Tuesday, December 3, 2019

போதை



போதை
வந்த போது
புத்தி இல்லையே


பொருள்:

'என்ன சென்ட் இது?' - உதட்டை துடைத்துக்கொண்டே  முகத்தை சுழித்தாள், மதுமிதா.

'சென்ட் இல்ல, சரக்கு' - என்ற கணவனின் பதிலால் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

'நாளைக்கு மதியம், நம்ம வீட்டுக்கு சாப்பிட பழனிச்சாமி வர்ரான். ஊரை விட்டு  போய் பத்து வருஷம் கழிச்சு இப்பதான் வந்திருக்கான்'.

- இதென்ன புதுப்பழக்கம் இவனுக்கு என்று நினைக்ககூட மனமில்லாமல், பத்து வருடங்களுக்கு பின்னால் எண்ணங்கள் ஓடியது. பக்கத்து வீட்டில் இருந்த பழனிச்சாமி ஓடிப்போன நாள்  நினைவில் ஆடியது.

'அப்படின்னா, அதுவும் சரக்கா?'

இன்னும் அவனுக்கு அந்த பழக்கம் போகலையா? இவனுக்கு வேறு குடுத்திருக்கான்.

*****

'இந்நேரம் ஊர் பூரா தெரிஞ்சிருக்கும். போலீசுக்கும் தகவல் போயிருக்கும்'- ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருந்த பழனிச்சாமிக்கு போதை சுத்தமாக தெளிந்து, பயம் மட்டும் மிச்சம் இருந்தது.

மதுமிதா வீட்டின் பின்புறத்தில் இருந்து, குளித்த தலையுடன் வெளியே வருவது கண்ணில் நிழலாடியது நினைவுக்கு வந்தது.

தன்னிலை மறைத்த போதையில், மதுமிதா அழைப்பது போன்ற பிரம்மையில், அவளை கட்டி அணைத்தது.. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது  நினைவுக்கு வரவில்லை.

மதுமிதா, 'அம்மா' என்று கத்தியபோதுதான், அவளை என்ன செய்தோம் என்று  புத்தியில் உரைத்தது.  அவளிடம்  இருந்து சட்டையில் பதிந்த  ஈரத்தை துடைத்து விட்டுக்கொண்டான்.

திரும்ப ஓடி வரும்போது, தூளி காலில் இடறி சுவற்றில் மோதியது. ஒருவேளை, அதிலிருந்த அவள்  அக்கா மகளின் குழந்தை செத்திருக்குமோ?

நினைக்க, நினைக்க ஒரே பயமாகவும், குழப்பமாகவும்  இருந்தது.

அப்பொழுதுதான் கொல்கொத்தா புறப்பட்டுக்கொண்டிருந்த ஹௌரா எக்ஸ்பிரஸில், ஓடிப்போய் ஏறிக்கொண்டான்.

*****

'அம்மா..' என்று கத்தி விட்டு அதிர்ச்சியில் உறைந்தாள், மதுமிதா.

நல்ல வேளை, வீட்டில் யாரும் இல்லை. அம்மாவும், அக்காவும் கோவிலுக்கு போயிருந்தார்கள்.

'கொழந்தை தூங்குறான். பாத்துக்கோ. நாங்க கோயிலுக்கு போயிட்டு வர்ரோம்' - தூரமானதால் குளிக்க சென்றவளிடம்,  அக்கா சத்தம் போட்டு சொல்லி விட்டு போயிருந்தாள்.

மின்னல் வேகத்தில், மைக்ரோ செகண்ட் நேரத்தில்  நடந்து முடிந்திருந்தது.
பழனிச்சாமியின்  ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவோ,  நிராகரிக்கவோ அவளுக்கு சந்தர்ப்பமே இல்லை.

ஹை வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல் உடலும், மனமும் விழித்துக்கொண்டது.  உடலில் உள்ள  எழுபத்திரண்டாயிரம் நாடிகளும்  உயிர்ப்பு நிலைக்கு போயிருந்தது.

