ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
குடமுழுக்கு விழா
கோவையிலிருந்து கரூர் செல்லும் வழியில் பெரிய பெரிய போஸ்டர்கள். போஸ்டர்களில் கடவுளின் படத்திற்கு மாறாக, தானே கடவுளாக அவதரித்துக்கொண்டிருந்தார் விழாவை முன்னின்று நடத்தும் சாமியார்.
ஆண்களும், பெண்களும் செவ்வாடை உடுத்தி திரள் திரளாக குடமுழுக்கு விழாவிற்கு வந்து கொண்டிருந்தார்கள்.
'ஐயா, நீங்கள் கடவுளின் அவதாரம் என்றால், ஒருமுறையாவது கடவுளை நேரில் பார்த்திருக்கிறீர்களா?'
அவர்களில் ஒருவருக்காவது சாமியாரிடம் இந்த கேள்வியை கேட்கும் திராணி இருக்குமா என்பது சந்தேகமே!
'பார்த்திருந்தால், நாங்களும் பார்க்க ஏதுவான வழி சொல்லுங்கள். அவ்வாறு முடியாதென்றால், நீங்கள் சொல்வதை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?'
இந்த மண்ணில் பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒரே குலம். அவர்களுக்கு எல்லாம் ஒரே தெய்வம்.
சிலர் சிவன் என்பார்கள். சிலர் இயேசு என்பார்கள். அவரவர்க்கு பிடித்த தெய்வத்தின் பெயரை சொன்னாலும், இறைவன் ஒருவனே! பெருந்தெய்வமானாலும், குறுந்தெய்வமானாலும், குலதெய்வமானாலும் மனித குலம் கொடுக்கும் ஒவ்வொரு தெய்வத்தின் பெயருக்கும் உரியவன் ஒருவனே.
ஒன்றே குலம், ஒருவனே தேவன். அவனை சிந்தித்திருங்கள், மரண பயம் நீங்கிவிடும். வெட்கப்படாதீர்கள். வேறு வழி இல்லை. உங்கள் அறிவினை அவனை உணர்வதில் செலவிடுங்கள். வாழ்வின் பொருளுணர்ந்து உய்யும் வழி இது ஒன்றே ஆகும்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன்இல்லை நாணாமே
சென்றே புகும்கதிஇல்லை நும்சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே.
- திருமந்திரம் 2104
*** *** ***
இலவச அரசியல்
'இலவசங்களை கொடுத்து மக்களை கெடுக்கிறோம் என்று எங்களை குறை கூறும் நீங்கள் பொருளாதாரம் படித்திருக்கிறீர்களா? பி எச் டி.. கி எச் டி?'
'அதுதா நோ சொல்லிட்டேன்ல, நெக்ஸ்டு?'
'பொருளாதார மேம்பாட்டிற்கான நோபல்.. கீபெல்.?'
'நெக்ஸ்டு'
'நாட்டோட எல்லா கடனையும் அடைச்சிட்டீங்களா?'
'போங்க தம்பி. அத வேற நியாபகப்படுத்திட்டீங்க. கடன் தொல்லை தாங்கல. எத வித்தாலும் பத்த மாட்டேங்குது. அடுத்து..?'
'ஆனா, இன்னைக்கும் உங்க மாநிலத்துக்காரங்க, தமிழ்நாட்டுக்கு, விசா இல்லாம, சிங்கப்பூர் போற மாதிரி நெனச்சு, வந்து வேல செஞ்சு நல்லா சம்பாரிச்சு வளமா இருக்காங்க. அவங்களும் இலவசத்தை வாங்கிக்கிறாங்க.'
'உங்களால பொருளாதார முன்னேற்றத்துக்கு எதுவும் பண்ண முடியல. வக்கணையா வந்து நாங்க பண்றத கிண்டல் பண்ண மட்டும் தெரியுது.'
'நாங்க எதுக்கு நீங்க சொல்றத கேக்கணும்?' - தமிழக நிதி மந்திரி வடநாட்டு டி வி நேரடி வாக்குவாதத்தில் கேட்டதின் சாராம்சம்தான் இது.
கடல் நீரில் உப்பிருக்கு. மக்களால் உப்பை கடலில் இருந்து எடுத்து உபயோகிக்க முடியாது. அரசு, கதிரவனைப்போல் கடல் நீரை வற்ற செய்து உப்பாக்கி அதனை இலவசமாக தருகிறது. அதுவே, மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் முதலீடாகவும் அமைகிறது. பொருளாதாரம் வளம் பெறுவதால் மீண்டும், மீண்டும் பொருளாதார மறு சுழற்சி நடை பெறுகிறது.
கடல் நீர் உப்பாவதும், உப்பு கடல் நீரில் கரைந்து போவதுமாக, பொருளாதாரம் இலவசமாவதும், இலவசம் பொருளாதாரமாவதுமாக இயற்கையின் சுழற்சி மக்களின் வாழ்வை மேம்படுத்தும்.
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பென பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.
- திருமந்திரம் 136
சூரியனின் வெப்பத்தால் கடல் நீர் உப்பாவதும், உப்பு நீரில் கலந்து மறைவதும் போல அனைத்து ஜீவன்களும் சிவத்துக்குள் அடக்கம் பெற்றிருக்கும்.
மனித குலத்தின் அனைத்து ஜீவன்களும் ஒரே தெய்வத்துக்குள் அடக்கமாகியிருக்கும்.
*** *** ***
No comments:
Post a Comment