Monday, November 18, 2024

மண்மாண் புனைபாவை

மண்மாண் புனைபாவை




'அ' - என்று சொல்லிக்கொண்டே ஒன்றாம் வகுப்பு சுப்புலக்ஷ்மி டீச்சர் கரும்பலகையில் எழுதினார். 

'எல்லாரும் சிலேட்ல எழுதுங்க. பென்சில இப்படி புடிங்க' - தனது கையில் மூன்று விரல்களை குவித்து காட்டினார்.

குழந்தைகளுக்கான சிறிய மரப்பலகையில் அமர்ந்திருந்த ரகு, சிலேட்டை பக்கவாட்டில் சாய்த்து, எழுத முயற்சித்தான். கோடுகள் அங்கும் இங்கும் போனதே தவிர, கரும்பலகையில் இருந்த எழுத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

கொஞ்சநேரம் பொறுத்துப்பார்த்த டீச்சர், ஒவ்வொருவருக்கும் சிலேட்டில் 'அ' எழுதி, அதன் மீது எழுத சொன்னார்.

ரகுவிற்கு இப்பொழுது கொஞ்சம் எளிதாக இருந்தது. 

'டீச்சர்.. ' - தாகம் என்று, வகுப்பு மூலையில் வைக்கப்பட்டிருந்த பானையை பார்த்துக்கொண்டே, கையால் சைகை  காட்டினான்.

மணல் குவித்து, அதன் மீது  வைக்கட்டிருக்கும் பானையை, தினமும் காலையில் சுத்தம் செய்து  அதில் ஆற்று நீரை நிரப்பி வைப்பது ஆயம்மாவின் வேலை.

டீச்சர் கொடுத்த, குளிர்ந்த  நீரைக்  குடித்து விட்டு மீண்டும் எழுத்தை நகல் எடுக்க ஆரம்பித்தான்.

'வீட்டில் குடிக்கும் தண்ணீர் இவ்வளவு ஜில்லுன்னு இல்லையே..' - மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, கைகள் எழுதிக்கொண்டிருந்தது.

'ஒரு வேளை, பானைக்கு வெளியே  அவங்க பூசும் திருநீறினால்  இருக்கும்.'

அம்மா சாதம் சமைத்ததும், சட்டிக்கு அடுப்பு சாம்பலையே திருநீறாக பூசி, பரிமாற ஆரம்பிப்பது நினைவுக்கு வந்தது.

'இருக்கலாம். இருக்கலாம்.' 

'பானைத்தண்ணீர் ஏன் குளிர்ச்சியாக இருக்கிறது, அதே தண்ணிதான் வீட்டில். ஆனால்,  பித்தளை   அண்டாவில் இருக்கிறது.  பானைத்தண்ணீர் மாதிரி ஜில்லுன்னு  இல்லை.' - திருநீறைத்தாண்டி மனம் தேடிக்கொண்டிருந்தது.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது, சயின்ஸ் வாத்தியாரிடம் இருந்து தற்செயலாக  பதில் வந்தது.

'பசங்களா, பானைத்தண்ணி ஏன் ஜில்லுன்னு இருக்கு தெரியுமா?'

'ஏன்னா.. மண்ணால் செய்த பானையில் கண்ணுக்குத் தெரியாத சின்ன, சின்ன துவாரங்கள் இருக்கு. தண்ணீர் துவாரங்களின் வழியாக பானைக்கு  வெளிப்புறம் வரும்போது ஆவியாக மாறுது. அப்பொழுது, பானைக்குள் இருக்கும் நீரின் சூட்டையும் உறிஞ்சி எடுக்குது. அதனாலே, பானைக்குள் இருக்கும் நீர் ஜில்லுன்னு இருக்கு.'

ரகுவுக்கு தன்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

ஆனால், இந்த சந்தோசம் அடுத்த கொஞ்ச வருஷத்துக்குத்தான்.

ஒருமுறை, ரகுவும் தன்னுடைய நண்பன் தனபாலுவும் சைக்கிளில் யார் சீக்கிரம் கல்லூரி செல்வது என்பதில் போட்டி. காலை எட்டு மணி எதிர் வெயிலில், வேகமாக ஒட்டி வந்த சைக்கிளை  மர நிழலில் நிறுத்திய ரகு, ஒழுகும்  வியர்வையை துடைக்க மார்பில் கை வைத்த போது, மார்பு ஜில்லென்றிருந்தது.

இது எப்படி சாத்தியம்?