முதல் இரண்டு நாட்கள், மிதமான காய்ச்சலும், ஒரு வாரம் வரையிலும் நடுக்கமுமாக இருந்தவள், பக்கத்து வீட்டில் பழனிச்சாமி காணாமல் போய்  தேடுகிறார்கள் என்ற செய்தி வந்த பின்னால்தான், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

கொஞ்ச நாட்களில், தனக்குத்தானே ரசித்து சிரித்துக்கொள்ளும் அளவிற்கு,  அந்த நினைவும், மணமும்  அவளை ஆக்கிரமித்துக்கொண்டது.

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால், இதுதான் முதல் உறவு.

*****

அமரர்களும் அடக்க முடியாத, ஐம்புலன்களை கட்டுக்குள் கொண்டுவர திருமூலர், பரியங்க யோகம் என்ற  ஒரு யோகத்தை நமக்கு காட்டுகிறார்.
பரியங்க [கட்டில்]  யோகத்தின் மூலம், ஐம்புலன்களும் நம்முடன் சேர்ந்தியங்கும் வகையும், இந்திரியங்களின் சக்தி உடலில் சேமிப்பதற்கான வழியும், வானீர் அமுதம் சுரப்பதற்கான உபாயமும்  ஆகும் என்று கூறுகிறார்.

ஆனால், ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால், ஆணுக்கு வயது முப்பதும், பெண்ணுக்கு வயது இருபதும் இருக்க வேண்டும்.

ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே 
                                                                                                                    - திருமந்திரம் 833

இதுல ஏதாவது தப்புத்தண்டா  பண்ணினீங்க, என்னாகும்னு போகர் சித்தர் சொல்றாரு கேளுங்க.

கருமமாய்ப்  பூதமெல்லாம் லயமே செய்து
   காரணமாந் தத்துவத்தை லயமே செய்து

நருமமாய்க் குருபதத்தி னாடி நின்று
   நயந்துமே யேறுவார்  கடினம் மெத்த

பருமமாய்ப் பரியங்க யோகத் தாலே
   பரிந்து மலம் விடுவார்கள் கருமங் கருமம்

நிருமமாய் மிக்கான ராச யோக
   நிலைத்தல்லோ சாதித்து நினைவைப் பாரே.                             353

                                                                     - சித்தர் போகரின் ஏழாயிரம் பாடல்கள்











                         


Tuesday, November 12, 2019

குரு வழி நாடல்


நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்


'கொடம்புளி போட்டு மீன் தலைக்குழம்பு, மீன் வறுவல், மீன் சில்லி இன்னும் மீன் பொரியல் செஞ்சு தர்றேன்'- மீனாவின் மீதிருந்த காதலை விட மீன்தான் சுரேஷின் மனதில் மின்னலடித்தது.

'தவத்தில்  சிறப்பு என்னன்னு பார்த்தா, அஷ்டமா சித்திகளும் வசமாயிரும். உடம்பு பொன்போல மிளிரும். முடி கருப்பா எப்பவும் இருக்கும்.. ' - இப்படியாக பரமானந்த குருவின் தெய்வீக உரை போய்க்கொண்டிருந்தது.

'இன்னிக்கு நெறஞ்ச அமாவாசை. யாராவது மீன் சாப்பிடுவாளா? வெண்டக்கா சம்பார்தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க'- புதுப்பொண்டாட்டி மீனாவின் வார்த்தைகளை மீறவா முடியும்.

'ஆழ்ந்த தவ நிலையில் குண்டலினி புருவ மத்தியில், நெற்றியில் வருவதோ, உச்சந்தலையில் துரியத்தில் நிற்பதோ கற்பனையே தவிர நிஜமல்ல'- ஆன்மீகத்தை சந்தைப்பொருளாக்கி  காசு பார்க்கும் சத்குரு, நேரடித்தொலைக்காட்சியில் விவரித்துக்கொண்டிருந்தார்.

'அச்சச்சோ.. புது வருஷத்தன்னிக்கு யாராச்சும் மீன் கேப்பாளா. நீங்க கேக்கறேள். இன்னொரு நாள் வைச்சுக்கலாம்.'- முழுகாமல் இருக்கும் மனைவியிடம் கோபம் கொள்ள மனமில்லாமல் போனது சுரேஷுக்கு.

