Wednesday, January 25, 2023

அகரம் தமிழுக்கு சிகரம்

அகரம் தமிழுக்கு சிகரம் 








அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்:

 ஆதி பகவான்  அகரம் முதலான எழுத்துக்களை முதலில் உலகில் படைத்தான்.

                                         ----------------------------------------------------------

உன்னலரும் பரசிவன்ற னருளாலே நாத
        முதிக்கு மிகுங் குடிலைதனில் விந்துவரு நாதந் 
தன்னிலதி  னொளிவளருஞ் சதாசிவரா மவரிற் 
        றயங்கவரு மீசர்வித்தை தனையளிப்ப  ரதனான் 
மன்னுவரிவ் வகையைவர் வாய்மையினான் முன்னே 
        வந்திடுமென் றுரைசெய்த விந்துவழா வகையே 
முன்னுதவு சூக்குமாதி யொருநான்கு மென்று 
        மொழிந்திடுவ றருங்கலைகள் முதிர்ந்து ளோரே. 

                                                                                         - சிவப்பிரகாசம் 21

பரமசிவனது  சத்தியின் வியாபாரத்தால் சுத்த மாயையிலே நாதம் தோன்றும். நாதத்தில் விந்து தோன்றும்.

நாதம் என்பது உலகம் பிறக்கும்போது உண்டான  ஓங்கார ஒலி.

வாக்குக்களாலாவது வன்னம் [எழுத்து]. அதாவது ஒலியால் வருவது எழுத்து. அல்லது ஒலியின் வரி வடிவம் எழுத்து.

'ஓம்' என்று எழுதுவது ஓங்கார ஒலியின் வரி வடிவம்.

ஆதியோடு அந்தம் இலாத பராபரம் 
போதம தாகப்  புணரும் பராபரை 
சோதி அதனில் பரந்தோன்றத் தோன்றுமாம் 
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.
                                                          - திருமந்திரம் 381 

ஆதி இறைவனோடு இரண்டறக்கலந்திருக்கும் பராசக்தியின்  ஜோதியில் நாதம் ஒலிக்கும். இந்த ஓங்கார நாதத்தை மூன்று எழுத்துக்களாக பிரிக்கலாம்.

ஓம் = அ +உ +ம் 

ஓர்எழுத் தாலே உலகெங்கும் தானாகி 
ஈர்எழுத்  தாலே இசைந்துஅங்கு இருவராய் 
'மூ'எழுத் தாலே முளைக்கின்ற சோதியை 
மா எழுத்தாலே மயக்கமே உற்றதே.                                                                                                                                                                                       - திருமந்திரம் 885

முதல் எழுத்து அ.

அகரத்தில் ஆரம்பிக்கிறது மற்ற எழுத்துவகைகள்.

நாத விந்துக லாதீ நமோநம 
வேத மந்த்ரசொ ரூபா நமோநம 
ஞான பண்டித ஸாமீ நமோநம.. வெகுகோடி                                                                                                                                                                           -திருப்புகழ் 170 

நாதமும், விந்துவும் ஆதியில் தோன்றியவை.

இப்பொழுது, திருக்குறளின் பொருளை மீண்டும் படித்துப்பார்ப்போம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்:

ஆதி பகவான்  அகரம் முதலான எழுத்துக்களை முதலில் உலகில்  படைத்தான்.

***  ***  ***

திருக்குறள்  முதல் பாடலிலே ஆன்மீகத்தின் உச்சம் தொட்டிருப்பது ஆச்சர்யம் என்றால்,

கடவுளின் எட்டு குணங்களை முதல் பாடலிலே பாடி உச்சம் தொட்டது திருமந்திரம்.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான்  உணர்ந் தெட்டே.
                                                                                              - திருமந்திரம் 1

***  ***  ***

நாம் இதுவரை முதல் திருக்குறளின் பொருளை எப்படி படித்தோம் என்று பார்ப்போம்:

மு.வ விளக்கம்: 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. 

சாலமன் பாப்பையா விளக்கம்: 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் விளக்கம்: 

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

ஜி. யு. போப் விளக்கம்: 

A, as its first of letters, every speech maintains;
The 'Primal Deity' is First through all the world's domains

ஒவ்வொரு மொழியும் 'அ'-வை முதல் எழுத்தாக கொண்டுள்ளது; உலகம் ஆதி பகவானை முதன்மை தெய்வமாக கொண்டுள்ளது. 

*** *** ***

சமீபத்திய செய்தி:

தமிழக ஆளுநர்,  'திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய ஜி. யு. போப், திருக்குறளில் இருந்த ஆன்மீக அறிவை தவிர்த்து விட்டார்'- என்று கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்து உண்மையா என்று கற்றறிந்தோர் மட்டுமே சொல்ல இயலும். அரசியல்வாதிகளின் அறிவு அரசியலுக்கு மட்டுமே, திருக்குறளுக்கு உதவாது.

மீண்டும் அறிவு சார்ந்த பெரியோர் முனைந்தால் திருக்குறளின் பொருளை ஆன்மீக சிந்தனையோடு உலகிற்கு வழங்கலாம்.

*** *** ***







Tuesday, January 24, 2023

மஹா சமாதி பயிற்சி அனுபவம்

மஹா சமாதி பயிற்சி அனுபவம்

வீடுவரை உறவு..

என் பெயர்   எனக்கு மறந்து விட்டது..

இப்பொழுது என்னை பிணம் என்கிறார்கள்.

அத்தான் என்றவளும், அப்பா என்றவனும், சார் என்றவர்களும் என் பெயரை மாற்றி விட்டார்கள். பிணம் என்பது மட்டும் பொதுப்பெயராகிவிட்டது. யார் இறந்தாலும் ஒரே பெயர் பிணம்தான்.

ஊரே கூடி நின்று அழுகிறார்கள். 

