Saturday, May 23, 2020

பிராணாயாமம்

பிராணாயாமம்

நானொரு முட்டாளுங்க 
ரொம்ப நல்லாப்படிச்சவங்க 
நாலுபேரு சொன்னாங்க 
நானொரு முட்டாளுங்க





படிக்க:


'ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க. நம்ம மக்கள் இருக்குற அவசரத்துல எது சொன்னாலும் நேரம் இல்லைனு சொல்லிட்டு ஓடிட்டே இருப்பாங்க. நல்ல வேளை, ஆண்டவன் மூச்சு விட்றத அனிச்சை செயலா வெச்சான். இல்லன்னா ஏகப்பட்ட பேர் மூச்சுவிட நேரமில்லைனு சொல்லி அவன்கிட்டயே போய் சேந்திருப்பான்' - நித்தியின் அட்டகாசமான சிரிப்பொலிக்கிடையே வந்த வாக்குதான் இது.

பிராணாயாமம் செய்வது எப்படி ?

வாமத்தால் ஈரெட்டு மாத்திரை பூரித்தே 
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் 
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு 
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.                                                                                                                                                          - திருமந்திரம் 573

பொருள் விளக்கம்:
இடது மூக்கின் வழியாக பதினாறு மாத்திரை அளவு காற்றை உள்ளிழுத்து, உள்ளிழுத்த காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு மூச்சடக்கி உள்நிறுத்தி, முப்பத்திரண்டு மாத்திரை அளவு வலது மூக்கின் வழியாக வெளியே விடவேண்டும்.

ஒரு மாத்திரை  கால அளவு என்பது  கண்ணிமைக்கும் நேரம்.


பிராணாயாமத்தின்போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

பாரப்பா பிராணாய வகைதான் ஐந்தும்
பத்தியுடன் சொல்லுகிறேன் பதிவாய்க்கேளு
நேரப்பா ரேசக பூரகமுங் கும்பகம்
நிசமான சவுபீசம் நிர்ப்பீசம் ஐந்து
காரப்பா குருவருளால் கண்டு தேறி
கருணையுடன் பிராணாயாமக் கருவைக்கண்டு
தேரப்பா தேறி மனந் தெளிவாய் நின்று
சிவ சிவா சிவயோகத் தீர்க்க மைந்தா.
                                                             - அகத்தியரின் சௌமிய சாகரம்  251

பொருள் விளக்கம்:
மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல், உள்நிறுத்தல் மற்றும் வெளியேற்றுதல் என மூன்று செயல்கள் நடை பெறுகின்றது. 

காற்றை உள்ளிழுத்து, உள்நிறுத்தும் வேளையில் - ' ஓம் நமக்ஷிவய' என்றும் 
உள்நிறுத்தலில் இருந்து வெளியேற்றும் வேளையில் - 'க்ஷிவயநம ஓம்' என்றும் மந்திரத்தை மனதில் சொல்ல வேண்டும்.

இவைகளே பிராணாயாம வகைகள் ஐந்து ஆகும்.

மந்திரம் [மந் + திரம்] என்பது மனதினை ஸ்திரமாக்கும் அக்ஷரங்கள். 
மொழியில் உள்ள எழுத்துக்கள் வேறு, அக்ஷரங்கள் வேறு.  மொழியின் வாதத்தால், 'நமக்ஷிவய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் மகத்துவத்தை  நாம் இழந்துவிடக்கூடாது.     

உரைக்கவே ரேசகந்தான் விடுவ தாகு
    மோங்கியதோர்  பூரகந்தா னுள்ளே வாங்கல்
தரைக்கவே கும்பகந்தம் பித்தி  ருத்தல்
    தாங்கியதோ  ருந்பீச மந்திரத்தி லூடல்
விரைக்கவே நிர்ப்பீச மந்திரத்தை விட்டு
   வெளியிலே பூரித்தல் மெதுவி லேதான்
அரைக்கவே யஞ்சு விதம்  பிராணாயாமம்
அசையாம லாசனத்தி லிருத்திப் பாரே.                           
                                                                                               - போகரின் ஏழாயிரம் பாடல்கள்  311

பொருள் விளக்கம்:
போகரும், அகத்தியரின் கருத்தை அப்படியே வழி மொழிகிறார்.

