மஹா சமாதி பயிற்சி அனுபவம்
வீடுவரை உறவு..
என் பெயர் எனக்கு மறந்து விட்டது..
இப்பொழுது என்னை பிணம் என்கிறார்கள்.
அத்தான் என்றவளும், அப்பா என்றவனும், சார் என்றவர்களும் என் பெயரை மாற்றி விட்டார்கள். பிணம் என்பது மட்டும் பொதுப்பெயராகிவிட்டது. யார் இறந்தாலும் ஒரே பெயர் பிணம்தான்.
ஊரே கூடி நின்று அழுகிறார்கள்.
இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்கே தங்கி கொள்ளலாம். நான் ஆசை ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய வீட்டில், எவ்வளவு கெஞ்சினாலும் தங்க முடியாது. நேற்றுவரை என் தயவில் இருந்த யாரும் எனக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். சுடுகாட்டில் என்னை சாம்பலாக்கி விடுவார்கள். எங்கே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிடுவேனோ என்று நீரிலும் கரைத்து விடுவார்கள்.
அவர்களும் நீரில் தலை முழுகி என் நினைப்பை மறந்துவிடுவார்கள்.
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூறைஅம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே.
- திருமந்திரம் 145
யார் சிரித்தால் என்ன?
நான் ஏன், எதற்கும் கவலைப்பட வேண்டும்.
இனி என் உடலை காகம் சாப்பிட்டால் என்ன? பிணத்தை கண்டு பழி சொல் சொன்னால் என்ன? என் வாயில் பால் ஊற்றினால் என்ன? என் மரணத்தை அறிந்தவர்கள் புகழ் வார்த்தைகள் சொன்னால் எனக்கென்ன? ஆகப்போவது ஒன்றுமில்லை, உடம்புக்குள் இருந்து அது செயல்பட தேவையான அருள் வழங்கிய ஜீவன், சிவன் என் உடலை விட்டு நீங்கிய பின்னால்.
காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என்
பாற்றுளிப் பெய்யில்என் பல்லோர் பழிச்சில்என்
தோற்பையுள் நின்று தொழில்அறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.
- திருமந்திரம் 167
நேற்று எனக்கு மாலையும், மரியாதையும். எனக்கு வெண்கொற்றக்குடை இருந்தது. குதிரையும் எதிரியை வெல்லும் வாளும் என்னுடன் இருந்தது. என்னுடைய படைகள் என்னை புடை சூழ இருந்த போதே, என்னுயிர் என்னை விட்டு பிரிந்து விட்டது. என்னுடலில் அடைந்து இருந்த உயிர் ஊர்வலம் சென்றுவிட்டது.
யாராலும் என்னைக்காக்க முடியவில்லை.
இன்றைக்கு எனக்கு தேர் இல்லை பாடை மட்டும்தான்.
குடையும் குதிரையும் கொற்றவாளும் கொண்டு
இடையும் அக்காலம் இருந்து நடுவே
புடையு மனிதனார் போகும் அப்போதே
அடையும் இடம்வலம் ஆருயிர் ஆமே.
- திருமந்திரம் 166
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்..
சமாதி ஆகிவிட்ட என்னால் இனி இறை அடி சேர முடியாது. சுத்த வெளியில் அவனுடன் சங்கமிக்கும் வழி இல்லை. என்னுடலில் ஆறு ஆதாரத்தில் நின்றியங்கிய ஐம்புலன்களின் ஆதிக்கம் மறைந்து விட்டது. மீண்டும் என்னுடலில் இவை சேர முடியாது. என்னுடலில் இறைக்கனல், அகக்கனல் மற்றும் புறக்கனல் சேராமல் தடுப்பணை போட்டு விட்டது.
காடுபுக்கார் இனிக் காணார் கடுவெளி
கூடுபுக்கு ஆனவை ஐந்து குதிரையும்
மூடுபுக்கு ஆனது ஆறுஉள ஒட்டகம்
மூடுபுகா விடின் மூவணை ஆமே.
- திருமந்திரம் 2893
யோக நிலைகளில் இறுதியானது சமாதி.
இனி, சமாதி நிலை தேவை இல்லை இறையுடன் இணைந்து விடுவீர்கள்.
இறையுடன் இணைந்து இறை நிலை எய்தி விட்டால் அறுபத்து நான்கு கலைகளும் கைவந்த கலை ஆகி விடும்.
சமாதி செய்வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதிதான் இல்லை தான்அவன் ஆகில்
சமாதியில் எட்டுஎட்டுச் சித்தியும் எய்துமே.
- திருமந்திரம் 631
என் மரணத்தை நானே அனுபவித்தேன்.
மரணம் என்னும் பேரிழப்பை அனுபவித்தேன். என்னை நான் இழந்தேன்.
அட்டாங்க யோகத்தை வகைப்படுத்திய திருமூலர் சமாதியை எட்டாவது அங்கமாக வைத்தார். முதல் அங்கமே முடியாமல் தவிக்கும் சாதாரண வாழ்க்கை வாழும் என்னைப்போன்ற சாமானியர்களுக்கு இந்த பயிற்சி மறுபிறப்பு.
உலகமே கொண்டாடும் ஏசுவின் பிறந்த நாளான இன்று எனக்கு மறு பிறப்பு.
புத்தம் புதிய அனுபவம்.
இந்த அற்புதமான அனுபவத்தை வழங்கிய குரு ராஜசேகர் அய்யாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அதிக விளம்பரம் இல்லாத, தேவை இல்லை.. தேன் கூட்டிற்கு தேனீக்கள் தானாக வந்து சேரும் உங்கள் அமிர்தஹாரா டிரஸ்ட் அமைப்பிற்கு.
வாழ்க உங்கள் சமுதாய தொண்டு.
வளர்க உங்கள் புகழ் வையகமெங்கும்.
நன்றி.. வணக்கம்.
*** *** ***