'உலக மக்கள் என்னை தொடர்வதை விட வேறேதும் கதியில்லை. நான் பத்து நிமிடம் அதிகம் தூங்கினால்,  சூரிய உதயமும் பத்து நிமிடம் தாமதப்படும். அனைத்து விலங்குகளுடன் பேச நான் கண்டுபிடித்திருக்கும் சாப்ட்வேர் விரைவில் புழக்கத்துக்கு வரும்.'- அள்ளி வீசிக்கொண்டிருந்தார், அடிவருடிகளின்  பின்னணி இசையோடு, ஆனந்த குரு.

'வேண்டாம்ப்பா. அம்மா கோச்சுப்பா.'- சிக்கன் பர்கர் கேட்ட மகனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தான் சுரேஷ்.

'ஒண்ணும்  பெருசா இல்ல. மூச்சு விடுறதில கொஞ்சம் திணறல் ஏற்பட்டு சிவபதம் அடைந்து விட்டார். அவர் விட்டு சென்ற பிராணாயாம பயிற்சியை நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.'- சீடர்களுக்கு குரு விட்டு சென்ற பாதையை விளக்க ஆரம்பித்தார்  தலைமை சீடர்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா  குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே.
                                                            திருமந்திரம் - 1680

லௌகிக வாழ்விலும் சரி, ஆன்மீக வாழ்விலும் சரி நாம் குருட்டாட்டம்தானே  ஆடிக்கொண்டிருக்கிறோம்.

இறந்தவனை கொல்ல முடியாது; மனதில்
நுழையாதவனை வெளியேற்ற  முடியாது.
இறந்தவனை கொல்வதும், நுழையாதவனை
வெளியேற்றுவதும் குருட்டாட்டமே!










Wednesday, November 6, 2019

அறிவிலார்

இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் கொண்டு வா



ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

அதிகாரம்:  நீத்தார் பெருமை          குறள் எண்: 25


மு.வ உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
கலைஞர் உரை:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

என்னுரை:
ஐந்து புலன்களின் இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பவனின் ஆற்றல் எத்தகையது என்றால், அகன்ற வானத்தில் வாழும் தேவர்களின் அரசனான இந்திரனது வாகனமான யானை ஐராவதத்தின் ஆற்றலுக்கு ஒப்பானது ஆகும்.

இந்திரன்-அகலிகை:
அழகில் மிக உயர்ந்தவளாக இருக்கின்ற அகலிகை மேல் இந்திரனுக்கு ஆசை உண்டாகிறது. அவள் ஆற்றங்கரையில் இருக்கும் சமயம் தன்னுடைய விருப்பத்தினை வெளியிட்டு அகலிகையின் கோபத்திற்கு ஆளாகிறான். தன் கணவன், கௌதம முனிவரை  தவிர  பிறரை நினையாமல் வாழும் கற்புக்கரசியாக அகலிகை இருந்ததால், ஒருநாள் கௌதமர் ஆற்றங்கரைக்கு செல்லும் நேரம், கௌதமராக உருமாறி அகலிகையை அடைகிறான்.

இந்திரனா ஐந்தவித்தான்?

அஞ்சும் அடக்கு  அடக்கு என்பர் அறிவிலார் 
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு 
அஞ்சும் அடக்க அறிவு அறிந்தேனே.
                                                     -திருமந்திரம் 2033

வானத்து தேவர்களாலும் அடக்க முடியாத, ஐம்புலனிச்சையை அடக்கு, அடக்கு என்று சொல்வது அறியாமையே ஆகும்.

சாணியும்  வண்ணமும்   நீருண்ணும், உண்ணா  
எழுத்தாணி கொண்ட வண்ணம். 








Monday, November 4, 2019

முடத்தெங்கு



காற்றடிக்கும் திசையினிலே
காற்றாடி போகுமப்பா..
போகுமிடம் சேருமிடம்
யாரறிய கூடுமப்பா..





'இது ரொம்ப எளிமையான சவால்.  அருமையான,  வைரங்களால் இழைக்கப்பட்ட காலணி சிறியதாக இருப்பதால், காலை கொஞ்சம் செதுக்கி அணிந்து கொள்ள சொல்லுங்கள்' - பேரரசர் துக்ளக்கின் தீர்வை  கேட்டு அரசவை அதிர்ச்சி அடைந்தது.

டமில், தமில், டெமில், தமிள்... தமிழை செதுக்கி விட்டோம்!

