Tuesday, September 13, 2022

காலப்பயணம்

காலப்பயணம்  

அன்று வந்ததும் இதே நிலா 
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா  




'கோயில்ல என்ன இருக்கு. அசிங்க அசிங்கமா பொம்மை சிலைகள் இருக்கு' - சமீபத்தில் ஒரு அரசியல் வியாதியின் அரிய கண்டுபிடிப்பு. 

ஆழ்வார்குறிச்சி  அருகில் உள்ளது  பாப்பான்குளம் என்னும் சிற்றூர். சமீபத்தில் அங்குள்ள   திருவெண்காடர் சிவாலயத்துக்கு சென்றிருந்தோம். மிகவும் பழமையான கோயில் அது.  சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்தூண்களால் கோயில் நிறுவப்பட்டிருந்தது. 

கோயிலின்  சிறப்பு மாலை நேர பூஜை. விளக்குகள் அணைக்கப்பட்டு, வாத்திய இசையில் மூலவரின்  தோற்றம் அற்புதமாக இருக்கும். சந்திரகாந்தக்கல்லால் ஆன சிவலிங்கம், கருவறை அருகில் இருந்து பார்த்தால் சிறியதாகவும், கொடிமரம் அருகில் இருந்து பார்த்தால் பெரியதாகவும் தெரியும்.

நாங்கள் செல்வதற்கு சற்று  தாமதம் ஆகி விட்டதால், தரிசனம் மட்டும் செய்துவிட்டு, தூண்களில் அழகாக செதுக்கப்பட்டிருந்த சிலைகளை பார்க்க ஆரம்பித்தோம். அதில், ஒரு சிற்பம் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஆம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, இன்று சிறுவர்கள் கால்களால் உந்தி  ஓட்டி மகிழும், ஸ்கூட்டியில் ஒருவர். 

இது எப்படி சாத்தியம்?

ஒன்று அவர்களுக்கு காலப்பயணம் சாத்தியப்பட்டிருக்க வேண்டும். அல்லது, அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் அவை பயனில் இருந்திருக்க வேண்டும்.

இதே மாதிரியான பிரமிப்பு தரும் சிற்பங்கள்  நம் பழங்கால கோயில்களில் நிறைய  காணக்கிடைக்கிறது. 

கரு உருவாவதிலிருந்து, அதன் வளர்  நிலைகள் சிற்பங்களாக. இன்றைக்கு நாம் ஸ்கேன் செய்து பார்க்கும் அதே சிற்பம் கற்றூண்களில். கூடவே சில இடங்களில் குடங்கள். 

சிசுவின் வளர்ச்சிக்கும் குடத்திற்கும் என்ன தொடர்பு?

சோதனைக்குழாய் சிசு?

நான் சொல்லப்போவது கும்பமுனி பற்றி. குடத்தின் வாயிலாக பிறந்ததால்  கும்பமுனி என்று அழைக்கப்படும் அகஸ்தியர் பற்றி.

வருண பகவானும், மித்ர பகவானும் யாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அப்சரஸ் ஊர்வசி அங்கே வருகிறாள். அவளது அழகில் மயங்கி தன்வசம் இழந்தவர்களின்  விந்து வெளிப்படுகிறது. 

மேலோட்டமாக பார்த்து,  மிகவும் ஆபாசம் என்று ஒதுங்காமல் இதில் உள்ள அறிவியலைப்பார்ப்போம்.

ஊர்வசி வந்ததால், அதாவது பெண் வந்ததால், வருணன் என்னும்  ஆணின் உயிரணு வெளிப்பட்டு பெண் உயிரணுவிடம் கலக்கிறது. அங்கே புதிய ஜீவன் உருவாகிறது.  

அது ஒரு குடத்தில் சேமிக்கப்பட்டு குழந்தையாக வளர்கிறது. இந்த கும்பத்தில் பிறந்ததாலே, அகஸ்திய முனிவருக்கு கும்ப முனி என்ற பெயர் வழங்கப்படுகிறது.

நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு.  புராண காலத்திற்கு முன்னரே சோதனைக்குழாய் மூலம் சிசுவை  உருவாக்கும் அறிவியல்  முறையை நம் மனித குலம் அறிந்திருந்தது என்பதுதான். இந்த கலையை நாங்கள் அறிந்திருந்தோம் என்று பறை சாற்றுவதே இந்த கற்சிற்பங்கள்.

எனவே, இது காலப்பயணத்தில் சேர்த்தி அல்ல. அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் இருந்த அறிவியல் கலை  என்றாகிறது.

இதெல்லாம்  புராண கால புரட்டுக்கதைகள் என்று தள்ளிவிட்டு  போக விடாமல் நம் பகுத்தறிவிற்கு சவால் விடும் சமாச்சாரம் இது.

கற்சிற்பங்களே ஆவணங்கள். மறைக்கப்பட்ட ஆன்மீகம் என்று கூறிவிட முடியாது.