இடையில் பல வருடங்கள். வாழ்க்கை வெள்ளம் அடித்து, துவைத்து, காயப்போட்ட போதும், இந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

சேட் ஜிபிடி அண்ணன் சொல்கிறார், 'மார்புக்கு வெளியே வரும் வியர்வை, ஆவியாகும்போது உடலில் உள்ள வெப்பத்தை எடுத்துக்கொள்வதால் தோல், குறிப்பாக மார்புத்தோல் குளிர்ச்சியாகி விடுகிறது.'

அட, இந்த அறிவியல் விளக்கம், நம் ஆறாம் வகுப்பு  ஆசிரியர் சொன்னதுக்கு சரியாக ஒத்துப்போகிறதே.

இனிதான் கிளைமாக்ஸ்.

முதலில் மண் பானை, இரண்டாவது உடல். இரண்டும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியும்?

சித்தர்கள் அனைவரும் சொல்லும்  கருத்து, உடல் என்பது மண்ணால் வனையப்பட்டது. மண்ணெல்லாம் மனிதர்கள்.

கடுவெளி சித்தர் பாடல் 

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

பத்துமாதம் தாய் வயிற்றில் இருந்து பிறக்கும் நம் உடல்  ஒரு மண் பானையை ஒத்ததது. 

எதனால், மண்ணுக்கு உடலை ஒப்பிட்டார்கள் என்றும் நாம் அறிந்துகொள்ள, மனித வாழ்க்கையின் உண்மை நிலையையும் தெளிவாக்கி இருக்கிறார்கள். நம் மானிட  வாழ்க்கை 96 உண்மை நிலைகள் என்னும் சூத்திரத்திற்குள் அடங்கி நிற்கிறது.

இவற்றில் முதலில் சொல்லப்படுவது பஞ்ச பூதங்கள் என்னும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். 

நிலம் என்னும் மண்ணின் தன்மையாக மனிதன் பெறுவது உடலுக்கு ஐந்து காரணிகள். அவை முறையே, மயிர், தோல், சதை, நரம்பு மற்றும் எலும்பு.

சௌம்ய சாகரம் - 37

ஆறான பூதம் ஐந்தின் விரிவைக் கேளு
அப்பனே பிரிதிவியின் கூர்தான்மைந்தா
நேரான மயிருடனே எலும்பு சிரமம்
நிலையான நரம்பு சதை ஐந்துமாச்சு
பேரான பிரிதிவியின் கூறைச்சொன்னேன்
பொறுமையுடன் தான் ஐந்துப் பிலமாய் நின்று
கூரான அப்புடைய கூறு பாரு
குணமான புலத்தியனே குவித்துப் பாரே.

இது அகத்தியரின் பாடல்.

எனவே, நம் உடல் தன்னிச்சையாக மண்ணின் குணங்களைப்பிரதி பலிக்கிறது. மண், பானையானாலும், அல்லது உடலானாலும், அதனுடைய குணங்கள் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது.

மண்ணால் ஆன பொருள் மீது  நீர் பட்டால்,   கரைந்து விடுவதுதானே இயற்கை. நீரை சேமிக்கும் பானை கரைவதில்லை. மழையில் நனைந்தாலோ, நீரில் குளித்தாலோ  உடலும்  கரைவதில்லை.

குயவன் மண்ணில் வனையும் பானையை சூளையில் போட்டு சுட்டு எடுத்து விடுவதால், நீரில் கரைவதில்லை. உடல் நீரில் கரையாவிட்டாலும் ஒரு நாள் மண்ணோடு மண்ணாய்,  மண்ணில் கரைந்து விடுகிறது. 

இதைத்தான் திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்.

திருமந்திரம் - 143

மண்ணொன்று  கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது 
விண்ணின்று நீர்விழின்  மீண்டும் மண்ணானாற்போல்  
எண்ணின்று மாந்தர் இருக்கின்ற வாறே. 
 

மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், நீர் பட்டால்,  கரைந்துவிடும். சுட்ட பொருட்கள் திடமாக இருக்கும். இதை நினைத்துப்பார்க்காமல் மக்கள் இருக்கிறார்கள். மண்ணோடு மண்ணாய் மறைந்து போகிறார்கள்.

ஆனால், உடலை சுடுவதெப்படி?