'என்னை விட இந்தக்காலணிகள் மதிப்பு வாய்ந்ததாக இருப்பதால் அதனை தலையில் அணிவதே  சரி.' - முல்லா, தன்னுடைய செய்கைக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.

தாய் மொழி தமிழ், மொழிகளுக்கெல்லாம் தாய். தமிழன்டா, தமிழச்சிடா...

'அரசே, காலணியை குழந்தையாக இருக்கும்போதே மாட்டிவிட்டால் போதும். சிறிது, பெரிதென்ற பேச்சுக்கே இடமில்லை'- தெனாலி ராமன் பதிலால் கிருஷ்ண தேவராயர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

ஆதி மொழி அப்படியே இருக்கட்டும், சிந்திக்கவோ, வளரவோ  விட மாட்டோம்.

'மருமகனுக்காக  சமைத்ததை, மகனுக்கு பரிமாறி  வயிறெரியும் தாயும் உண்டானால் அவளும் முடத்தெங்குதான்' - வாய்விட்டு சத்தமாக படித்துக்கொண்டிருந்தான் சேகர்.

தன்னுடைய வீட்டு எல்லையை தாண்டி வளைந்து, நீருற்றி வளர்த்தவருக்கு பலன் தராமல், அடுத்தவருக்கு பலன் தரும் தென்னை மரமே, முடத்தெங்கு.

'கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.'
 
இதனுட்  1கழற்பெய்குடமாவது  கொள்வோனுணர்வு  சிறிதாயினுந் தான்
கற்றதெல்லாம் ஒருங்குரைத்தல். 2மடற்பனை யென்பது  பிறராற் கிட்டுதற்கு
அரிதாகி  இனிதாகிய  பயன்களைக் கொண்டிருத்தல். 3முடத்தெங்கென்பது
ஒருவர்  நீர்வார்க்கப்  பிறர்க்குப்  பயன்படுவதுபோல  ஒருவர்  வழிபடப்
பிறர்க்கு  உரைத்தல். 4குண்டிகைப் பருத்தியென்பது  சொரியினும்  வீழாது
சிறிதுசிறிதாக     வாங்கக்    கொடுக்குமதுபோலக்   கொள்வோனுணர்வு
பெரிதாயினுஞ் சிறிது சிறிதாகக் கூறுதல்.
                                                                      - சிறப்புப்பாயிரம் [தொல்காப்பியம்]


நாங்க படிக்கும்போதும் சொல்லித்தந்தாங்க. எனக்குதான், மண்டைல  ஏறல.

தமிழில் எழுத்துக்கள்:
   உயிர் எழுத்துக்கள்: 12
மெய்யெழுத்துக்கள்: 18

உயிர் மெய்யெழுத்துக்கள்: 216
உயிர் மெய்யெழுத்துக்கள் கூட்டெழுத்துக்களே அன்றி தனி எழுத்துக்கள் அல்ல.


தமிழில் மொத்த எழுத்துக்கள் 30.

எழுத்து எனப்படுப 
அகரம் முதல் னகர இறுவாய்  
முப்பஃது என்ப 
சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.

                                                                                -எழுத்ததிகாரம் [தொல்காப்பியம்] 

தமிழ் கற்க முப்பது எழுத்துக்களே போதும் என்று, தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வோம்; எடுத்து செல்வோம்.


சிறப்பு 
எழுத்துக்களை படித்தாலே வார்த்தை வந்துவிடும். 

  ன்  பு  -  எழுத்து
அன்பு  - சொல்
அன்பு -  பொருள்

O  V  E - ஆங்கிலத்தில் எழுத்துக்களை படித்தால் சொல்லோ, பொருளோ வராது.
















Sunday, October 6, 2019

நான் யார்?




நான் யார்? நான் யார்? நீ யார்?


'சித்திரகுப்தா, நம் கணக்கில் ஏதோ பிழை இருக்க வேண்டும். மானிடர்களின் வாழ்நாளில் இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னரே, உயிரை எடுத்து வருகிறோம்.'

'இல்லை பிரபு. இப்பொழுதெல்லாம் உயிரை எடுக்கும் வேலை நமக்கில்லை. அவர்களாகவே வந்துவிடுகிறார்கள்.'