பிராணாயாமம் உள்ளே என்ன செய்கிறது?

குரு: அப்பொழுது ஜீவன் ஈஸ்வரனோடு ஐக்கியமாயிற்று. இதற்கே 'ஜீவா ஈஸ்வரோரைக்கியம்' என்று சொல்லப்படுகிறது. ஜீவன் ஈஸ்வரனோடு ஐக்கியமானால் என்னவாகும்?

சிஷ்யன்: மோக்ஷமாகும்.

குரு: இதற்கேதான் பிராணனையும், அபானனையும் ஐக்கியப்படுத்துவதென்று சொல்லுவது. பிராணன் நம்முடைய உள்ளில் இருக்கிறது. அபானன் வெளியில் போகிறது. அப்படி வெளியில் போகின்ற அபானனை, வெளியில் போகவிடாமல் பிராணனுடன் சேர்த்து உள்ளிலேயே ஒரே கதியாய் நடத்துவதற்குத்தான் 'பிராணாயாமாம் என்று சொல்லுவது. பிராணாயாமம் என்றால் பிராணனை ஆயாமம் செய்கிறது. ஆயாமம் செய்கிறதென்றால் தடுத்து நிறுத்துகிறது அல்லது நேரே கொண்டு போகின்றது.
                                                                                                                 - சிவானந்த யோகியின் சித்த யோகம் 
பொருள் விளக்கம்:
நாம் உள்ளிழுக்கும் காற்று பத்து வாயுக்களாக மாறி நாடிகளை புத்துயிர் பெறச்செய்கிறது.
பிராணயாம பயிற்சியின்போது  நம் உயிர்நிலையான குண்டலினியை, இறை சக்தியுடன் இணைக்கும் வேலையை  செய்கிறது. 

பிராணாயாமம் செய்வதால் உண்டாகும் பலன்கள் என்ன?

இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப் 
புட்டிப் படத்தச  நாடியும் பூரித்துக் 
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து  
நட்டம் இருக்க நமன்இல்லை தானே.
                                                                                                               - திருமந்திரம் 574

பொருள் விளக்கம்:
பத்து நாடியும் உயிர்ப்புடன் இருக்க, எமன் உயிரை எடுத்து விடுவானோ என்ற கொரோனா பயம்,  பிராணாயாமம் செய்வோர்க்கு இல்லை.



Wednesday, May 20, 2020

ஜெனரல் டையர்

ஜெனரல் டையர் 

கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் வாடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி









பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

காலையில் வீட்டில் உண்ண  உணவில்லாமல், பள்ளியில் வழங்கும் மதிய உணவுக்காக, நண்பகல் வரை காத்திருந்து, தட்டில் போடப்பட்ட ஓட்ஸ் உப்புமா, அதற்கு சுடுநீரில் கலக்கிய பருப்புப்பொடி தேவாமிர்தமாக தெரிந்தது முருகனுக்கு, வாய் மட்டும் முணுமுணுத்தது, உண்ணுமுன் சொல்லும் திருக்குறளை.

ஒரு மக்களின் முதல்வர் ஆரம்பித்து வைத்த, மதிய உணவு திட்டத்தை, இன்னொரு மக்கள் திலகம் விரிவாக்கம் செய்கிறார், இளமையில் வறுமையின் கொடுமையை  உணர்ந்த ஏழைப்பங்காளர்கள்.

ஒரு மைதானத்துக்குள் பூட்டி, மனித உயிர்கள் என்ற இரக்கமின்றி, மிருகங்களை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளிய ஜாலியன்வாலாபாக்  நிகழ்வில்கூட, வினாடி நேரத்தில் உயிர் பிரிந்திருக்கும்.

ஆயிரக்கணக்கான மைல் தூரம், குழந்தைகளை சுமந்து, உண்ண உணவும், நீருமின்றி, காவலர்களுக்கு அஞ்சி, அடிவாங்கி பாரம் சுமக்கும் எனதருமை இந்தியக்குடிமக்களே, பேய்க்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறீர்கள். தப்பித்தவறி, உயிரோடு ஊர் போய் சேர்ந்தாலும், உங்களை வாழ விட மாட்டார்கள் இந்த ஜெனரல் டையர்கள். கொன்றொழிக்காமல் ஓய மாட்டார்கள். வாழும்வரை நரகம்தான்.

