Monday, August 9, 2021

காற்றின் காதல்

யாரும் வாழப்பாடும் காற்றும்                                                                                         நானும் ஒன்றுதானே                                                                                                              இன்ப நாளும் இன்று தானே 


புயலாக  நானிருந்தேன்.                                                                                                      கடலாக அவளிருந்தாள்.                                                                                                              காதலை சொன்னேன்,                                                                                                        சுனாமியாக மறுதலித்தாள்.

நினைவுக்கனல் ஏற்றி, 
தென்றலாக மாறிநின்றேன். 
எனக்குள் சங்கமித்தாள்,
சாரலாக குளிர்வித்தாள்.

காற்றினை நீர் ஏற்காது. காற்றினுள் நீர் கரைந்து  நிற்கும். 

எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றை தண்ணீருக்குள் செலுத்தி நிறுத்திவிட   முடியாது. ஆனால், தண்ணீரைவிட மிக மெலிதாக வெப்பம் கூடுதலாக  தென்றல் இருக்கையில், தண்ணீரை உறிஞ்சி எடுத்து தன்னுள் வைத்துக்கொள்ளும்.

நீர்.. நெருப்பு.. காற்று.

மனித உடலிலும் இந்த  முக்கிய மூன்று அம்சங்கள்  பொதிந்திருக்கிறது.

காற்றடைத்த பை நம்  உடல். உடல் முழுதும் சென்றுவர அதற்கு எழுபத்திரண்டாயிரம் பாதைகள். 

இந்த பாதைகளில் ஏற்படும் அடைப்புகள், தடைகளே உடலின் ஆரோக்கிய கேட்டிற்கு முதல் காரணி ஆகிறது. 

    வாயுப்பிடிப்பு என்று சாதாரணமாக சொல்லி கடந்து செல்கிறோம்.

காற்று புக முடியாத பாதைகளிலும் நீர் புகுந்து விடுகிறது.

    நீர் கோர்த்துக்கொண்டது என்று இன்னொரு காரணமும் சொல்லிக்கொள்கிறோம்.

காற்றும், நீரும் ஏற்றுக்கொள்ளாத பொழுது, வெப்பம் தோன்றிய இடத்திலே  குவிய ஆரம்பிக்கிறது.

    கட்டிகளாகவும், கொப்பளங்களாகவும் தோலில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

உடலின் பாதைகள் அடைபட்டு, உபாதைகள் ஏற்படுவதை தடுக்க சித்தர்கள் பல எளிய வழி முறைகளை சொல்லி சென்றுள்ளார்கள். ஆனால், அவைகள் பாட்டு வடிவில் இருப்பதால், நிகழ் கால மக்களுக்கு அதன் பொருள் புரியாமல் அவ்வரிய வழிகாட்டுதலை தவிர்த்து வருகிறோம். வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்லாமல் அவர்களுக்கு பெருந்தீங்கு இழைக்கிறோம்.

திருமூலர், நாம் அனிச்சையாக விடும் மூச்சுக்காற்றை, பயிற்சியாக  இடது மூக்கில் உள்  இழுத்து, சற்று உள்  நிறுத்தி, வலது மூக்கு வழியாக விடவும், இதனையே மாற்றி மாற்றி செய்ய சொல்கிறார்.

வாமத்தால் ஈரெட்டு மாத்திரை பூரித்தே 
ஏமுற்ற முப்பத் திரண்டும்  இரேசித்துக் 
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு 
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

                                                                                                       - திருமந்திரம் 573

[பதினாறு மாத்திரை அளவு உள்ளிழுத்தல் - பூரகம். அறுபத்திநான்கு மாத்திரை உள்நிறுத்தல் - கும்பகம். முப்பத்திரண்டு மாத்திரை வெளிவிடுதல் - இரேசகம்] 

இப்படி மூச்சுப்பயிற்சி செய்வதால்  என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

பூரகம்
உள்ளிழுக்கும் காற்றில் நம் உடல், உயிர் இரண்டிற்கும் அத்தியாவசியத் தேவையான பிராண வாயு இருக்கிறது. 

கும்பகம் 
1. சுவாசித்த காற்றை உள் நிறுத்தும்போது, அந்த வாயு முதலில் உடலின் வெப்பத்தை ஏற்று சூடாகிறது. 

2. இந்த சூடான காற்று, அடைபட்ட பாதைகளில் உள்ள நீரினை தன்னில் கிரகித்துக்கொள்கிறது. 

3. காற்று அடைபட்ட பாதையை தகர்த்துக்கொண்டு உட்செல்கிறது. 

இரேசகம் 
வெளியேறும் காற்றில், உடலின் அதிகப்படியான வெப்பமும், ஈரமும் வெளியேறி விடுகிறது.
 
இதனையே பிராணாயாமம் என்றும் நாம் அறிகிறோம்.

உபாதைகள் பாதைகளாக மாறும்போது உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் 
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதில் ரேசகம் 
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.

                                                                                          - திருமந்திரம் 568  


எச்சரிக்கை: 
நன்கு தேர்ந்த ஆசிரியர்களிடம், முறையாக கற்க வேண்டிய பயிற்சி மூச்சுப்பயிற்சி. எதிர்மறை விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, நாமே முறையற்று செய்யும்போது.