'ஏனப்பா, அவசரமாக வந்தாய்? இன்னும் இருபத்தேழு ஆண்டுகள் உன் கணக்கில் இருக்கிறதே!' - வரிசையில் நின்றிருந்த ஒளியுடலை பார்த்து கேட்டார் எமதர்மன்.

'சுவாமி, நான் யார்?'

பூமியில் தகனமாகிக்கொண்டிருந்த அவனது உடலை பார்த்தார், எமதர்ம ராஜா. ஓ,  இங்கே நின்று கொண்டிருப்பது யார்?

'சுவாமி, நான் யார்?'- மீண்டும் கேட்டது ஒளியுடல்.

மனித உடல், ஒளி உடல், தன் பாசக்கயிற்றில் சிக்கி உள்ள உயிர். இதில் எது இவன்?

'நீ யார்?' - எம தர்மனின் பாசக்கயிற்றில் சிக்கி இருந்த அவனது  உயிரை பார்த்து ஒளியுடல்  கேட்டது.

விடையில்லாத கேள்விகள்.

'இனி உன்னுடைய மனித ஆயுள் முடியும்வரை இப்படியே ஆவியாக இருக்க வேண்டியதுதான்.' என்று தீர்ப்பளித்த எமதர்மன், மீண்டும் கேட்டான்.

'ஆவியை பார்த்திருக்கிறாயா?'

'திருமணம் ஆயிருச்சு..'

'மனதில் அச்சம் இல்லையா?'

'பழகிருச்சு'


ஐவருக்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யை  காத்து வருவார்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரெ.
                                                          - திருமந்திரம் 188

ஐம்புலன்கள் உடலில், உயிருடன் சேர்ந்திருக்கும். [முறையற்ற அல்லது அளவுக்கதிகமாக புலனுகர்வு செயல்களால்] புலன்கள் உடலை விட்டு அகன்றுவிடும் நேரத்தில், உயிரும் உடலை விட்டு நீங்கிவிடும்.

நான் யார்? நான் யார்? நீ யார்?




Saturday, October 5, 2019

உடல்


உடல் 
நீ கொண்டு வந்ததென்னடா, மீசை முறுக்கு!

'அம்மா, காப்பி வழு வழுன்னு குடிக்க முடில'- பாதி தூக்கத்தில் எழுப்பி கொடுக்கப்பட்டதை குடித்துக்கொண்டே சொன்னான் பாலு.

அவன் குடிப்பது காப்பியில் கலந்த விளக்கெண்ணெய் என்பதை சொல்லாமல், 'பேசாம குடி. எல்லாரும் ஒண்ணும் சொல்லாம குடிச்சிட்டாங்க பாரு'.

'எப்ப பாரு புளிய மரமே கதி. மரத்தின் துளிர்விடும் இலைய திங்க ஆரம்பிச்சா, பூ, பிஞ்சு, காய், பழம், கொட்டைனு எதையும் விடுறதில்ல. வயித்தில புழு வந்து தூக்கத்தில், பல்ல நெரிக்கிறது, வலியில மொணங்குறது.'- மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

ரொம்பவும் முத்தாத புளியங்காய் புடுங்கி, பச்சை மொளகா, உப்பு சேத்து, கொட்டையோட வச்சு, அம்மிக்கல்லில் அரைச்சு தின்னா, நாலு நாளைக்கு நாக்குல எரிச்சல் இருக்கும், நாக்குத்தோல் உறிஞ்சு போய்.

புளியங்கொட்டைக்கு நெறய வேல இருக்கு. ஒருபக்கம் நல்ல தேச்ச, ஆறு கொட்டைகளை வச்சு தாயம் விளையாடலாம். தண்ணி காய்ச்சும் அடுப்புல, சாம்பலுக்கு அடில கொட்டைய போட்டுட்டா, அத தோல  எடுத்துட்டு சாப்பிடலாம். ஆனா அவ்வளவு சுலபம் இல்ல, சாப்ட்டு முடிக்கிறது. அல்லது இருக்கவே இருக்கு, கல் உரலில் போட்டு குத்தி, தோலெடுத்துட்டு ராத்திரில உப்பு தண்ணில ஊறப்போட்டுட்டா, காலைல சாப்பிடலாம்.