மூலாதாரத்தில் உள்ள குண்டலினியில்  மூண்டெழும் செழுஞ்சுடர் கொண்டு, புருவ மத்தியில் உள்ள சந்திர மண்டலத்தில் லயித்திருங்கள். இந்த தியான நிலை, சமாதி நிலையாக மாறும்போது, துரியமும், பரதுரியமும் வசப்படும்.

இந்த நிலை எய்தப்பெற்றவர்களின் உடல் அகத்தீயினால் சுட்ட உடலாகி விடுகிறது. அவர்களாக சமாதி அடைய நினைத்தால் ஒழிய உடல் அழிவதில்லை. 

ரகுவிற்கு தெளிவாக புரிந்தது, தன்னுடல்  மண்மாண் புனைபாவை என்று. 


*** *** *** *** *** ***






Tuesday, November 12, 2024

எதிர்துருவங்கள்

எதிர்துருவங்கள்  





காமம் என்பது பிறக்கும்போதே, உடலுக்குள்  பொதிந்திருக்கும் நெருப்பு. மனிதப் பிறவி எடுத்த அனைவருக்கும் இது பொருந்தும்.

சமுதாய ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டதல்ல, காமம். இதுதான் அடிப்படை, இதுதான்  நிதர்சனமான உண்மை. எத்தனை வாத, விவாதம் செய்தாலும் இறுதியில் வாதம் செய்தவனும், எதிர்வாதம் செய்தவனும் சங்கமித்து ஒன்றிணைவது  காமத்தில்தான்.

பஞ்சபூதங்களில் முதன்மையானது வானம். விண்ணிலிருந்து இறங்கி வரும் இறைவன், வானத்தில் தவழ்ந்திருக்கும் உயிருக்கு அதன் கர்ம வினைக்கேற்ப உடலைத் தருகிறான். 

வானத்தின் தன்மைகளாக உடல் பெறுவது, ஐந்து குணங்கள்:

காமம் - ஒன்றை அடையத் துடிக்கும் ஆசை 

குரோதம் - பிடிக்காதவற்றை பழிவாங்குதல்  

லோபம் - தன்னுடையது என்று இருகப்பற்றுதல்     

மதம் - தன் கொள்கையில்  தீவிரம்   

மாச்சரியம்  - மற்றவர்களின் மேல்  பொறாமை 

அகத்தியர் வானத்தின் தன்மைகளாக சொல்வதைக்கேளுங்கள்.

சௌமிய சாகரம் - 41

கூறாக ஆகாசக் கூறு தன்னை 
குறியுடனே சொல்லுகிறேன் குணமாய்க் கேளு
நேராகக் குரோதமொடு லோபம் மோகம் 
நிசமான வாச்சரிய மதமு மைந்து 
ஊரான ஆதாரந் தன்னைப் பார்த்து 
உத்தமனே தானாவாய்  நின்றா யானால்
தேராக வாசியது  தேறும் தேறும் 
சிவபூதம் ஐந்து தொழிலிருத்தல் ஐந்து.


இவ்வைந்து தன்மையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பொதிந்திருக்கிறது.

உயிரணுவில் உறையும்  காமமென்னும் பெருநெருப்பு, காந்த சக்தி  கொண்டது. எதிர் காந்தத்தை எந்நேரமும், எந்த வயதிலும் கவரத்  தவிக்கும் காரணம் இதுதான்.

இந்த கவர்ச்சியே  எதிர்ப்பாலினத்தை என்ன விலை கொடுத்தாவது  சேரத்துடிப்பது.

இது இயற்கை, மனித உடலுக்கு  விதித்த விதி.

பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் விதி மீறல்களுக்கு அதிகம் இரை ஆவது பெண்களே. மஹாபாரதமோ, இராமாயணமோ நடந்து முடிந்த சரித்திரப்  புகழ் வாய்ந்த போர்களோ, இறுதியில் பெண்களே பலியாடுகளாக, காமத்தின் வடிகாலாக  இருந்திருக்கிறார்கள்.

எனினும், பெண்ணின் உணர்வுகள்,  அவள் உடலின் தேவைகள்  காலம் காலமாக புறம் தள்ளப்பட்டிருப்பது வரலாறு காட்டும் உண்மை.

ராமன், ராவணனைவிடக்  கீழானவனாகிறான், கருவுற்ற  சீதையை காட்டிற்கு அனுப்பியபோது.

புத்தனும் தன் அறிவில் மழுங்கிப்போகிறான், தன்  இளம் மனைவியை தவிக்க விட்டு சென்றபோது.

