ஒன்றும் கெட்டுவிடவில்லை. ஒருவருக்கும் உடல் நலனில் பாதிப்பில்லை. மண்ணுக்குள் விளைந்ததால் வெங்காயம் சாப்பிடாதவர்கள்தான் லட்டை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்பார்கள். மற்றவர்களுக்கும் பிரசாதமாய், திருப்பதி சென்று வந்த பெருமையை பறைசாற்ற கொடுத்திருப்பார்கள்.
இது சரியா, தவறா என்ற புலன் விசாரணைக்குள் நாம் செல்ல வேண்டாம். இது கொண்டு வந்திருக்கும் அரசியல் மற்றும் ஆன்மீக சலனங்களை மட்டும் பார்ப்போம்.
அரசியலை விடுவோம். கொஞ்சம் பின்னோக்கி போனால், ஆரம்பம் முதலே லட்டு தயாரிப்பு இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது என்று முடித்து விடுவார்கள்.
இந்த ஆன்மீகவாதிகள், பகுத்தறிவுவாதிகள் ஆட்டம்தான் சுவையாக இருக்கும்.
பசு உண்ணும் புல்லும், புண்ணாக்கும்தான் உடலில் பாலாகவும், கொழுப்பாகவும் மாறி இருக்கிறது. பாலில் நெய்யும், கொழுப்பில் எண்ணையும் கிடைக்கிறது. இரண்டையும் கலந்து லட்டு செய்திருக்கிறார்கள்.
'இது பெரிய தீட்டு. பரிகாரம் செய்யாமல் கோயில் நடை திறக்கக்கூடாது.' - என்று ஆன்மீகவாதிகள் கிளம்புவார்கள்.
நமக்கே சாமி இல்லை, பூதம் இல்லை. இது அடுத்தவன் வீட்டு விவகாரம், என்று சும்மா இருக்க மாட்டார்கள் பகுத்தறிவுவாதிகள்.
பன்னிரண்டு மணி நேரம், பதினெட்டு மணி நேரம் வரிசையில் நின்று வெங்கடேசனைத் தரிசித்து, புனிதமான பிரசாதமாக எண்ணி வாங்கிய லட்டு மாட்டு கொழுப்பில் தயாரானது என்று தெரிய வரும்போது பக்தர்கள் மனம் தளர்ந்து போவது இயற்கையே.
அதற்குத்தான், திருமூலர் இப்படி சொல்கிறார்:
படமாடக் கோயில் பகவற்கு ஒன்றீயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றீயில் படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
இறைவனை படமாக வைத்து வணங்கும் கோயிலில் உள்ள தெய்வத்துக்கு நீங்கள் பொருட்களை கொடுப்பதால், எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை. அதுவே, எளிய மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் பொருளானது நேராக அந்த இறைவனுக்கே சென்று சேர்ந்துவிடும்.
இப்படி எளியவர்களுக்கு உதவுவதால் நேரமும் மிச்சம், மனதிற்கும் நிம்மதி.
திருப்பதிக்கு லட்டு; பழனிக்கு பஞ்சாமிர்தம்.
'லட்டுக்கு நெய் வார்த்த அதே மகாப்பிரபுதான் பஞ்சாமிர்தத்திற்கும் நெய் வார்த்திருக்கிறார்.'
நல்ல வேளை, இந்த செய்தி இட்டுக்கட்டியது என்று தெரிவித்துவிட்டார்கள்.
நானும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.
அட.. கைலாசா நம்ம தமிழ்நாட்டுக்குள்ளும் இருக்கிறது என்ற அதிபரின் அதிரடி அறிவிப்பால் ஒரு வினாடி திகைத்து போனேன். என்ன, அங்கே செல்ல கைலாசாவின் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் கைலாசா நாட்டின் ஒரு பகுதி. இன்னும், அதிபர், பிரதமர் இருக்கும் தலைநகர் எங்கிருக்கிறது என்ற அறிவிப்பு இல்லை.
உலகின் ஒரே இந்து நாடான கைலாசாவின் நாட்டின் பொருளாதாரம் நிதி உதவி மூலமே இயங்குகிறது. எந்த வரிவிதிப்பு இல்லை. காவல் துறையோ சிறைத்தண்டனையோ கிடையாது.
'நானே ஒரு பொறம்போக்கு. ஏதோ கோயில் அன்னதான உண்டக்கஞ்சி வாங்கி சாப்டுட்டு சிவனே என்று இருந்தவனை இப்படி பண்ணிட்டாங்க' - நித்யானந்தாவின் சுய வாக்குமூலம்.
தடைக்கற்கள் வளர்ச்சிக்கான படிக்கற்களானது, எப்படி என்று பார்க்கலாம்.
ஆன்மீக நாடான இந்தியாவில் உருவாகும் சாமியார் ஆசிரமங்கள் மிக அதிக லாபமீட்டும் வணிக மையங்களாக திகழ்கின்றன. இங்கே ஆன்மீக சரக்குகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகின்றது. இருந்தாலும், இவர்கள் அரசியல்வாதிகளால், துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள் .
