Thursday, October 20, 2022

சொந்தம்

சொந்தம் 

சொந்தம் ஒரு கை விலங்கு 
நீ  போட்டது  அதில் 
பந்தம் ஒரு கால் விலங்கு 
நான்  போட்டது 


'அடுத்து என்ன?  தெரியவில்லை.' - கண்ணீர் ததும்ப தொலைக்காட்சிக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான் ஜான் மெக்டொனால்ட்.

பார்த்து பார்த்து கட்டிய வீடு முழுக்க மழை வெள்ளம் புகுந்திருந்தது. கார்,  வீட்டின் பூந்தோட்டம், நீச்சல் குளம் எல்லாவற்றையும் வெள்ள நீர் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை வந்ததால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம்.

மூன்றாம் உலக நாடுகளில் இம்மாதிரியான வெள்ள  அபாயங்களை  வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கலாம். ஆனால், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் இம்மாதிரி நிகழ்வுகள் மிகுந்த கவனம் பெறக்கூடியது.

ஒவ்வொரு வீடும், குறைந்தது இந்திய மதிப்பில்  ஐந்து கோடி ரூபாய்க்கு குறையாது. ஒவ்வொன்றும் ஒரு கனவு இல்லமாகவே தோன்றும். ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்குவது என்பது மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு.

தொலைக்காட்சியை நம்ப முடியாமல் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள் கெல்லி வில்ஸ்.  நேற்று சென்று பார்வையிட்டு வந்திருந்த தெருக்களெல்லாம் இப்பொழுது தண்ணீரால் மூடப்பட்டிருந்தது. சாலைகளில் நின்றிருந்த கார்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியும், மூழ்காமலும் நின்றிருந்ததன.

பூட்ஸ்க்ரே  என்னும் இந்த புறநகரில், எலிசபெத் அவென்யு தெருவில் உள்ள 15-ம் எண் வீட்டினை வாங்குவதற்காக  முன்தொகையாக நேற்றுதான்  ஒரு லட்சம் டாலர் கொடுத்திருந்தாள் கெல்லி.

'அடுத்து என்ன? தெரியவில்லை.' - மன அழுத்தத்துடன்  ரியல் எஸ்டேட் ஏஜெண்டை மொபைலில் அழைத்தாள். கெல்லியின் இதயம் ரயில் தண்டவாளம் போல் தடதடத்தது.

'ஹாய்.. ராபர்ட். நான் கெல்லி. வெள்ள நிலை உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். நான் டெபாசிட் குடுத்த வீடு வெள்ளத்தில் மூழ்கி  இருக்கு.'

'ஹாய் கெல்லி. எப்படி இருக்கீங்க இன்னிக்கு?.  நீங்க குடுத்த பேங்க் செக் இன்னும் டெபாசிட் ஆகல. என்கிட்டதான்  இருக்கு.'

கொஞ்சம் ஆசுவாசமாகவும் இருந்தது. அப்பாடா.. இன்னும் பணம் கையை விட்டு போகவில்லை.

'ப்ளீஸ்.. அந்த விற்பனை பத்திரத்தை கான்சல் செய்யணும்.'

'நீங்க விற்பனை பத்திரத்தில் கையெழுத்து போட்டு குடுத்த பேப்பேர்ஸ் எல்லாம் பேங்க் செக் விபரத்தோட லீகல் செக்சனுக்கு அனுப்பிட்டேன்.'

மீண்டும் பிரஷர் ஏறியது கெல்லிக்கு.

'அப்படின்னா.. டெபாசிட் பணம்..?' என்று இழுத்தாள் கெல்லி.

'இன்னும் நான் வீடு ஓனர்க்கு டெபாசிட் பணம் பற்றி சொல்லல. அதனால..'

மீண்டும் வெளிச்சம் தெரிவதுபோல் உணர்ந்தாள் கெல்லி.

'அதனால.. லீகல் செக்சன் பார்த்துட்டு சொல்றேன். பை'

சுரத்தில்லாமல் காலைத்துண்டித்தாள் கெல்லி. 

