உடல் |
நீ கொண்டு வந்ததென்னடா, மீசை முறுக்கு! |
'அம்மா, காப்பி வழு வழுன்னு குடிக்க முடில'- பாதி தூக்கத்தில் எழுப்பி கொடுக்கப்பட்டதை குடித்துக்கொண்டே சொன்னான் பாலு.
அவன் குடிப்பது காப்பியில் கலந்த விளக்கெண்ணெய் என்பதை சொல்லாமல், 'பேசாம குடி. எல்லாரும் ஒண்ணும் சொல்லாம குடிச்சிட்டாங்க பாரு'.
'எப்ப பாரு புளிய மரமே கதி. மரத்தின் துளிர்விடும் இலைய திங்க ஆரம்பிச்சா, பூ, பிஞ்சு, காய், பழம், கொட்டைனு எதையும் விடுறதில்ல. வயித்தில புழு வந்து தூக்கத்தில், பல்ல நெரிக்கிறது, வலியில மொணங்குறது.'- மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
ரொம்பவும் முத்தாத புளியங்காய் புடுங்கி, பச்சை மொளகா, உப்பு சேத்து, கொட்டையோட வச்சு, அம்மிக்கல்லில் அரைச்சு தின்னா, நாலு நாளைக்கு நாக்குல எரிச்சல் இருக்கும், நாக்குத்தோல் உறிஞ்சு போய்.
புளியங்கொட்டைக்கு நெறய வேல இருக்கு. ஒருபக்கம் நல்ல தேச்ச, ஆறு கொட்டைகளை வச்சு தாயம் விளையாடலாம். தண்ணி காய்ச்சும் அடுப்புல, சாம்பலுக்கு அடில கொட்டைய போட்டுட்டா, அத தோல எடுத்துட்டு சாப்பிடலாம். ஆனா அவ்வளவு சுலபம் இல்ல, சாப்ட்டு முடிக்கிறது. அல்லது இருக்கவே இருக்கு, கல் உரலில் போட்டு குத்தி, தோலெடுத்துட்டு ராத்திரில உப்பு தண்ணில ஊறப்போட்டுட்டா, காலைல சாப்பிடலாம்.
'எப்படித்தான் திங்குதுகளோ. யார் சொல்லிக்குடுத்தாங்க, இப்படி திங்கிறத'
இந்த விளக்கெண்ணெய் காப்பி, வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் அத்தனை பேருக்கும் உண்டு. உடலில் சேர்ந்துள்ள விஷ சத்துக்கள் இயற்கையாக வெளியேற இதைவிட சிறந்த மருத்துவ முறை உண்டா என்று தெரியாது.
'குதிரையில் தூரப்பயணம் செல்லும் மனிதர்கள், எப்படி குதிரையை பராமரிப்பார்களோ, அதே அளவு நம் உடலை நாம் பராமரிக்க வேண்டும்.' - ஷீரடி சாய்பாபாவின் அருளுரைகளில் ஒன்று இது.
நம் உடம்பே இறைவன் எழுந்தருளியிருக்கும் கோவில். உடம்பை பராமரிப்பது அந்த இறைவனுக்கு செய்யும் தொண்டு என்கிறார் திருமூலர்.
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.
-திருமந்திரம்
கொண்டு வந்ததொன்றுமில்லை. கொண்டு செல்வதொன்றுமில்லை.
'சார், எங்கே போறீங்க?'
'போடா, வெளக்கெண்ண'
No comments:
Post a Comment