அரசியலில் சின்னஞ்சிறு பதவிகள் கூட பல கோடி வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. அவர்களின் கண்ணுக்கு எளிதில் பணம் சேரக்கூடிய நித்யானந்தாவின் ஆசிரமங்கள் அதன் சொத்துக்கள் உறுத்திக்கொண்டே இருந்தது.
நித்யானந்தாவை சர்ச்சையில் சிக்க வைத்து, ஆசிரமங்களை ஒழித்துக் கட்டி, சொத்துக்களை வசப்படுத்தும் முயற்சிகள். அதில், அவர்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றாலும், நித்யானந்தாவின் பயணத்தை நிறுத்தி வைக்க முடியவில்லை.
ஆனானப்பட்ட ராவணேஷ்வரனையே பாலியல் வளையத்திற்குள் கொண்டு வந்து அவனது திறமையை கொச்சைப்படுத்த முடிந்ததென்றால், நித்யானந்தா எம்மாத்திரம்?
அழகுப்பெட்டகம் ரஞ்சிதா. சொல்லவா வேண்டும் பொறாமைத் தீயின் வேகத்தை. நீதி தேவதை விழித்துக்கொண்டு நீதி தர நித்தியை தேடினால், நித்தி கம்பி நீட்டி விட்டான், ரஞ்சிதாவோடு.
இன்று நித்தியானந்தா அதிபர். ரஞ்சிதா பிரதமர்.
முகவரி மட்டும் கிடைத்தால் போதும் தமிழகமே கரை கடந்து கைலாசாவில் கரை சேர்ந்து விட காத்திருக்கிறது, தலைவா.
ஒரு தனி மனிதனின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அடக்கு முறைகளில் இருந்து மீண்டு வரும் மன வலிமை, சமுதாய பெரு நோக்கு மற்றும் மகிழ்ச்சி என்று நித்தியானந்தாவின் வாழ்க்கை நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
பாதைகள் மாறினாலும் அவனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
'வலிமை என்பது ஒரு தலைவனுக்கு வலிகளை தாங்கும் தன்மை' - நித்யானந்தா
நீ தலைவண்டா...
திருமந்திரம் - 171
ஈட்டிய தேன்பூ மணம் கண்டு இரதமும் கூட்டிக் கொணர்ந்துஒரு கொம்பிடை வைத்திடும் ஓட்டியே துரத்திட்டு அதுவலியார் கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
மேலோட்டமாக பார்த்தால் மிகவும் எளிய பாடல்.
தேனீக்கள் மணமிக்க மலருக்கு மலர் சென்று சுவையான தேனை சேகரித்து மரத்தின் ஒரு கொம்பில் தேனடையில் வைத்திருக்கும். அந்த தேனடை பார்வைக்கு எளிதாக தெரிவதால், தேனெடுப்பவர்கள் தேனீக்களை துரத்திவிட்டு, தேனை எடுத்து சென்று விடுவார்கள்.
பாடலில் மறைந்துள்ள பொருளை புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருந்தது.
உயிர் மற்றும் செல்வம் நிலையாமை பற்றியது இப்பாடல்.
பணம், சொத்து என்று செல்வத்தை தேடி வாழ்க்கை முழுதும் பணத்தை சேமிக்கிறோம். அது அதிகாரம் மிக்கவர்கள் கண்ணில் படும்போது, அதை நம்மிடமிருந்து பலவந்தமாக பிடுங்கி எடுத்துக்கொள்வார்கள். அப்படித்தான் நம் உடலும். பெற்றோர்கள் குழந்தையை பேணிக்காப்பார்கள். ஒரு நாள், காலனின் கண் பட்டு இறப்பு நேர்ந்துவிடும்.
இவ்வளவு வலிகளைத்தாங்கி, 'நான் பூமியை விட்டு ஓடிவிடவில்லை. இங்குதான் இருக்கிறேன்' என்று அறைகூவல் விடும் நித்யானந்தா, ஆன்மீக வரலாற்றில் இடம் பெரும் மாமனிதன்.
ஆன்மீகத்தில் ஆரம்பித்த உன் வாழ்வு செல்வத்தின் வரவால் வலியார் கண் பட்டும் கலங்காமல் இன்றைக்கும் முன்னேறத்துடிக்கும் உன் ஆற்றல் தலைமைக்குரியதே.
நித்யானந்தாவின் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் ஓடி ஒளியும் அணுகுமுறை தவறாகப்படலாம். எனினும், பின்னொருநாளில் இவனை ஒரு சரித்திர நாயகனாக மக்கள் வரலாற்றில் படிப்பார்கள் என்பதுமட்டும் நிச்சயம்.
உலகத்தின் அழிவு நீரினாலா அல்லது நெருப்பினாலா என்று தெரியாது. சிலர் நீரெழுந்து உலகெங்கும் நிறைத்து உயிர்களை அழித்துவிடும் என்கிறார்கள். மற்றவர்களோ நெருப்பே உலகை அழிக்கும் சக்தியாக இருக்கும் என்கிறார்கள். வடவாக்கினி என்பது பிரளய காலத்தில் நீரில் இருந்து எழுந்து வரும் உலகை அழிக்கும் நெருப்பு.
அது நீரோ, நெருப்போ தெரியாது. ஆனால், நிச்சயம் என்று ஒன்றுக்கு மட்டும் உலகை அழிக்கும் சக்தி உண்டு.