'நெஞ்சு பொறுக்குதில்லையே'

இருபது லட்சம் கோடி பேரிடர் விநியோகம், மும்மடங்கு விமான கட்டணம் பெற்று பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவை, அமெரிக்காவிற்கே மருந்து ஏற்றுமதி,  சீனாவில் உள்ள உலக வர்த்தக நிறுவனங்கள் நம் நாட்டிற்கு - சற்றேறக்குறைய வல்லரசு நாடாகிவிட்டது இந்தியா.

உண்மையில், கேள்வி கேட்க நாதியற்றவர்கள்,  தேசிய நெடுஞ்சாலை எங்கும்  சிதறிக்கிடக்க, இந்தியாவே ஒரு ஜாலியன்வாலாபாக் ஆகிவிட்டது.

நாம் ஒன்றே, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலுக்கு அச்சாரமாக வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. நாம் தானமாக வழங்கும் வாக்கை எப்படி வழங்கக்கூடாது என்றும், வழங்கினால் என்ன ஆகும் என்று சாபமே கொடுக்கிறார்  திருமூலர்.

மண்மலை யத்தனை மாதனம்  ஈயினும்
அண்ணல் இவனென் றஞ்சலி யத்தனாய்
எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.
                                                                                                      - திருமந்திரம் 506

மண்வாழ் உயிர்கள் அனைத்தும் இறைவன் என்றெண்ணி வாழாதார்க்கு, பூமியையும், மலையையும் தானமாக வாக்காக கொடுத்தால், கொடுத்தவனும், பெற்றவனும் ஏழுவகை நரகங்களிலும் விழுந்துழல்வார்கள்.







Sunday, May 17, 2020

பணம் பெண் பாசம்

பணம் பெண் பாசம் 

அத்தனை பழமும்
சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே





“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” - கப்பல் நிறைய வணிகப்பொருட்களை கொண்டுசென்ற மகன் வெறும் நெல்மூட்டையை கொண்டுவந்திருக்கிறானே என்று சோதித்த பட்டினத்தடிகளின் கண்களில், விலை உயர்ந்த கற்கள் அதனுள் பொதிந்திருப்பதை மட்டும் பார்க்கவில்லை, கூடவே மகன் விட்டு சென்ற ஓலையையும் பார்த்து, படித்து உலக வாழ்வில் இருந்து விலகி, மனைவியை பிரிந்து சென்றாலும், பெற்ற தாயின் பாசத்தை விட முடியாமல் இறுதி சடங்குகளை, அனைவரையும் முறையாக அழைத்து  செய்து முடித்தார்.
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்
                                                                                      - பட்டினத்தார் பாடல் 200

பாடு பட்டு சேர்த்த பணத்தை விட முடிந்தது. கட்டிய மனைவியை பிரிய முடிந்தது. பெற்றெடுத்த அன்னைமேல் கொண்ட  பாசத்தை மட்டும் உதறிவிட முடியவில்லை.

நம் கண் முன்னர், இறைவனின் வாரிசுகளாக தங்களை அடையாளப்படுத்தும், ஆன்மீக கடை விரித்திருக்கும் ஜக்கி, நித்தி, ராம்தேவ், ஆசாராம் இவர்களை போன்றவர்கள் எல்லாருமே சொத்து சேர்க்கும் சொத்தை பழங்கள்தான். இவர்களைப்  போன்றோர், ஆதியில் சுயம்புவாய் தோன்றிய இறையை, ரத்தமும், சதையுமாக மனிதனாகவே உருவகப்படுத்தி, வம்சம் வளர உறவினை கொடுத்து, உடலை வளர்க்க உணவினை கொடுத்து, நடமாடும் கழிவகம்  ஆக்கிய கதைகளே அறிவிற்சிறந்தோர் நாத்திகம் பேச வழி வகுத்திருக்கிறது.

