பூ விலை
சின்ன குடை போல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
'இந்து சனாதன தர்மத்தில் பெண்கள் அனைவருமே பூ விலை மகளிர் '
எழுதவே கூசும் வார்த்தைகளை, எப்படி இவர்களால் மேடைகளில் பேசி கைதட்டல் வாங்க முடிகிறது? - இப்படி ஒரு கூட்டம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது, தன்னைப் பெற்றவளும் பெண் என்பதை மறந்து.
எங்கோ பேசியதை, எதிர்க்கூட்டம் கட்டம் கட்டி எடுத்து தூபம் போட்டு மக்களிடையே பரப்புரை செய்து வன்மத்தை தூண்டுகிறது.
23-10-2020 இன்றைய சூடான தமிழக நிகழ்வு இது.
இரண்டு கூட்டமுமே ஒன்றை மறந்துவிட்டு இதனை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறது.
பரமஹம்சர் சிவானந்த ஸ்வாமிகளின் சித்த வேதம் என்ற புத்தகத்தில் சொல்வார்கள், 'ஒருவன் வடை, பாயசத்தோடு உண்ட இலையை வைத்து மற்றவர் அதன் சுவையை சொல்வது போல்தான்' நாம் படிக்கும் ஆன்மீக புத்தகங்கள்.
சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டு உள்ளதாலேயே, அந்த கருத்துகள், நிகழ் காலத்திற்கு ஏற்றதாகவும், தகுதி அற்றதாகவும் ஆகி விடாது.
உணவில் கல் இருந்தால் விலக்கி விட்டு உண்பது போல, நாம் நல்லதை மட்டும் நம் சிந்தனைக்கேற்ப எடுத்துக்கொண்டு மற்றதை விலக்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
பெண்மை என்பது மாபெரும் சக்தி.
ஒவ்வொரு அணுவுக்குள்ளும் உறையும் சக்தியே, நம் உடலில் ஒவ்வொரு சிற்றறைக்குள்ளும் உறைகின்றது. அந்த சக்தியை உணர்ந்து, உய்யும் வழியை மானிடம் அடையும் வழித்துணை அவர்கள் என்று திருமூலர் போன்ற தீர்க்கதரிசிகள் காட்டி சென்றுள்ளார்கள்.
உலகத்து உயிர்களை எல்லாம் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த ஆதி பராசக்தி உமையவள் என்னுள்ளும் கோவில் கொண்டுள்ளாள். பஞ்ச பூதங்களான நிலம்,
நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றில் உறையும் அதே சக்தி என்னுள்ளும் என் கண்களுக்குள்ளும் குடிகொண்டிருக்கிறாள்.
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கோண்(டு)
என்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வான்உளும்
கண்ணுளும் மெய்யுளுங் காணலும் ஆமே.
- திருமந்திரம் 1354
கண்ணுக்குள்ளே வா வா.. நெஞ்சுக்குள்ளே போ போ.. என் ஜீவனே!