தன்னுடைய சக்தி எல்லாம் ஒரே நாளில் வடிந்துவிட்டதுபோல் சோர்வாக இருந்தது. வாங்கப்போகும் வீட்டின் ஹால், படுக்கை அறை, சமையலறை, பின்புறம் இருந்த கார்டன், நீச்சல் குளம் எல்லாம் நினைவில் வந்து அவளை வருத்தியது. நேற்றுவரை இதே காட்சிகள் மனதிற்கு சந்தோசத்தை கொடுத்ததென்னவோ உண்மை.

மொபைல் மணி அடிக்க எடுத்து அழைக்கும் நம்பரை பார்த்தாள். பதிவு செய்யப்படாத புதிய எண்.

'ஹலோ.. நான் வில்லியம் வெல்ஸ். கெல்லிதானே நீங்க? நீங்க வாங்கப்போகும் வீட்டின் ஓனர்.'

'ஹாய் வில்லியம். நான் கெல்லிதான் பேசுறேன்'

'உங்க நம்பர் ராபர்ட் கிட்டயிருந்து ரெக்வஸ்ட் பண்ணிதான் வாங்கினேன். உங்கள தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கவும்.'

வில்லியம் என்ன சொல்லாப்போறானோன்னு கெல்லிக்கு உள்ளுக்குள்ள ஒதறல்.

'உங்களுக்கு தெரியும் வீடு இப்ப வெள்ளத்துல சிக்கிருச்சுன்னு. எனவே, உங்களுக்கு ஆட்சேபணை  இல்லன்னா.. இந்த டீல் கேன்சல் பண்ணிரலாமா?'

கெல்லிக்கு ஒண்ணும் புரியல. தன் காதுகளை நம்ப முடியாமல்,

'உண்மையாவே சொல்றீங்க வில்லியம்? ரொம்ப சிரமப்பட்டுட்டேன், இதுக்காக'

'புரியுது. நான் வேணும்னா ஒண்ணு பண்றேன். உங்க செலவ நானும் ஷேர் பண்ணிக்கிறேன்' - சற்று  முன்னர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வந்த செய்தியில் மகிழ்ந்திருந்த வில்லியமுக்கு இது பெரிய தொகையாக இருக்காது என்று தெரியும்.

கெல்லிக்கு ஆச்சர்யமோ, ஆச்சர்யம் கூடவே சந்தோஷமும். 

ஒரு பொருளின் மீதோ அல்லது மனதுக்குகந்த துணையின் மீதோ  சொந்தம் கொண்டாடும் போது  அதில் உண்டாகும் இன்பத்திற்கிணையான துன்பமும் சேர்ந்து வருகிறது.

அந்த சொந்தம்  என்ற உணர்வு இல்லாத போது துன்பமும் கூடவே மறைந்து போகிறது. ஆராய்ந்து பார்த்தால் அனைத்து வகையான இன்ப, துன்பங்களுக்கு ஒன்றின்மேல் கொள்ளும் பற்று பாசமே  காரணியாகிறது.

இந்தப் பற்று  பாசமே   உயிரையும் பற்றி இருப்பதால், உயிரால் நம் பிறப்பின் பொருளை  உணர்ந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறது. உயிர் அடையவேண்டிய எல்லைக்கோடான இறைநிலையை எய்த முடியாமல் போகிறது.

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் 
பதியினைப் போல்பசு  பாசம் அனாதி 
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம் 
பதிஅணுகில் பசு பாசம் நிலாவே.
                                                                                             - திருமந்திரம் 115

[பதி - இறை,    பசு - உயிர்,  பாசம் - பற்று, சொந்தம்] 

இறைநிலை எப்படி ஆதி நிலையோ, அதே நிலைதான் உயிரை பற்றியுள்ள பந்த பாசங்களும். சொந்தங்களை விலக்கி இறைநிலை அடைய உயிரை அனுமதிப்பதில்லை பாசம்.  உயிர் இறைநிலையை  சேர்ந்தபொழுதில்  சொந்த பந்த பாசங்கள்  அகன்று விடும்.











No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...