 

Thursday, July 29, 2021

ஆலயமணி


ஆலயமணியின் 
ஓசையை 
நான் கேட்டேன் 




கவியரசரின் ஆன்மீக உணர்வில் உதித்த பாடல் இது.

இரு மனம் நிறைந்த காதலில், மணவினை ஏற்ற தலைவி, முதலிரவு முடிந்து,  அதிகாலையில் பாடும் பாடலாக திரையில் வருகிறது.

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் 
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் 

இளகும் மாலைப்பொழுதில் தலைவனிடம் அடைக்கலம் பெற்ற தலைவியின் தன்னுணர்வு நிலை  விளக்கப்பாடல் இது.

தலைவி அடைக்கலத்தின் உணர்வு நிகழ்வில்  ஆலய மணியின் ஓசையை கேட்டதாக  பாடுவதாக அமைந்திருக்கிறது. .

அருந்தவ யோகிகளுக்கு தியான  நிலையில் கிடைக்கக்கூடிய பேருணர்வின் ஓசை  நிலை இது. 

குண்டலினி என சொல்லப்படும் உயிர் நிலையில் இருந்து எழும் கீதம் அது.
  
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட.. ..
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!

சிவ குகனான முருகன், பன்னிரண்டு கால்களில் சலங்கை மணி சத்தத்துடன்,  குண்டலினியினின் நடுவில் நின்று நடனமிடும் இடம்  அது.

உன் இறைவன் அவனே அவனே எனப்பாடும் மொழி  கேட்டேன் 
உன் தலைவன் அவனே அவனே என்னும் தாயின் மொழி கேட்டேன் 

மணவினை ஏற்ற தலைவி, சங்கம வேளையில், இறைவனையும் தன் தலைவனையும் ஒரு சேர காண்கிறாள்.

மணிகடல்  யானை வார்குழல் மேகம் 
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் 
தணிந்துஎழு  நாதங்கள் தாமிவை பத்தும் 
பணிந்தவர்க்கு அல்லது பார்க்கஒண்  ணாதே.
                                                                     - திருமந்திரம் 606

மணி ஓசையுடன் பல்வேறு இசைதனை தியானத்தில் கண்டும் , கேட்டும்  உணரலாம்.

ஆலயத்தின்  மணி ஓசை மற்றும்  இறைவனுக்கு தீப ஆராதனை  காட்டும்போது எழும் மணி ஓசை, குண்டலினியில்  எழும் ஓசையின் மறுபதிப்பாக மனிதர்கள் உணர்ந்து கொள்ளவே!

சிந்திக்கும் திறன் பெற்ற மனிதனின் உடல், தன்னில் இருக்கும் உயிர் இவை இரண்டும் தன்னுள் இறைவன் இருப்பதை அறிவதில்லை. இறைவனை அறிந்த உணர்வு  நிலை பெற்ற மனிதன் இறை நிலைக்கே  சென்று விடுகிறான்.
 
அவனும் அவனும் அவனை அறியார் 
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில் 
அவனும் அவனும் அவன் இவனாமே.
                                                                    - திருமந்திரம் 1789

மணவினை ஏற்ற தலைவி, தன்  உடல் [அவன்-1], உயிரினை [அவன்-2] தாண்டி அங்கு உறையும் இறைவனையும் [அவன்-3]காண்கிறாள்.

தமிழா? தமிழை அறிந்ததால் வந்த சிறப்பா? 

ஆன்மீகம் தந்த பெரும் பரிசாக திருமூலர் நமக்கு வழங்கி சென்றுள்ளதை நாம் அனைவரும் படித்துணர்ந்து  பயனுறுவோம்.


Monday, July 26, 2021

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

தாமரை மலரில் 
மனதினை எடுத்து
தனியே  வைத்திருந்தேன் 




கவியரசர் கண்ணதாசன் இயற்ற, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மெட்டமைக்க, இசைக்குயில்  பி.சுசீலா குரலில், நவரச இயக்குனர் ஸ்ரீதர் இயக்க, கல்யாண்குமார் மற்றும் தேவிகா நடிப்பில் உருவான காவியப்பாடல் இது.

தமிழ்த்திரையிசை பாடல்களில் மிகவும் அபூர்வமான பாடல் 'நெஞ்சம் மறப்பதில்லை' எனும் பாடல்.

தாமரை மலரில் 
மனதினை எடுத்து
தனியே  வைத்திருந்தேன் 

பாடலில் வரும் இந்த வரிகளில் என்ன சொல்ல வருகிறார் கவியரசர்.

நெஞ்சம் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது?

இதயம் இருக்கும் இடத்தை நெஞ்சம் என்று கூறுகிறோம். இதனையே ஆறாதார சக்கரங்களில், அநாகத சக்கரம் உள்ள இடமாக சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அறிவுக்கு மேலேறி யெட்டாமங் குலத்துக் 
கப்பாலே யநாகத்தின் வீட்டைக் கேளு 
முறிவுக்கு முக்கோண மாக நிற்கும் 
முதிர்வளையம்  பன்னிரண் டிதழு மாகும் 

                                                                                   - போகர் 7000 - 46

இந்த நெஞ்சம் பன்னிரண்டிதழ்கள் கொண்ட தாமரை மலர் என்றும் வர்ணிக்கிறார்கள்.