இறையை அறிந்து அணுகும் முறையை, பதி-பசு-பாசம்  என்று திருமந்திரத்தில்  மிக எளிதாக காட்டி இருக்கிறார் திருமூலர். இந்த முறைப்படி நம் கோவில்கள் அமைந்திருப்பது இருப்பது, ஆச்சர்யத்திலும்  ஆச்சர்யம். பதி என்பது கருவறையில் உள்ள சிவலிங்கம்; பசு என்பது மூலவரை பார்த்து அமர்ந்திருக்கும் நந்தி. பாசம் என்பது நந்தியை தொடர்ந்து பின்புறமிருக்கும் பலிபீடம்.

நம் உடலில் உள்ள உயிராகிய பசு, பதியாகிய இறையை அடைய விரும்பினால், தன்னை கட்டி இருக்கும் பாசமாகிய பற்றை விலக்க வேண்டும்.

பதிபசு பாசம் பயில்வியா நித்தம் 
பதிபசு பாசம் பயில்வோர்க்கு ஆறாக்கி 
பதிபசு பாசத்தைப் பற்றுஅற நீக்கும் 
பதிபசு பாசம் பயில நிலாவே. 
                                                                                                - திருமந்திரம் 2412

இடையறாது இறைநிலை தியானம் பயில்வோர்க்கு, பற்றினை அறுத்து, இறைவனை அடையும் வழிதனை தியானம் காட்டும். 

பாசத்தை வேரறுக்கும் பசு, பதியை சென்றடையும்.










Friday, May 15, 2020

புலிகள் ஜாக்கிரதை

புலிகள் ஜாக்கிரதை 

அடிக்கிற கைதான்
அணைக்கும்
அணைக்கிற கைதான்
அடிக்கும்





'வக்கணையா பேச வந்துட்டாரு. குடுக்குறத தின்னுட்டு எதாவது சம்பாதிக்கிற வேலைய பாரு' - கையில் முறத்துடன் வெளியே வந்த மயிலாவை பார்த்த புலி, திண்ணையில் பூனை மாதிரி பழைய சோறையும், பச்சை வெங்காயத்தையும் கடித்துக்கொண்டிருக்கும்  இந்த மனிதனா நேற்று புலிக்கூட்டத்தை தனி ஒருவனாக  துவம்சம் செய்துகொண்டிருந்தது என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே,  முறத்தை பயங்கர ஆயுதமாக நினைத்து, தன்  மீது  வீச ஓங்கிய மயிலாவை பார்த்து பயந்து,  தப்பித்தோம், பிழைத்தோம் என்று  பாய்ந்து  துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று பின்னங்கால் பிடரியில் பட காட்டுக்குள் ஓடியது.

இது, தமிழச்சி முறத்தால் புலியை விரட்டிய கதையாகவும்  இருக்கலாம்.

முரண்பாடுகள் நிறைந்ததுதான் வாழ்க்கை, இளமைக் காலத்தில் அடிக்கரும்பின் சாறாக இனித்து, இளம்பெண்கள் வட்டமிடும், மனிதனின் இளமை மாறிவிடில் பார்க்கவோ, பழகவோ  விரும்பாத எட்டிக்காயாக மாறி விடுகிறான்.

விரும்புவர் முன்என்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரம் காயும் ஒத்தேனே.
                                                                                     - திருமந்திரம் 180

உடல் சார்ந்த இன்பங்களில் நாளைக்கழிக்காமல், உளம் சார்ந்த இறைநிலை உணர்வில், இளமைக்காலம் தொட்டு  வாழ்வீர் உலகத்தீரே என்கிறார் திருமூலர்.

Tuesday, May 12, 2020

நிலா

நிலா 


அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும்  ஒரே நிலா
ஏங்க வைப்பதும்  ஒரே நிலா






'வெற்றி.. வெற்றி.. வெற்றி..' - வெற்றிக்கொண்டாட்டம் பறம்பு மலையெங்கும்.

வீரயுக நாயகன் வேள் பாரியை சூழ்ச்சியால் கொன்று, வென்ற மூவேந்தர்களின் படையின் முழக்கம் வானதிர்ந்தது. இருப்பினும், வீரர்களின்  உள்ளத்தில்   குதூகலமில்லை.  

இயற்கையுடன்  ஒன்றி இணைந்து வாழ்ந்த  தமிழ் மரபினை, பிறந்த குழந்தையின் நெஞ்சை  நெல் முனையால் மெலிதாக கீறி  இரத்தத்தை, குல தெய்வம்  கொற்றவைக்கு  வீர காணிக்கையாக்கும் வேளிர் குலத்தை வேரோடு அழித்த குற்ற உணர்வாக கூட இருக்கலாம்.