தனக்கு சேவை செய்ய வந்த இளம் பெண்ணை, சுகம் தர இயலாத போதும்,  மணந்த ஈ.வெ.ரா.வும் பெண்ணுரிமைப் போரில் புறமுதுகிட்டு விடுகிறான். 

நடிகர் நெப்போலியனின் தந்தைப்பாசமும், அந்த திருதராஷ்ட்ரனின் தந்தைப்  பாசத்திற்கு குறைந்தது அல்ல என்றாலும், நடந்ததென்னவோ ஒரு பெண்ணுக்கிழைத்த அநீதியே.

ஓஷோ:

"காமம் என்பது இயல்பானது என்பதினை மனதில் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் நிச்சயமாக காமத்தினை கடந்து செல்லமுடியும். ஆனால், அதனை அடக்குவதால் நிச்சயமாக கடக்க முடியாது. இப்படி அடக்கினால் அது வேறொரு வழியில் வெளிப்பட காத்துக்கொண்டிருக்கும். அப்படி அடக்குவது ஒன்று சமூகத்திற்கு மாறான ஒழுக்க கேட்டினை உருவாக்கும், அல்லது அதன் மீதான அதீத பைத்தியத்தினை உருவாக்கும். (இது எவ்வளவு பெரிய பேருண்மை இன்று கற்பழிப்புகள் அதிகரிப்பதற்கும், காமம் சார் திரைப்படங்களுக்கான வரவேற்பும் இந்த காரணத்தின் அடிப்படையில் அமைந்ததுதான்). நீங்கள் அதனைக்கடந்து செல்ல வேண்டும் என்றால் இயல்பாக அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே அதற்கான முதற் தகுதி!"

"அடிப்படையில் காமம் இறைவனால் கொடுக்கப்பட்ட புனிதமான ஒன்று, அதனை நாம் உயர்ந்த சக்தியாக மாற்றிக்கொள்ளவேண்டியது எமது கடமை. கடவுளால் கொடுக்கப்பட்ட அனைத்தும் புனிதமானவையே, இங்கு கடவுள் எனும் போது அது குறித்த ஒரு நபரினையோ, மத நம்பிக்கையினையோ குறிப்பதல்ல! இந்த பிரபஞ்சத்தின் முழு இருப்பையும் குறிக்கும்.காமத்தினை வெல்லவேண்டுமாயின்
காமத்தின் மீதான வெறுப்பினை இல்லாததாக்குங்கள்!"

To Read Full Blog :

VEDHAYOGA SIDDHARKAL MARKAM NACHANDUPATTI - வேதயோக சித்தர்கள் மார்க்கம்: காம ரகசியம் - 03: காமத்தின் மீதான வெறுப்பு சரியா?

*** *** *** *** ***


  


Thursday, November 7, 2024

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம் 




இந்து சமய அறநிலையத்துறை  சார்ந்த கல்வி நிலையங்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் - இது செய்தி.

'புதுமைப்பெண்' திட்டம் 'பழமைப்பெண்' திட்டமாகிவிட்டதென்று திருமாவளவன் புகார். 

கந்த சஷ்டி கவசம்  பெண்கள் பாடுவது அவ்வளவு பெரிய இழிவான செயலா?

அது இருக்கட்டும், உங்களுக்கு எங்கே வலிக்கிறது? ஏன் வலிக்கிறது?

எத்தனை வருடங்களாக அரசியல் செய்கிறீர்கள்? இன்னும் எத்தனை வருடம் அரசியலை தொழிலாக கொண்டு வருமானம் பார்க்கப்  போகிறீர்கள்? ஆட்சியில் பங்கு, அதிகாரம் என்பது உங்கள் கட்சிக்கு கானல் நீர் என்பதை அறிந்தே வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். தினம் தினம் 'கூட்டணி தொடரும்' என்று சொல்லும்போதே தெரியவில்லையா, ஓட்டமெடுக்க  முன்னோட்டம் பார்க்கிறீர்கள் என்று. 

இன்றைக்கு, கொஞ்சம் திருச்செந்தூர் பக்கம் பார்வையைத்  திருப்புங்கள். முக்கியமான தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பும் உண்டு, பாருங்கள்.

'கோவிலின்  அருகினில் கூடிய கூட்டங்கள்  தலையா, கடல் அலையா?'

இந்த பக்தர்கள் கூட்டம், உங்கள் கூட்டணி தலைவரின் கூற்றுப்படி, சுய சிந்தனை இல்லாத சோற்றால் அடித்த பிண்டங்களா?