இதனையே திருமூலர்,

ஆயும் மலரின் அணிமலர் மேலது 
ஆய இதழும் பதினாறும் அங்குள 
தூய அறிவு சிவானந்தம் ஆகிப்போய் 
மேய அறிவாய் விளைந்தது தானே.

                                                                                  - திருமந்திரம் 1711

எதையும் ஆராய்ந்தறியும் இயல்புடையது மனம் - இதயத்தாமரை.

நெஞ்சத்தின் தன்மைகளை அகத்தியர் கூறுவதை கேளுங்கள்.

கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.
                                          - அகத்தியரின் சௌமிய சாகரம் 32

உயிரோடு கலந்த சக்தி, மாயை நிலையில் இயங்கும்  உடல்,  உணர்வுதனை மனதுக்கு  வழங்குகிறது. மனதிற்கு என்று தனிப்பட்ட எந்த கோளும் அதாவது புலனுறுப்பும்  இல்லை.

ஆயினும், 1. மனம்  2. புத்தி/அறிவு  3. ஆங்காரம்  4. சித்தி என்ற நான்கு படிகளில் மனித உணர்வுகளை வழி நடத்துகிறது.

இந்த நான்கு தன்மைகளில் உள்ள தாமரை மலர் நெஞ்சத்தில், மனதினை மட்டும் தனியாக எடுத்து,  உன் நினைவுக்காகவே  வைத்திருக்கிறேன்.



Thursday, July 15, 2021

மந்திரம்

மந்திரம் 

என்ன சத்தம் 
இந்த நேரம்  
உயிரின் ஒளியா?



உயிரின் ஒளிக்கு சப்தமுண்டோ?

வாருங்கள் ஆராய்ந்து பார்ப்போம்.

அளவின் வரி வடிவம் எண்.

ஒலியின் வரி வடிவம் எழுத்து.

எண்கள் அளவினை துல்லியமாக தெரிவிக்கும். எழுத்துக்களோ ஒலியின் ஓசையை தோராயமாக வெளிக்கொண்டு வரும். சில நேரங்களில் ஒலியை வரிவடிவில் கொண்டு வர இயலாத பலவீனமும்  எழுத்துக்களுக்கு உண்டு.

மத்தள ஓசையை 'டும்.. டும்..' என்று எழுதினாலும், காதில் விழும் மத்தள ஓசையும், எழுத்தும் ஒன்றுவதில்லை.  பறவைகள், விலங்குகளின் குரல்  ஓசைக்கு புதிய வார்த்தைகளை எழுதி புரிந்து கொள்கிறோம். குயிலின் கூவலை, சிங்கத்தின் கர்ஜனையை  எழுத்தில் எழுதி விட முடியாதுதானே.

எழுத்துக்களுக்கு உள்ள இயலாமை இது. 

க, ச, ட, த, ப போன்ற உயிர்மெய்  எழுத்துக்களுக்கு வார்த்தைகளின் தன்மைக்கேற்ப உச்சரிப்பு வேறுபடுகிறது.

இந்த சமயங்களில், நாம் எழுத்துக்களின் உச்சரிப்பை அனுபவ ரீதியாக படித்தறிந்து கொள்கிறோம். புதியதாக தமிழ் கற்பவர்களுக்கு இந்த படிப்பறிவு  சிம்ம சொப்பனமே.

ஆங்கில வார்த்தைகளில், உச்சரிப்புக்கு ஏற்றவாறு துணை எழுத்துக்களை சேர்த்துக்கொள்ள முடியும். 

க என்பதை ka  kha  ga gha என்றெழுதி உச்சரிப்பை மாற்றலாம்.

 தமிழில் இது சாத்தியமில்லை.

ஆனால், அவ்வாறான உச்சரிப்பிற்கான தேவையை உணர்ந்து, தமிழில் ஆதி [கிரந்த] எழுத்துக்களில் இதனை சாத்தியப்படுத்தி இருந்தார்கள். அந்த எழுத்துக்களை, புதிய ஒலியின் வரி வடிவத்தை 'அக்ஷரம்' என்றழைத்தார்கள்.

அதன் அளவு 51. அதாவது ஐம்பத்தொரு அக்ஷரங்கள். இதனை பல பாட்டுக்களில் திருமூலர் அளவிட்டிருக்கிறார். மேலும், என்னை நன்றாக இறைவன் படைத்தான், அவனை நன்றாக தமிழில் மக்களுக்கு எடுத்துரைக்க என்னும் திருமூலர், வேற்று மொழியில், திருமந்திர மாலையை [300] 51 அக்ஷரங்களால் அலங்கரித்திருக்க வேண்டிய அவசியம் இல்லைதானே.

மூலன்உரை  செய்த மூவாயிரம் தமிழ் 
மூலன்உரை செய்த முன்னூறு மந்திரம்
மூலன்உரை செய்த முப்பது உபதேசம் 
மூலன்உரை செய்த மூன்றும் ஒன்றாமே.

