இழப்பதற்கொன்றுமில்லை
இழப்பதற்கொன்றுமில்லை
உயிரின் அளவை, ஒரு பசுவின் மயிரை ஒரு லட்சம் கூறாக வெட்டினால், அதில் ஒரு கூறு என்று சொன்ன திருமூலர் இறையின் அளவையும் சொல்கிறார்.
ஒரு பொருளை இதற்குமேல் பாகுபடுத்தி பார்க்க முடியாது என்னும் மிக சிறிய அளவை அணு என்று சொல்கிறோம். அணுவின் பாகங்களாக எலக்ட்ரான், நியூட்ரான் மற்றும் புரோட்டான் என்று ஆய்வு செய்து அறிவித்திருப்பது அறிவியல். இதில் நியூட்ரான் மற்றும் புரோட்டான் இருக்குமிடம் நியூக்ளியஸ் அதாவது அணுவின் கருமையம். இந்த கருமையத்தை ஆயிரம் கூறுகளாக்கினால், அதில் ஒரு கூறின் அளவுதான் இறை.
உயிரையும், இறையையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் உயிர் என்பது பருப்பொருள். இறை என்பது நுண் பொருள். இந்த நுண்பொருள் எப்பொழுதும் பருப்பொருளை தனது காந்த எல்லை தொடர்பில் வைத்திருக்கிறது. உரிய நேரத்தில் பருப்பொருளை பூமியில் உடலெடுக்கவும் வைக்கிறது.
வானத்தில் இருந்து இறங்கி வரும் இறை என்னும் நுண்பொருள், பருப்பொருளான உயிரை அதன் வினைப்பயனைக் கணக்கில் கொண்டு உடலெடுக்க தகுதியான பெண்ணின் கருவறைக்குள் வைக்கிறது.
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தன்னுடைய குளிர்ந்த பாதங்களை உயிருக்கு காவலாக உயிரின் தலையில் வைக்கிறது.
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
ஒப்பற்ற பேரொளியாய் திகழும் அந்த நுண்பொருள், உடலில் கண்களுக்கு நடுவில் நிற்கிறது.
உயிர் இறை நிலையை பற்றி இருக்கும் உண்மையை உணரும் தருணத்தில், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை அகற்றி அருள்கிறது.
உண்ணின் றிருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்றுக் காட்டி களிம்பு அறுத்தானே.
நாம் பூமியில் பிறப்பெடுத்ததும் இந்த முறையில்தான்.
நமக்கு கிடைத்திருக்கும் உடல், முந்தைய பிறவிகளில் நாம் செய்த நன்மை, தீமைகளின் மிச்சம் என்றாகிவிட்டது. நம் புருவ மத்தியில் இறைவன் குடி கொண்டிருக்கிறான் என்றும் புரிந்து கொள்கிறோம். நம் உயிர் தொடர்ந்து இறை நிலையின் காந்த எல்லைக்குள் ஒன்றி இருக்கிறது.
இறை எவ்வாறு உயிருடன் கலந்து உடலில் இருக்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் திருமூலர்.
புருவ மத்தியில் இறைவன் இருந்தால், அப்படியே அவனை அங்கே நிலை நிறுத்திக்கொள்ளலாமே என்று தோன்றலாம். அது முடியாது என்பதை திருமந்திரம் விளக்குகிறது.
நீர் நிரம்பிய குடங்களை வெயிலில் வைத்தால், ஒவ்வொரு குடத்திலும் சூரியனின் பிம்பம் தெரியும். சூரியனை குடத்திற்குள் அடக்கி விடலாம் என்று குடத்தை மூடி வைத்தால், குடத்துக்குள் சூரியன் அடங்காது.
கடங்கடந் தோறும் கதிரவன் தோன்றின்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
அவ்வண்ணமே, விஷத்தை அருந்திய இறைவன், உயிருடன் இணைந்து ஒவ்வொரு உடலிலும் குடி கொண்டிருக்கிறான்.
விடங்கொண்ட கண்டனு மேவிய காயத்
தடங்கிட நின்றது அப்பரி சாமே.
கண்களால் பார்க்க இயலாத நுண் பொருள் இறை; பருப்பொருள் உயிர். ஆனால், நுண் பொருள் பருப்பொருளை கட்டி வைத்திருக்கிறது. கட்டுவதற்குண்டான கயிறு இங்கே இறை காந்தம்.
இறைவன் உயிரோடும், உயிர் தங்கியிருக்கும் உடலோடும் எவ்வாறு கலந்திருக்கிறான் என்று பார்ப்போம்.