இன்னும் கொஞ்ச நேரம்  நான் இங்கே தங்கி கொள்ளலாம்.  நான் ஆசை ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய வீட்டில், எவ்வளவு கெஞ்சினாலும் தங்க முடியாது. நேற்றுவரை என் தயவில் இருந்த  யாரும் எனக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்.  சுடுகாட்டில் என்னை சாம்பலாக்கி விடுவார்கள். எங்கே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிடுவேனோ என்று நீரிலும்  கரைத்து விடுவார்கள்.

அவர்களும் நீரில் தலை முழுகி என் நினைப்பை மறந்துவிடுவார்கள்.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்  
பேரினை நீக்கிப் பிணம்என்று  பேரிட்டுச் 
சூறைஅம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே.
                                                                        - திருமந்திரம் 145 

யார் சிரித்தால் என்ன?

நான் ஏன், எதற்கும் கவலைப்பட வேண்டும். 

இனி என் உடலை காகம் சாப்பிட்டால் என்ன? பிணத்தை கண்டு பழி சொல் சொன்னால் என்ன? என் வாயில் பால் ஊற்றினால் என்ன? என் மரணத்தை அறிந்தவர்கள் புகழ் வார்த்தைகள் சொன்னால்  எனக்கென்ன? ஆகப்போவது ஒன்றுமில்லை, உடம்புக்குள் இருந்து அது செயல்பட தேவையான அருள் வழங்கிய ஜீவன், சிவன் என் உடலை  விட்டு நீங்கிய பின்னால்.


காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என்
பாற்றுளிப் பெய்யில்என்  பல்லோர் பழிச்சில்என் 
தோற்பையுள் நின்று தொழில்அறச் செய்தூட்டும் 
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.
                                                                        - திருமந்திரம் 167

நேற்று எனக்கு மாலையும், மரியாதையும். எனக்கு வெண்கொற்றக்குடை இருந்தது. குதிரையும் எதிரியை வெல்லும் வாளும் என்னுடன் இருந்தது. என்னுடைய படைகள் என்னை புடை சூழ இருந்த போதே, என்னுயிர் என்னை விட்டு பிரிந்து விட்டது. என்னுடலில் அடைந்து  இருந்த உயிர் ஊர்வலம் சென்றுவிட்டது.

யாராலும் என்னைக்காக்க முடியவில்லை.

இன்றைக்கு எனக்கு தேர்  இல்லை பாடை மட்டும்தான்.

குடையும் குதிரையும் கொற்றவாளும் கொண்டு 
இடையும் அக்காலம் இருந்து நடுவே 
புடையு மனிதனார் போகும் அப்போதே 
அடையும் இடம்வலம் ஆருயிர் ஆமே.
                                                                   - திருமந்திரம் 166

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்.. 

சமாதி ஆகிவிட்ட  என்னால் இனி இறை அடி சேர முடியாது. சுத்த வெளியில் அவனுடன் சங்கமிக்கும் வழி இல்லை. என்னுடலில் ஆறு ஆதாரத்தில் நின்றியங்கிய ஐம்புலன்களின் ஆதிக்கம் மறைந்து விட்டது. மீண்டும் என்னுடலில் இவை சேர முடியாது.  என்னுடலில் இறைக்கனல், அகக்கனல் மற்றும் புறக்கனல் சேராமல்  தடுப்பணை போட்டு விட்டது.

காடுபுக்கார் இனிக் காணார் கடுவெளி 
கூடுபுக்கு ஆனவை ஐந்து குதிரையும் 
மூடுபுக்கு ஆனது ஆறுஉள ஒட்டகம் 
மூடுபுகா விடின் மூவணை ஆமே.
                                              - திருமந்திரம் 2893

யோக நிலைகளில் இறுதியானது சமாதி. 

இனி, சமாதி நிலை தேவை இல்லை இறையுடன் இணைந்து விடுவீர்கள்.

இறையுடன் இணைந்து இறை நிலை எய்தி விட்டால் அறுபத்து நான்கு கலைகளும் கைவந்த கலை ஆகி விடும்.


சமாதி செய்வார்க்குத் தகும்பல யோகம் 
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில் 
சமாதிதான் இல்லை தான்அவன் ஆகில் 
சமாதியில் எட்டுஎட்டுச் சித்தியும் எய்துமே.
                                                          - திருமந்திரம் 631

என் மரணத்தை நானே அனுபவித்தேன். 

மரணம் என்னும் பேரிழப்பை அனுபவித்தேன். என்னை நான் இழந்தேன்.

அட்டாங்க யோகத்தை வகைப்படுத்திய திருமூலர் சமாதியை எட்டாவது அங்கமாக வைத்தார். முதல் அங்கமே முடியாமல் தவிக்கும் சாதாரண வாழ்க்கை வாழும் என்னைப்போன்ற சாமானியர்களுக்கு இந்த பயிற்சி  மறுபிறப்பு.

உலகமே கொண்டாடும் ஏசுவின் பிறந்த நாளான இன்று எனக்கு மறு பிறப்பு.

புத்தம் புதிய அனுபவம்.

இந்த அற்புதமான அனுபவத்தை வழங்கிய குரு ராஜசேகர் அய்யாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அதிக விளம்பரம் இல்லாத, தேவை இல்லை.. தேன் கூட்டிற்கு தேனீக்கள் தானாக வந்து சேரும் உங்கள் அமிர்தஹாரா டிரஸ்ட் அமைப்பிற்கு.

வாழ்க உங்கள் சமுதாய தொண்டு. 

வளர்க உங்கள் புகழ் வையகமெங்கும்.

நன்றி.. வணக்கம்.

*** *** ***

       


 













Wednesday, January 4, 2023

காசேதான் கடவுளப்பா

காசேதான் கடவுளப்பா 


வரவுக்குமேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும் 


மனிதனுக்கு வாழ்க்கை ஏன் போராட்டமாகவே அமைந்துவிட்டது?

வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?

பணம். பணம்தான்  எதையும் தீர்மானிக்கிறது.

வேலைக்கு சென்றால் கிடைக்கும் வருமானம் ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. பற்றாக்குறை என்பது பரமபத விளையாட்டாகிவிட்டது.

சம்பளம் வாங்கி பரமபத ஏணியில் ஏறினால், அடுத்த கட்டமே சீறும் பாம்பின் வாயில் சிக்கி ஏறிய இடத்திலிருந்து பின்னோக்கி நகர வேண்டியதாக இருக்கிறது.

ஏதாவது, ஒரு தொழில் செய்து வருமானம் ஈட்டலாம் என்றால், போட்ட முதலை எடுப்பதே பெரும்பாடாகிவிடுகிறது. 

ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகேட்டுப் - போனதிசை 
எல்லார்க்கும்  கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் 
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
                                                                       - நல்வழி 25

போட்ட முதல் போய்விட்டால், மீண்டும் தொழில் செய்யும் ஆர்வமும் கருகிவிடும். மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இந்த நியதி உடலுக்கும் பொருந்தும்.

உடலின் முதல் உயிர் சத்து. அதிகம் செலவழித்தால் எல்லாம் போச்சு. முதலில் ஆரோக்கியம் போகும். இரண்டாவது வாழ்வில் பிடிப்பு நீங்கி வெறுப்பு உண்டாகும்.

காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன் 
காலம் கடந்தழிந்தான் விந்து செற்றவன் 
காலங்களில் விந்து செற்றுற்ற காரிகை 
காலின் கண் வந்த கலப்பறியாரே.
                                                                - திருமந்திரம் 1954 

விந்துவின் சக்தியை வெல்ல முடியாமல் போனால், அழிவு நிச்சயம். வெல்ல முடிந்தால் காலத்தையும் வெல்லலாம். சில சமயங்களில் விந்து வென்று பெண்ணுடல் கலக்கும் காலத்தில், அவளிடம் இருந்து உயிருடன் கலக்கும் வாயுவை அறியமாட்டார்கள், என்கிறார் திருமூலர்.

நாம் பல இடங்களில் படித்தும், கேட்டும் இருக்கிறோம்.   அரசர்கள் இளம் பெண்களை அந்தப்புரத்தில் வைத்து, அவர்கள் வழியாக தாங்கள் இழந்த உயிர் சக்தியை மீண்டும் பெற பல வகை யோகங்கள் செய்திருக்கிறார்கள் என்று. பின்னர் அவர்களுடன் கூடி மேலும் மேலும் உயிர் சக்தியை இழந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருமுறை உறவின்போதும், பெண்ணின் சுரோணிதத்தில் உருவாகும்  வாயுவானது ஆணின் தனஞ்சய வாயுவுடன் சேர்கிறது. இளம்பெண்களின் வாயு வலிமையையும், பேரிளம் பெண்களின் வாயு இன்பத்தையும், முதிர் பெண்களின் வாயு நோயையும் ஆண்களுக்கு தர வல்லது.  

சரி, விந்து எப்படி வெற்றி கொள்கிறது என்று பார்ப்போம்.

மனித உடலின் இயக்கம் முப்பத்தியாறு தத்துவங்களின் அடிப்படையில் இயங்குகிறது. அதில் சுத்த தத்துவம் எனப்படும்  சிவ தத்துவம் ஐந்தைப்பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

விந்து சக்தி, நாத சக்தி.

இதில் நாத சக்தி, ஞான சக்தியாக சிவமாக விளங்குகிறது. விந்து சக்தி பராசக்தியாக, கிரியா சக்தியாக செயல்படுகிறது.

மூன்றாவதான இச்சா சக்தி மூன்று நிலைத்தன்மை பெறுகிறது.

ஒன்று, ஞான சக்தி மிகுந்து, கிரியா சக்தி குறைந்த சுத்த வித்தை.
இரண்டாவது, ஞான சக்தி குறைந்து, கிரியா சக்தி மிகுந்த ஈசுவரம்.
மூன்றாவது, இரண்டு சக்திகளும் சமமாக இயங்கும் சதாசிவம். 

சுத்த வித்தை அறிந்தவன் ஞானி. ஈசுவரம் மிகுந்தவன் போகி. சதாசிவம் கற்றவன் யோகி.

நாமெல்லாம் ஈசுவர நிலையிலிருந்து, அதாவது போக வாழ்விலிருந்து, யோக வாழ்விற்கும், ஞான வாழ்விற்கும் செல்ல முயன்று கொண்டிருக்கிறோம்.

முயற்சி வெற்றி அடைய  என்ன செய்யலாம்?

பார்க்கின்ற மாதரை பாராது அகன்றுபோய்  
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்  
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே 
சேர்க்கின்ற யோகி சிவ யோகிதானே.
                                                                - திருமந்திரம் 1937


நீ பார்க்கின்ற அல்லது உன்னைப் பார்க்கின்ற பெண்ணை பாராமல் செல்ல வேண்டும். பெண்ணை பார்த்ததால் உள்ளத்தில் ஏற்பட்ட ஆசை என்னும் கிரியா சக்தியை நெற்றி நடுவில் வைத்து சேர்த்து எரித்து விடவேண்டும்.

எப்படி எரிப்பது என்ற கேள்வி வருகிறதல்லவா?

எளிமையாக சொல்கிறேன். பிராணாயாமம் செய்யுங்கள் போதும். அதைத்தான் திருமூலரும் சொல்லி இருக்கிறார்.

உங்களுக்கு ஏற்பட்ட ஆசை உணர்வை விழிப்புணர்வோடு மூலாதாரத்திற்கு கொண்டு செல்லுங்கள். 

மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.