                                                                     - திருமந்திரம் 3046

உடல் ஒலி: 

இப்பொழுது தமிழ் எழுத்துக்களில் இருந்து சற்று விலகி, ஆதி எழுத்துக்களான அக்ஷரங்கள் பற்றி அறிய  வேண்டிய அவசியத்தை பார்ப்போம்.

மனித உடல் 51 ஒலி அலை நிலைகளை கொண்டிருப்பதாக அளவிட்டிருக்கிறார்கள். இவ்வொலி அலைகளை முறையாக வெளிப்படுத்துவது, மனதுக்குள் உச்சரிப்பது, ஜெபிப்பது போன்றவை உடலின் வலிமையை, உள்ளத்தின் ஆற்றலை, நடைமுறை வாழ்வின் செயல்திறனை ஊக்கப்படுத்தும் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள். உடலின் அனைத்து பகுதிகளிலும் 51 அக்ஷரங்கள் விரவி உள்ளது.

இந்த அக்ஷரங்கள் ஆறு ஆதார நிலைகளில் மையம் கொண்டுள்ளது என சித்தர்கள் வகைப்படுத்தி உள்ளார்கள்.

ஆறு ஆதாரங்களும், ஐம்பத்தியொரு அக்ஷரங்களும்:

1 மூலாதாரம்  -  [வ, ச, ஷ, ஸ] -     4
2 சுவாதிட்டானம்  - [ப3, ப4, ம, ய, ர, ல] -     6
3 மணிபூரகம் - [ட3, ட4, ண, த, த2, த3. த4, ந, ப, ப2, ம] -  11
4 அனாகதம் - [க, க2, க3, க4, ங, ச, ச2, ஜ, ஜ2, ஞ, ட, ட2]  - 12
5 விசுத்தி - [அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, லு, லூ, ஏ, ஐ, ஓ, ஒள, அம், அஹ] -  16
6 ஆக்கினை - [ஹ, ள]  -  2       (51)
                                                                                                      - போகர் 7000

இது எப்படி என்றால், எல்லா மலர்களிலும் தேன் இருந்தாலும், தேனடையில்  சேமிப்பு நடப்பதைப்போன்றது. தேனடையில் உள்ள தேனை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படிதான் ஆறு ஆதாரங்களில் சித்தர்கள் ஞான அறிவில்  சேகரித்து தெரிவிக்கும்  51 அக்ஷரங்கள். 

அக்ஷரங்களின் மூலம் முறையான ஒலி அலைகளை உருவாக்கும் தொகுப்பே, நாம் பயன்படுத்திக்கொள்ளும் தேனைப்போன்ற,  மந்திரம்.

உயிர் ஒலி:

காணவே மூலமஃ தண்டம் போலக்
        காரணமாய்த் திரிகோண மாக  நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும் 
        புறம்பாக விதழதுவும் நாலு மாகும்  
நாணவே நாற்கமலத் தட்ச ரங்கள் 
        நலமான வ-ச-ஷ- ஸவ்வு மாகும் 
மூணவே முக்கோணத் துள்ளொளியோங் கார
        முயற்சியா  யதற்குள்ளே அகார மாமே.                                                                                                                                                                 -  போகர் 7000

ஓரெழுத்து மந்திரம் எனும் 'ஓம்' மூலாதாரத்தில் உதிக்கும் உயிரணு  மந்திரம். இதனையே பிரணவ மந்திரம் என்றும் சொல்கிறோம். இந்த ஓம்காரம் மூலாதாரத்தில் ஒளியுடன், ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

உயிரின் ஒளிக்கு சப்தமுண்டு.

நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் 
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே. 

                                                                              - திருமந்திரம் 85

அண்டத்தை பற்றி நிற்கும் மந்திரத்தை சொல்ல வேண்டும் என்றால் அது உடலைப்பற்றி நிற்கும் உணர்வு நிலை மந்திரம் ஓம். இதனைப்பற்றி நிற்க அதனுடைய உண்மை நிலை நமக்கு விளங்கும்.

பிரணவ மந்திரத்தின் ஒலி அலைகளை  தொடர்ந்து தூண்டுவதன் மூலம், மூலாதாரமும், பிரபஞ்சமும் ஒரே அலை வரிசையில் பயணிக்கும்.

இது மனிதன் வாழும் நாட்களை மகிழ்வுடனும், ஆனந்தத்துடனும் கழிக்க மிகச்சிறந்த ஆன்மீக வழி முறை ஆகும். பேரின்ப நிலையில் மூழ்கி, ஜீவன்  முக்தியடையும் மார்கமும் இதுவே!

  



.


Monday, June 28, 2021

பேரண்டம் அகண்டம்

உன்னை அறிந்தால் நீ 
உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம்  


ஒரு பொருளை பகுத்து அறிந்து கொள்ளும் அறிவு மனிதர்கள் பெற்ற கொடை. ஆனால், அதற்கு மேற்பட்ட அறிவு நிலை உள்ளதை உணரும் மனிதனால், அதனை என்னவென்று அறிந்து  கொள்ளும் ஆற்றல்  இல்லை.

