Sunday, September 25, 2022

உயிர்மூச்சு

 உயிர்மூச்சு 

தென்னைய பெத்தா இளநீரு 
பிள்ளைய பெத்தா கண்ணீரு 


 வெளியே பைக் புறப்படும் சப்தம் தெளிவில்லாமல் கேட்டது. கூடவே குரைத்த நாயின் குரல் அது பைக்தான் என்று தெளிவாக்கியது.  எனக்கு கேட்கும் திறன் குறைந்துகொண்டே வருகிறது.

மகனும், மருமகளும் வேலைக்கு கிளம்பிவிட்டார்கள். குழந்தையை அப்படியே பள்ளியில் விட்டு விட்டு  செல்லும் அவர்கள் மீண்டும் மாலைதான் வருவார்கள்.

சுவர்க்கடிகாரத்தைப்பார்த்தேன்.  12-ல்  சின்ன முள்ளா, பெரிய முள்ளா என்று சரியாக  தெரியவில்லை. ஆனால், நிச்சயம் காலை மணி எட்டரையை தாண்டி இருக்கும். பார்வையும் மங்கலாகத்தான் இருக்கிறது.

இரவெல்லாம் சரியான தூக்கம் இருக்காது. அரண்டு, உருண்டு படுத்தாலும்  கொஞ்சம் கோழித்தூக்கம் மட்டும் தினமும். அதுவும் கொச்சினிலிருந்து வரும் பிளைட் சரியா நாலு மணிக்கு எழுப்பி விட்டுரும். அவர்கள் வெளியே செல்லும்  பைக் சப்தம் கேட்கும் வரைக்கும் பேசாமல் படுத்து கிடப்பேன். பகலில் தூக்கம் என்பதை சுத்தமாக விட்டு விட்டேன். 

பகலில் தூங்கினால் இரவில் வரும் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போச்சு. இன்னொரு பிரச்னையும் கூட. பகலில் தூங்கி எந்திரிச்சவுடன் மறுபடியும் காலையில் செய்யும் வேலைகளை செய்றேனாம். மறதியும் கூடிருச்சு போல.

வீட்டை விட்டு கிளம்பும்போது கிச்சன் கதவை பூட்டிட்டு போறாங்க. கொஞ்சூண்டு சுடுதண்ணி வேணும்னாலும் பிளாஸ்க் தண்ணிதான். ஒரே ஒரு முறை சுடுதண்ணி போட்டுட்டு காஸ் மூடாம விட்டுட்டேன். அன்னிக்கு இருந்து கிச்சன் என்ட்ரி நாட் அல்லொவ்ட். எனக்கு வாசம் வந்திருந்தா மூடாம விட்டிருப்பேனா? மூக்கும் போச்சு.

இதெல்லாம் போக, உடல் உபாதைகள், வேளா வேளைக்கு மருந்துகள். இதில் முக்கியமா ஒண்ணு தெரியுது. மனசு மட்டும் மாறாம இருக்குது, அதே பழைய துடிப்பும், கனவுகளுமாக.

என்னாலும் பைக் ஓட்டமுடியும்னு மனசு சொல்லுது. ஆனா, ஒரு காலில் நின்னு, இன்னொரு  காலை தூக்கி பைக்ல உக்கார ஒடம்பு ஒத்துழைக்குமான்னு தெரியாது.

எதனால் இந்த மாற்றங்கள்?

உடலுக்கு தேவையான உணவில்  மாற்றமில்லை. பின்னர் எதனால் புலன்களின் திறன் குறைந்து கொண்டே போகிறது, வயது  ஏற ஏற.

இதைத்தான் நம் முன்னோர்கள் யோசித்தார்கள். உணவைத்தவிர்த்து, பஞ்ச பூதங்கள் ஆளும் இவ்வுடலை  ஆரோக்கியமாக வைக்க என்ன தேவை என்று ஆராய்ந்தார்கள்.

இந்த உடலுக்குள் சந்தம் மாறாமல் சென்று வரும் காற்றை கவனித்தார்கள். காற்றின் தன்மையை பிரித்தும், வகுத்தும் பார்த்தார்கள்.

உடலில் கலந்த உயிர், காற்றினால் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். எவ்வளவுக்கெவ்வளவு காற்றும், உயிரும் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உடலில் உயிர் தங்கும் காலம் என்றறிந்தார்கள்.

காற்றுதான் உயிரை கட்டி வைத்திருக்கிறது என்னும்  உண்மையை சொன்னார்கள். 

கலந்த உயிருடன் காலம்  அறியில் 
கலந்த உயிரது காலின் நெருக்கம் 
கலந்த உயிரது காலது கட்டில் 
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

                                                                    - திருமந்திரம் 592

[கால் - காற்று ]

அடுத்து, மூச்சாக உட்செல்லும் காற்றினை ஆய்வு செய்தார்கள். அதனை பத்து வகையாக உள்ளது என்று பகுத்தறிந்தார்கள். தச வாயுக்கள் என்று பெயரிட்டு, பின்னர் அதனையும் இரு வர்க்கமாக பிரித்தார்கள். வெப்பத்தின் தன்மையாக ஐந்து வாயுக்களை ஒரு கூறாகவும், வாய்வின் தன்மையாக மற்றொரு ஐந்து  வாயுக்களை மற்றொரு கூறாகவும் வைத்து ஆய்வினை மேற்கொண்டார்கள்.