சூரிய நாடியில், வலது நாசி வழியாக  செல்லும் காற்று, கண்ணாசையை எரித்து, நெற்றி நடுவிற்கு எடுத்து சென்று விடும். இதை செய்வது நாடு நாடியில் நின்றியங்கும் தனஞ்செய வாயு.


*** *** ***








 


Friday, October 28, 2022

தமிழின் பெருமை

தமிழின் பெருமை 

தமிழின்பால் பற்று கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் அன்பான வணக்கம்.

'என்னை நன்றாக இறைவன் படைத்தனன்  தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே'

மண்ணுலகில் தான்  படைத்த மனிதர்களுக்கு இறை நிலையை, இறையின் தன்மையை  உணர்த்த எண்ணிய இறைவன் தேர்ந்தெடுத்த மொழி தமிழ்.

நன்றாக தவம் செய்யுங்கள். நல்ல தவம் செய்தவருக்கு  மறுபிறவி கிடையாது என்று அடித்து சொன்ன திருமூலருக்கு அச்சம், 

 'உங்களுக்கு எப்படி இப்பிறவி கிடைத்தது முற்பிறவியில் தவம் செய்யவில்லையா?' - என்று யாராவது கேட்டு விட்டால்?

'இல்லையப்பா. நான் நன்றாக தவம் செய்துதான்  இறைவனடி சேர்ந்தேன். ஆனால் இறைவன், மூலன் உடல் சேர்ந்து, மனித வாழ்வின் பொருளறிய தமிழில் என்னை பாடு என்று மறுபடியும் என்னை படைத்துவிட்டான்.' - என்கிறார் திருமூலர்.

பின்னை நின்றுஎன்னே பிறவி பெறுவது 
முன்னை  நன்றாக  முயல்தவம் செய்கிலர் 
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாக தமிழ்ச்  செய்யுமாறே.

இறை மொழி தமிழ் மொழி.

அடுத்ததாக வரும் நம் உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர் தன் முதல் பாடலிலேயே தமிழின் தொன்மையை நிறுவுகிறார்.

இந்த உலகம், அண்டம், பேரண்டம் அனைத்துமே ஆதி பகவனை முதன்மையாக கொண்டு இயங்குகிறது,  தமிழில் அனைத்து எழுத்துக்களுக்கும் முதன்மையாக அகரம் விளங்குவதைப்போல்.

அகர முதல எழுத் தெல்லாம் 
ஆதிபகவன் முதற்றே உலகு.

இங்கே தமிழ் எழுத்தையும் ஆதி இறையையும் இணைப்பதோடல்லாமல், இறைவனின் மொழியும் தமிழ்தான் என்றாகிறது அல்லவா?

அடுத்த கேள்வி.. அகரத்தில் ஆரம்பித்து தமிழில் மொத்த எழுத்துக்கள் எவ்வளவு?

ஒவ்வொருவரும் ஒரு எண்ணிக்கை சொல்வோம். ஆனால், மொத்தம் முப்பது எழுத்துக்கள் என்று சொல்கிறது, தமிழுக்கு இலக்கண வரம்பிட்ட  தொல்காப்பியம். 

எழுத்து எனப் படுப
அகரம் முதல் னகர இறுவாய் 
முப்பஃ து என்ப 
சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே.
 

அகரம் முதலான உயிரெழுத்துக்கள் 12.

னகரம்   இறுதியான  மெய்யெழுத்துக்கள் 18.

மொத்தம் 30.

மற்ற எழுத்துக்கள் எல்லாம் என்ன என்ற கேள்வி வருகிறதல்லவா? அவைகளை  மூன்று  சார்பெழுத்துக்கள்  என்கிறது எழுத்ததிகாரம்.

அவைதாம் 
குற்றியலிகரம் குற்றியலுகரம் 
ஆய்தம் என்ற 
முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன 

இந்த முப்பது எழுத்துக்களை கொண்ட தமிழ்தான் தமிழினத்தின் தன்மான அடையாளம். உயிரும் மெய்யும் சேர்ந்து வரும் உயிர்மெய் எழுத்துக்கள், வார்த்தைகளின் ஒலிக்காக, உச்சரிப்புக்காக வருவதால் அவை கணக்கில் கொள்ளப்படவில்லை.

ஒலியின் வரி வடிவம் எழுத்து என்பதை சரியாக நிறுவி உள்ளது தமிழ்.  இன்று உலகளாவிய அளவில் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் ஒலியை நிறுவ எழுத்துக்களின் கூட்டினை கொண்டே உச்சரிப்பு மற்றும் பொருள் கொள்ள வேண்டி உள்ளது.

உதாரணத்திற்கு குரு என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால், தமிழில் இரண்டே எழுத்தில் எழுதி விடலாம். ஆனால் குரு என்ற ஒலியை எழுத  ஆங்கிலத்தில் நான்கு எழுத்துக்கள் தேவைப்படுகிறது.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு 
முன்தோன்றிய மூத்த குடி.

இங்கே  தமிழின் தொன்மையை விட அருமையான செய்தி ஒன்றிருக்கிறது. வாளோடு என்ற சொல்தான் அது. இதில் என்ன வியப்பு இருக்கிறது, தமிழனின் வீரத்தை குறிக்கத்தான் என்கிறீர்களா?

ஆமாம்.. ஆனால் அதற்கும் கொஞ்சம் மேலே..

வாள் எதனால் செய்யப்படுகிறது. இரும்பினால் தானே?  இரும்பு என்ற உலோகத்தை கற்காலத்திலேயே அறிந்திருந்தான் தமிழன். இரும்பை  உபயோகிக்கவும் தெரிந்திருந்தான்  என்பதுவும்  பெருமைதானே.