உதாரணமாக, இரு பரிமாண நிலையில் வாழும் இனம், முப்பரிமாணம் என்றால் என்ன என்பதை அறியும் ஆற்றல் அற்று இருக்கும். முப்பரிமாண நிலையில், மேலிருந்து  விழும் பொருளினைப்பார்த்து,  அது எவ்வாறு சாத்தியம் என்று ஆராய்ந்த வண்ணம் இருக்கும். அதனுடைய அறிவு நிலைக்கு முப்பரிமாணம் என்ற ஒன்று இருப்பதே எட்டாது.

மனிதனின் பகுத்தறிவும் இந்த விதிக்கு உட்பட்டதே.

ஆய்வகங்கள் இன்றி, இறை சக்தி ஒன்றையே விதியாக ஏற்று, நமக்கு அருமையாக தமிழில் எளிமையான பாடல்களாக சொல்லி சென்றுள்ள சித்தர்களை போற்றி, அவர்கள் வழியில் நின்று, மனித அறிவின் எல்லைகளைத்தாண்டிய  உண்மைகளை  அறிந்து கொள்வோம்.

ஆதியில் தோன்றிய பரம அணு, பாழ் நிலையை அழித்து ஒளியும், ஒலியுமாக விளங்கியது. பரமணுவில் தோன்றிய நாதம், 'ஓம்' என்றறியப்பட்டது. பேரண்டத்தில் இந்த ஓங்காரம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது.

இதே நாதம், நம் உயிரணுவில், மூலாதாரமாம் அகண்டத்தில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

மூலமாம் நாதத்துண்மை உணர விப்போதே முத்தி 
ஆலமுண்டானும் மாலும் அயனுமிப் படியுணர்ந்தே 
சாமா இறைவராகிச் சமைந்தது சகத்துக்கென்றால் 
ஏலு மந்திர  வாதத்தே இருமையும் பெறலாம் அன்றே.

                                                                                    - தத்துவ நிசானு போக சாரம் 285

மூலாதாரத்தில் உள்ள உயிரணுவில் 'ஓம்' எனும் நாதம் உண்டாகும் தன்மையை நீ உணர்ந்தால், பிறவிப்பெருங்கடல் கடந்து, உன் உயிர் முக்தி நிலை எய்தும்.

அடங்கு பேரண்டத்து அணுஅண்டம் சென்றங்கு 
இடம்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ 
கடம்தொறும்  நின்ற உயிர்கரை காணில் 
திடம்பெற நின்றான் திருவடி தானே.
                                                                                       - திருமந்திரம் 137

 பேரண்டத்தில் அடங்கி நிற்கும் அணுவே உயிரிகள்தோறும் விளங்கும்  உயிரணுவாகும்.

பேரண்ட நாதமும், உயிரணு நாதமும் ஒன்றே. இந்த நாதத்தையே பிரணவ நாதம் என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

'ஓம்'

'ஓம்' என்பதுவே  பிரணவ நாதம், பிரணவ மந்திரம்.

இதுவே உயிர் ஆற்றலை  உறுதியாக வைக்கும் மந்திரம். 

மந்திரம் என்று எதனால் கூறினார்கள்; மந்திரம் என்றால் என்ன என்பதை பின்னொரு படைப்பில் பார்ப்போம்.


பேரண்டம் 

மனிதனால் அணுவைப் பிளக்க முடிந்தது. அணுவினுட்பொருள் [Neutron, Proton, Electron] என  காண முடிந்தது. உட்பொருளின் ஆக்கம் குவார்க், எதிர்-குவார்க் [Quark, Anti-quark]  எனப்படும் நேர் மின்சுமை , எதிர் மின்சுமை  என்றறிய முடிந்தது. அதாவது ஆணும், பெண்ணும் ஒன்றிணைந்து, ஹர்தநாரியாக  இருப்பதைப்போன்று. குவார்க்குகளே அணுவின் கட்டமைப்பில்  அடிப்படை பொருளாக அமைகிறது. 

புரோட்டான்களையும், நியூட்ரான்களையும், அணுக்கருவையும் பிணைப்பதும் இயற்கையில் உள்ள நான்கு வகை அடிப்படை விசைகளில் ஒன்றுமான 'ஸ்ட்ராங் இன்டராக்ஷன்'. அணுக்களின் இண்டராக்ஷன், உராய்வின்  போது போட்டான் [Photon] என்னும் ஒளி அணு உண்டாகிறது; கூடவே ஒலி என்னும் நாதமும். இந்த ஒலி  'ஓம்' என்ற சப்த வடிவை கொண்டது.

ஓர் அணுவும், எதிரணுவும் சந்திக்க நேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்து இரண்டும் கதிர்வீச்சாக, ஆற்றலாக மாறி அழிந்து விடும். இது அறிவியல் விதி.

இந்தப் பேரண்டம் விரிவடையத் தொடங்கியதில் இருந்து துல்லியமாக சமமான எண்ணிக்கையிலேயே அணுக்களும், எதிரணுக்களும் உற்பத்தியாகி வந்திருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு அணுவையும், எதிரணு ஒன்று அழித்திருக்குமானால், இந்த உலகத்தில் ஓர் அணுவோ, ஒரு பொருளோ இருந்திருக்கக் கூடாது.

பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி  ஒன்றை ஒன்று அழித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப்பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடையில்லை. 

சமநிலை திரிபு  என்பது  பரமணுக்களில் உண்டான இறை நிலை என்பது ஆன்மீகத்தின் தீர்ப்பு.

