் அகாரமாகவும், சக்தி உகாரமாகவும், மாயை மகாரமாகவும் இலங்கும் மூன்று குண நிலையே ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் மூலாதாரமாக விளங்குகிறது.

அ+உ+ம்  = ஓம்   

*** ***




Sunday, December 22, 2019

கடவுள் - இரண்டவன் இன்னருள்

கடவுள் - இரண்டவன் இன்னருள் 





மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை



சிட்னியில், பிரிக்க முடியாத பசையை கொட்டி, அதன் மீது உட்கார்ந்து அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம்.

டெல்லியில் இடைவிடாத இருபத்து நான்கு மணி நேர அரசுக்கு எதிரான போராட்டம். நாடு முழுதும் பரவி நிற்கும்  மக்கள் எழுச்சிப்  போராட்டம்.

அரசியல் கட்சிகள் தேர்தலின் போது அளிக்கும் வாக்குறுதிகள் எல்லாம் பிரசவ கால சபதங்கள். எந்த கட்சி அரசணை ஏறி இருந்தாலும், அரசியல் காட்சிகளில் மாற்றம் என்றும் இல்லை.

ஏன்?  ஏன்?? ஏன்???

அரசணை  ஏறும் கட்சிகளை யார்  பின்னின்று இயக்குவது?

அரசு கட்டிலை கைப்பற்ற உதவும் இந்த சக்திக்கு ட்ரம்போ, மோடியோ மோரிசனோ விதி விலக்கல்ல. கண்ணுக்கு தெரியாத இந்த சக்தி உலக அரசியலில் இரண்டறக் கலந்துள்ளது, நம் உடலில் உள்ள உயிரும் சக்தியும் போல.

விண்ணில் இருந்து மானிட உயிர் ஜோதியாய் வந்திறங்கும் இறையுடன், இரண்டறக்கலந்து இயங்குவது சக்தி.

ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம தாகப்  புணரும் பராபரை
சோதி அதனில் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரையதன்  பால்திகழ் நாதமே.
                                                                                - திருமந்திரம் 381


ஆரம்பமும், முடிவும் இல்லாத உயிர் ஜோதியை நீக்கமற இணைந்து நிற்கும் சக்தி. ஒளியில் சக்தி உறைந்திருக்கும் இந்நிலையில் இப்பேரண்டம் தோன்ற மூலமான  ஒலி தோன்றியது என்று உறுதியாக  சொல்லலாம்.


மூலாதாரத்தில் உள்ள குண்டலினியில் கிளர்ந்தெழும் ஜோதியாகவும், அதில் உதிக்கும் நாதமாகவும் இரண்டறக்கலந்த நிலையே இறைவனின் இரண்டாம் குணம்.




Friday, December 20, 2019

கடவுள் - ஒன்றவன்தானே



கடவுள் - ஒன்றவன்தானே 

மண்ணுலகில் இன்று
தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை
வடிவம் பெறுகிறார்






காணொளி:
https://www.youtube.com/watch?v=sxfc6CgjCyk

'நான் பேச மாத்தேன். கோவமா வருது.' - பாலர் பள்ளியிலிருந்து வந்த அமையாவுக்கு, ஏன்  கோபம் என்று தெரியாமல் தவித்தாள் விமலா.

'டேய், பிரகாஷ் நீயாவது சொல்லுடா, என்னாச்சு இவளுக்கு?'

'நீ பிகாஷ கேக்காதே. அவன்தான் என் பிண்ட்ஸ் கிட்ட தவிட்டு பாப்பான்னு   சொன்னது.' - 'ர' உச்சரிக்க வராது அமையாவுக்கு.

'என்ன தவிட்டுக்கா வாங்கினே?'

'இல்ல பாரு. உன்னுடைய கை, விரல்கள் எல்லாம் அப்பா மாதிரியே இருக்கு. மூக்கு பாரு என்ன மாதிரியே இருக்கு'

'நான் எங்கிந்து வந்தேன்?'

'வாடி மயிலு. என் செல்லம், அம்மா வயித்துல இருந்துதான் வந்தே'

'எதுக்கு என்ன முங்கினே? பசிச்சா தோசை சாப்பிடு'

'இல்ல தங்கம். சாமிதான் உன்னை கொண்டுவந்து என் வயித்துக்குள்ள வெச்சாரு. அப்பாகிட்ட வேணும்னா கேட்டு பாரு'

'நீ சொல்லு பாட்டி. அம்மா பொய்.. பொய்.. தினம் என் கூட படுக்குது. கண் தொந்தா அப்பா கிட்டக்கிது' - அடுத்த அதிரடி குற்றச்சாட்டில்  அமையா.


விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்நின்று  உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்புஅறுத் தானே.
                                                                                  - திருமந்திரம் 113




விண்ணிலிருந்து இறங்கி, செய்திருந்த/செய்யவிருக்கும்  வினைக்கு சமமான உடல் தந்து, குளிர்ந்த காலையும் தலைக்கு காவலாக  வைத்து, ஒப்பில்லா சூரியப்  பேரொளியை  ஆனந்த நிலையில் உடலினுள் நிறுத்தி, தான் இறை மயமானவன் என்ற எண்ணத்தையும், முற்பிறவி எண்ணங்களையும்  அவனிடமிருந்து அழித்து, ஆண்டவனே, மனிதனாக பிறக்கிறான். 

அமையவாகவும் பிறக்கிறான்.









Wednesday, December 18, 2019

கடவுள் - எண்குணம்


கடவுள் - எண்குணம் 

கடவுள் ஏன் கல்லானான் 
மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே





மீசை அரும்பாத பருவமது. ஓடிப்போன அரை நூற்றாண்டில்,   
மீசையில் கருப்பாக  ஒன்றுமில்லை.

கோவை காந்திபுரம், இப்போதைய நகர்ப்புற பேருந்து நிலையத்தின் மூலையில் நின்று கொண்டு பேருந்து வருமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். க்ராஸ் கட் சாலையும், நஞ்சப்பா சாலையும் சந்திக்கும் மூலையில்  கோவில் இருப்பதற்கான எந்த அடிப்படையும் நான் பார்க்கவில்லை.

ஒரு ஐந்து  வருடங்கள் ஓடி இருக்கலாம், கீதாலயா தியேட்டரில் உரிமைக்குரல் படம் பார்த்து விட்டு, அதே சந்திப்பில் நின்ற பொழுது இரண்டு விஷயங்கள் புதியதாக பட்டது.

ஒன்று, அந்த சாலை சந்திப்பில் புதிதாக தோன்றி இருந்த பிள்ளையார் கோவில். இரண்டாவது கோவிலை சார்ந்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் பொன்மொழிகள்  பொறித்த கல்வெட்டு.


கடவுளை கற்பித்தவன் முட்டாள் 
கடவுளை பரப்பியவன்  அயோக்கியன் 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி 
கடவுளை மற! மனிதனை நினை!
                                                                                          - தந்தை பெரியார் 

கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை. எல்லாம் மனிதர்கள்தான். மனிதன் தன்னையே நினைத்திருக்க கடவுள் அங்கே தனக்குள் இருப்பதை அறிந்து கொள்வான். 

தனக்குள் இருப்பதற்கு என்ன பெயர் வைத்தால் என்ன? அறிவின் துணை கொண்டு பொறுமையுடன் பகுத்தறிவதைத்தானே பகுத்தறிவு என்கிறோம்.

எப்படி மனிதன் தான் கடவுள் என்று அறிந்து கொள்வது? அதற்குத்தான் திருவள்ளுவரும், திருமூலரும் இறைவனின் குணங்கள் எட்டு என்று  அளந்து சொல்லி இருக்கிறார்கள்.  அந்த எட்டு குணங்களை உணர்ந்து கொண்டாலே கடவுள் ஆகி விடலாம்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
                                                                                                 - திருக்குறள் 9

தன்னகத்தே எட்டு குணங்களை கொண்டவனின்  தாள்களை வணங்காதவனின்  ஐம்புலன்களில்,  புலன்களின் உணர்வு இருக்காது.

வாய் சுவைக்காது. மூக்கு முகராது. கண்கள் பார்க்காது. காது கேட்காது. மெய் ஸ்பரிசம் உணராது.

காலம் வரட்டும் கடவுளை தேடுவோம் என்றிருந்தால், நம் புலன்களில்  உணர்வுத்தன்மை அற்று  கடவுளை அறிந்து கொள்ளும் தன்மையே இல்லாமல் இம்மண்ணை விட்டு மறைந்து விடுவோம்.

கண்களுக்கிடையில், புருவ மத்தியில் நின்றியங்கும் இறைநிலை, எட்டு குணங்களை கொண்டியங்குகிறது. நேரடியாக மனிதனுக்கு அக்குணங்களை அறியும் தன்மை  இல்லை. தீவிர முயற்சியும், பயிற்சியுமே அறிவதற்கு வழி வகுக்கும்.

