இரவும் பகலும்
நவம்பர் 5, 2024.
அமெரிக்காவில் ஜனநாயகத் திருவிழா!
அடுத்த நான்கு வருடங்கள் ஆளப்போவது குடியரசுக்கட்சியா, ஜனநாயகக்கட்சியா என்று தீர்மானிக்கும் தேர்தல் இது.
கட்சிக்குள் வாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது முதல் ஜனநாயகம் ஆரம்பிக்கிறது இங்கே.
உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது இந்த தேர்தலின் முடிவுகளை. பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ள அமெரிக்கா, அதிலிருந்து மீள்வதற்கான எடுக்கும் கொள்கை முடிவுகள் உலகின் ஏனைய நாடுகளின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கப்போவதென்னவோ நிச்சயம்.
அது பங்கு சந்தையோ, தங்கமோ, வீட்டு மனைகளோ, எரி பொருளோ அல்லது நாடுகளுக்குள் நடக்கும் போரோ இந்த தேர்தலின் முடிவுகள் ஒரு தாக்கத்தை கொண்டு வரவுள்ளது.
அமெரிக்காவுக்கு லாபம் என்றால் மற்ற நாடுகளுக்கு கண்டிப்பாக அது நஷ்டம்தான்.
பகல் என்றால் எதிர்ப்பதம் இரவுதானே!
நாம் சுவாசிக்கும் காற்றிலும் எதிர்ப்பதங்கள் உள்ளது. பன்னிரண்டு அங்குலம் சென்று, மீளும் சுவாசக்காற்றில் பகலும் இரவும் உள்ளது.
பகல் என்றால் சூரியன் இருப்பான், வெப்பமும் இருக்கும். வலது மூக்கின் வழியாக சென்று வரும் காற்று சூரிய நாடி.
இரவு என்றால் சந்திரன் இருப்பான், குளிர்ச்சியும் இருக்கும். இடது மூக்கின் வழியாக சென்று வரும் காற்று சந்திர நாடி.
இதில் உள்ள மெய்ப்பொருளை காற்றை சுவாசிக்கும் மனிதன் அறிந்திருக்கவில்லை. மெய்ப்பொருளை மனிதன் அறியும் வழி ஒன்றிருக்கிறது.
இந்தக் காற்றே உடலில் உயிரை கட்டி வைத்திருக்கிறது.
காற்று உயிரை கட்டி வைப்பதால், உடலுக்குள் உயிரை இருத்தி வைக்கும் இறையையும் அறிந்திருக்கிறது.
முதலில் பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி, தொடர்ந்த தியானம். தியானத்தின் முடிவில் சமாதி நிலையில் பேரண்டப் பெருவெளியாம் சுத்த வெளிக்கு செல்லலாம்.
இந்த நிலையில் மூச்சுக்காற்று, பன்னிரண்டு அங்குலம் சென்று வருவது நின்று, உடலுக்குள் அடங்கிவிடும்.
சுத்த வெளியில் பகலும் இல்லை; இரவும் இல்லை.
திருமந்திரம் - 577
பன்னிரண்டு ஆனைக்குப் பகல்இர வுள்ளது
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டு ஆனைக்குப் பகல்இரவு இல்லையே.
*** *** *** *** *** ***
No comments:
Post a Comment