அகண்டம்:

ஓரணு உயிரியாகத் தோன்றி, பல பல பிறவிகள் பெற்று  பல படிநிலைகள் கடந்து மனிதனாக பிறக்கின்றோம். மனிதப் பிறவி பெற்றவர்களுக்கே சிந்திக்கும் ஆற்றல் உண்டு. யார் ஒருவன் அணுவிலிருந்து மனித பிண்டமாக வெளிப்பட்டு இந்த அண்டத்தை அறிகின்றானோ அவனே அண்டமும் பிண்டமும் அற்ற அகண்டம் நான் என்பதை அறிகின்றான்.


Friday, June 18, 2021

உயிரணு

 உயிரணு 

நான் யார்? 
நான் யார்? 
நீ யார்?




'கடவுள் இல்லை' - நாத்திகம் பேசுவோர். 

ஒரு வேளை கடவுள் இருக்கலாம் என்னும் நினைப்பு அவர்கள் மனதின்  ஓரத்தில் எப்பொழுதும் இருக்கும்.

'கடவுள் நிச்சயமாக இல்லை' - ஆத்திகம் பேசுவோர். 

கடவுளை எண்ணி தினமும் பூஜை, தியானம் செய்கிறோம். அவர் இருப்பது நிஜமானால், ஒரு முறையாவது நம் புலன்களுக்கு  காட்டி இருக்கலாமே.

'பேய் இருக்கு' - நாத்திகவாதி. 

இல்லாமலா பெண்ணும், பேயும் ஒண்ணுன்னு சொல்லி இருக்காங்க, குடித்தனம் வேறு நடத்தணும்.

''பேய் நிச்சயமா இருக்கு' - ஆத்திகவாதி.

'கொள்ளி  வாய்ப்பேய்களும், குறளைப்பேய்களும்'-னு கந்த சஷ்டி கவசத்தை துணைக்கழைப்பார்கள்.

நமக்கெதற்கு இந்த ஆய்வு, கடவுளும், பேயும்  இருந்தால்  என்ன? இல்லாவிட்டால் என்ன?

ஆனால், நம்மைப்பற்றிய புரிதலை உணர்ந்து  கொள்வதில் தவறொன்றும் இல்லையே.

'நான் யார்?' - என்ற கேள்வி எழும்போது முதலில் மனதில்  வருவது நம்   உடல்.

உடல் என்பது உயிருடன் இருக்கையில் மட்டும்தான்.

'உயிரார் பறப்பார்:  உடலார் கிடப்பார்.'

உயிரார் பறந்து விட்டால், உடலின் பெயர் பிணம்.

அப்படியானால், 'நான் யார்?' என்றால் அது என்  உயிரா?

பிறக்கு முன்னர் எங்கிருந்தேன்? இறந்த பின்னர் எங்கு  செல்வேன்?

உடலில்லா என் உயிருக்கு என்னை, என் பெயர், மனிதன் என்ற அடையாளம்  தெரியுமா?

'உனக்கே நீ யாரோ?'

உயிருக்கு உன்னை தெரியவே தெரியாது. எங்கிருந்து அது  புறப்பட்டு வந்து உன் உடலை ஏற்றுக்கொண்டதோ, அங்கேயே  அது சென்று விடும்.

நம் புறக்கண்களால் காணும் இவ்வுலகம் உண்மை. நாம் காணும் ஒவ்வொரு பொருளும், அணுக்களால் கட்டமைக்கப்பட்டு,  இறைவனின் படைப்பினுக்கு,   ஆதாரமாக கொண்டுள்ளது. ஒவ்வொரு அணுவின் உள்ளே அளப்பரிய ஆற்றல் உள்ளது என்பது அறிவியல் தெளிவு படுத்திய உண்மை.

அதே உண்மையை நாம் அக ஆய்வில், உயிரை  ஓர் உயிரணுவாக,  ஏற்றுக்கொள்வோம். ஏனெனில், உயிரென்ற ஒன்று இருக்கிறதே.

இந்த உயிரணுவும்  அளப்பரிய ஆற்றலைக் கொண்டுள்ளது.

அந்த உயிரணுவே, நம் உடலை ஆதாரமாக கொண்டு சிதம்பர நடனம் ஆடிக்கொண்டுள்ளது; ஆட்டுவிக்கின்றது.

உடம்பினை முன்னம்  இழுக்குஎன்று இருந்தேன் 
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள்  கண்டேன் 
உடம்புளே  உத்தமன் கோயில் கொண் டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே. 

                                                                                  - திருமந்திரம் 725

பெரும் செல்வம் நம் உடலுக்குள் உள்ளது. அவ்வுடலினை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். உயிரணுக்கள் உற்பத்தி களமாக, ஆரோக்கியமாக எப்பொழுதும் கடவுளின் படைப்பினிற்கு பங்களிப்பாளர்களாக இருக்க வேண்டும்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு  ஆலயம்
வள்ளல் பிரானாற்கு வாய் கோபுரவாசல் 
தெள்ளத்  தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம் 
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.

                                                                                  - திருமந்திரம் 1823

மனித உடல், ஜீவனை, உயிரணுவை, தாங்கும் ஆலயம்.