முதல் குணம்
புருவ மத்தியில் அமர்ந்து மூலாதாரத்தில் சூரியனாக, உடலுக்குள்  உயிராக மலர்ந்திருத்தல்: உயிர்

இரண்டாம் குணம்
மூலாதாரத்தில் உள்ள குண்டலினி  சக்தி, உயிருடன் சேர்ந்து   பரிமளித்தல்: சக்தி

மூன்றாம் குணம் 
உயிரையும், சக்தியையும் இணைக்கும் பற்றாக, பாசமாக  பற்றியிருத்தல்: பற்று

நான்காம் குணம் 
உடலில், சுற்று சூழலில்  ஏற்படும் நிகழ்வுகளை ஐம்புலன்களின் வாயிலாக  உணரும் குணம். மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி: மனம்

ஐந்தாம் குணம் 
ஐம்பொறிகளான, கண், காது, மூக்கு, வாய் மற்றும் மெய்  ஆகியவற்றை   ஆளும் தன்மை: ஐம்பொறிகளின் குணம் 

ஆறாம் குணம் 
ஐம்பொறிகளின் தன்மையை  ஆறு ஆதாரங்களான, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி மற்றும் ஆக்கினை  வழியாக  பரவி நிற்றல்:   6 ஆதார சக்கரங்கள்

ஏழாம் குணம் 
உயிரின் உணர்வு சக்தி, இறைநிலை,   தலையின் வழியாக  ஏழுலகாய் பரிமளித்தல்: துரியம்

எட்டாம் குணம்
பிரபஞ்சத்தின் ஆதாரமான  மூலாதாரம் தான்  என்ற இறைநிலைப் பேருணர்வு:  தன்மயமாதல் 

திருமந்திரம்-1

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான்  உணர்ந் தெட்டே.
                                                                                              


தன்னுடைய முதல் பாடலிலேயே, நான் யாரைப்பாடப்போகிறேன், அவன் எப்பேற்பட்டவன் என்பதை ஆணித்தரமாக சொல்லிவிட்டார் திருமூலர்.

உண்மையான ஆத்திகவாதி, நாத்திகனாக-கடவுளாகத்தான்  இருக்க வேண்டும்.

இறைவனுக்கேது இறைவன்?

*** ***












Wednesday, December 4, 2019

கைலாச

கைலாச 

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை 
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை 

பொருள்: 

'கைலாச'  என்ற புதிய நாடு ஒன்று உருவாகும் பணி தீவிரமாக நடந்து  
கொண்டுள்ளது.அந்த புதிய நாட்டின் புதிய கொடிதான் நீங்கள் படத்தில் காண்பது. கொடிக்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

மேலும், அதிக விபரங்களுக்கு:
kailaasa.org பார்க்கவும் 


“Understand, wherever you put this flag, that space will intensely vibrate with Paramashiva’s breathing space. Anywhere you put this Kailaasa cosmic flag, Rishabha Dhvaja, Paramashiva’s breathing space will fill it; Paramashiva’s inner space will fill it. In your office, home, cars, temples… everywhere have this Kailaasa flag. This is directly approved by Paramashiva Himself. It is directly the flag of Paramashiva. Put this flag wherever you can, you will see Paramashiva’s intense breathing space, blessings, and protection is on you.”

~ HDH Nithyananda Paramashivam

எங்கெல்லாம் இந்த கொடியை வைக்கிறீர்களோ, அவ்விடம் பரமசிவனின் மூச்சு ஸ்தலமாக  மாறி, கடுமையாக  அதிரும் என அறியவும். இந்த ஆகாச கொடி, ரிஷப த்வாஜ-வை ,  எங்கு வைத்தாலும் பரமசிவனின் மூச்சுஸ்தலம் அங்கு நிறைக்கும்; பரமசிவனின் உள் ஸ்தலம் நிறைக்கும். உங்கள் அலுவலகம், வீடு, வாகனங்கள், கோவில்கள்.. எவ்விடத்திலும் இந்த கைலாச கொடியை வைக்கலாம். இது நேரடியாக, பரமசிவனால்  அருளப்பெற்றது.பரமசிவனின் கொடி இது. எங்கு வேண்டுமானாலும் இந்த கொடியை நாட்டுங்கள், நீங்கள் பரமசிவனின் கடுமையான மூச்சு ஸ்தலம், அருளாசிகள் மற்றும் பாதுகாப்பை பெறுவீர்கள்.

- His Divine Holiness நித்யானந்த பரமசிவம் 

------------------------------------------------------------------------------------------------------

கீழே  கொடுக்கப்பட்டுள்ள youtube இணைப்பு, நீங்கள் தன்னிலைக்கு வர மட்டுமே:


https://www.youtube.com/watch?v=6OAd4SpJtR0

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...