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் 
எந்தையும் கொண்டோம், நம் குன்றும் பிறர் கொளார் 
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் 
வென்று எரி முரசின் வேந்தர் எம் 
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.


கடையேழு வள்ளல்களில் ஒருவரான, வேள் பாரியின் மகளிர் இருவரும், வேள் பாரியின் உற்ற நண்பரான கபிலரின்  துணையுடன்,  பறம்பை விட்டு செல்கையில்  நிலாவைப்பார்த்து சொல்வதாக இந்த சங்க கால பாடல்.

வெளிப்புறத்தில் கண்களில் நாம் காணும் காட்சியே, நம் நினைவலைகளில் இருக்கும் காட்சிகளை ஒன்றிணைத்து புதிய எண்ணங்களை உருவாக்குகிறது. ஐம்புலன்களில்   பெறப்படும்  உணர்வுகளும், முந்தைய  நினைவலைகளுடன்  ஒருங்கிணைத்து, தொடர்ந்து எண்ண அலைகளை உருவாக்கிய  வண்ணம் உள்ளது.

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். உங்கள் காதுகளில்  ஒரு திரைப்படப்பாடல் கேட்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அன்று வந்ததும் இதே நிலா 
இன்று வந்ததும் அதே நிலா 

இந்த பாடலை முதல் முதல் கேட்ட சூழல் மனதில் வந்து போகிறது. அது மட்டுமல்ல, அது தந்த காலத்திற்கேற்ற   எண்ணங்களும் சிறகடிக்கிறதல்லவா? அதே பாடல் இன்றைய சூழலுக்கு ஏற்ப  பலவித எண்ண  அலைகளை கிளப்பி விட்டு செல்கிறதல்லவா?

யோகிகளும், ஞானிகளும் தங்களின் தவத்தின் பயனால் உடலுக்குள்  ஒளிரும் நிலவை பார்க்கும் வரம் கைவரப்பெற்றவர்கள். அகத்தில் ஒளிரும் நிலா வெளிச்சம் மட்டுமல்லாமல், புற உலக காட்சிகளையும் காட்ட வல்லது.

அகத்தினுள் ஒளிரும் தீபத்தின் காட்சியை நாம் காணும்  அருந்தவப்பேறு  பெற்றால், கருணை மழை பொழியும் பராசக்தியின் அருளால், தொலை தூர காட்சிகளையும், உலகத்தில் உள்ள பொருட்களெல்லாம், சூரிய ஒளியில் தெளிவாக தெரிவது போல், உள்ளத்தினுள்   ஞான திருஷ்டியில்  தெளிவாக தெரியும்.


தூர தரிசனம் சொல்லுவன் காணலாம் 
கார்ஆரும் கண்ணி  கடைஞானம் உள்பெய்து 
ஏர்ஆரும் தீபத்து எழில்சிந்தை  வைத்திடில் 
பார்ஆரு(ம்) உலகம் பகல் முன்னதாமே. 
                                                 - திருமந்திரம் 823

எண்ண அலைகளின் குவிப்பால் அந்த ஆதி பராசக்தியின் அருள் பெற்றால், இன்றைக்கே நாம் உலகு முழுவதும் இருக்கும் இடத்திலிருந்தே  காணலாம்.










Sunday, May 10, 2020

பேரறிவு

பேரறிவு 


நல்ல பொழுதையெல்லாம்
தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டைக்கெடுத்ததுடன்
தானும் கெட்டார்








'ஐயோ.. போயிட்டீங்களா' - உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் தெருப்பெண்கள் எல்லாம் கூடி மாவடு ஊறுகாய் போடுவதை, இரவு பணி  முடித்து தூக்க கலக்கத்தில் கீழே சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்து,  சாய்ந்து விழும் பரந்தாமனை  பார்த்துக்கொண்டே, மாடிக்கு ஓடினாள் மனைவி சரளா.

எழுபதுகளில் அதிக விற்பனை சுற்றில் இருந்த குமுதம் வார இதழில் வந்த மகத்தான சிறுகதைதான்,  என் நினைவிலிருந்து, மேலே சொல்லப்பட்ட வாக்கியச்சிறுகதை.