சூரியனின் மின்காந்த அலைகளை பஞ்சின் மீது குவிப்பதால் தீப்பொறிகள் உண்டாகி நெருப்பு பற்றிக்கொள்ளும். ஆனால், எப்பொழுதும் மின்காந்த அலைகளோடு உயிரை பற்றி இருக்கும் இறைக்கனல், உயிரை சுடுவதில்லை. மாறாக, சூரியனின் முன்னர் பஞ்சு சுட்டெரிக்கப்படுவது போல், உயிர் இறையை அணுகும்போது, உயிரைப் பற்றியுள்ள பாசம் என்னும் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை சுட்டெரிக்கப்படும்.
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
நவத்துவாரங்களும், எண்ணற்ற வியர்வை துவாரங்களும் நம் உடலில் இருக்கிறது. இந்த ஓட்டைப்படகில் தங்கி உயிர் எவ்வாறு பயணம் செய்கிறது என்று பார்ப்போம். உயிர் என்னும் பருப்பொருளை உடலுடன் கட்டி வைத்திருப்பது பிராண வாயு என்னும் காற்று.
அதை திருமூலர் உறுதி செய்வதையும் அறிந்து கொள்ளலாம்.
சுவாசத்தின் பொழுதில் உடலுக்குள் செல்லும் காற்று வெளியேறி விடும். இந்த காற்று பன்னிரண்டு அங்குல தூரம் பயணித்து திரும்பும். பயணிக்கும் தூரத்தின் அளவு எட்டு விரற்கடை அளவாக குறைந்தால், உயிர் உடலை விட்டு நீங்கிவிடும். அதுவே, நான்கு விரற்கடை அளவு அதிகரித்தால், இறைவனின் பாதங்களை தரிசித்து, ஐந்தெழுத்து மந்திரத்தின் உண்மை புலப்படும்.
கூடம் எடுத்து குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளில்கோல அஞ்செழுத் தாமே.
உயிர் உடலை விட்டு நீங்காமல் கட்டி வைத்திருப்பது காற்று என்பது உறுதியாகிறது.
இறை, உயிர் மற்றும் காற்று மூன்றுமே அருவமான பொருட்கள். உடல் இயங்குவதற்கு தேவையான கருவிகளும் இவையே.
*** *** ***
நாம் கேட்கவேண்டிய ஒரு கேள்வி.
இறை, உயிர், காற்று இவற்றை தெரிந்து கொள்வதால் என்ன பலன்?
இறந்தபின்னர் கிடைக்கும் மோக்ஷமோ, சுவர்கமோ நமக்கு தெரியாத ஒன்று. அதைப்பற்றி பேசுவதால் பலனொன்றுமில்லை. வாழும்போது நன்மை கிடைக்குமானால் அது நமக்கு கிடைக்கும் பாக்கியம் தானே!
நாம் வாழும் இந்த பூமியே சொர்கமானால், வேண்டாமென்று சொல்ல முடியுமா என்ன?
முதலில் உலகை நோக்கிய நம் எண்ணங்கள் சீர்படும். மனம் அமைதி நிலை அடையும். இளம் பருவத்தில் ஆசைப்பட்டதெல்லாம், சுவைபட அனுபவித்து மகிழ ஆரோக்கியமான உடலிருக்கும். இப்பொழுது வாழும் வாழ்க்கையே சொர்கமாகி விடும்.
எனவே, இன்னும் ஒரு படி மேலே சென்று, இறை, உயிர், காற்று நம் உடலில் எவ்வாறு செயல் படுகிறது என்று தெரிந்து கொள்வோம்.
அதற்கு இரண்டு முக்கியமான தீர்மானங்கள் தேவை. தீர்மானம் எடுப்பதோடு நில்லாமல் அவற்றை வைராக்கியத்துடன் செயல் படுத்தவும் வேண்டும்.
ஒன்று, நம்பிக்கை. மற்றொன்று பயிற்சி.
நம்பிக்கை என்றால் காலையில் செம்மையாக ஆரம்பித்து மாலையில் வெளிறிப்போவதல்ல. 'இவர் என் தந்தை, இவர் என் தாய்' என்று எப்படி உயிருள்ளவரை நம்புகிறோமோ அது மாதிரியான நம்பிக்கை.
இன்னும் சொல்லப்போனால், உணர் மனம் நம்புவதை உள் மனம் கேள்வி கேட்காமல் அப்படியே உள்வாங்கும் நம்பிக்கை. தொடர்ந்து செல்லும் நம்பிக்கை அலைகளை உள் மனம், ஆழ் மனதிற்கு எடுத்து செல்லும் அளவிற்கான தீவிர நம்பிக்கை.