அதுதான் வயிற்றில் எரியும் நெருப்பு.
'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' - என்ற பாரதியின் முழக்கம் பசியின் கொடுமையை விளக்கும்.
உலகில் எது நிச்சயமோ இல்லையோ, வயிற்றுப்பசி நிச்சயம். மற்ற உயிரினங்கள் வயிற்றுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வாழ்வதாக தோன்றினாலும், வயிற்றுப்பசி என்பது மண்ணுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதையே கற்குழி என்கிறார் திருமூலர். கல்லாலான இக்குழியை அடைக்க [தங்கத்தை என்பது] பொருளினை தேடுவார்கள். பொருட்களைக்கொண்டு யாராலும் அந்தக்குழியை அடைக்க முடியாது. அடைக்கும் அறிவை பெற்றவர்கள் முன்னர் அக்குழி ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்கள் நீங்கி தானாக அடைபட்டுவிடும்.
அந்த கற்குழியை தூர்க்கும் அறிவை பெற்றோர் சிவயோகியார். அவர்கள் புருவ மத்தியில் ஊறும் அமிர்தத்தை உண்டு உயிர்த்திருப்பார்கள். இந்த அறிவை பெற்றவர்கள் வயிற்றுக்கு எந்த உணவும் தேவை இல்லை. அக்குழி தூர்க்கும் வழி இதுதான்.
புருவ நெற்றியில் அமிர்த ஊற்றை உண்டாக்கும் வழியையும் காட்டுகிறார் திருமூலர்.
கீழ் நோக்கி சென்று வெளியேறும் தன்மை கொண்ட சுக்கிலத்தை மறித்து மேல் நோக்கி செலுத்த வேண்டும். மூலாதாரத்திலிருந்து எழும் அனலைத் தூண்டி விட்டு சுக்கிலத்தை வற்ற செய்ய வேண்டும். வற்றி வாயு நிலையில் உள்ள சுக்கிலத்தை சுழு முனைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். சுழு முனையில் வாயு சுடரொளியாய் மாறி அமிர்த நிலைக்கு செல்லும். இவ்வாறு முழு நிலவாய் விளங்கும் புருவ நெற்றியில் ஊறும் அமிர்தத்தை சிவ யோகியார்கள் தேவைக்கேற்ப உண்டு வாழ்வார்கள். இவர்களுக்கு வேறு உணவு தேவை இல்லை என்பது கருத்து.
அறுபது வயது வாழ்ந்த மனிதன், சுமார் இருபது வருடங்களை வெறும் தூக்கத்தில் மட்டும் கழித்திருப்பான்.
ஒரு சோதனை முயற்சியாக, ஐந்து மரண தண்டனை கைதிகளை தூங்காமல் இருந்தால் என்ன ஆகும் என்று சோதிக்க எண்ணினார்கள். அவர்கள் அறையில் நல்ல வெளிச்சம், மற்றபடி அனைத்து வசதிகளும். பத்து நாட்களில் விடுதலை என்ற ஒப்பந்தம் இருப்பதால் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்ட கைதிகள், பத்து நாட்கள் முடிவில் ஒருவர் கூட உயிர் தப்பவில்லை. தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டும், அடுத்தவரை காயப்படுத்தியும் எல்லோரும் இறந்து விட்டிருந்தார்கள்.
உயிர் வாழ தூக்கம் எவ்வளவு அத்தியாவசியம் என்று இந்த சோதனை முடிவு நமக்கு காட்டுகிறது.
ஒரு அடிப்படைக்கேள்வி, தூக்கம் என்றால் என்ன? அது எவ்வாறு நிகழ்கிறது?
படுக்கைக்கு சென்றதும், முதல் கட்டளை மனதிடமிருந்து, தூங்கு என்று. ஐம்புலன்கள் தங்கள் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். உடல் உறுப்புகள் எந்த வேலையும் செய்யாமல் செயலற்று இருக்க வேண்டும். மூச்சுக்காற்று மட்டும் சீராக பிராண வாயுவை செலுத்தி உயிரை அலைக்கழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிர், இறை நிலையின் தொடர்பில் இருக்க வேண்டும்.
தூக்கத்தின் போது,
1. மனம் - உள்ளம் பெருங்கோயில்
2. புலன்கள் - கள்ளப்புலன்கள் காளா மணிவிளக்கு
3. உடல் - ஊனுடம்பு ஆலயம்
4. உயிர் - சீவன் சிவலிங்கம்
5. இறை - வள்ளற்பிரானாற்கு வாய் கோபுர வாசல்
இவை ஐந்தும் அமைதி நிலையில், செயலற்ற நிலையில் செயல் படவேண்டும்.
நிலையற்ற உடல், உள்ளம் மற்றும் ஐம்புலன்கள் ஓய்வு நிலைக்கு, செயலற்ற நிலைக்கு செல்கிறது. நிலையான அழிவற்ற உயிர், உயிரைப்பற்றி இருக்கும் இறை எப்பொழுதும் செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இனி முக்கியமான விழிப்புணர்வு பகுதிக்கு செல்வோம்.