அசிங்க, அசிங்கமான பொம்மைகள் இந்து கோயில்களில் இருக்கிறது என்று சொன்னது நீங்கள்தானே! வேறு எதுவும் கோயில்களில் உங்கள்  கண்ணில் படவில்லையா? திருமண பந்தத்திற்குள் செல்லாததால் புத்தி வேறு எங்கே  செல்லும்?

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில், இன்றைய உலகில், நாம் உபயோகிக்கும் கைப்பேசி, மடிக்கணினி, வாகனங்களை சித்தரிக்கும் மற்றும் எத்தனையோ புதுமைகளை  சிற்பங்களில்  பார்க்கவில்லையா?

இது எப்படி சாத்தியம் என்று மூளை சிந்திக்கவில்லையா?

காலப்பயணம் நம் முன்னோர்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது என்று தோன்றவில்லையா? அல்லது, இது மட்டும்தானா, இன்னும் வரும் காலங்களில் எந்த மாதிரியான புதுமை வரும் என்று அவர்கள் சிற்பங்களில் சொல்லி இருக்கும் செய்திகளை ஆராய்ந்து அறிய ஆர்வமில்லையா?  

காலப்பயணம் செய்த நம் முன்னோர்கள், இன்னும் பல நூற்றாண்டுகள் முன்னோக்கி பயணித்து அதை கோயில்களில் சிற்பங்களாக ஆவணப்படுத்தி இருக்கலாம் இல்லையா?

போங்கள். போய் உங்கள் தொண்டர்களிடம் சொல்லுங்கள். தேடத்தேட கிடைக்கக்கூடிய அற்புதங்கள் நிறைந்தது இந்து சமய அறநிலையத்துறை  பொருளீட்டும் கோயில்கள் என்று.

ஏதோ வந்த காசுக்கு, போகின்ற வழிக்கு புண்ணியம் தேடி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து விட்டு போகட்டும்.

வேற வேலை நெறய இருக்கு, போய் பாருங்க திருமா.

வேதங்கள், மந்திரங்கள், சமய சம்பிரதாயங்களை மேற்கொள் காட்டி கதறுகின்ற ஆன்மீகவாதிகளாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தால் கோயில்களை நிர்வகிப்பதாலும் ஒரு பயனும் இல்லை. இறை  தேடலில்  முழுமையடைந்த ஒருவரின் வழிகாட்டுதலே  போதும், மற்றவர்கள் வாழ்வில் ஒளியேற்ற. மற்ற கற்ற பசுக்களும், அதிகாரப்பசுக்களும்  கறவை முடிந்து, பால் மடி வறண்ட பசுக்களைப் போன்றவர்களே.

திருமந்திரம் - 2015

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போதும் 
மற்றை  பசுக்கள் வறள்பசு தானே.  


*** *** *** *** ***







 

Tuesday, November 5, 2024

இரவும் பகலும்

இரவும் பகலும் 




நவம்பர் 5, 2024.

அமெரிக்காவில் ஜனநாயகத் திருவிழா!

அடுத்த நான்கு வருடங்கள் ஆளப்போவது குடியரசுக்கட்சியா, ஜனநாயகக்கட்சியா என்று தீர்மானிக்கும் தேர்தல் இது.

கட்சிக்குள் வாக்கெடுப்பு மூலம்  வேட்பாளரை தேர்ந்தெடுப்பது முதல்  ஜனநாயகம் ஆரம்பிக்கிறது இங்கே.

உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது இந்த தேர்தலின் முடிவுகளை. பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ள அமெரிக்கா, அதிலிருந்து மீள்வதற்கான எடுக்கும் கொள்கை முடிவுகள் உலகின் ஏனைய நாடுகளின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கப்போவதென்னவோ நிச்சயம்.

அது பங்கு சந்தையோ, தங்கமோ, வீட்டு மனைகளோ, எரி பொருளோ  அல்லது நாடுகளுக்குள் நடக்கும் போரோ இந்த தேர்தலின் முடிவுகள் ஒரு தாக்கத்தை  கொண்டு வரவுள்ளது.

அமெரிக்காவுக்கு லாபம் என்றால் மற்ற நாடுகளுக்கு கண்டிப்பாக அது  நஷ்டம்தான்.

பகல் என்றால் எதிர்ப்பதம்  இரவுதானே! 