இலக்கணத்தை தாண்டி தமிழ் இலக்கிய உலகம் அளப்பரியது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாரதியார் உலகிற்கு பறை சாற்றியபோதும்,  

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாரதிதாசன் உருகியபோதும்,

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலக அரங்கில் மக்கள் ஜனாதிபதி  அப்துல் கலாம் எடுத்துரைத்த  போதும்,

தமிழ் சரியாக உச்சரிக்க முடியாவிட்டாலும், விடாமல் குறளை மனப்பாடம் செய்து உரையில் சேர்க்கும் பாரதப் பிரதமரும்,

தொடர்ந்து தமிழுக்கு மணிமகுடம் சூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

மகிழ்ச்சியோ, துக்கமோ  பல நூறு பக்கங்களில் சொல்லி விளங்க வைக்க வேண்டிய ஆய்வினை ஒன்றே முக்கால் அடியில் வழங்க, நீதி அரசர் ஆறுமுக சாமி தன் ஆய்வில் இந்த குறளை உபயோகிக்கிறார்.

காலாழ் களரில் நரியிடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு

அரசியல் அரங்கில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரண ஆய்வறிக்கையில், மேற்கோள்      காட்டப்பட்ட திருக்குறள் இது.

போரில் கண்ணுக்கு நேராக வரும் வேலினை தடுத்து எதிர்த்து நிற்கும் பலம் கொண்ட  யானை, மாறுகால் எடுத்து வைக்க முடியாத புதை சேற்றில் மாட்டிக்கொண்டால், சாதாரண நரியால் வீழ்த்தப்பட்டுவிடும்.

தமிழின் பெருமையை வெவ்வேறு கோணங்களில் சொல்லிய அனைத்து போட்டியாளர்களையும் வாழ்த்தி விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.



  

Thursday, October 20, 2022

சொந்தம்

சொந்தம் 

சொந்தம் ஒரு கை விலங்கு 
நீ  போட்டது  அதில் 
பந்தம் ஒரு கால் விலங்கு 
நான்  போட்டது 


'அடுத்து என்ன?  தெரியவில்லை.' - கண்ணீர் ததும்ப தொலைக்காட்சிக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான் ஜான் மெக்டொனால்ட்.

பார்த்து பார்த்து கட்டிய வீடு முழுக்க மழை வெள்ளம் புகுந்திருந்தது. கார்,  வீட்டின் பூந்தோட்டம், நீச்சல் குளம் எல்லாவற்றையும் வெள்ள நீர் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை வந்ததால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம்.

மூன்றாம் உலக நாடுகளில் இம்மாதிரியான வெள்ள  அபாயங்களை  வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கலாம். ஆனால், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் இம்மாதிரி நிகழ்வுகள் மிகுந்த கவனம் பெறக்கூடியது.

ஒவ்வொரு வீடும், குறைந்தது இந்திய மதிப்பில்  ஐந்து கோடி ரூபாய்க்கு குறையாது. ஒவ்வொன்றும் ஒரு கனவு இல்லமாகவே தோன்றும். ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்குவது என்பது மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு.

தொலைக்காட்சியை நம்ப முடியாமல் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள் கெல்லி வில்ஸ்.  நேற்று சென்று பார்வையிட்டு வந்திருந்த தெருக்களெல்லாம் இப்பொழுது தண்ணீரால் மூடப்பட்டிருந்தது. சாலைகளில் நின்றிருந்த கார்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியும், மூழ்காமலும் நின்றிருந்ததன.

பூட்ஸ்க்ரே  என்னும் இந்த புறநகரில், எலிசபெத் அவென்யு தெருவில் உள்ள 15-ம் எண் வீட்டினை வாங்குவதற்காக  முன்தொகையாக நேற்றுதான்  ஒரு லட்சம் டாலர் கொடுத்திருந்தாள் கெல்லி.

'அடுத்து என்ன? தெரியவில்லை.' - மன அழுத்தத்துடன்  ரியல் எஸ்டேட் ஏஜெண்டை மொபைலில் அழைத்தாள். கெல்லியின் இதயம் ரயில் தண்டவாளம் போல் தடதடத்தது.

'ஹாய்.. ராபர்ட். நான் கெல்லி. வெள்ள நிலை உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். நான் டெபாசிட் குடுத்த வீடு வெள்ளத்தில் மூழ்கி  இருக்கு.'

'ஹாய் கெல்லி. எப்படி இருக்கீங்க இன்னிக்கு?.  நீங்க குடுத்த பேங்க் செக் இன்னும் டெபாசிட் ஆகல. என்கிட்டதான்  இருக்கு.'

கொஞ்சம் ஆசுவாசமாகவும் இருந்தது. அப்பாடா.. இன்னும் பணம் கையை விட்டு போகவில்லை.

'ப்ளீஸ்.. அந்த விற்பனை பத்திரத்தை கான்சல் செய்யணும்.'

'நீங்க விற்பனை பத்திரத்தில் கையெழுத்து போட்டு குடுத்த பேப்பேர்ஸ் எல்லாம் பேங்க் செக் விபரத்தோட லீகல் செக்சனுக்கு அனுப்பிட்டேன்.'

மீண்டும் பிரஷர் ஏறியது கெல்லிக்கு.

'அப்படின்னா.. டெபாசிட் பணம்..?' என்று இழுத்தாள் கெல்லி.

'இன்னும் நான் வீடு ஓனர்க்கு டெபாசிட் பணம் பற்றி சொல்லல. அதனால..'

மீண்டும் வெளிச்சம் தெரிவதுபோல் உணர்ந்தாள் கெல்லி.

'அதனால.. லீகல் செக்சன் பார்த்துட்டு சொல்றேன். பை'

சுரத்தில்லாமல் காலைத்துண்டித்தாள் கெல்லி. 

தன்னுடைய சக்தி எல்லாம் ஒரே நாளில் வடிந்துவிட்டதுபோல் சோர்வாக இருந்தது. வாங்கப்போகும் வீட்டின் ஹால், படுக்கை அறை, சமையலறை, பின்புறம் இருந்த கார்டன், நீச்சல் குளம் எல்லாம் நினைவில் வந்து அவளை வருத்தியது. நேற்றுவரை இதே காட்சிகள் மனதிற்கு சந்தோசத்தை கொடுத்ததென்னவோ உண்மை.