இந்த தருணத்தில் வாழ்வோம் என்பது விழிப்புணர்வு. இங்கேயும் இரண்டு நிலைக்களன்கள். உடல், உள்ளம் மற்றும் புலன்களால் பெரும் அனுபவத்தை பெறுவது ஒன்று. இரண்டாவது உயிர் மற்றும் இறை பற்றிய விழிப்புணர்வு.
சாதாரண வாழ்க்கை வாழும் நாம் இறை, உயிர் என்னும் ஒரு விழிப்புணர்வு நிலை இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறோம்.
உறங்கும் காலத்திலும், விழித்திருக்கும் வேளையிலும் நமக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.
பின்னர் எப்படிதான் அந்த விழிப்புணர்வு நிலைக்கு செல்வது என்று கேட்டால் திருமூலர் அதற்கொரு வழி காட்டுகிறார்.
உள்ளத்தால் உயிரினை உற்று அறியுங்கள். இறை உங்கள் உடலில் உறைந்திருப்பதை காணுங்கள் என்கிறார்.
இதற்காக நீங்கள் வேத, சாஸ்திர நூல்களை படிக்க வேண்டிய அவசியமில்லை. இறைவனையே எண்ணி, காதலால் கசிந்துருகவும் வேண்டாம். உயிர் மற்றும் இறையை உற்று அறியும் வண்ணம் சமாதி கை கூடினால், உங்களுக்கு சாவும் வராது. புலனிச்சைகளை பூர்த்தி செய்ய அதன் கட்டளைகளை ஏற்காமல் மேற்படி உயிரையும், இறையையும் அறியும் விழிப்புணர்ச்சி உள்ளவர்கள், கோயில், குளம், காடு, மலை என்று எங்கும் சுற்ற வேண்டியதில்லை.
எஜமானர் இட்ட கட்டளைக்கேற்ப சபாபதியும் வாங்கி வருகிறான்.
காலணா என்றால் எவ்வளவு பணம்?
அது பைசா வராத காலம். நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்டு, கூடவே அணாக்கணக்கும் நீண்ட காலம் புழக்கத்தில் இருந்தது.
அணாவையும், பைசாவையும் சமப்படுத்த ஒரு அணா என்பது ஆறு பைசாவாக கணக்குப்படுத்தினார்கள்.
அதாவது, காலணா என்பது ஒன்றரை பைசா.
ஒன்றரை பைசாவிற்கு பாதாம் அல்வா வாங்க முடிந்திருக்கிறது.
ஒரு நூறு கிராம் பாதாம் அல்வா இந்த விலை என்றால் ஒரு கிலோ பாதாம் அல்வா பதினைந்து பைசா, இரண்டரை அணா.
இது நடந்த காலகட்டம் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த 1941-ல்.
இதே கால கட்டத்தில்தான் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய்.
சுதந்திரம் பெற்ற 1947-ல் நான்கு ரூபாயாக இருந்து இன்றைக்கு எண்பத்தி நான்கு ரூபாய்.
இதனால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது.
ஒரு ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருளை எண்பத்தி நான்கு ரூபாய்க்கு வாங்குவோம். எண்பத்தி நான்கு ரூபாய் மதிப்புள்ள நம் பொருளை ஒரு டாலருக்கு விற்போம்.
அதாவது, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா எண்பத்தி நான்கு ரன்கள் எடுத்தால் அது ஒரு ரன் என்று கணக்கு வைக்கப்படும்.
சுதந்திரம் பெரும் முன்னர் அரசியல் அடிமைகளாக இருந்தோம். சுதந்திரம் பெற்றதிலிருந்து பொருளாதார அடிமைகளாக இருக்கிறோம்.
'இந்தியா வல்லரசு நாடாகி விடும்' - என்பதெல்லாம் வெறும் உணர்ச்சியைத் தூண்டும் பொய்கள்.
ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகள்தான் ஏராளம் நம் நாட்டில்.
அரசாங்கத்தில் அடிமட்ட வேலைக்கு சேர படித்திருக்க வேண்டும். வேலை செய்ய திறன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஓய்வு பெற்று விட வேண்டும்.
அரசாங்கத்தை முன் நின்று நடத்துபவர்களுக்கு, படிப்பு தேவை இல்லை, அவர் சார்ந்த துறை திறன் தேவை இல்லை, இன்னும் மேலாக ஓய்வு தேவை இல்லை.
படிக்காதவன் முட்டாள். அவனைப் பார்க்காதீர்கள். முட்டாளுடையப் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியமுமில்லை. முட்டாளுக்கு முட்டாள்தான் நல்லவனாகத் தெரிவான். முட்டாள்கள் உண்மை நிலையை அறிய மாட்டார்கள்.
படிக்காதவனே அரசனாக வந்து விட்டால் மக்களின் நிலை என்ன?
நம்ம ராஜாவும் எமனுக்கு சமமாக உயிர்களை எடுப்பான். ஆனால், எமன் அரசனை விட மிக நல்லவன். ஏன் என்றால், அறம் சார்ந்த நியதிகளை ஆராயாமல் நல்லவனையும் கொன்று விட ஆணையிடுவான் படிப்பறிவற்ற அரசன்; எமனோ, நல்லவர்கள் பக்கமே செல்லாமல் சென்று விடுவான்.