மனித வாழ்வின் நிலையாமையை திருமூலரும் இப்படித்தான் சொல்லி இருக்கிறார். இல்லாள் சுவைபட சமைத்து வைத்திருந்த உணவையும், அவளையும்  சுவைக்கும் மனிதன்,  கணப்பொழுதில் தன்னுயிர் போவது அறியாமல் உயிர் நீக்கின்றான் .

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரொடு மந்தணம்  கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தது ஒழிந்தாரே.
                                                                                                    - திருமந்திரம்  146

மண்ணில் பிறப்பெடுக்கும் மனிதன் பத்து வகையான அறிவு பெற முயற்சிக்க வேண்டும். ஐம்புலன்களால் பெறுகின்ற ஐந்தறிவு, ஐந்தறிவால் பெரும் பகுத்தறிவும், நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அனுபவ அறிவாக ஏழாவது அறிவும், கல்வியறிவாக எட்டும், கல்வி, கேள்விகளில் சிறந்த  குருவிடம்  பெரும் ஒன்பதாவது அறிவும், இவையனைத்தையும் இணைக்கும் பாலமாக பரம்பொருளின் பற்றாகிய, பத்தாவதாக  பேரறிவும் பெறுதல் வேண்டும்.

மனிதனின் வாழ்நாளில், அறியாப்பருவமும், உறக்கமுமாக அழிகின்ற ஆண்டுகள் இருபத்தெட்டு. முப்பத்து மூன்று வருடங்கள் தன்னிலையொடு, பத்து அறிவை பெரும் முயற்சியில் இருக்க முடிந்தால், அறுபத்தி இரண்டாம் ஆண்டில் இருந்து அவனுடைய வாழ்நாள், நூறாண்டுகளுக்கு மேலாக இருக்கும்.

அழிகின்ற ஆண்டவை ஐஅஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்ப தாகும்
கழிகின்ற கால(ம்) அறுபத்து  இரண்டென்ப
எழுகின்ற ஈர்ஐம்பது எண்ணற்று இருந்ததே.
                                                                                                     - திருமந்திரம் 742

Saturday, May 9, 2020

காதல் செய்வீர்

காதல் செய்வீர்


கண்ணிலே மின்னும் காதலே 
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே







'இவ்வளவு கேவலமானவனா இருப்பேன்னு எனக்கு தெரியாமப்போயிருச்சு. இனிமே என்னப்பாக்க இந்தப்பக்கம் வராதே' - என்று தன்னுடைய தோழி அவனைப்பார்த்து புன்னகைத்ததற்காக ஊடிக்கொண்டே,  இன்னும் கொஞ்சம் நெருக்கமாக உட்கார்ந்தாள் காவ்யா.

பெண்களின் வார்த்தைகளின்   அர்த்தமும்  வேறுதான்,  அகராதியும் வேறுதான்.

புறத்தில் தோன்றும் காட்சிகளால், உள்ளத்தில்  தோன்றும்  அன்பின் வெளிப்பாடே, நட்பாகவும், பந்தமாகவும், பாசமாகவும், கருணையாகவும், காதலாகவும்  பரிணமிக்கிறது.

அந்த அன்பே  அகத்தில் தவத்தின் வெளிப்பாடாக தோன்றும்போது, பக்தியாகி, சக்தி நிலை தூண்டப்பெற்று பேரின்பத்தையம், சித்திகளையும்  தருகிறது.


உறங்கும்            அளவின்            மனோன்மணி வந்து
கறங்கு                 வளைக்கைக்  கழுத்தாரப்        புல்லிப்
பிறங்கொளித்  தம்பலம்            வாயில்                 உமிழ்ந்திட்டு
உறங்கல்             ஐயாஎன்று        உபாயம்              செய்தாளே.
                                                                                                         - திருமந்திரம் 1107

சீரிய தவ உறக்கத்தில், ஆக்கிணை சக்கரத்தில் வீற்றிருக்கும் அன்னை பராசக்தி, வளைக்கர  நாதத்தோடு கழுத்தினை  இறுக்கி அணைத்து, உள்நாக்கின்  மேலண்ணத்தில் சக்தியின் ஆதாரமான அமிழ்தம் ஊறச்செய்து, தொடர்ந்து தவ உறக்கத்தில் இருக்கும் வழிதனை  காட்டி நின்றாள். 