மொபைல் மணி அடிக்க எடுத்து அழைக்கும் நம்பரை பார்த்தாள். பதிவு செய்யப்படாத புதிய எண்.

'ஹலோ.. நான் வில்லியம் வெல்ஸ். கெல்லிதானே நீங்க? நீங்க வாங்கப்போகும் வீட்டின் ஓனர்.'

'ஹாய் வில்லியம். நான் கெல்லிதான் பேசுறேன்'

'உங்க நம்பர் ராபர்ட் கிட்டயிருந்து ரெக்வஸ்ட் பண்ணிதான் வாங்கினேன். உங்கள தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கவும்.'

வில்லியம் என்ன சொல்லாப்போறானோன்னு கெல்லிக்கு உள்ளுக்குள்ள ஒதறல்.

'உங்களுக்கு தெரியும் வீடு இப்ப வெள்ளத்துல சிக்கிருச்சுன்னு. எனவே, உங்களுக்கு ஆட்சேபணை  இல்லன்னா.. இந்த டீல் கேன்சல் பண்ணிரலாமா?'

கெல்லிக்கு ஒண்ணும் புரியல. தன் காதுகளை நம்ப முடியாமல்,

'உண்மையாவே சொல்றீங்க வில்லியம்? ரொம்ப சிரமப்பட்டுட்டேன், இதுக்காக'

'புரியுது. நான் வேணும்னா ஒண்ணு பண்றேன். உங்க செலவ நானும் ஷேர் பண்ணிக்கிறேன்' - சற்று  முன்னர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வந்த செய்தியில் மகிழ்ந்திருந்த வில்லியமுக்கு இது பெரிய தொகையாக இருக்காது என்று தெரியும்.

கெல்லிக்கு ஆச்சர்யமோ, ஆச்சர்யம் கூடவே சந்தோஷமும். 

ஒரு பொருளின் மீதோ அல்லது மனதுக்குகந்த துணையின் மீதோ  சொந்தம் கொண்டாடும் போது  அதில் உண்டாகும் இன்பத்திற்கிணையான துன்பமும் சேர்ந்து வருகிறது.

அந்த சொந்தம்  என்ற உணர்வு இல்லாத போது துன்பமும் கூடவே மறைந்து போகிறது. ஆராய்ந்து பார்த்தால் அனைத்து வகையான இன்ப, துன்பங்களுக்கு ஒன்றின்மேல் கொள்ளும் பற்று பாசமே  காரணியாகிறது.

இந்தப் பற்று  பாசமே   உயிரையும் பற்றி இருப்பதால், உயிரால் நம் பிறப்பின் பொருளை  உணர்ந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறது. உயிர் அடையவேண்டிய எல்லைக்கோடான இறைநிலையை எய்த முடியாமல் போகிறது.

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் 
பதியினைப் போல்பசு  பாசம் அனாதி 
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம் 
பதிஅணுகில் பசு பாசம் நிலாவே.
                                                                                             - திருமந்திரம் 115

[பதி - இறை,    பசு - உயிர்,  பாசம் - பற்று, சொந்தம்] 

இறைநிலை எப்படி ஆதி நிலையோ, அதே நிலைதான் உயிரை பற்றியுள்ள பந்த பாசங்களும். சொந்தங்களை விலக்கி இறைநிலை அடைய உயிரை அனுமதிப்பதில்லை பாசம்.  உயிர் இறைநிலையை  சேர்ந்தபொழுதில்  சொந்த பந்த பாசங்கள்  அகன்று விடும்.











Thursday, October 13, 2022

கன்னித்தாய்

 கன்னித்தாய் 


உன்னையும் உன்னையும் 
என் ரெண்டு குழந்தை போலவே 
எப்போதும் எப்போதும் 
நான் பத்துப்பேனே!

'சூரிய தேவா, நான் சிறு பெண். ஆர்வத்தால் மந்திரத்தை பிரயோகித்துப்  பார்த்தேன். உங்களுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் இல்லை. இது  முறையும் அல்ல.' - இளம் பெண்ணான குந்தி தன்னை அடைய தன் முன்னர் நிற்கும் சூரிய பகவானை கையெடுத்து கும்பிட்டுக் கதறினாள்.

துர்வாச முனிவருக்கு மனம் மகிழும்படி செய்த பணிவிடைகளினால்  'குழந்தை பெரும் மந்திரத்தை' வரமாக பெற்றாள் குந்தி. கிடைத்த வரத்தை விளையாட்டாக சூரியனைப் பார்த்து பிரயோகிக்க குழந்தை வரம் கொடுக்க நேரில் வந்து நின்று குந்தியை ஆகர்ஷிக்கப்  பார்க்கிறான்.

'குந்தி தேவியே, என்னை மந்திரத்தால் அழைத்திருக்கிறாய். கண்டிப்பாக மந்திரத்தின் பலனாக உனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தாக வேண்டும். ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியும். மீண்டும் உன்னை கன்னிப்பெண்ணாக மாற்றி விட முடியும்.' - இப்படியாக பலதும் கூறி குந்தியை சேர்கிறான் சூரியன்.

பலன், பராக்கிரமசாலியான கர்ணன் பிறக்கிறான்.

குந்தி மீண்டும் கன்னியாகிறாள்.

பகுத்தறிவிற்கு ஒவ்வாத காரியம் இது. குழந்தை பெற்ற பெண் மீண்டும் கன்னித்தன்மை பெறுவது  சாத்தியமா?

பெண்ணின் கருமுட்டையை வெளியே எடுத்து, கருத்தரித்தல் செய்து மீண்டும் பெண்ணின் வயிற்றில் வளர செய்யும் கலையை இன்றைய  அறிவியல் உலகம் செய்து காட்டி விட்டது.