சித்தர் பாடல்கள், இலக்கிய பாடல்கள், அகம், புறம்னு கெடச்சத படிச்சு புரிஞ்சிக்க முயற்சி செய்றேன். அப்பப்ப, எழுதவும் செய்றேன்.
வேகடைங்கிற வார்த்தை எனக்கு எப்படி சிக்காம போச்சு?
ஒரு பொண்டாட்டி புருஷன வேகடைன்னு சொன்னா, அது கண்டிப்பா திட்டுற வார்த்தையாத் தானே இருக்கணும்.
பாசிப்பயறு சுண்டல் சாப்பிடும்போது, ஒண்ணு ரெண்டு பயறு வேகாம இருக்கும், கவனிச்சிருப்பீங்க. இந்த வேகாத பயறு மாதிரி இருக்கிறததான் வேகடைன்னு சொல்லி இருப்பாளோ?
இதுக்குமேல நான் எங்கே வேகப்போகிறேன். வேகடையாவே இருந்துட்டு போறேன்.
இல்ல, வேற ஏதாவது அர்த்தம் இருக்குமோன்னு தெரிஞ்சிக்க ஆர்வம்.
இதென்னடா வம்பாப்போச்சு, இப்படி ஒரு வார்த்த தமிழில் இருக்கான்னு பார்த்தா, ஒரு சிறுகதைல, 'எனக்கு வேகாலம் வந்திடும் பாத்துக்கோ..'-ன்னு ஒரு பொண்ணு இன்னொரு பெண்ணிடம் கோபமா சொல்லுது.
வேகாலம்னா கோபமா, எரிச்சலா?
அது கிடக்கட்டும், நம்ம கதைக்கு வருவோம்.
மறுபடியும் முயற்சித்ததில், வேகடைன்னா 'polishing gems' - மணியின் மாசு நீக்குதல். கம்பராமாயணத்தில் கம்பர் உபயோகித்த வார்த்தை.
இவ்வளவு உயர்வா சொல்லியிருக்க வாய்ப்பே இல்ல ராஜான்னு மனசு சொல்லுது. ஏன்னா, நான் செஞ்ச காரியம் அப்படி.
'கடைக்காரன் கிட்ட லிஸ்ட குடுத்துட்டு, லார்ட் லபக்குதாசு மாதிரி நின்னுருப்பே. அவனும், இது ஒரு வேகடைன்னு தெரிஞ்சிகிட்டு வேணும், வேண்டாங்கிறத எல்லாம் போட்டு அனுப்பிட்டான்.'
'லிஸ்ட்ல இருக்கிறத போட்டானான்னு கூட பாக்க வக்கில்ல. வாங்கிட்டு ஆட்டிட்டு வந்துட்டே.'
சார், நாட்டு தக்காளி ஒரு கிலோ வாங்கினதை கடைக்காரன் என்னுடைய பையில் போடாமல் விட்டுவிட்டான். பில் போடும்போது அதுக்கும் சேத்து பில் போட்டுட்டான்.
வீட்டுக்கு வந்ததும் அடுத்த அஞ்சு நிமிஷத்துல, நான் தூண்டில்ல சிக்குன மீன் மாதிரி மாட்டிகிட்டேன்.
மறுபடியும் போய் வாங்கிட்டு வந்திட்டேன். லிஸ்ட்ல இருந்த ரெண்டு எலுமிச்சை மிஸ் ஆனது ரெண்டு நாள் கழிச்சுதான் தெரிஞ்சுது. என்ன மூடோ தெரியல, ஃபயரிங் ஒண்ணும் நடக்கல.
நாற்றம் என்ற சொல் நறுமணத்தை குறித்ததோர் காலம். இன்றைக்கு அதே வார்த்தை பேச்சு வழக்கில் தரும் அர்த்தமே வேறு. அப்படித்தான் வேகடையும் மாறியிருக்கும்.
நமக்கென்ன, காசா பணமா, நல்லதையே எடுத்துக்குவோம்.
சரி, இனி மெயின் பிக்சருக்கு வருவோம்.
அறிவு நிலை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் என்றாலும், குடும்பம் என்று வரும்போது பொண்டாட்டிகள் அறிவு நிலையும் கணவன்கள் அறிவு நிலையும் சுத்தமாக மாறுபட்டுதான் இருக்கிறது. அது படைப்பின் ரகசியம். எனவே, அதைப்பற்றி அதிகம் பேச வேண்டாம்.
இங்கே மறுபடியும் மும்மலங்களைப்பற்றி பேசியாக வேண்டும்.
மூல மலம் ஆணவம். ஆணவம் என்றால் இருள் சார்ந்த நிலை அல்லது அறியாமை. இரண்டாவது மாயை. மாயையே அறியாமையை சற்று விலக்கும் கருவி. கருவிக்கு துணையாக இருப்பது கலை. கலையின் மூலம் அறிந்துகொள்வது வித்தை.
இப்படியாக அறியாமை இருள் விலக விலக அறிவு நிலை மேம்பட்டு வாழ்க்கைக்கு வழிகாட்டியாகிறது.