நாம் சுவாசிக்கும் காற்றிலும் எதிர்ப்பதங்கள் உள்ளது. பன்னிரண்டு அங்குலம் சென்று, மீளும் சுவாசக்காற்றில் பகலும் இரவும் உள்ளது. 

பகல் என்றால் சூரியன் இருப்பான், வெப்பமும் இருக்கும். வலது மூக்கின் வழியாக சென்று வரும் காற்று சூரிய நாடி. 

இரவு என்றால் சந்திரன் இருப்பான், குளிர்ச்சியும் இருக்கும். இடது மூக்கின் வழியாக சென்று வரும் காற்று சந்திர நாடி.

இதில் உள்ள மெய்ப்பொருளை காற்றை  சுவாசிக்கும் மனிதன் அறிந்திருக்கவில்லை. மெய்ப்பொருளை  மனிதன் அறியும் வழி ஒன்றிருக்கிறது. 

இந்தக் காற்றே உடலில் உயிரை கட்டி வைத்திருக்கிறது.

காற்று உயிரை கட்டி வைப்பதால், உடலுக்குள் உயிரை இருத்தி வைக்கும்  இறையையும் அறிந்திருக்கிறது.

முதலில் பிராணாயாமம் என்னும்  மூச்சுப்பயிற்சி, தொடர்ந்த தியானம். தியானத்தின் முடிவில்  சமாதி நிலையில் பேரண்டப் பெருவெளியாம் சுத்த வெளிக்கு  செல்லலாம்.

இந்த நிலையில் மூச்சுக்காற்று, பன்னிரண்டு அங்குலம் சென்று வருவது நின்று,  உடலுக்குள் அடங்கிவிடும்.

சுத்த வெளியில் பகலும் இல்லை; இரவும் இல்லை.

திருமந்திரம் - 577

பன்னிரண்டு  ஆனைக்குப்  பகல்இர வுள்ளது
பன்னிரண்டு ஆனையைப்  பாகன் அறிகிலன் 
பன்னிரண்டு ஆனையைப்  பாகன் அறிந்தபின் 
பன்னிரண்டு ஆனைக்குப்  பகல்இரவு  இல்லையே. 


*** *** *** *** *** ***



Tuesday, October 29, 2024

ஒன்றே குலம்! ஒருவனே தேவன் !!

 

ஒன்றே குலம்! 

ஒருவனே தேவன் !!





மேகத்தைப் போன்றது சந்தோஷமும், கவலையும்.
எண்ணங்களைப்போலவே ஓரிடத்தில் நிற்பதில்லை.
கடல் அலைகளைப்போல் ஓயாமல் வான  ஊர்வலம். 

வானத்தை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். யாரால் முடியும்?

தற்காலிகமான சந்தோஷமும், கவலையும் நீங்கி, நிரந்தரமான ஆனந்தம் வேண்டும் என்றால் வானத்தை சுத்தம் செய்து, தெய்வீக ஆற்றலால் நிறைக்கத்தான்  வேண்டும்.

வானம் என்பது உள்ளம். மேகம் அதில் எண்ணங்கள்.

உள்ளத்தை தூய்மையாக்கினால் போதும். எண்ணங்கள் கட்டுப்படும். 
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருக்கும் குப்பை, கூளங்களை முதலில் கவனிக்க வேண்டும். இவைகளே நம் கவலைக்கு காரணம். 

தீர்க்கக்கூடியவை, நம்மால் தீர்க்க முடியாதவை என்று இரண்டு வகையாக குப்பைகளை  பிரிக்கலாம். தீர்க்கக்கூடிய காரியங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள். தீர்க்க முடியாதவை பற்றிய கவலையை விடுங்கள்.

நீண்ட கால மகிழ்ச்சியை தரக்கூடிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள்.

இதற்கு மேல் ஆனந்தத்தை நீங்கள் தேடி செல்ல வேண்டாம். உங்கள் உள்ளத்துக்குள்ளே இருக்கும் ஆனந்தம் தானாக வெளிப்பட்டு உங்கள் வாழ்க்கையை சொர்கமாக்கிவிடும்.

இறைவனும் இங்கே குடி வருவான் என்கிறார் திருமூலர்.

மனித குலம் ஒன்று. படைத்தவனும் ஒருவனே. இந்த கருத்தை உள்ளத்துக்குள் நன்றாக உள்வாங்கி, நிலையாக நினைவில் கொள்வீர்கள் என்றால், எமனும் அருகில் வர மாட்டான். இதுவே இறைவனின் மலர்ப்பாதங்களை அடையும் வழி என்றறிந்து பிறவிச்சுழலில் இருந்து மீண்டு வாருங்கள்.  