'எப்படித்தான் திங்குதுகளோ. யார் சொல்லிக்குடுத்தாங்க, இப்படி  திங்கிறத'

இந்த விளக்கெண்ணெய் காப்பி, வருடத்திற்கு ஒருமுறை வீட்டில்  அத்தனை பேருக்கும் உண்டு. உடலில் சேர்ந்துள்ள விஷ சத்துக்கள் இயற்கையாக வெளியேற இதைவிட சிறந்த மருத்துவ முறை உண்டா என்று தெரியாது.

'குதிரையில் தூரப்பயணம் செல்லும் மனிதர்கள், எப்படி குதிரையை பராமரிப்பார்களோ,  அதே அளவு நம் உடலை நாம் பராமரிக்க வேண்டும்.' - ஷீரடி சாய்பாபாவின் அருளுரைகளில் ஒன்று இது.

நம் உடம்பே இறைவன் எழுந்தருளியிருக்கும் கோவில். உடம்பை பராமரிப்பது அந்த இறைவனுக்கு செய்யும் தொண்டு என்கிறார் திருமூலர்.


உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.
                                                                            -திருமந்திரம்

கொண்டு வந்ததொன்றுமில்லை. கொண்டு செல்வதொன்றுமில்லை.

'சார், எங்கே போறீங்க?'

'போடா, வெளக்கெண்ண'


Tuesday, October 1, 2019

அக்டோபர் இரண்டு

அக்டோபர் இரண்டு
Image result for old indian coins images

மஹாத்மா
வாழ்க வளமுடன்!
              ***


'முருகேசு, பாருடா..'- கைகளை விரித்து துள்ளிக் குதித்துக்கொண்டு வந்தாள்  பாரு என்கிற பார்வதி.

'ஆமாம், நீ பாருதான்'- அவள் கைகளில் இருந்த ஓட்டைக்காசை  பார்த்து, 'ஏதுடி, உனக்கு  காலணா?' என்று வியந்தான்.

'மாமா குடுத்தாரே.. இன்னிக்கு எனக்கு பொறந்த நாளாம்'- சொல்லும்போதே மகிழ்ச்சி பொங்கியது அவளுக்கு.

'ஜவ்வு மிட்டாய் வாங்கலாமா.. இல்லை கம்மர்கட் வாங்கலாமா?'- அவனுடன் பகிர்ந்துகொள்வதில் சந்தோஷம் என்பதை அவளுடைய  ஆர்வம் காட்டியது.

அவனுடைய மனமோ, 'மூன்று பைசா என்பது அரையணா. ஓரணா ஆறு பைசா. நாலணா இருபத்து நான்கு பைசா. ஆனா, நாலணா இருபத்தைந்து பைசாவா வருதே'- என்று கணக்கு போட்டு கொண்டிருந்தது.

இது இயல்பாக நடக்கும் செயல்போல் அவன் சிந்தனையில்  தோன்றினாலும், அவனுக்குள் இருக்கும் ஜீவாத்மாவின் அறிவு நிலையே இந்த எண்ணத்தின் அடி உரம்.


பாரப்பா ஆதாரம் ஆறாதாரம்
பரிவான ஆதார மடத்துக்குள்ளே
நேரப்பா அக்கினிதான் ஜீவாத்மாவே
நிறைந்துநின்ற வாய்வதுதான் பரமாத்மாவாய்ப்
பேரப்பா பெருகி நின்ற கடத்தினுள்ளே
பிளமாக நின்று திருவிளையாட்டாடி
காரப்பா ஆகாசஞ் சாக்ஷியான
கருணையுடன் நின்றுதடா கருவாய்க்காணே.
                                            - அகத்தியரின் சௌமிய சாகரம் 24

ஆறு ஆதாரங்களுடன் அமைந்துள்ள மனித உடலில், ஜீவாத்மாவாக அக்கினி. அக்கினியை உயிர்ப்புடன் வைத்திருக்கும், நாம் சுவாசிக்கும் வாயுவாக  பரமாத்மா. 

ஜீவாத்மா அன்பும், அஹிம்சையும் கொண்டு நமக்கு தொண்டு செய்யும்போது மஹாத்மாவாக போற்றப்படுகிறது.

வாழ்க மஹாத்மா.. வளர்க அவர்தம் தொண்டுள்ளம் உலகத்தோரிடம்..





ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...