கருத்தரித்து உயிர் உண்டான நிலையில் மற்றோர் பெண்ணின் வயிற்றில் கருவை  வைத்து, வளர்த்து  குழந்தை பெற்று கொள்வது இன்றைய மருத்துவ உலகில் பிரசித்தமாக உள்ளது.

குழந்தை பெற்றும் தாயின் கன்னித்தன்மைக்கு எந்த பங்கமும் நேரவில்லை.

 இது நடைமுறைக்கு சாத்தியமே என்று பின்னர் வரும் சந்ததியினர் அறிந்துகொள்ள  குந்தியின் கதை எழுதப்பட்டதோ?

கருத்தரித்த மாத்திரத்தில், கருவில் சேர்ந்த உயிரின் வாழும் நாள், சாகும் நாள், அனுபவிக்கும் உலக இன்ப துன்பம்  எல்லாம் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இவ்வாறாக உருப்பெறும் கருவானது, உருவான பெண்ணை நீங்கி வேறிடத்தில் வளர்ந்தாலும், உரிய நேரத்தில் அதாவது பத்தாவது மாதத்தில்  குழந்தையாக பிறக்கும். 

பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று 
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே 
சேர்ந்துஉற்று இருதிங்கள் சேராது அகலினும் 
மூப்புற்றே பின் நாளில் ஆமெல்லாம் உள்ளவே.
                                                                                                  - திருமந்திரம் 1945


***                     ***                     ***

Sunday, September 25, 2022

உயிர்மூச்சு

 உயிர்மூச்சு 

தென்னைய பெத்தா இளநீரு 
பிள்ளைய பெத்தா கண்ணீரு 


 வெளியே பைக் புறப்படும் சப்தம் தெளிவில்லாமல் கேட்டது. கூடவே குரைத்த நாயின் குரல் அது பைக்தான் என்று தெளிவாக்கியது.  எனக்கு கேட்கும் திறன் குறைந்துகொண்டே வருகிறது.

மகனும், மருமகளும் வேலைக்கு கிளம்பிவிட்டார்கள். குழந்தையை அப்படியே பள்ளியில் விட்டு விட்டு  செல்லும் அவர்கள் மீண்டும் மாலைதான் வருவார்கள்.

சுவர்க்கடிகாரத்தைப்பார்த்தேன்.  12-ல்  சின்ன முள்ளா, பெரிய முள்ளா என்று சரியாக  தெரியவில்லை. ஆனால், நிச்சயம் காலை மணி எட்டரையை தாண்டி இருக்கும். பார்வையும் மங்கலாகத்தான் இருக்கிறது.

இரவெல்லாம் சரியான தூக்கம் இருக்காது. அரண்டு, உருண்டு படுத்தாலும்  கொஞ்சம் கோழித்தூக்கம் மட்டும் தினமும். அதுவும் கொச்சினிலிருந்து வரும் பிளைட் சரியா நாலு மணிக்கு எழுப்பி விட்டுரும். அவர்கள் வெளியே செல்லும்  பைக் சப்தம் கேட்கும் வரைக்கும் பேசாமல் படுத்து கிடப்பேன். பகலில் தூக்கம் என்பதை சுத்தமாக விட்டு விட்டேன். 

பகலில் தூங்கினால் இரவில் வரும் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போச்சு. இன்னொரு பிரச்னையும் கூட. பகலில் தூங்கி எந்திரிச்சவுடன் மறுபடியும் காலையில் செய்யும் வேலைகளை செய்றேனாம். மறதியும் கூடிருச்சு போல.

வீட்டை விட்டு கிளம்பும்போது கிச்சன் கதவை பூட்டிட்டு போறாங்க. கொஞ்சூண்டு சுடுதண்ணி வேணும்னாலும் பிளாஸ்க் தண்ணிதான். ஒரே ஒரு முறை சுடுதண்ணி போட்டுட்டு காஸ் மூடாம விட்டுட்டேன். அன்னிக்கு இருந்து கிச்சன் என்ட்ரி நாட் அல்லொவ்ட். எனக்கு வாசம் வந்திருந்தா மூடாம விட்டிருப்பேனா? மூக்கும் போச்சு.

இதெல்லாம் போக, உடல் உபாதைகள், வேளா வேளைக்கு மருந்துகள். இதில் முக்கியமா ஒண்ணு தெரியுது. மனசு மட்டும் மாறாம இருக்குது, அதே பழைய துடிப்பும், கனவுகளுமாக.

என்னாலும் பைக் ஓட்டமுடியும்னு மனசு சொல்லுது. ஆனா, ஒரு காலில் நின்னு, இன்னொரு  காலை தூக்கி பைக்ல உக்கார ஒடம்பு ஒத்துழைக்குமான்னு தெரியாது.

எதனால் இந்த மாற்றங்கள்?

உடலுக்கு தேவையான உணவில்  மாற்றமில்லை. பின்னர் எதனால் புலன்களின் திறன் குறைந்து கொண்டே போகிறது, வயது  ஏற ஏற.

இதைத்தான் நம் முன்னோர்கள் யோசித்தார்கள். உணவைத்தவிர்த்து, பஞ்ச பூதங்கள் ஆளும் இவ்வுடலை  ஆரோக்கியமாக வைக்க என்ன தேவை என்று ஆராய்ந்தார்கள்.

இந்த உடலுக்குள் சந்தம் மாறாமல் சென்று வரும் காற்றை கவனித்தார்கள். காற்றின் தன்மையை பிரித்தும், வகுத்தும் பார்த்தார்கள்.

உடலில் கலந்த உயிர், காற்றினால் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். எவ்வளவுக்கெவ்வளவு காற்றும், உயிரும் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உடலில் உயிர் தங்கும் காலம் என்றறிந்தார்கள்.