திருமந்திரம் - 2104

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 
நன்றே நினைமின்  நமன்இல்லை  நாணாமே 
சென்றே புகும்கதி இல்லை நும்சித்தத்து 
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே.


*** *** *** *** *** ***

Friday, October 25, 2024

முடிந்த கதை தொடர்வதில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை 



'இளவரசிய தூக்கிட்டுப்போன ராஜா,  அவளையே கல்யாணமும் பண்ணிக்கிட்டார். அப்புறம் ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க.'

'அவ்வளவுதான். கதை முடிஞ்சது. எல்லாரும் தூங்கப்போங்க' - கதை சொன்ன தாத்தா பேரனையும், பேத்தியையும் தூங்க போக சொன்னார்.

'தாத்தா, இளவரசியும், ராஜாவும் இப்ப தூங்க போவாங்களா?' - பேரன் கேட்டான்.

'இல்ல தங்கம், அது கதை. கதை முடிஞ்சா எல்லாம் முடிஞ்சது. அதுக்கு மேல ஒண்ணும் இருக்காது.' - தாத்தா அவர்களை தூங்க வைக்க பார்த்தார்.

'நேத்து கிருஷ்ணர் கதை சொன்னீங்க. கதை முடிஞ்சு  அவரும் செத்துட்டார். பின்ன எதுக்கு அவர் படத்தை வச்சு கும்பிட சொல்றீங்க?' 

தாத்தாவுக்கு யாரோ தன்னை பிடரியில் ஓங்கி அடித்ததுபோல் இருந்தது.

கிருஷ்ணரின் காலம் துவாபர யுகத்தின் முடிவாகவும்,  கலி யுகத்தின் ஆரம்பமாகவும் சொல்லப்பட்டு வருகிறது. கலி யுகத்தில் கிருஷ்ணர் கல்கி அவதாரம் எடுப்பார் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

மஹாபாரதப்போரில் கண்ணன் அருளிய கீதை இன்றும் நமக்கு படிக்க கிடைக்கிறது. கண்ணனின் சந்ததியினர் என்ன ஆனார்கள்? கதை முடிந்ததால் அவர்களும் மடிந்து போனார்களா?

'மானிடர் ஆன்மாவுக்கு மரணம் இல்லை. மறுபடி மறுபடி பிறக்கும்.' -என்றவன் கண்ணன்.

கண்ணன் தேவர்களின் வம்சம், அதனால் அவதாரம் மட்டுமே எடுக்க முடியும்.

எல்லாம் சுவையான கதைதானே. கதை முடிந்தால் எழுந்து போய்விடுவதுதானே முறை. ஏன், அதையே கட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறோம். அடுத்தடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுத்து அவர்களையும்  சிந்திக்க விடாமல் செய்கிறோம்.

பழையனவென்று பூஜிப்பவர்களும், நிந்திப்பவர்களும் சிந்திக்க வேண்டியது என்று ஒன்று உண்டு.

அறிவுக்கு ஒவ்வாத பழமை கருத்துக்களை ஒதுக்குவது, பூஜிப்பவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், நிந்திப்பவர்கள் அறிவுக்கு உகந்த பழமை கருத்துகளை ஏற்றுக்கொள்வது.

இதில் சோகம் என்னவென்றால், இவர்களுக்கென்று ஒரு கூட்டம் சேர்ந்தவுடன், தன்னுடைய கருத்தை வலுப்படுத்த, அவர்களின்  கருத்து சரியோ, தவறோ,  முட்டுக்கொடுக்க ஆரம்பிப்பதுதான்.

சரி என்று பட்டதை சுயமாக சிந்தித்து அதன் வழி  நடப்பது  ஒன்றுதான் உண்மையான மெய்ஞ்ஞானத்தை வழங்கக்கூடியது.

நல்லன போற்றி அல்லன அகற்றுவதால் கிடைக்கும்  பலனை  திருமூலர் சுட்டிக்காட்டுவதையும் கேட்டுக்கொள்வோம்.

குயவன் மண்ணைக்குழைத்து  இரண்டு  மண்பானைகளை செய்தான். ஒன்றினை சூளையில் இட்டு சுட்டான். மற்றொன்றை அப்படியே வைத்து விட்டான். மழைபெய்த போதும், தீயில் சுட்ட பானை  திடமாக இருந்தது. சுடாத பானை மீண்டும் மண்ணாகவே கரைந்து  விட்டது. தீயில் சுடாத பானையைப்போல் எண்ணற்ற மனிதர்கள் மண்ணோடு மண்ணாக மறைந்துபோகிறார்கள். 