தச வாயுக்கள்

1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 

6. நாகன்  7. கூர்மன்  8. கிரிகரன் 9. தேவதத்தன் 10. தனஞ்செயன்

வெப்பத்தன்மை கொண்ட ஐந்து வாயுக்கள்:

1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 

வளியான வாய்வினிட வழிதான் மைந்தா 
மார்க்கமுடன் சொல்லுகிறேன் மனதாய்க் கேளு 
நெளியாத பிராணனுடன் அபானன் தானும் 
நிசமான உதானனுடன் சமானன் மைந்தா 
அளியாத வியானனுடன் ஐந்துமப்பா 
அரகரா தேய்வுடனே வாய்வு மாச்சு 
சுளியாத தேயு வாயுவைத்தான் கண்டால் 
சுகமாக பூத வாயுவைத் தான் கேளே. 

                                                                                       - சௌமிய சாகரம் 

காற்றின் தன்மை கொண்ட ஐந்து வாயுக்கள்:

1. நாகன்  2. கூர்மன்  3. கிரிகரன் 4. தேவதத்தன் 5. தனஞ்செயன்

 கேளப்பா நாகனொடு கூர்மன் மைந்தா 
கிரிகரனும் தேவதத்தன் தனஞ்செயனாம் ஐந்தும் 
ஆரப்பா ஐம்பூத வாயுவென்பார் 
ஆச்சரியந் தச வாய்வை அறிந்துகொள்ளு 
காலப்பா தசவாய்வை அறிந்துகொண்டு 
கருணையுடன் சிவயோகக் கருத்தில் நின்றால் 
கோளப்பா ஒன்றுமில்லை எல்லாஞ் சித்தி 
குறிப்புடனே ஆகாச வழிதான் கேளே .

                                                                                          - சௌமிய சாகரம் 

தச வாயுக்களின் முக்கிய பணிகளாக, ஐம்புலன்களின் உணர்வு நிலையாக, சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல், நுகர்தல் என்றறிந்தார்கள். கொட்டாவி, தும்மல், விழித்தல், இமைத்தல், கழிவுகளை வெளியேற்றும்  உணர்வு/தன்மை, விந்து பாய்ச்சுதல்  போன்ற செயல்களையும் இவைகளே காரணிகளாக  உள்ளன  என்பதையும் கண்டார்கள்.

வயது ஏற ஏற, சுவாசித்தலில் ஏற்படும் மாற்றம், தச வாயுக்கள்  சீரற்ற அளவில் உடலில் இயங்குவதனால்.  பல்வேறு உபாதைகள் உண்டாக ஏதுவாகிறது.

அடுத்து உடலுக்குள் சுவாசக்காற்று செல்லும் பாதையை கவனித்தார்கள். சுவாசிக்கும் காற்று உடலுக்குள் பயணித்தலையும் அதன் பணிகளையும் பார்த்தார்கள்.

சுவாசத்தில் இடது சுவாச பாதையை இடகலை அல்லது சந்திரகலை என்றும், வலது சுவாச பாதையை பிங்கலை அல்லது சூரியகலை என்று பெயரிட்டார்கள். சுவாசிக்கும் காற்றை தச வாயுக்களாக பிரித்து, அதன் பணிகளின்  தேவைக்கேற்ப அதனதன்  நிலைகளில் நிலைநிறுத்தும்   என்பதையும் கண்டறிந்தார்கள்.

மேலும் சுவாசிக்கும் காற்றின் பாதையினை  ஆராய்ந்தபோது, சில நேரங்களில் இடது நாசியிலும், சில நேரங்களில் வலது நாசியிலும் காற்றின் வேகம் மாறுபடுவதை கண்டார்கள்.

வெள்ளி, திங்கள் மற்றும்  புதன் கிழமைகளில் இடது நாசியில் அதிக காற்றோட்டமும், சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வலது நாசியில் அதிக காற்றோட்டமும் இருக்க வேண்டும். வியாழனன்று மட்டும், வளர் பிறை நாட்களில் இடது புறமும், தேய் பிறை நாட்களில் வலது புறமும் காற்று ஏற்றத்துடன் இருக்க வேண்டும்.

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம் 
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் 
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம் 
தெள்ளிய தேய்பிறை தான்வலம் ஆமே.
                                                                                          - திருமந்திரம் 790

உடல் நல்ல ஆரோக்கியத்துடன், உயிரோடு கலந்து ஒன்றி இருப்பதை மேற்கூறிய சுவாச நிலைகளில் இருந்து அறியலாம். உயிர் வாழும் காலத்தையும் கணக்கிடலாம்.

நாமும் இந்த எளிய சோதனையை செய்து பார்த்து, நம் சுவாச நிலையை  காற்றுப்பயிற்சி மூலம் சரி செய்து கொள்ளலாம்.

*** *** ***






No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...