'கலைக்கல்லூரி' அல்லது 'இளங்கலை' என்று நிறைய முறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருமுறையாவது கலை என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள முயன்றிருக்கிறோமா? கலை என்றால் அறியாமையை விலக்கும், வித்தையை கற்றுக்கொள்வது.
நான் சொல்ல வந்ததெல்லாம் வித்தியா தத்துவங்களில் சொல்லப்படும் வார்த்தைகள்தான், கலை, வித்தை மற்றும் மாயை என்பவை.
அறியாமையை அகற்றும் அறிவு நிலை ஒவ்வொரு மனிதருக்கும் வேறு வேறு நிலையில் இருக்கும்.
ஐம்புலன்களால் அனுபவிக்கும் அறிவுநிலை ஐந்து. அனுபவ அறிவின் மூலம் உணரப்படும் ஆறாம் அறிவு. முன்னோர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மூலம் பெரும் ஏழாம் அறிவு. படிப்பினால் கிட்டும் எட்டாம் அறிவு. மற்றவர்களிடம் கலந்து கருத்துகளை பரிமாறி பெரும் ஒன்பதாம் அறிவு. இவை அனைத்துக்கும் பற்று கோடாக இருப்பது இறை என்னும் பத்தாம் அறிவு. இவ்வாறாக அறிவு நிலையை சிந்தித்து, அறிவினை பெரும் வழி வகை தெரியாமல் உயிர்கள் அழிந்து போகின்றன.
நான் சொல்லப்போவது விபரீத அறிவு. மனித குலமே சிக்கி இருக்கும் மாய வலைப்பின்னல் இது.
ஒருவர் அறிவு நிலையில் எந்த கட்டத்தில் இருந்தாலும், விபரீத அறிவால் தாக்கம் பெறாதவர்கள் என்று யாரும் இல்லை.
1. ஒரு செயலைப்பற்றிய அறிவு நிலையில், முழுமை பெறாமல் இருக்கும் அறியாமை.
2. 'என்னுடையது' என்ற எண்ணத்தில் அறிவு நிலையில் பிறழ்வது.
3. 'எனக்கு ரொம்பவும் பிடிக்கும்' என்னும் காரணத்தினால் அறிவை ஒத்தி வைப்பது.
4. 'எனக்கு பிடிக்கவே பிடிக்காது' என்று ஒதுக்கும் பொது உண்மை அறிவையும் ஒதுக்குவது.
5. மரண பயம் கூடவே இருந்து அறிவுக்கு ஒவ்வாத செயல்களை செய்வது.
இந்த விபரீத அறிவுதான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கிறது.
நிறைய நூல்களை கற்று, அவற்றில் உண்மை பொய்களை ஆராய்ந்து, அறிவு நிலை முழுமை பெறாமல் 'இறை என்று ஒன்று இல்லை' என்று அறுதியிட்டு கூறும் அதே விபரீத அறிவுதான், ஏதும் தெரிந்து கொள்ள முயலாமல் 'எல்லாம் அவன் செயல்' என்று சரணாகதி அடைபவர்க்கும்.
*** *** *** *** ***
பின் குறிப்பு:
பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில் ஐந்து வகையான மனக்கிலேசங்கள் உண்மை அறிவு நிலைக்கு எதிரானவை என்று வகைப்படுத்தி இருக்கிறார். அதாவது விபரீத அறிவின் அம்சங்கள்.
உயிரின் அளவை, ஒரு பசுவின் மயிரை ஒரு லட்சம் கூறாக வெட்டினால், அதில் ஒரு கூறு என்று சொன்ன திருமூலர் இறையின் அளவையும் சொல்கிறார்.
ஒரு பொருளை இதற்குமேல் பாகுபடுத்தி பார்க்க முடியாது என்னும் மிக சிறிய அளவை அணு என்று சொல்கிறோம். அணுவின் பாகங்களாக எலக்ட்ரான், நியூட்ரான் மற்றும் புரோட்டான் என்று ஆய்வு செய்து அறிவித்திருப்பது அறிவியல். இதில் நியூட்ரான் மற்றும் புரோட்டான் இருக்குமிடம் நியூக்ளியஸ் அதாவது அணுவின் கருமையம். இந்த கருமையத்தை ஆயிரம் கூறுகளாக்கினால், அதில் ஒரு கூறின் அளவுதான் இறை.
உயிரையும், இறையையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் உயிர் என்பது பருப்பொருள். இறை என்பது நுண் பொருள். இந்த நுண்பொருள் எப்பொழுதும் பருப்பொருளை தனது காந்த எல்லை தொடர்பில் வைத்திருக்கிறது. உரிய நேரத்தில் பருப்பொருளை பூமியில் உடலெடுக்கவும் வைக்கிறது.
வானத்தில் இருந்து இறங்கி வரும் இறை என்னும் நுண்பொருள், பருப்பொருளான உயிரை அதன் வினைப்பயனைக் கணக்கில் கொண்டு உடலெடுக்க தகுதியான பெண்ணின் கருவறைக்குள் வைக்கிறது.
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தன்னுடைய குளிர்ந்த பாதங்களை உயிருக்கு காவலாக உயிரின் தலையில் வைக்கிறது.