அந்த உயிரணுவுக்கு, மனிதனால்  சூட்டப்பட்ட பெயர்தான் கடவுள்.

நீ, 'உயிருடன் இருக்கிறேன்' என்ற  உணர்வுநிலை  இருக்கும்வரை நீயும் கடவுள்தான், போடா.

-------------------------------------------------------------------------------------------------------------

Krishnamurthy R

.புரிந்த மாதிரியும் உள்ளது. புரியவில்லையோ என்று நினைக்கவும் தோன்றுகிறது.

இன்னும் ஆழ்ந்து படித்தால்தான் அதன் உள்ளர்த்தம் தெரியவருமோ

பெரிய விஷயமொன்றுமில்லை. உடலிருப்பதை உணரும் நாம், உடல் தாங்கும் உயிர் இருப்பை உணர்வதில்லை. இரண்டும் ஒன்றிணைந்து செயல்படும் 'உணர்வு நிலை' நமக்கிருந்தால் போதும்.

Hariyur Thalabathy Nagaraj


உண்மைதான்.
காயமே இது பொய்யடா
வெறும்
காற்றடைத்த
பையடா

மெய்தான். பொய்யென்று உள்ளதொன்றில் மெய்ப்பொருளொன்று உள்ளதல்லவா? எனவே, நீங்கள் சொன்ன, காயமென்னும் உடல் பொய்யென்பது,  மெய்தான்.







Tuesday, March 30, 2021

வெள்ளியங்கிரி - தென் கைலாயம்

வெள்ளியங்கிரி - தென் கைலாயம்  

என்னுள் 
எழுந்தருளும் 
என்னீசன்    

   





'நம்ம சார்தான் விழுந்தது..' 

மூன்றாம் மலையில், முறையற்ற கருங்கல் படிக்கட்டில்,  நான்காம் நிலையில்   இருந்து, கால் இடறி, மல்லாந்து  விழுந்த என்னை நோக்கி ஓடிவந்து தூக்கி உட்கார வைத்தார்கள்.

கருங்கல்லில் ஒரு சின்ன சிராய்ப்பு தலைக்கு பட்டிருந்தாலும், அந்த வெள்ளியங்கிரி நாதனின் பொற்பாதங்களில் சரண் அடைந்திருக்கும் இந்த உடல். 

காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என் 
பாற்றுளிப் பெய்யில்என்  பல்லோர் பழிச்சில்என்
தோற்பையுள் நின்று தொழில்அறச் செய்தூட்டும் 
கூத்தன் புறப்பட்டுப் போனஇக்  கூட்டையே. 
                                                                         - திருமந்திரம் 167

தோலினால் செய்யப்பட்ட இந்த உடல் கூட்டிலிருந்து உயிர்  பிரிந்த பின்னர் காக்கை உண்டால் என்ன?  பழிச்சொல்லும், புகழ் சொல்லும், பாலும் என்ன செய்யும்?

'நான்' யார் என்று எனக்கிருந்த, அஹங்காரமும்,ஆணவமும் அந்த வினாடியில் என் கண் முன்னே  தோன்றி மறைந்தது. 

வலது பக்கம் நல்ல பலமான அடி. சென்ற முறை மலை ஏறியபோது, இடது காலில் ஏற்பட்ட நரம்புப்பிடிப்பு இன்னும் வலியுடன் இருக்கிறது. இயல்பாகவே இந்த வயதில் இருக்கக்கூடிய முட்டி வலி வேறு. இன்னும் கடினமான நான்கு மலைகள் ஏற வேண்டுமே என்பதைவிட,  ஏழு மலைகளில் இருந்து இறங்குவதும்  மிகவும் சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதும் மனதுக்கு தெரியும்.

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே என்று மனம் தீர்மானித்து விட்டது, ஏறித்தான் பார்ப்போம்.

வியர்வையில் தலை நனைந்து ஒழுகுகிறதா, இல்லை பனிக்காற்றில் உள்ள ஈரத்தாலா? இது ஏழாவது மலையில். வியர்வையும், குளிரும் ஒரு சேர நடந்தேறுகிறது. மனதில், அவன் சந்நிதியை தரிசிக்கும் வேண்டுதல் தவிர வேறொன்றுமில்லை.

உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு ஆறேழும் 
கற்றறிவு  எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை 
அற்று அறியாது அழிகின்ற வாறே.
                                                               - திருமந்திரம் 741

ஐம்புலன்களால் பெறத்தக்க ஐந்தறிவு, அதனை பகுத்தறியும் ஆறாம் அறிவு, உணர்தலான ஏழாம் அறிவு, கற்பதனால் கிடைக்கும் எட்டாம் அறிவு, கற்றறிந்த அறிஞர்களின் நட்பில்  கிடைக்கும் ஒன்பதாம் அறிவு. இவை அனைத்தும் பற்றி நிற்பது பரம்பொருள் என்னும் பத்தாம் அறிவு. இந்த உண்மையை உணராது அழிகிறது உடல். 

தரிசனத்திற்காக வரிசையில் நிற்கையில், உடலில் உள்ள அனைத்து சக்தியும் வற்றி, மனத்தில் எந்த ஒரு எண்ணமும் தோன்றாத வண்ணம், மனம் பற்றி நின்ற பத்தாம் அறிவாம், பரம்பொருளின் சுயம்பு லிங்கத்தை பார்த்தேன்.