காற்றுதான் உயிரை கட்டி வைத்திருக்கிறது என்னும்  உண்மையை சொன்னார்கள். 

கலந்த உயிருடன் காலம்  அறியில் 
கலந்த உயிரது காலின் நெருக்கம் 
கலந்த உயிரது காலது கட்டில் 
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

                                                                    - திருமந்திரம் 592

[கால் - காற்று ]

அடுத்து, மூச்சாக உட்செல்லும் காற்றினை ஆய்வு செய்தார்கள். அதனை பத்து வகையாக உள்ளது என்று பகுத்தறிந்தார்கள். தச வாயுக்கள் என்று பெயரிட்டு, பின்னர் அதனையும் இரு வர்க்கமாக பிரித்தார்கள். வெப்பத்தின் தன்மையாக ஐந்து வாயுக்களை ஒரு கூறாகவும், வாய்வின் தன்மையாக மற்றொரு ஐந்து  வாயுக்களை மற்றொரு கூறாகவும் வைத்து ஆய்வினை மேற்கொண்டார்கள்.

தச வாயுக்கள்

1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 

6. நாகன்  7. கூர்மன்  8. கிரிகரன் 9. தேவதத்தன் 10. தனஞ்செயன்

வெப்பத்தன்மை கொண்ட ஐந்து வாயுக்கள்:

1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 

வளியான வாய்வினிட வழிதான் மைந்தா 
மார்க்கமுடன் சொல்லுகிறேன் மனதாய்க் கேளு 
நெளியாத பிராணனுடன் அபானன் தானும் 
நிசமான உதானனுடன் சமானன் மைந்தா 
அளியாத வியானனுடன் ஐந்துமப்பா 
அரகரா தேய்வுடனே வாய்வு மாச்சு 
சுளியாத தேயு வாயுவைத்தான் கண்டால் 
சுகமாக பூத வாயுவைத் தான் கேளே. 

                                                                                       - சௌமிய சாகரம் 

காற்றின் தன்மை கொண்ட ஐந்து வாயுக்கள்:

1. நாகன்  2. கூர்மன்  3. கிரிகரன் 4. தேவதத்தன் 5. தனஞ்செயன்

 கேளப்பா நாகனொடு கூர்மன் மைந்தா 
கிரிகரனும் தேவதத்தன் தனஞ்செயனாம் ஐந்தும் 
ஆரப்பா ஐம்பூத வாயுவென்பார் 
ஆச்சரியந் தச வாய்வை அறிந்துகொள்ளு 
காலப்பா தசவாய்வை அறிந்துகொண்டு 
கருணையுடன் சிவயோகக் கருத்தில் நின்றால் 
கோளப்பா ஒன்றுமில்லை எல்லாஞ் சித்தி 
குறிப்புடனே ஆகாச வழிதான் கேளே .

                                                                                          - சௌமிய சாகரம் 

தச வாயுக்களின் முக்கிய பணிகளாக, ஐம்புலன்களின் உணர்வு நிலையாக, சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல், நுகர்தல் என்றறிந்தார்கள். கொட்டாவி, தும்மல், விழித்தல், இமைத்தல், கழிவுகளை வெளியேற்றும்  உணர்வு/தன்மை, விந்து பாய்ச்சுதல்  போன்ற செயல்களையும் இவைகளே காரணிகளாக  உள்ளன  என்பதையும் கண்டார்கள்.

வயது ஏற ஏற, சுவாசித்தலில் ஏற்படும் மாற்றம், தச வாயுக்கள்  சீரற்ற அளவில் உடலில் இயங்குவதனால்.  பல்வேறு உபாதைகள் உண்டாக ஏதுவாகிறது.

அடுத்து உடலுக்குள் சுவாசக்காற்று செல்லும் பாதையை கவனித்தார்கள். சுவாசிக்கும் காற்று உடலுக்குள் பயணித்தலையும் அதன் பணிகளையும் பார்த்தார்கள்.

சுவாசத்தில் இடது சுவாச பாதையை இடகலை அல்லது சந்திரகலை என்றும், வலது சுவாச பாதையை பிங்கலை அல்லது சூரியகலை என்று பெயரிட்டார்கள். சுவாசிக்கும் காற்றை தச வாயுக்களாக பிரித்து, அதன் பணிகளின்  தேவைக்கேற்ப அதனதன்  நிலைகளில் நிலைநிறுத்தும்   என்பதையும் கண்டறிந்தார்கள்.

மேலும் சுவாசிக்கும் காற்றின் பாதையினை  ஆராய்ந்தபோது, சில நேரங்களில் இடது நாசியிலும், சில நேரங்களில் வலது நாசியிலும் காற்றின் வேகம் மாறுபடுவதை கண்டார்கள்.

வெள்ளி, திங்கள் மற்றும்  புதன் கிழமைகளில் இடது நாசியில் அதிக காற்றோட்டமும், சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வலது நாசியில் அதிக காற்றோட்டமும் இருக்க வேண்டும். வியாழனன்று மட்டும், வளர் பிறை நாட்களில் இடது புறமும், தேய் பிறை நாட்களில் வலது புறமும் காற்று ஏற்றத்துடன் இருக்க வேண்டும்.

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம் 
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் 
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம் 
தெள்ளிய தேய்பிறை தான்வலம் ஆமே.
                                                                                          - திருமந்திரம் 790

உடல் நல்ல ஆரோக்கியத்துடன், உயிரோடு கலந்து ஒன்றி இருப்பதை மேற்கூறிய சுவாச நிலைகளில் இருந்து அறியலாம். உயிர் வாழும் காலத்தையும் கணக்கிடலாம்.

நாமும் இந்த எளிய சோதனையை செய்து பார்த்து, நம் சுவாச நிலையை  காற்றுப்பயிற்சி மூலம் சரி செய்து கொள்ளலாம்.

*** *** ***






கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...