Friday, May 8, 2020

ஆதி பராசக்தி

ஆதி பராசக்தி


டவுனுப்பக்கம் போகாதீங்க
மாப்பிளே
டவுனாயிப்போயிருவீங்க





சென்னைப்பக்கம் போகாதீங்க
மக்களே
செல்லரிச்சுப் போயிருவீங்க

'ஊசி மூஞ்சி மூடா, எனக்கே புத்தி சொல்கிறாயா. உன்னை என்ன செய்கிறேன் பார். உன்னுடைய கூட்டை   பிய்த்து எறிகிறேன்' - மழைக்கு ஒதுங்க ஒரு வீடு கட்டலாம் அல்லவா  என்று கேட்ட குருவியின் கூட்டை கலைக்க வேகமாக பனை மரத்தில்  ஏறியது குரங்கு.

இயற்கை எரிபொருளா? தூக்கிவை  உள்ளே அவனை. உலகமே எதற்காக  ஒருமித்த குரலில் இணைந்து கொரோனாவை வளர்க்கிறது என்று பொருள் சொன்னவனை உள்ளே போடு. நம் பாரம்பரிய மருந்தே போதும் என்று சொன்னால், சும்மா விடக்கூடாது  அவனை. அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று விளக்கி சொல்ல பொறுமை இல்லை அரசிடம்.

மாற்று கருத்து சொன்னாலே போதும், என்கவுண்டர் நிச்சயம் என்றாகிவிட்டது. மக்கள் சிந்திக்கவே கூடாது. காரண காரியங்களோடு சிந்தித்து சொல்லும் புத்திமதியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இல்லை, எல்லாம் குரங்கு புத்தி. மதுப்பிரியர்களின் பணமும், வாக்குகளும்  தேவை.

நம் உடலும் அரசு மாதிரிதான்; உள்ளே உயிர் இருப்பதையோ, சக்தியாக நின்று உடலை இயக்கும் பேராற்றலையோ உணர்வதே இல்லை.  தொடர்ந்து நம் உடலில் இருந்து தரும் அறிவுரைகளை அறியவொண்ணா மூடர்களாக இருக்கிறோம்.

அவளை          அறியா    அமரரும்       இல்லை
அவளன்றிச்  செய்யும்  அருந்தவம்  இல்லை
அவளன்றி     ஐவரால்    ஆவதொன் றில்லை
அவளன்றி     ஊர்புகு     மாறு             அறியேனே.
                                                                                - திருமந்திரம் 1053

ஆதிசக்தியே   உடலில் நின்று ஆட்சி செய்வதை   உணர்ந்தவர்கள் தேவர்கள் ஆனார்கள். அந்த உணர்வினை அடையவும்,  ஐம்புலன்களின் உறுதுணையால் தவம் செய்யவும், இறையடி சேரவும் முடியும்.

Sunday, May 3, 2020

பேரழிவு

பேரழிவு 

பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..





'அரசே, நம் நாட்டில் அதிகம் இருப்பது வைத்தியர்களே' - கிருஷ்ண தேவராயரின் சந்தேகத்திற்கு தெனாலி ராமன் தீர்க்கமான உடனடி பதில் அளித்தான்.

'ஆனால், அவர்கள் வைத்தியம் கற்றவர்களல்ல. தாங்கள் கண்டதையும், கேட்டதையும், தங்களின் அரைகுறை அனுபவத்தில் அறிந்து கொண்டதைக்கொண்டு எல்லா வித நோய்களுக்கும் உடனடி மருத்துவ தீர்வு சொல்லி விடுவார்கள்.'

மருத்துவம் கற்க மழலையர் பள்ளியில் ஆரம்பித்து, நீட் தேர்வு வரை கற்க வேண்டிய அவசியம் இல்லை இவர்களுக்கு.

அதே அறிவு நிலைதான் இயற்கை மற்றும் பரம்பொருளைப் பற்றியும். 

'மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்'

இந்த மண்ணுலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம் என்று இந்த கோவிட்-19 பெருந்தொற்று உணர்த்திவிட்டது. 