இரண்டாவது, நம்பிக்கையுடனான பயிற்சி.
ஆரம்பிக்கும்போது பயிற்சியின் தன்மை எவ்வளவு வீரியத்துடன் இருந்ததோ அதே அளவு, சற்றும் குறையாமல் இறுதி வரை பயிற்சி. நான் இறுதி வரை என்று சொல்வது, நாம் மேற்கொள்ளும் பயிற்சி நம் வாழ்க்கை முறையாக மாறும் வரை.
இங்கே இழப்பதற்கு ஒன்றுமில்லை.
இனி பயிற்சி முறைக்கு செல்வோம்.
அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ளலாம்.
கண்களை மூடி சுவாசத்தை மட்டும் கவனிக்கலாம்.
உள்செல்லும் காற்றில் பத்து வகையான வாயுக்கள் இருக்கிறது. அதில் பிரதானமான பிராண வாயுவை மட்டும் கவனத்தில் கொள்வோம்.
பிராணனை உடலில் நிலை நிறுத்துவது இந்த வாயு. அதாவது ஒவ்வொரு முறை காற்றை உள்ளிழுக்கும்போதும் பிராண வாயு உடலில் உள்ள உயிரை சந்தித்து வேதியல் வினை புரிந்து கரியமில வாயுவாக வெளியே வருகிறது.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால், சந்திர நாடி, சூரிய நாடி வழியாக நாம் சுவாசிக்கும் காற்று அக்னி நாடி என்னும் சுழு முனை நாடியில் சந்திக்கிறது. சுழு முனை நாடி என்பது குண்டலினி இருக்கும் மூலாதாரத்தில் இருந்து சுழு முனை வரையாக புருவ மத்தியில் நிற்கிறது.
அதாவது, நம் சுவாசக்காற்றில் உள்ள பிராண வாயு நேரடியாக சந்திர மண்டலம் என்னும் புருவமத்தியில் சென்றடைகிறது. இங்குதான் இறையின் குளிர்ந்த தாள்கள் இருக்கிறது. ஒவ்வொரு உயிர் பிறப்பின்போதும் இறைவனின் இருப்பிடமாக நாம் அறிந்ததும் இந்த இடம்தான்.
அஷ்டமா சித்திகள் எனப்படும் எட்டு சித்திகள், அஷ்டாங்க யோகத்தால் மட்டும் கிடைத்திடாது. அதற்கு அஷ்டாங்க யோகத்தின் ஒரு அங்கமான, பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியில் பிராணனை அணுகும் முறையை அறிந்திருக்க வேண்டும். அவ்வளவு எளிதாக பிராண வாயு நடு நாடியான சுழு முனை நாடியில் ஒடுங்கி நிற்காது. மூலாதாரத்திலிருந்து எழும் உயிர்க்கனல் சுழுமுனை நாடி வழியாக சந்திர மண்டலம் என்னும் புருவ மத்திக்கு இந்த பிராண வாயு நடு நாடியில் கரைந்து செல்ல வேண்டும். இவ்வாறு செல்வதால் சந்திர மண்டலத்தில் ஊரும் அமிர்தத்தை உண்டு, எட்டு வகை சித்திகளை அடையலாம்.
எட்டாகிய சித்தி ஓரெட்டி யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தால் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்து அனல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரும் மேலதே.
நமக்கு வேண்டியது எல்லாம், மூலாதாரத்தில் பிராண வாயுவை சேர்க்க வேண்டியதுதான்.
மீண்டும் நாம் சுவாசத்திற்கு வருவோம்.
ஒவ்வொருமுறை நாம் சுவாசிக்கும்போதும் பிராண வாயு உயிரை சந்தித்து இறைவனின் பாதங்களை தரிசித்து வருவது உறுதியாகிவிட்டது.
புருவ மத்தியில் மனதை செலுத்தி, சுவாசிக்கும் காற்றில் இறைவனை சந்திக்கும் இந்த அதிசய நிகழ்வின் சுழற்சியை மட்டும் கவனிப்போம்.
நம் உணர் மனம் காற்றின் சுழற்சியை சுவாசித்தலின் ஒரு அங்கமாக மாற்றிவிடும். நாளடைவில் இது நம் உடலின் அனிச்சை செயல்களில் ஒன்றாகிவிடும்.
இதற்குமேல் நடக்கும் அதிசயங்கள், அவரவர் கேட்டு வந்த வரம்.
இழப்பதற்கொன்றுமில்லை
அறியாமையைத்தவிர..
*** *** ***