கண்களில் ஆனந்தக்கண்ணீர்! 
ஐயனே, மீண்டும் உன்னை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்குமா!! 




என்னிடம் ஒன்றுமில்லை என்று சொல்லி நின்றேனே தவிர்த்து, பக்தர்கள் அனைவர் உடையிலும் மலையின் மண் படிந்திருந்தது. சுடுகாட்டு சாம்பல் உன்வாசமென்றால், மலையின் மண்வாசம் எங்கள் அனைவரிடமும்.

இடது காலை பொறுமையாக எடுத்து, வலது காலை மீண்டும் அடுத்த படியில் இறக்கி, உடல் பாரம் வலது காலில் ஏறாத வண்ணம், ஒவ்வொரு படியாக கீழே இறங்க வேண்டி இருந்தது. என்னுடன் உறுதுணையாக வந்தவர்கள் இளைஞர்கள். என்னுடைய கைப்பையையும் சுமந்துகொண்டு, வேகமாக கீழே இறங்கி, முதலில் கால் தவறி விழுந்த மூன்றாம் மலையின் பாதியில் எனக்காக காத்திருந்தார்கள். எனக்கு தண்ணீரும், எலுமிச்சை ஜுசும் வாங்கி கொடுத்துவிட்டு இறங்கி  விட்டார்கள்.




இறங்குகையில், மூன்றாம் மலையின் இறுதியிலும், இரண்டாம் மலையின் ஆரம்பத்தில் உள்ள பாம்பாட்டி சித்தர் குகை கோவிலில் இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு இறங்கினேன்.

தாகம்.

கைப்பையும், தண்ணீர் பாட்டிலும் அவர்களிடம். கைப்பையில் பணம் இருக்கிறது. என்னிடம் இருந்த பணத்தையும்  ஏற்கனவே அவர்களிடம் கொடுத்துவிட்டேன். மொபைல் போனும் கைப்பையில். 

கையில் ஊன்றுகோலும், தோளில் சிறுதுண்டும் தவிர்த்து ஒன்றுமில்லை என்னிடம்.

எனக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.

யாரிடமும் குடிக்க தண்ணீர் கேட்க தயக்கம். சரி, முதல் மலை வெள்ளை விநாயகர் கோயில் திண்ணையில் காத்திருப்பார்கள் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு, காலை பத்து மணி வெயில், உடலில் உள்ள கொஞ்ச நஞ்ச நீரையும் வெளியே தள்ளிக்கொண்டிருக்க, நடந்தேன்.

முதல் மலை இருக்கிறது. வெள்ளை விநாயகர் இருக்கிறார். திண்ணை இருக்கிறது. எனக்காக யாரும் அங்கு இல்லை.

மணி காலை பதினொன்று. பளீரென்ற நீல வானம். சுட்டெரிக்கும் பங்குனி வெயில்.

தாகம். தாகம்.

குறைந்தது ஒன்றரையிலிருந்து இரண்டு மணி நேரம் இந்த வெயிலில், வலியும், தாகமும் கொண்ட  இந்த உடல், அடிவாரத்தை அடைந்தாக  வேண்டும்.

மரண பயம் ஒரு வினாடி என் கண்களுக்குள் ஓடி மறைந்தது, மல்லாந்து  விழுந்தபோதுகூட வராத பயம் இது.

'கொஞ்சம் தண்ணீ..' - கையேந்தினேன், இரண்டு முறை, உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்களிடம்.

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கல்மின்
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே 
மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக் 
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.
                                                                                   - திருமந்திரம் 172

செல்வம் நிலையற்றது என்று தெளிந்து நில்லுங்கள். தெளிந்தவர் செல்வம் இல்லையே என்று கலங்காதீர். ஆற்று வெள்ளம் போல் செல்வம் வந்தாலும் அதனுள் கலந்து மயங்கி நிற்காமல், வேண்டியவர்க்கு வழங்கி வாழ்வீர்களானால் உயிரை எடுக்க எமன் வந்தாலும் அச்சம் தோன்றாது. 

மின்னல் வெட்டாய் ஒரு எண்ணம் எழுந்து மறைந்தது.

'உன் அறிவால்  விளைந்த ஆணவம், உடலில் இருந்த சக்தி, உன்னிடம் இருந்த செல்வம் எல்லாம் நிலை அற்றது. நீ கையேந்தி நிற்கும் இந்த நிலையே நிதர்சனமான  உண்மை.'  

ஜீவாத்மா பரமாத்மாவை அணுகும் நேரம் இது.

என்னுள் 
எழுந்தருளுளினான் 
என்னீசன் 

புராணக்கதைகளில் படித்திருக்கிறோம். சக்தி, சிவனை அடைய அணுகியபோது, அவர் சக்தியை சோதிக்கிறார். தன்னுடைய சொத்து என்றெண்ணிய அனைத்தையும் தானம் செய்துவிட்டு தன்னிடம் ஒன்றுமில்லை என்னும் நிலையில் சக்தியை தன்னுடன் ஏற்றுக்கொள்கிறார்.

அது உண்மைதானே!


கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...