இயற்கையை கற்க, அதனை சொந்தம் கொண்டாடும் பற்றினை அழித்து, அதனுடன் இணைந்து வாழும் முறையை அறிந்து கொள்வது அவசியம்.

மாயை என்னும் பற்றினை அறுத்து, பரம்பொருளை அறிந்து உணர்ந்து கொள்ள முன்னோர்கள் கட்டிய மழலையர் பள்ளிகள்தான் கோவில்கள்.

பற்றறுக்க ஒரே வழி, பற்றற்றவனான பரம்பொருளின் பற்றினை பற்றுவதுதான் என்று சொல்லுகிறார் வள்ளுவர்.

பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

                                                       - திருக்குறள் 350

திருமூலர் அதற்கும் ஒருபடி மேலே சென்று, பிறவிப் பெருங்கடல் நீந்தி அந்த பரம்பொருளின் பாதங்களை அடையும் ஆசையையும் அழித்து, ஆனந்தமாய் வாழுங்கள் என்கிறார்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் 
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் 
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள் 
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
                                                    - திருமந்திரம் 2615 

Saturday, May 2, 2020

பேரிடர்

பேரிடர்



துன்பம் வரும்
வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார்
வள்ளுவரு சரிங்க





'என்ன கொடுமை சரவணன்' - எதிர்த்த வீட்டு நண்பன் குமாரின் நெற்றியில் ஒட்டியிருந்த பேண்ட் எயிட்டை பார்த்து கிண்டலாக கேட்டான் சேகர்.

'ஒண்ணுமில்ல. போன வாரம் உனக்கு. இந்த வாரம் எனக்கு, வீட்டுல பூஜை. பொண்டாட்டிய பாத்து சிரிச்சிட்டே வீட்டுக்குள்ள போனேனா...'

'சரி'

' எதுக்கு  செங்கொரங்கு இளிச்சிட்டே வர்றேன்னு கேட்டா. வள்ளுவர் வழி நிக்கிறேன்னு சொன்னேன். கையிலிருந்த தோசை திருப்பியாலெ  நெத்தியிலே திருப்பிட்டா.'

'புரியிற மாதிரி சொல்லேண்டா. யாராவது வள்ளுவர் வழி நிக்கிறதுக்கு அடிப்பாங்களா'

'துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லி இருக்கார். அதனாலதான் சிரிச்சேன்னு, அவளை பாத்துட்டே சொன்னதுதான் தெரியும்'

சேகர்  சிரிச்சிட்டே திரும்பி பார்த்தான். அவர்கள் பேசியதை  ஒட்டு கேட்டுக்கொண்டிருந்த  அவன் மனைவி சரளா, எதிரில்.

'செத்தாண்டா சேகரு..'

'கடவுள் இருக்கான் குமாரு. ஓடிரு.'

எல்லாம் லாக் டௌன் பரிதாபங்கள்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப  தில்.
                                                                  - திருக்குறள் 621

ஒரு காரியத்தை செய்யத் துணியும் போது  இடற்கண் எனும் தடைகள்  வருவது இயற்கை. அதனை எதிர்த்து, எள்ளி நகையாடி  அழித்து காரியத்தை சாதிக்க வேண்டும். காரியம் வெற்றி அடையும்போது அடையும் இன்பத்திற்கு ஈடானது ஒன்றுமில்லை.

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின்று  ஆதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கு ஒரு கல்பசு ஆமே.
                                                               - திருமந்திரம் 308

உயிரில் எழும் எண்ணங்களின் ஆதார சொரூபமான ஆதி இறையை . எண்ணி போற்றுவோர்க்கு வாழ்வின் பற்று கோலாய்   இருப்பான். இல்லை என்றெண்ணி இகழ்வோர்க்கு எண்ணங்கள் பற்று கோல் அற்ற முல்லைக்கொடி போல், வாழ்க்கை  துன்பத்தில் தவிக்கும். உணர்வு மகிழ்வுடன் ஆதி இறையை உணரமாட்டார்க்கு, அவருள் உறையும் உயிர், ஒரு கல்லாலான பசுவைப்போல் வாழ்வின் பலன் ஏதும் தராது.



கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...