இந்த அறிவியலை அவர்கள் முறையாக கற்க, கற்பிக்க, செயல் முறைப்படுத்த  அதற்கான புத்தகங்கள், உபகரணங்கள் வைத்திருந்திருப்பார்கள்தானே?

அவைகள் எங்கே?

அறிவு சார்ந்து தேட ஆரம்பித்தால், ஒரு வேளை அவைகள் நம் கண்ணுக்கு புலப்படலாம். புத்தகங்களாகவோ அல்லது வேறு வடிவிலோ. ஒருவேளை அழிந்து போயிருந்தாலும் போயிருக்கலாம்.

ஆனால், உண்மை நிலையை பறை சாற்றிக்கொண்டிருக்கிறது இக்கற்சிற்பங்கள்.

கும்பமுனி, முதல் நிலை சித்தரான முருகனின் அடுத்த நிலை சித்தர் என்றும் அறியப்படுகிறார். போகரின் குருவாகவும் விளங்கியவர்.

போகரின் பூர்வீகம் சீனா என்றும் அவரது பெற்றோர்கள் சலவைத்தொழில் செய்பவர்களென்றும் அகஸ்தியர் தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைக்கு  2022 என்பது  நம் காலக்கணக்கு.  இக்காலக்கணக்கு  ஆரம்பிக்கும் முன்னர், சுமார் நான்கைந்து  நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக அறியப்படுபவர் போகர் சித்தர், 300 - 450 BC. 

அதனால், திருமூலர் வாழ்ந்த காலம் 12-ம் நூற்றாண்டு. திருமந்திரத்தில் போகரைப் பற்றி குறிப்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கலந்தருள் காலாங்கர் தம்பால்அ  கோரர் 
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர் 
புலங்கொள் பரமானந் தர்
போக தேவர்
நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே.
                                                                                                       - திருமந்திரம் 102  
 

ஆனால், போகர் தன்னுடைய போகர் - 7000 பாடல் தொகுப்பில் எவ்வாறு திருமூலரை  பாட்டனாராக அழைக்கிறார்? திருமூலருக்கு சுமார்  15 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தவராக  அறியப்படுபவர் போகர்.

திரயமாங்  காண்டத்தைச்  செப்பு தற்கு 
    சித்தமனோன் மணித்தாயார் பாதம் போற்றி 
நிரயமாம் சிவனுடைய பாதம் போற்றி 
     நித்தியராம் குருநந்தி பாதம் போற்றி 
முரயமாம் பாட்டதிரு மூல நாதர்
    முத்தியாம் பாதமெந்தன் சிரமேல் வைத்து 
கரயமாங் காலாங்கி பாதம் போற்றி 
    கடாச்சித்த சனகாதி பாதங்காப் பாமே.

                                                              - போகர் 7000 [மூன்றாம் ஆயிரம் -1]

சித்தர்களுக்கு காலப்பயணம் இல்லையோ? முக்காலமும் அவர்களுக்கு ஒன்றுதானோ?

இத்தோடு விட்டால் நம் முயற்சி எல்லாம் பலனற்றதாகிவிடும்.

காலக்கணக்கு இல்லையென்றால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இன்றும் இருப்பார்கள் தானே? 

பார்க்க ஆவலாக சென்றேன்.

திருமூலர் திருவாவடுதுறையில் அமர்ந்து 3000 திருமந்திரப்  பாடல்களை எழுதினார் என்று படித்திருக்கிறேன். அத்திருத்தலத்தைக்காண [20-08-2022 சனி] சென்றிருந்தேன். கும்பகோணத்திலிருந்து சுமார் 21 கி.மி. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.

கோயில் முதல் நிலை தாண்டியவுடன் இடது பக்கம் திருவள்ளுவரின் மேடை. திருமந்திரம் படிக்கும்போது எனக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் வரும். திருவள்ளுவரும், திருமூலரும் ஒருவரோ என்று. 

திருமந்திரத்தின் சாரம் அப்படியே திருக்குறளில் பதிந்திருக்கிறது.

யோசித்துக்கொண்டே திருமூலரின் சந்நிதிக்கு சென்றேன். கோமுத்தீசுவரசுவாமி  கோயிலின் பின்புறம், அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது திருமூலர் ஆலயம்.

கண்களை மூடி கைகளை கூப்பி, ஏதும் வேண்டாமல் தொழுது நிற்கும்போது, நான் சற்றும் எதிர்பாராத, ஓம் எனும்  பிரணவ ஒலி என் உள்ளுக்குள்ளிருந்து, மிகவும் தெளிவாக கேட்டது. மனப்பிரம்மையோ என்று திடுக்கிட்டு கண் திறந்தேன். திறந்த மாத்திரத்தில் ஒலி மறைந்தது.

என்னுடன் வந்தவர்களிடம் கேட்டேன் அவர்களுக்கும்  அந்த ஒலி கேட்டதா என்று.

'எங்கே போனாலும் இந்த கொசுத்தொல்லை தாங்கல' 

அதுக்கு மேல் அவர்களிடம் பேச ஒன்றுமில்லை. 

*** *** ***


 










  

No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...