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
ஒப்பற்ற பேரொளியாய் திகழும் அந்த நுண்பொருள், உடலில் கண்களுக்கு நடுவில் நிற்கிறது.
உயிர் இறை நிலையை பற்றி இருக்கும் உண்மையை உணரும் தருணத்தில், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை அகற்றி அருள்கிறது.
உண்ணின் றிருக்கியோ ரொப்பிலா ஆனந்தக் கண்ணின்றுக் காட்டி களிம்பு அறுத்தானே.
நாம் பூமியில் பிறப்பெடுத்ததும் இந்த முறையில்தான்.
நமக்கு கிடைத்திருக்கும் உடல், முந்தைய பிறவிகளில் நாம் செய்த நன்மை, தீமைகளின் மிச்சம் என்றாகிவிட்டது. நம் புருவ மத்தியில் இறைவன் குடி கொண்டிருக்கிறான் என்றும் புரிந்து கொள்கிறோம். நம் உயிர் தொடர்ந்து இறை நிலையின் காந்த எல்லைக்குள் ஒன்றி இருக்கிறது.
இறை எவ்வாறு உயிருடன் கலந்து உடலில் இருக்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் திருமூலர்.
புருவ மத்தியில் இறைவன் இருந்தால், அப்படியே அவனை அங்கே நிலை நிறுத்திக்கொள்ளலாமே என்று தோன்றலாம். அது முடியாது என்பதை திருமந்திரம் விளக்குகிறது.
நீர் நிரம்பிய குடங்களை வெயிலில் வைத்தால், ஒவ்வொரு குடத்திலும் சூரியனின் பிம்பம் தெரியும். சூரியனை குடத்திற்குள் அடக்கி விடலாம் என்று குடத்தை மூடி வைத்தால், குடத்துக்குள் சூரியன் அடங்காது.
கடங்கடந் தோறும் கதிரவன் தோன்றின் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
அவ்வண்ணமே, விஷத்தை அருந்திய இறைவன், உயிருடன் இணைந்து ஒவ்வொரு உடலிலும் குடி கொண்டிருக்கிறான்.
கண்களால் பார்க்க இயலாத நுண் பொருள் இறை; பருப்பொருள் உயிர். ஆனால், நுண் பொருள் பருப்பொருளை கட்டி வைத்திருக்கிறது. கட்டுவதற்குண்டான கயிறு இங்கே இறை காந்தம்.
இறைவன் உயிரோடும், உயிர் தங்கியிருக்கும் உடலோடும் எவ்வாறு கலந்திருக்கிறான் என்று பார்ப்போம்.
சூரியனின் மின்காந்த அலைகளை பஞ்சின் மீது குவிப்பதால் தீப்பொறிகள் உண்டாகி நெருப்பு பற்றிக்கொள்ளும். ஆனால், எப்பொழுதும் மின்காந்த அலைகளோடு உயிரை பற்றி இருக்கும் இறைக்கனல், உயிரை சுடுவதில்லை. மாறாக, சூரியனின் முன்னர் பஞ்சு சுட்டெரிக்கப்படுவது போல், உயிர் இறையை அணுகும்போது, உயிரைப் பற்றியுள்ள பாசம் என்னும் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை சுட்டெரிக்கப்படும்.
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
நவத்துவாரங்களும், எண்ணற்ற வியர்வை துவாரங்களும் நம் உடலில் இருக்கிறது. இந்த ஓட்டைப்படகில் தங்கி உயிர் எவ்வாறு பயணம் செய்கிறது என்று பார்ப்போம். உயிர் என்னும் பருப்பொருளை உடலுடன் கட்டி வைத்திருப்பது பிராண வாயு என்னும் காற்று.
அதை திருமூலர் உறுதி செய்வதையும் அறிந்து கொள்ளலாம்.
சுவாசத்தின் பொழுதில் உடலுக்குள் செல்லும் காற்று வெளியேறி விடும். இந்த காற்று பன்னிரண்டு அங்குல தூரம் பயணித்து திரும்பும். பயணிக்கும் தூரத்தின் அளவு எட்டு விரற்கடை அளவாக குறைந்தால், உயிர் உடலை விட்டு நீங்கிவிடும். அதுவே, நான்கு விரற்கடை அளவு அதிகரித்தால், இறைவனின் பாதங்களை தரிசித்து, ஐந்தெழுத்து மந்திரத்தின் உண்மை புலப்படும்.
கூடம் எடுத்து குடிபுக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம் நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளில்கோல அஞ்செழுத் தாமே.
உயிர் உடலை விட்டு நீங்காமல் கட்டி வைத்திருப்பது காற்று என்பது உறுதியாகிறது.
இறை, உயிர் மற்றும் காற்று மூன்றுமே அருவமான பொருட்கள். உடல் இயங்குவதற்கு தேவையான கருவிகளும் இவையே.
*** *** ***
நாம் கேட்கவேண்டிய ஒரு கேள்வி.
இறை, உயிர், காற்று இவற்றை தெரிந்து கொள்வதால் என்ன பலன்?
இறந்தபின்னர் கிடைக்கும் மோக்ஷமோ, சுவர்கமோ நமக்கு தெரியாத ஒன்று. அதைப்பற்றி பேசுவதால் பலனொன்றுமில்லை. வாழும்போது நன்மை கிடைக்குமானால் அது நமக்கு கிடைக்கும் பாக்கியம் தானே!