திருமந்திரம் - 143

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் 
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது 
விண்ணின்று நீர்வீழின் மீண்டுமண் ஆனாற்போல் 
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாரே.

இறைவனைப்பற்றிய எண்ணங்களை சிந்தித்து அறவழியில் வாழ்பவர்கள், சுட்ட பானை போல் திடமாக இருந்து,  இறைவனடி சேரும் பேறு பெற்றவர்கள். மீண்டும் பிறப்பதில்லை. 

மற்றவர்கள் சுடாத பானை, மீண்டும் மீண்டும் மண்ணாக கரைந்து, பிறந்து பிறவிச்சுழலில் சிக்கித் தவிப்பவர்கள்.

*** *** *** *** ***











  

 

Monday, October 21, 2024

கடவுளைத்தேடி

கடவுளைத்தேடி



கடவுள் இல்லை என்னும் நாத்திகனும், கடவுள் இருக்கிறார் என்னும் ஆத்திகனும் கருத்தில் ஒத்துப்போகும் இடம் ஒன்று உண்டு.

நாம் வாழும் பூமியானாலும், நம் சூரியக்குடும்பமோ அல்லது பிரபஞ்ச வெளியோ, அவற்றில் இருக்கக்கூடிய பொருட்களில் எதற்கேனும் தானாக உருவாகும் தன்மை உண்டோ? அங்கு வாழும் உயிர்களால் புதியதாக ஒன்றை உருவாக்கும் திறன் உள்ளதோ? கண்டிப்பாக இல்லை. ஒரு பொருளை  இன்னொரு பொருளாக மாற்றும் படைப்புத்திறன் இருக்கிறதே தவிர, உருவாக்கும் திறன் யாருக்கும் இல்லை.

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். எவ்வளவு நகைப்புக்குரிய கருத்து இது?

ஒரு வாதத்திற்கு இதை பரிணாம வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டாலும், மனிதனின் பரிணாம வளர்ச்சி என்ன? மனிதன் மனிதனாகவே இருப்பது ஒன்றே போதும், குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது கட்டுக்கதை என்று. இந்த வாதம் நாத்திகவாதிகளுக்கு ஏற்புடைத்ததாக இருக்கும்.

கடவுளுக்கு மனித வடிவம் கொடுத்து, குழந்தை குட்டிகளோடு அவனுக்கு புராணக்கதைகள்  எழுதி வைத்த ஆன்மீகவாதிகளுக்கு, நாத்திகவாதிகள் எவ்வளவோ மேல் என்று தோன்றும். இதில், நம்முன் நடக்கும் அத்தனை செயல்களுக்கும்  கடவுள் பொறுப்பேற்க வேண்டும் என்று முறையிடுவதுதான்  இன்னும் வேடிக்கை.

கடவுள் என்பவன் பெண்ணுமல்ல, ஆணுமல்ல, மூன்றாம் பாலினமும் அல்ல.

உள்ளத்தில் எழும் உன் எண்ணங்களில் இருந்து விடுபட்டு தியானத்தில் சமாதி நிலையில் இருக்கும்பொழுது, உன்னுடைய கண்களுக்கு மத்தியில் பேரொளியாய் நிற்பவன் இறைவன். அவனுடைய தன்மைகளை அறிய அறிய ஒருவனுக்கு மிகவும் அரிதான கண்ணின்றி காணும் சக்தியும், காதின்றி கேட்டிடும் திறனும் வாய்க்கப்பெறும்.

திருமந்திரம் - 1872

பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள் 
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக் 
கண்இன்றிக் காணும் செவி இன்றிக்கேட்டிடும் 
அண்ணல் பெருமையை ஆய்ந்தது  மூப்பே.

கடவுள் என்று ஒன்று இல்லை என்னும் நாத்திகனின் வாதமும், கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை, [அது உனக்குள்ளே இருக்கும் பெருஞ்சோதி], என்னும் ஆத்திகனின் நிலைப்பாடும் ஒன்றிப்போகிறது.


*** *** *** *** *** 

கடவுளைத்தேடும் 

பாதை நீள்கிறது 

பயணம் தொடர்கிறது 

 

 

 

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...