முடிவில்லா ஆரம்பம்
படைத்தவன் இறைவன்
கொடுத்தவன் தந்தை
சுமந்தவள் அன்னை
யாருடைய பிள்ளை?
ஓம் ஆதியில் பிறந்து திகழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்ச ஆதார நாதம்.
அ + உ + ம் என்பது ஓம் என்ற நாதத்தின் அடைவெழுத்துகளாகும்.
அகாரம் முதலெழுத்தாக வருவது. அகாரத்தில் எழும் ஓசை முதலில் வருவது. இதுவே ஆதி பகவானின் ஆதார ஒலி.
உ மற்றும் ம் என்பது அகரத்திற்கு சக்தியளிக்கும் ஒலி. இவை ஆதிபகவானுடன் இரண்டறக் கலந்து நிற்கும் சக்தியை குறிப்பது.
முழு நம்பிக்கையுடன் ஓங்கார நாதத்தை கண்களுக்கிடையில் மனத்தால் எண்ணிப்பார்ப்பவரின் உள்ளம் நிறையும் வண்ணம் மனத்தின் ஆரம்பமும், முடிவும் தெரியும்.
திருமந்திரம்
விளங்கு நிவிர்த்தாதி மேவும் அகராதி
வளங்கொள் உகார மகாரத்துள் விந்து
களங்கம்இல் நாதாந்தம் கண்ணின்உள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.
திருவள்ளுவரும் தன் முதல் குறளில் இதையே வலியுறுத்தி சொல்லுகிறார்.
ஓம் என்னும் நாதத்தின் முதல் எழுத்தான அகரம், உலகில் ஆதிபகவனுடன் முதலில் தோன்றியதாகும்.
திருக்குறள்
அகர முதல எழுத் தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு.
இப்ப சொல்லுங்க. பாடல்கள் தரும் மொழி பெரிதா? அல்லது நாதம் என்னும் இசை பெரிதா?
சினிமா பாடல்கள் இசை அமைத்தவனின் உரிமை என்றால் பாட்டுக்களை எழுதியவனின் உரிமை எங்கே போகும்?
திரைப்படம் எடுத்தவன் ஒருவன்
மொழியை பிழிந்தெடுத்தவன் கவிஞன்
காற்றை சுரம்பிரித்தவன் இசைக்கலைஞன்
குரலால் கட்டிப்போட்டவன் பாடகன்
நடிப்பால் மயங்கவைத்தவன் நடிகன்
யாருக்கு சொந்தமிந்த பாட்டு?
'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்..' - இது யார் பாட்டு?
எம்ஜியார் பாட்டு.
எனக்கு தெரிந்ததெல்லாம் எம்ஜியார் பாட்டு, சிவாஜி பாட்டு, ரஜினி பாட்டு இப்படித்தான்.
*** *** ***
பாடலின் வரிகள் நரம்பை முறுக்கேற்றுகிறது. பின்னணிப்பாடகரின் குரல் காதுக்கு தேனாக பாய்கிறது. பாடி நடித்தவரின் அர்ப்பணிப்பு காலங்களை கடந்து நிற்கிறது. இசை அப்படியே உள்ளத்துக்குள் ஊடுருவி செல்கிறது.
வேறென்ன வேண்டும்?