நாம் வாழும் இந்த பூமியே சொர்கமானால், வேண்டாமென்று சொல்ல முடியுமா என்ன?
முதலில் உலகை நோக்கிய நம் எண்ணங்கள் சீர்படும். மனம் அமைதி நிலை அடையும். இளம் பருவத்தில் ஆசைப்பட்டதெல்லாம், சுவைபட அனுபவித்து மகிழ ஆரோக்கியமான உடலிருக்கும். இப்பொழுது வாழும் வாழ்க்கையே சொர்கமாகி விடும்.
எனவே, இன்னும் ஒரு படி மேலே சென்று, இறை, உயிர், காற்று நம் உடலில் எவ்வாறு செயல் படுகிறது என்று தெரிந்து கொள்வோம்.
அதற்கு இரண்டு முக்கியமான தீர்மானங்கள் தேவை. தீர்மானம் எடுப்பதோடு நில்லாமல் அவற்றை வைராக்கியத்துடன் செயல் படுத்தவும் வேண்டும்.
ஒன்று, நம்பிக்கை. மற்றொன்று பயிற்சி.
நம்பிக்கை என்றால் காலையில் செம்மையாக ஆரம்பித்து மாலையில் வெளிறிப்போவதல்ல. 'இவர் என் தந்தை, இவர் என் தாய்' என்று எப்படி உயிருள்ளவரை நம்புகிறோமோ அது மாதிரியான நம்பிக்கை.
இன்னும் சொல்லப்போனால், உணர் மனம் நம்புவதை உள் மனம் கேள்வி கேட்காமல் அப்படியே உள்வாங்கும் நம்பிக்கை. தொடர்ந்து செல்லும் நம்பிக்கை அலைகளை உள் மனம், ஆழ் மனதிற்கு எடுத்து செல்லும் அளவிற்கான தீவிர நம்பிக்கை.
இரண்டாவது, நம்பிக்கையுடனான பயிற்சி.
ஆரம்பிக்கும்போது பயிற்சியின் தன்மை எவ்வளவு வீரியத்துடன் இருந்ததோ அதே அளவு, சற்றும் குறையாமல் இறுதி வரை பயிற்சி. நான் இறுதி வரை என்று சொல்வது, நாம் மேற்கொள்ளும் பயிற்சி நம் வாழ்க்கை முறையாக மாறும் வரை.
இங்கே இழப்பதற்கு ஒன்றுமில்லை.
இனி பயிற்சி முறைக்கு செல்வோம்.
அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ளலாம்.
கண்களை மூடி சுவாசத்தை மட்டும் கவனிக்கலாம்.
உள்செல்லும் காற்றில் பத்து வகையான வாயுக்கள் இருக்கிறது. அதில் பிரதானமான பிராண வாயுவை மட்டும் கவனத்தில் கொள்வோம்.
பிராணனை உடலில் நிலை நிறுத்துவது இந்த வாயு. அதாவது ஒவ்வொரு முறை காற்றை உள்ளிழுக்கும்போதும் பிராண வாயு உடலில் உள்ள உயிரை சந்தித்து வேதியல் வினை புரிந்து கரியமில வாயுவாக வெளியே வருகிறது.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால், சந்திர நாடி, சூரிய நாடி வழியாக நாம் சுவாசிக்கும் காற்று அக்னி நாடி என்னும் சுழு முனை நாடியில் சந்திக்கிறது. சுழு முனை நாடி என்பது குண்டலினி இருக்கும் மூலாதாரத்தில் இருந்து சுழு முனை வரையாக புருவ மத்தியில் நிற்கிறது.
அதாவது, நம் சுவாசக்காற்றில் உள்ள பிராண வாயு நேரடியாக சந்திர மண்டலம் என்னும் புருவமத்தியில் சென்றடைகிறது. இங்குதான் இறையின் குளிர்ந்த தாள்கள் இருக்கிறது. ஒவ்வொரு உயிர் பிறப்பின்போதும் இறைவனின் இருப்பிடமாக நாம் அறிந்ததும் இந்த இடம்தான்.
அஷ்டமா சித்திகள் எனப்படும் எட்டு சித்திகள், அஷ்டாங்க யோகத்தால் மட்டும் கிடைத்திடாது. அதற்கு அஷ்டாங்க யோகத்தின் ஒரு அங்கமான, பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியில் பிராணனை அணுகும் முறையை அறிந்திருக்க வேண்டும். அவ்வளவு எளிதாக பிராண வாயு நடு நாடியான சுழு முனை நாடியில் ஒடுங்கி நிற்காது. மூலாதாரத்திலிருந்து எழும் உயிர்க்கனல் சுழுமுனை நாடி வழியாக சந்திர மண்டலம் என்னும் புருவ மத்திக்கு இந்த பிராண வாயு நடு நாடியில் கரைந்து செல்ல வேண்டும். இவ்வாறு செல்வதால் சந்திர மண்டலத்தில் ஊரும் அமிர்தத்தை உண்டு, எட்டு வகை சித்திகளை அடையலாம்.